புதன், 30 அக்டோபர், 2019

பிரமோத் மகாஜன் பிறந்தநாள் - அக்டோபர் 30

காலம் தனக்கு தேவையான மனிதர்களை தேவையான நேரத்தில்  தேவையான இடத்தில் வைத்து விடுகிறது, அதனால்தான் சிலரை சில இடங்களில் இருந்து, சிலரை உலகத்தில் இருந்தே விலக்கி விடுகிறது. காலத்தினால் வெளியேற்றப்பட்ட, பாஜகவின்இரண்டாம் தலைமுறை அரசியல்வாதியும்,
பாரத அரசியல் வானில் பிரகாசமான விளக்காக திகழ்ந்து இருக்க வேண்டியவருமான  பிரமோத் மகாஜன் அவர்களின் பிறந்தநாள் இன்று.



இன்றய தெலுங்கானா மாநிலத்தின் மஹபூப்நகர் பகுதியைச் சார்ந்த வெங்கடேஷ் தேவிதாஸ் மகாஜன் - பிரபாவதி தம்பதியரின் ஐந்து குழந்தைககளில் இரண்டாவது மகனாகப் பிறந்தவர் திரு பிரமோத் மகாஜன். இந்த தம்பதியரே மஹாராஷ்டிரா மாநிலத்தின் பீட் மாவட்டத்தின் அம்பஜ்ஜோகி நகருக்கு குடிபெயர்ந்ததால், ப்ரமோதின் இளமைக்காலம் முதலே அவர் மஹாராஷ்டிரா மாநிலத்தவராகவே வளர்ந்து வந்தார். தனது பள்ளிப்படிப்பை யோகேஸ்வரி வித்யாலயாவில் முடித்த மகாஜன் இயற்பியல் துறையில் இளங்கலை பட்டமும், இதழியல் துறையில் முதுகலை பட்டம் பெற்றவர். படிக்கும் காலத்திலேயே நாடகத்துறையில் சிறந்து விளங்கிய பிரமோத், தன்னோடு நடித்த ரேகாவை காதலித்து மணந்து கொண்டார். நான்காண்டு காலம் ஆசிரியராகப் பணியாற்றிய பிரமோத் பின்னர் முழுநேர அரசியலில் ஈடுபடத் தொடங்கினார்.

மிகக் சிறுவயதில் இருந்தே ராஷ்டிரிய ஸ்வயம்சேவக சங்கத்தில் இருந்த பிரமோத் ஆர் எஸ் எஸ் அமைப்பின் தருண் பாரத் என்ற மராத்தி செய்தித்தாளின் ஆசிரியராகவும் இருந்தார். இந்திரா காந்தி அறிவித்த நெருக்கடிநிலை காலத்தில் கைது செய்யப்பட்டு நாசிக் சிறையில் அடைக்கப்பட்டார். பாரதிய ஜனதா கட்சி உருவான காலத்தில் ஆர் எஸ் எஸ் அமைப்பின் சார்ப்பில் கட்சிப் பணிக்காக அனுப்பப்பட்டவர்களில் பிரமோத்தும் ஒருவர். தனது பணித்திறமையால், பல்வேறு மாற்றுக் கட்சியினரோடு இருந்த தொடர்பால் அவர் பாஜகவின் முன்னணித் தலைவர்களில் ஒருவராக உயர்ந்தார்.

மஹாராஷ்டிர மாநில பாஜகவின் பொதுச் செயலாளர், கட்சியின் தேசிய செயலாளர், கட்சியின் இளைஞர் அணியின் தலைவர் என்று பல்வேறு பொறுப்புகள் அவரைத் தேடி வந்தது. இந்திரா கொலையானதைத் தொடர்ந்து நடைபெற்ற 1984ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் அவர் போட்டியிட்டார், ஆனால் வெற்றி வாய்ப்பை நழுவவிட்டார். 1996ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் அவர் வெற்றிபெற்று நாடாளுமன்ற உறுப்பினரானார். அவரது சேவைகளை அங்கீகாரம் செய்யும் விதமாக பாஜக அவரை நாடாளுமன்ற மேலவை உறுப்பினராக நான்கு முறை நியமித்தது.

1996ஆம் ஆண்டு முதல்முதலாக வாஜ்பாய்  அமைந்த பாஜக அரசில் பிரமோத் பாதுகாப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டார். 1998ஆம் ஆண்டு முதலில் பிரதமரின் ஆலோசகராகப் பணியாற்றிய மகாஜன், பின்னர் செய்தித் தொடர்பு, உணவு பதனிடும் துறை, பாராளுமன்ற விவகாரத்துறை, நீர்வளம் மற்றும் தகவல் தொடர்பு ஆகிய துறைகளின் அமைச்சராகவும் இருந்தார். பின்னர் அவர் தொலைத்தொடர்புத்துறை அமைச்சராகப் பணியாற்றினார். பிரமோத் மகாஜன் பாஜகவின் முக்கிய தலைவர்களான வாஜ்பாய் மற்றும் அத்வானியின் நம்பிக்கைக்குரியவராகத் திகழ்ந்தார். வாஜ்பாய் அவரை லக்ஷ்மணன் என்றே அழைப்பது வழக்கம்.

1995ஆம் ஆண்டு பாஜக சிவசேனாவோடு கூட்டணி வைத்து மஹாராஷ்டிர மாநில சட்டமன்றத் தேர்தலை எதிர்கொண்டு பெரும் வெற்றியைப் பெற்றது. கூட்டணி அமையவும், தேர்தல் வெற்றிக்கான வியூகங்களை அமைப்பதிலும் பிரமோத்தின் பங்கு பாராட்டுதலுக்குரியது. 2003ஆம் ஆண்டு நடைபெற்ற ராஜஸ்தான் மாநிலத் தேர்தலின் போது, அந்த மாநிலத்தின் பொறுப்பாளராக பிரமோத் பணியாற்றினார். அங்கும் பாஜக பெரும் வெற்றியைப் பெற்றது. அதனைத் தொடர்ந்து 2004ஆம் ஆண்டு வாஜ்பாய் தலைமையில் "இந்தியா ஒளிர்கிறது" என்ற முழக்கத்தோடு பாஜக நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொண்டது. ஆனால் அந்தத் தேர்தலில் பாஜக ஆட்சி அமைக்கும் அளவிற்கு தேவையான வெற்றிகளை ஈட்ட முடியவில்லை. தோல்விக்கான பொறுப்பை மகாஜன் ஏற்றுக்கொண்டார்.

2006ஆம் ஆண்டு ஏப்ரல் 22ஆம் நாள் பிரமோத் மகாஜன் அவர் வீட்டில் அவரது உடன்பிறந்த தம்பியால் சுடப்பட்டார். மிக அருகில் இருந்து வெளியான துப்பாக்கி குண்டுகளால் உள்ளுறுப்புகள் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் தொடர் சிகிச்சைகள் பலனளிக்காமல் பிரமோத் மே மாதம் 3ஆம் தேதி காலமானார்.

பிரமோத் மஹாஜனின் சகோதரி கணவர் கோபிநாத் முண்டேயும் பாஜகவின் முன்னணித் தலைவர்களில் ஒருவராக இருந்தவர். ப்ரமோதின் மகள் பூனம் மகாஜன் தற்போது பாஜகவின் இளைஞர் அணி தலைவியாக உள்ளார்.

விதி விளையாடாமல் இருந்திருந்தால், பிரதமர் பதவிக்கே வந்திருக்க வேண்டிய பிரமோத் மகாஜன் பிறந்தநாளில் கட்சிக்கான அவரது சேவையை ஒரே இந்தியா தளம் நன்றியோடு நினைவு கொள்கிறது. 

செவ்வாய், 29 அக்டோபர், 2019

கலையரசி கமலாதேவி சட்டோபாத்யாய - நினைவு நாள் அக்டோபர் 29



பாரத நாட்டின் வரலாற்றில் ஒரு முக்கியமான விஷயத்தை நாம் மீண்டும் மீண்டும் பார்க்கலாம். சுதந்திரப் போராட்டத்தில் முக்கியமான பங்கு வகித்த பலர், நாடு சுதந்திரம் அடைந்த பிறகு எந்த ஒரு பதவிக்கும் ஆசைப்படாமல், தேசத்தின் புனர்நிர்மாணப் பணிகளில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டது என்பது பல நாடுகளில் நாம் காண முடியாத ஓன்று. அப்படி அரசியலை விட்டு விட்டு வேறு தளங்களில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டவர்களில் முக்கியமானவர் கமலாதேவி சட்டோபாத்தியாய அவர்கள்.

மங்களூரில் மாவட்ட ஆட்சியாளராகப் பணியாற்றிவந்த ஆனந்தைய தாரேஸ்வர் - கிரிஜாபாய் தம்பதியரின் நான்காவது மகளாக 1903ஆம் ஆண்டு ஏப்ரல் 3ஆம் தேதி பிறந்தவர் கமலாதேவி. கமலாதேவியின் பாட்டி சமிஸ்க்ரித நூல்கள் வழியாக பாரத நாட்டின் வரலாற்றை அறிந்தவராக இருந்தார். அவரின் வழிகாட்டல் கமலாதேவிக்கு தேசத்தின் பாரம்பரியத்தைப் பற்றிய அறிமுகத்தைக் கொடுத்தது. தங்கள் வீட்டிற்கு வழக்கமாக வரும் கோவிந்த ரானடே, கோபால கிருஷ்ண கோகுலே, அன்னி பெசன்ட் அம்மையார் ஆகியோரின் அறிமுகம் கமலாதேவியின் சிந்தனைகளை வடிவமைத்தன

இதற்கிடையில் கடுமையான சோதனைகளை கமலாதேவி சந்திக்க நேர்ந்தது.  அவரது மூத்த சகோதரி சகுணா வெகு இளமையில் உயிர் நீத்தார். கமலாவுக்கு 7 வயதாகும் போது அவரது தந்தையாரும் மறைந்தார். மறைந்த தந்தையார் உயில் எதுவும் எழுதி வைத்து விட்டுச் செல்லவில்லை என்பதால் அந்த நாள் வழக்கப்படி கணவரது சொத்துக்கள் எல்லாம் மனைவியை வந்தடையாமல் கணவரது வழி உறவினர் ஒருவரது மகனைச் சென்றடைந்தது. அப்போது அதுதான் சட்டம். அந்த சொத்துக்களை பெற்றுக்கொண்ட பயனாளி, மாதாமாதம் கமலாதேவி குடும்பத்தினருக்கு வாழ்க்கை நடத்த குறிப்பிட்ட அளவு பணத்தை அளிக்கவேண்டும் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஆனால் கமலாதேவியின் தாயார் கிரிஜாபாய் அந்தத் தீர்ப்பை நிராகரித்தார். தனக்குத் தனது கணவரது சொத்துக்களின் மீது உரிமை இல்லாவிட்டால் அது தனக்கும், தன் குழந்தைகளுக்கும் தேவையில்லை என்று கூறி  தனது தாய் வீட்டில் இருந்து தனக்களிக்கப்பட்ட சீதனத்தைக் கொண்டு மட்டுமே எதிர்கால வாழ்க்கையை நடத்துவது என முடிவு செய்து கொண்டார்.

கமலாதேவிக்கு அவரின் 14ஆம் வயதில் திருமணமானது. ஆனால் இரண்டே வருடத்தில் அவர் கணவர் மரணமடைந்தார்.  இளம் விதவையாக சென்னை ராணி மேரிக் கல்லூரியில் சமூகவியல் கற்க மாணவியாகச் சேர்ந்தார் கமலா. அங்கே கமலாவின் சக வகுப்புத் தோழியாக அமைந்தவர் சுஹாசினி சட்டோபாத்யாய். இவர் கவிக்குயில் சரோஜினி தேவியின் இளைய சகோதரி. இவர்களது நட்பு கிடைத்ததும் கமலாவுக்கு மென்கலைகளில் நாட்டம் மிகுந்தது. அதோடு சுஹாசினி, தன் தோழிக்கு, தனது மூத்த சகோதரரும், மாபெரும் கலை ஆர்வலரும், நாடகக் கலைஞருமான  ஹரிந்தரநாத் சட்டோபாத்யாவை  அறிமுகம் செய்து வைத்தார். இருவரின் கலை ஆர்வமும் ஒன்றாக இருக்க இருவரும் காதலிக்கத் தொடங்கினர். தனது 20ஆவது வயதில்  ஹரிந்திர நாத்தைத் திருமணம் செய்து கொள்வது என கமலாதேவி முடிவெடுத்தார்.

அன்றய காலகட்டத்தில் இது ஒரு பெரும் புரட்சி.  திருமணம் முடிந்து ஓரிரு ஆண்டுகளில் தனது ஒரே மகன் ராமா பிறந்ததும் கணவருடன் மேற்கல்விக்காக லண்டன் சென்று விட்டார் கமலா தேவி. அவர் லண்டனில் இருக்கும் போது தான் காந்தியடிகளின் ஒத்துழையாமை இயக்கம் மற்றும் இன்னபிற காந்திய வழிப் போராட்டங்கள் குறித்தெல்லாம் அறிய நேர்ந்தார். அவருக்கு காந்தியின் அஹிம்சா வழிப் போராட்டங்களின் பால் ஈர்ப்பு ஏற்பட்டது இப்படித்தான்.

கமலாதேவியும், ஹரிந்திர நாத்தும் இணைந்து தங்கள் வாழ்வில் தடைகள் பல இருப்பினும் அவற்றை எல்லாம் வெற்றிகரமாகக் கடந்து பல மேடை நாடகங்களை அரங்கேற்றினர். கமலா திரைப்படங்களிலும் நடித்தார். கன்னடத்தில் முதல் மெளனப் படத்தில் நடித்தவர் என்ற பெருமை கமலாதேவிக்கு உண்டு. அது தவிர 1931 ஆம் ஆண்டில் பிரபல கன்னட நாடக ஆசிரியரான சூத்ரகாவின், மிருக்‌ஷ்கடிகா (வசந்தசேனா)  என்ற கன்னடப் படத்திலும் கமலா நடித்தார். 1943 ஆன் ஆண்டில் தான்சேன் என்ற இந்தித் திரைப்படத்திலும், தொடர்ந்து சங்கர் பார்வதி, தன்னா பகத் உள்ளிட்ட திரைப்படங்களிலும் கமலா நடித்திருந்தார்.

ஆனாலும் கமலாதேவியின் திருமண வாழ்வு ஆனந்தமாக இல்லை. அதனால் கமலாதேவி தனது கணவரை விவாகரத்து செய்ய முடிவு செய்தார். இதுவும் அன்று விவாதப் பொருளானது. . ஆனால், அதைப் பற்றியெல்லாம் கவலைப்பட கமலாவுக்கு நேரமில்லை. அவர் அச்சமயத்தில் வெகு தீவிரமாக காந்தியப் போராட்டங்களுக்கு தம்மை ஒப்புக் கொடுத்து விட்டிருந்தார்.

கமலாதேவி இலண்டனில் இருந்தபோது, இந்தியாவில் காந்தி  ஒத்துழையாமை இயக்கத்துக்கு 1923இல் அழைப்புவிடுத்ததை அறிந்து இந்தியா திரும்பி, சேவாதளம் அமைப்பில் இணைந்தார். விரைவில் கமலாதேவி சேவா தளம் மகளிர் பிரிவின் பொறுப்பாளராக ஆனார். சேவாதளத்தின் சார்பில் அனைத்திந்திய அளவில் பெண்களைத் தேர்வு செய்வது, பயிற்சி அளிப்பது உள்ளிட்ட பணிகளில் கமலா ஈடுபட்டார்.

1926, இல் இவர் அனைத்திந்திய மகளிர் மாநாடு (AIWC) அமைப்பின் நிறுவனரான  மார்கரெட் என்பவரைச் சந்தித்தார். அவரின் தாக்கத்தால் சென்னை மாகாண சட்டசபைக்கு போட்டியிட்டார். இவர்தான் இந்தியாவில் சட்டமன்றத்துக்கு போட்டியிட்ட முதல் பெண். ஆயினும் தேர்தலில் இவர் 55 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியுற்றார்.

அதற்கடுத்த ஆண்டில், அனைத்து - இந்திய மகளிர் மாநாடு (AIWC) நிறுவப்பட  அதன் முதல் அமைப்புச் செயலாளராக பொறுப்பேற்றுக் கொண்டார். தொடர்ந்து வந்த ஆண்டுகளில், AIWC யின் கிளைகள் இந்தியா முழுவதும் இயங்கத் துவங்கின, தன்னார்வத் திட்டங்கள் பலவற்றைக் கொண்டு மதிப்பு மிகுந்த தேசிய அமைப்புகளில் ஒன்றாக மாறியது AIWC. கமலாதேவி, இந்தியா மட்டுமின்றி ஐரோப்பிய நாடுகளிலும் விரிவாகச் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பெண்களுக்கான கல்வி, சமுதாய வளர்ச்சிக்கான திட்டங்கள் முதலியவை குறித்து ஆராய்ந்தார். அதன் பயனாக டெல்லியில் பெண்களுக்கான ஹோம் சயின்ஸ் (Lady Irvin College for Home Science) கல்லூரியை ஆரம்பித்தார்.

காந்தியடிகளால் 1930-ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்ட உப்பு சத்தியாகிரகக் குழு உறுப்பினர்களான ஏழு பேர்களில் கமலாவும் ஒருவர். மும்பை கடற்கரையில் பெண்கள் பிரிவில் உப்பு சத்தியாக்கிரகம் செய்தார். உப்பு சத்தியாகிரகப் போராட்டத்தின்போது சுதேசி உப்பை மும்பை பங்குச் சந்தையில் விற்க முயன்ற போது கமலா கைது செய்யப்பட்டார்.  இதற்கு ஓராண்டு கழித்து 1936 ல் காங்கிரஸ் சோஸலிஸ்ட் கட்சியின் தலைவராகத்  தேர்ந்தெடுக்கப்பட்டு,  ஜெயபிரகாஷ் நாராயணன், ராம் மனோகர் லோகியா, மினுமசானி முதலிய தலைவர்களுடன் இணைந்து இந்திய சுதந்திரத்துக்காகப் பாடுபட்டார்.

இரண்டாம் உலகப்போர் துவங்கிய காலத்தில் கமலாதேவி இங்கிலாந்தில் இருந்தார், அவர் உடனடியாக உலகின் மற்ற நாடுகளுக்கு இந்தியாவின் பிரதிநிதியாகச் சென்று இந்திய விடுதலைக்கான ஆதரவைத் திரட்டுவதில் முனைந்தார்.

இந்தியா சுதந்திரமடையும் போது இந்தியா – பாகிஸ்தான் என இரண்டு நாடுகளான பிரிந்தன. இதனையொட்டி நாட்டில் இந்து –முஸ்லீம் கலவரம் ஏற்பட்டது. இக்கலவரத்தில் பல்லாயிரம்பேர் படுகொலை செய்யப்பட்டனர். ஏராளமானவர்கள் படுகாயமடைந்தனர். பல லட்சம் இந்துக்களும், முஸ்லீம்களும் அகதிகளாக்கப்பட்டனர். இந்நிலையில் கமலா தேவி, பாதிக்கப்பட்ட மக்களுக்காக பரிதாபாத் நகரத்தில் சேவை மையம் அமைத்து 50,000 மக்களுக்கு மருத்துவ உதவியும், உணவு வசதியும், தங்குமிடமும்  செய்து கொடுத்தார்.

அகதிகளாக வந்தவர்களின் வாழ்வாதாரத்தை உறுதி செய்யவேண்டும் அல்லவா. அவர்களின் எதிர்கால வாழ்வுக்கு தேவையான பொருளாதாரத்தை  உருவாக்கும் பொருட்டு
 மறக்கப்பட்டு கைவிடப்பட்ட நிலையில் இருந்த கைவினைத் தொழில்களை சீரமைத்துத் தரும்  பணியினையும் இரண்டாம் கட்டமாக தொடங்கினார். இந்திய கைவினைப் பொருள்கள் மற்றும் கைத்தறித்துறை மரபைக் காக்கவும் சுதந்திரத்திற்கு பிந்தைய காலத்தில் அத்துறைக்கு பெரும் புத்துயிர் அளிக்கவும் கமலாதேவி பொறுப்பெடுத்துக் கொண்டார். நவீன இந்தியாவில் இன்று நாம் காணும் கைத்தறி மற்றும் கைவினைப் பொருள் வளர்ச்சி மற்றும் நவீன முன்னேற்றங்கள் அனைத்துக்கும் அடித்தளமிட்டவர்  கமலா தேவி  என்றால் மிகையில்லை

இவரது பணிகளை அங்கீகரிக்கும் விதமாக  இந்திய அரசு  பத்மபூஷன்  விருதை 1955 ல் அளித்தது. பின்னர் இரண்டாவது மிக உயரிய  விருதான பத்மவிபூஷண்  விருதை 1987 ல் பெற்றார். 1966 ல் ராமன் மகசேசே விருதை பெற்றார். மேலும் சங்கீத நாடக அகாதெமி விருது,  1974 இல் இசை, நடனம், நாடகம் ஆகியவற்றுக்காக இந்திய தேசிய அகாதெமி வழங்கிய வாழ்நாள் சாதனைக்கான விருதையும் பெற்றார்.

யுனெஸ்கோ அமைப்பு கைவினைப்பொருட்களை ஊக்குவிக்கும் இவரது பணிகளுக்காக 1977 ல் சிறப்பு விருது வழங்கியது.  ரவீந்திர நாத் தாஹூரின் சாந்தி நிகேதனும் கூட கமலாதேவியின் சமூக முன்னேற்ற மற்றும் கலைத்துறை சேவைகளுக்காக அதன் மிக உயர்ந்த விருதை கமலாவுக்கு அளித்து அவரைச் சிறப்பு செய்து கெளரவித்தது

வாழ்க்கை முழுவதும் ஓயாமல் இயங்கிக்கொண்டு இருந்த கமலாதேவி சட்டோபாத்யாய 1988ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 29ஆம் நாள் காலமானார். 

திங்கள், 28 அக்டோபர், 2019

இந்திரா நூயி - பிறந்தநாள் அக்டோபர் 28

பட்டங்கள் ஆள்வதும் சட்டங்கள் செய்வதும் பாரினில் பெண்கள் நடத்தவந்தோம், எட்டும் அறிவினில் ஆணுக்கிங்கே பெண் இளைப்பில்லை காணென்று கும்மியடி


மஹாகவியின் இந்த வாக்கு இன்று உண்மையாகிக் கொண்டுள்ளது. பாரதத்தில் மட்டுமல்ல பாரெங்கும் பாரதப் பெண்கள் இன்று தங்கள் திறமையால் வெற்றிக்கொடி கட்டி வருகின்றனர். அதில் குறிப்பிடத்தக்கவர் திருமதி இந்திரா நூயி அவர்கள். அதிலும் இவர் தமிழகத்தைச் சார்ந்தவர் என்பது நமெக்கெல்லாம் இன்னும் பெருமை.

சென்னையைச் சார்ந்த மத்தியதர குடும்பத்தில் 1955ஆம் ஆண்டு அக்டோபர் 28ஆம் தேதி பிறந்தவர் திருமதி இந்திரா. தனது கல்வியை சென்னையில் உள்ள ஹோலி ஏஞ்சல்ஸ் பள்ளியிலும், பின்னர் சென்னை கிருஸ்துவக் கல்லூரியிலும் முடித்த இந்திரா பின்னர் கொல்கத்தாவில் உள்ள இந்திய மேலாண்மை கல்வி நிலையத்தில் மேலாண்மைப்  பட்டத்தையும் பெற்றார்.

டூடல் என்ற நிறுவனத்திலும், அதனைத் தொடர்ந்து ஜான்சன் & ஜான்சன் நிறுவனத்திலும் பணியாற்றி, பின்னர் அமெரிக்காவில் உள்ள யேல் பல்கலைக்கழகத்தில் மேற்படிப்பு படிக்கத் தொடங்கினார். அமெரிக்காவில் பாஸ்டன் கன்சல்டிங் குரூப், மோட்டோரோலா மற்றும் ஏசியா பிரவுன் போவெரி போன்ற நிறுவனங்களில் பணியாற்றினார்.

1994ஆம் ஆண்டு பெப்சி நிறுவனத்தில் மூத்த உதவித் தலைவர் பதவி இந்திரா நூயியை தேடி வந்தது. அதிலிருந்து இருபத்தி நான்கு ஆண்டுகள் அந்த நிறுவனத்தில் அவர் பணியாற்றினார். பல்வேறு பொறுப்புகளில் நிறுவனத்திற்குச் சேவை செய்து அவரது கடின உழைப்பில் மட்டுமே வளர்ந்து, பின்னர் 2001 ல் பெப்சிகோ வின் தலைமை நிதி அதிகாரி மற்றும் தலைவர் ஆனார். மேலும் அவர் இயக்குர் குழுவிலும் இருப்பார் என அறிவிக்கப்பட்டது.
வாடிக்கையாளர்களின் தேவைகளை அறிந்து அதற்கேற்ப பெப்சி மற்றும் இதர விற்பனைப் பொருட்களின் வடிவம், அளவு, தரம் ஆகியவற்றில் பல மாறுதல்களைப் புகுத்தினார். இவரது வருகைக்குப் பிறகு 45 ஆண்டுக்கும் மேலான அந்நிறுவன வளர்ச்சி பெரிய முன்னேற்றப் பாதைக்குச் சென்றது. இதனால் 2006-ம் ஆண்டு அந்நிறுவனத்தின் ஐந்தாவது தலைமைச் செயல் அதிகாரியாக உயர்ந்தார்.

ஒவ்வொரு நாட்டிலும், குறிப்பிட்ட மாநிலங்களுக்குள்ளாக அந்த மக்களுக்குப் பரிட்சயமான பிரபலங்களைக் கொண்டு பெப்சி விளம்பரங்களைப் பல வித்தியாசமான முறையில் விளம்பரப்படுத்தினார். இந்தியாவில் முன்னணி விளையாட்டு வீரர்கள், திரைப்பட நட்சத்திரங்களைக் கொண்டு பெப்சி குளிர்பானத்திற்கான விளம்பரங்களை அதிக அளவில் செய்தார். இதனால் உலகம் முழுக்க பெப்சியின் விற்பனை வளர்ச்சி கணிசமாக உயர்ந்தது. குறிப்பாக பெப்சியின் விற்பனை வளர்ச்சியில் இந்தியாவின் பங்கு மிக அதிகம். இந்தியாவில் விற்பனையாகும் முதல் ஐந்து குளிர்பானங்களில் பெப்சியும் ஒன்று.

இந்திராவின் திறமைக்கு சி.இ.ஓ பதவியுடன் கூடுதலாக 2007-ம் ஆண்டு அந்நிறுவனத்தின் தலைவர் பொறுப்பும் அவரைத் தேடிவந்தது. ஃபார்ச்சுன் பத்திரிகையின் 2006, 2007, 2008, 2009-ம் ஆண்டுகளின் உலகின் வலிமைமிக்க பெண்கள் பட்டியலில் முதலிடம் பிடித்து சாதனைப் படைத்தார். அந்தச் சமயங்களில் ஓர் இந்தியப் பெண்மணியாக உலகம் முழுக்க இவரது பணித் திறன் பெருமையாக பேசப்பட்டது.

1981ஆம் ஆண்டு ராஜ் நூயி என்பவரைத் திருமணம் செய்து கொண்ட இந்திராவிற்கு இரண்டு பெண் குழந்தைகள் உள்ளனர்.

இவரது திறமையைப் பாராட்டி பல்வேறு விருதுகளும், பட்டங்களும் இவருக்கு வழங்கப்பட்டு உள்ளது. 2007 ஆம் ஆண்டு பாரத அரசு இவருக்கு பத்மபூஷன் விருது வழங்கி சிறப்பித்தது.

எல்லாத் தடைகளையும் பாரத மகளீர் தாண்டி சாதனை படைப்பார்கள் என்ற உண்மையை உலகமெங்கும் உரக்கச் சொன்ன இந்திரா நூயி அவர்களுக்கு ஒரே இந்தியா தளம் மனப்பூர்வமான பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறது.

சனி, 26 அக்டோபர், 2019

புரட்சிவீரர் மன்மதநாத் குப்தா நினைவுநாள் - அக்டோபர் 26

அக்டோபர் 26, வருடம் 2000. இன்றுபோல் அன்றும் ஒரு தீபாவளி திருநாள். பதின்ம வயதிலேயே  சுதந்திரப் போராட்டத்தில் ஈடுபட்டு, அந்நிய ஆட்சியை எதிர்த்து ஆயுதம் ஏந்திப் போராடி அதனால் தனது நாற்பதாம் வயதுக்குள் இருபதாண்டுகளுக்கு மேல் சிறையில் இருந்த பெரும் போராளி தீபவரிசை நாட்டை அலங்கரித்து வழியனுப்ப தொண்ணுற்றி ஒன்றாம் வயதில் தனது வாழ்க்கையை முடித்துக்கொண்ட நாள் இன்றுதான்.



"எங்களை புரட்சியாளர்கள் என்று மக்கள் சொல்கிறார்கள், ஆனால் உண்மையில் நாங்கள் நாட்டுக்காக உயிரை தியாகம் செய்யத் துணிந்த சாதாரண மனிதர்கள்தான்" என்று கூறிய மன்மதநாத் குப்தாவின் நினைவுநாள் இன்று.

வங்காளத்தை தங்கள் பூர்விகமாகக் கொண்ட, வாரணாசியில் வசித்து வந்த  வீரேஸ்வர் குப்தாவிற்கு மகனாக 1908ஆம் ஆண்டு பிப்ரவரி 7ஆம் நாள் பிறந்தவர் மன்மதநாத் குப்தா. பள்ளியில் படிக்கும் காலத்திலேயே விடுதலைப் போராட்டத்தில் கலந்து கொண்டவர் மன்மதநாத். 1921ஆம் ஆண்டு அன்றய வேல்ஸ் இளவரசரான எட்டாம் எட்வர்ட் வருகையை ஒட்டி வாரணாசியில் மன்னர் வரவேற்பு நிகழ்வுக்கு ஏற்பாடு செய்திருந்தார். அதில் மக்களைக் கலந்துகொள்ள வேண்டாம் என்று கூறி அந்த நிகழ்ச்சியை புறக்கணிக்குமாறு அழைப்பு விடுக்கும் துண்டு பிரசுரங்களை 13 வயதான மன்மதநாத் விநியோகிக்கும் செய்துகொண்டு இருந்தார். அரசுக்கு எதிரான நடவடிக்கை என்று அன்றய காவல்துறை அவரை கைது செய்தது. மூன்று மாத சிறைவாசம் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது. விடுதலைப் போருக்கும், சிறைவாழ்வுக்கும் மன்மதநாத் குப்தாவுக்குமான நீண்ட உறவு அன்றுதான் தொடங்கியது.

விடுதலையாகி வந்த மன்மதநாத் காங்கிரஸ் இயக்கத்தில் இணைந்தார். ஒத்துழையாமை இயக்கத்திற்கு காந்தி அழைப்பு விடுத்தார். ஆனால் சவுரி சவுராவில் ஏற்பட்ட கலவரத்தை அடுத்து போராட்டத்தை காந்தி திரும்பப் பெற்றார். மனம் வெறுத்த இளைஞர்கள் தீவிரவாத நடவடிக்கைதான் சரியாக இருக்கும் என்று எண்ணத் தலைப்பட்டனர். பலர் ஹிந்துஸ்தான் சோசலிஸ்ட் அஸோஸியேஷன் என்ற அமைப்பில் இணைந்தனர். ராம் பிரசாத் பிஸ்மி, அஷ்பாகுல்லாகான், சந்திரசேகர ஆசாத், பகத்சிங் என்ற பெரும் வீரர்கள் ஒரே அணியாகத் திரண்டனர். அவர்களில் ஒருவராக மன்மதநாத் குப்தாவும் இருந்தார்.

போராட்டத்திற்கு ஆயுதம் வேண்டும், ஆயுதம் வாங்கப் பணம் வேண்டும், பணத்தை ஆங்கில ஆட்சியிடமே கொள்ளை அடிக்கலாம் என்ற திட்டம் உருவானது. அரசின் பணத்தோடு வந்த புகைவண்டி ஒன்றை ககோரி என்ற இடத்தில் வீரர்கள் கொள்ளை அடித்தனர். ஆனால் ஆட்சியாளர்களின் கைகள் புரட்சிவீரர்கள் பலரை கைது செய்தது. மன்மதநாத் குப்தாவும் கைதானார். பதினெட்டு வயதை எட்டவில்லை என்பதால் பதினாலு ஆண்டுகள் கடுங்காவல் சிறைவாசம் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது. 1937ஆம் ஆண்டு விடுதலையான மன்மதநாத் மீண்டும் ஆங்கில ஆட்சியை எதிர்த்து எழுதத் தொடங்கினார். 1939ஆம் ஆண்டு மீண்டும் சிறை, இந்தமுறை அந்தமான் சிறைக்கொட்டடியில், எட்டாண்டுகள் கழித்து 1946ஆம் ஆண்டு விடுதலை செய்யப்பட்டார். முப்பத்தி எட்டு வயதுக்குள் சரிபாதி வாழ்வை சிறையில் கழித்த வீரர் மன்மதநாத்.

சுதந்திரம் அடைந்த நாட்டில் மன்மதநாத் எழுத்தாளராக உருமாறினார். ஏறத்தாழ நூற்றி இருபது புத்தகங்களுக்கு மேலாக அவர் ஆங்கிலம், ஹிந்தி மற்றும் வங்காள மொழியில் எழுதியுள்ளார். கத்தியின்றி ரத்தமின்றி கிடைக்கவில்லை சுதந்திரம் என்பது, அதில் ஆயுதம் தாங்கி போராடிய வீரர்களின் பங்கு மிகப் பெரியது என்ற உண்மையை போராளிகளின் பார்வையில் இருந்து அவர் பதிவு செய்து உள்ளார். அவர்கள் அபாயகரமான வாழ்க்கையை வாழ்ந்தார்கள் ( They lived dangerously ) என்ற அவரது புத்தகம் அன்றய விடுதலைப் போராட்ட வீரர்களின் வாழ்வை பதிவு செய்துள்ளது. சந்திரசேகர ஆசாத், காந்தியும் அவர் காலமும், பகத்சிங்கும் அவர் காலமும், விடுதலைப் போராட்டத்தில் போராளிகளின் வரலாறு என்பவை அவர் எழுதிய முக்கியமான நூல்களில் சில.

செய்தி ஒளிபரப்பு துறையில் பணியாற்றிய மன்மதநாத் குப்தா திட்டக்குழுவின் சார்பில் பல்வேறு புத்தகங்களை / கையேடுகளை எழுதி வெளியிட்டுள்ளார். பால பாரதி என்ற சிறுவர் பத்திரிகை மற்றும் ஆஜ்கல் என்ற இலக்கிய பத்திரிகை மற்றும் திட்டக்குழுவின் சார்பில் வெளியான யோஜனா ஆகிய பத்திரிகைகளின் ஆசிரியராகவும் மன்மதநாத் குப்தா இருந்தார்.

நாட்டின் வரலாற்றில் மறக்கடிக்கப்பட்ட தியாகிகளில் ஒருவரான மன்மதநாத் குப்தா 2000ஆண்டு அக்டோபர் மாதம் 26ஆம் நாள் இந்திய மண்ணோடு கலந்தார்.

விடுதலை வீரர்கள் அனைவருக்கும் நமது வணக்கங்கள் 

வெள்ளி, 25 அக்டோபர், 2019

நாட்டுக்கு உழைத்த நல்லாசான் - பேராசிரியர் ஜி என் ராமச்சந்திரன் - 8 அக்டோபர்

“இயற்பியலால் ஈர்க்கப்பட்ட மின்பொறியியல்துறை மாணவன் ராமச்சந்திரன் இயற்பியல் துறைக்கு மாற அனுமதிகேட்டுத் தங்களிடம் விண்ணப்பம் செய்திருக்கிறார். மின்பொறியியல் துறைத்தலைவராக நீங்கள் ஏனோ அனுமதி மறுத்துக் கொண்டேயிருக்கிறீர்கள். எனக்குப் புரிகிறது! தான்சார்ந்த துறைக்கு புகழ்பல பெற்றுத் தரக்கூடிய மிக புத்திசாலி மாணவன் அவன் என்பதே காரணம். ஆனால், அத்தனை புத்திசாலி தங்கள் துறையில் இருப்பதைவிட என் துறையில் இருப்பதே உசிதம்” என்ற இயற்பியல் துறைத்தலைவரின் வாதத்தோடு இந்திய அறிவியல் கழகத்தில் இயற்பியல் முதுகலைப் பட்டப்படிப்பைத் துவக்கினார் கோபாலசமுத்திரம் நாராயண ராமச்சந்திரன்.

ஓய்வறியாமல் இயங்கிய மனம் படைத்தவர், ஆக்கப்பூர்வமான ஒருவர்,  சிக்கல்கள் பலவற்றிற்கும் அடுத்தடுத்து தீர்வுகளை தரக்கூடியவர், ஏற்றத் தாழ்வுகள் பலவற்றை வாழ்க்கையில் சந்தித்தவர்,  வெற்றி தோல்விகளை தொடர்ந்து பார்த்தவர். மனச்சிக்கல்கள் பல ஏற்பட்டாலும், அதற்குப் பலியாகாமல், உயிரிஇயற்பியல் வரைபடத்தில் நம் நாட்டிற்கென தனியிடம் வாங்கித் தந்தவர் இவர். இவரின் திறமையை மதித்து அங்கே வந்து ஆராய்ச்சிப் பணியைத் தொடரும்படி மேலை நாடுகள் பலவும் இவரை வற்புறுத்தியும், தன் குருவின் வழியில் நம்நாட்டிற்காக கடைசிவரை பணியாற்றினார். ‘சுமார்’ என்பதே அவர் அகராதியின் கிடையாது. எதையும் மிகச்சீராகச்  செய்து பழகியவர். சுதந்திர பாரதத்தின் உன்னத புதல்வர். நம் அறிவியல் கண்டெடுத்த ரத்தினம் அவர் என அறிஞர் சுபோத் மொகந்தி இவரைப் பற்றிய குறிப்பில் விவரிக்கிறார். அவரின் ஆராய்ச்சிகளுக்கு, அவரின் கண்டுபிடிப்புகளுக்கு நோபல் பரிசு ஏன் தரப்படவில்லை என்பது இன்றளவும் விளங்காத புதிர்தான்!

1922ம்ஆண்டு அக்டோபர் 8ம்நாள் எர்ணாகுளத்தில் நாராயண ஐயர் - லஷ்மி அம்மாள் தம்பதியருக்கு மூத்த மகனாகப் பிறந்தவர் ராமச்சந்திரன். அப்போதிருந்த திருவாங்கூர் சமஸ்தானம் கல்விக்கு அதிக மதிப்பளித்தது. கொச்சியின் மகராஜா கல்லூரியின் கணிதத்துறை பேராசிரியராக எல்லாருக்கும் கல்விக்கொடை வழங்கி பின் கல்லூரி முதல்வராகப் பணிபுரிந்தவர் நாராயண ஐயர். மகனை தன்னார்வத்துடன் பயில ஊக்குவித்தவர். சொல்லிக் கொடுத்த சொல் கூடவே வராது என்பதால் புதுப்புது கணிதப் புதிர்களைத் தந்து அவற்றைத் தீர்க்கச் சொல்லி, அதன் மூலம் மகனின் அறிவுக் கூர்மையைத் தீட்டியவர். பாடப் புத்தகங்களைத் தாண்டிய உலகம் உண்டு, அதில் பயணிக்க கற்றல் எனும் படகும், சுயஉந்துதல் எனும் துடுப்புமே உதவும் என்பதை ராமச்சந்திரனுக்கு சிறிய வயதிலேயே புரியவைத்த பெரியவர் அவர். மதராஸ் மாநிலத்திலேயே முதல்மாணவனாக இன்டர்மீடியட் பரிட்சையில் தேறிய  ராமச்சந்திரன்  இயற்பியல் பட்டப்படிப்பு பயில திருச்சி செயின்ட் ஜோஸப் கல்லூரியில் 1939ல் சேர்ந்தார். அவருடைய ஆசிரியர்களான திரு.பி.இ.சுப்ரமணியம் மற்றும் பேராயர் ராஜம் ஆகியோர் அவரை மேலும் ஊக்கப்படுத்தினர். மீண்டும் சென்னை மாகாணத்திலேயே முதல்மாணவனாகத் தேறினார் ராமச்சந்திரன்.

அக்காலத்தில் படித்த இளைஞர்களின் தேர்வு  இந்தியக் குடிமைத் தேர்வாக இருந்தது. ஆனால் நம் ராமச்சந்திரனின் ஈடுபாடோ அறிவியல் ஆராய்ச்சியின்பால் திரும்பியது. அப்பாவிற்காக இந்திய ரயில்வே பொறியியல் தேர்வை எழுத ஒப்புக்கொண்டார், தனக்காக அதை மோசமாக எழுதினார் ராமச்சந்திரன்! எதிர்பார்த்ததுபோலவே தேர்வு முடிவுகள் அமைந்தது. மிகவும் புத்திசாலியான ராமச்சந்திரன் தோல்வியடைந்தது வீட்டில் எல்லாரையும் அதிர்ச்சி அடையச் செய்தது. நினைத்ததை சாதித்த திருப்தியில் இந்திய அறிவியல் கழகத்தில், மின்பொறியியல் துறையில் முதுகலை பட்டம் பெற பெங்களுர் நோக்கி பயணமானார் ராமச்சந்திரன். அங்குதான் தன் குரு சர்.சி.வி.ராமனை சந்தித்தார். கழகத்தின் முன்னாள் இயக்குனரும், இயற்பியல்துறைத் தலைவருமான ராமனின் வழியை இறுதிவரை பின்பற்றினார்.

“எனக்கு ஒளியியல் கோட்பாடுகளில் புரிதல் உள்ளது என்பதை ராமன் உணர்ந்து கொண்டார். ரேலே மற்றும் ஜீன் விடை கண்ட ஒளிசார்ந்த மிக முக்கிய ஒரு சிக்கலைத் தந்து என்னையும் அதற்குத் தீர்வு எழுதச் சொன்னார். ஒரே நாளில் எழுதிய மிகமிக நீண்ட தீர்வு அது, பலப்பல சமன்பாடுகளை பயன்படுத்த வேண்டியதாய் இருந்தது, என் தீர்வைக் கண்டு நானே பயந்தேன். நூலகத்திற்குச் சென்று, அங்கே புத்தகங்களைப் புரட்டியபின்தான் சரியான பாதையில் பயணிக்கிறேன் என்ற நிம்மதி பிறந்தது. ராமனிடம் காண்பித்தபோது, மிகவும் மகிழ்ந்தார். நிச்சயம் இதை ஒரு ஆராய்ச்சிக் கட்டுரையாக நாம் பதிப்பிக்கவேண்டும் என்றும் வலியுறுத்தினார். இத்தனைக்கும், நான் அவரிடம் சேர்த்து ஒரேயொரு வாரம்தான் ஆகியிருந்தது. இருபது வருடம் கழித்து படிகங்களின் சீரமைப்பை, கூட்டுப்படிகங்களின் அமைப்பை ஆராய இந்த முதல் தீர்வே மிகவும் உதவியது. என் ஆராய்ச்சிக்கு மாதம் ரூ.60 உதவித் தொகையாகத் தர வேண்டும் என்று சிபாரிசு செய்தார் ராமன். என்னிடம் முதுகலைப் பட்டம் இல்லாததால் நிர்வாகம் அந்த சிபாரிசை நிராகரித்துவிட்டது. ‘கவலைப்படாதே! அவர்கள் தரவில்லையென்றால் என்ன? நான் உனக்கு ரூ.130 மாதாமாதம் தருகிறேன். இனி இந்தத் துறையின் இணை ஆராய்ச்சியாளன் நீ!’ என்றார் ராமன். 
ஆராய்ச்சியிலேயே முழுதும் ஈடுபட்டேன். அங்கே எக்ஸ் கதிர் அலைவளைவு ( X - Ray Diffraction )  அமைப்பு  ஒன்றை அங்கே நிறுவும் பொறுப்பு எனக்குத் தரப்பட்டது. படிகவியல் சம்பந்தப்பட்ட புத்தகங்களை, கட்டுரைகளை தேடித்தேடி நானே அறிவை வளர்த்துக் கொண்டேன். உலக அளவில் அப்போதுதான் வளர்ந்து கொண்டிருந்ததால் இது சார்ந்தவை அதிகம் கிடைக்கவில்லை. கையில் கிடைத்த ஹெர்மன் வெய்ல் எழுதிய புத்தகம் என்னுடைய அறிவியல் பார்வையை அப்படியே புரட்டிப் போட்டது. கூடவே அத்துறையில் ஆராய்ச்சியாளர்களுடன் கலந்துரையாட, உலக அறிவியலில் அப்போது என்ன நடந்து கொண்டிருக்கிறது, என்னென்ன சிக்கல்கள் சவால்கள் தீர்வுகள் உள்ளன, இயற்பியல் மூலம் எவ்வாறு பங்களிக்கலாம் என நேரிடையாக அறிஞர்களுடனும் பிற அறிவியல் அறிஞர்களுடனும் கலந்துரையாடக்கூடிய சூழலை உருவாக்கித் தந்தார் ராமன். நம் பாரதநாட்டிற்குப் பிறநாட்டு அறிஞர்களை வரவேற்று, கருத்துப் பரிமாறலுக்கு வழிசெய்தார்”. அப்படி வந்தவர்கள் ராமச்சந்திரன் மனதில் பெரும் தாக்கத்தை விளைவித்தார்கள். பிற்காலத்தில் இவரின் ஆராய்ச்சிக்கு அப்போது வித்திட்டார்கள். பாரதநாடு உயிரிஇயற்பியல்இ உயிரிவேதியியல்இ உயிரிதொழில்நுட்பத்  துறைகளில் இன்றும் பேசப்படுகிறது என்றால்இ இத்தகைய சந்திப்புகளே காரணம்!

தன்னைவிட கணிதத்தில் யார் சிறந்திருந்தாலும், அவர்களை மிகவும் மதித்தார் ராமன். ராமச்சந்திரன் பள்ளிக் காலத்திலேயே கல்லூரியில் கற்பிக்கப்படும் கணிதத்தை நிரம்பப் பழகியிருந்தவர். கல்லூரியில் கணிதப் பட்டப்படிப்பில் புதிதாகப் பயில எதுவும் இல்லை என்பதாலேயே, அவரின் தந்தைஇ இயற்பியல் பட்டப்படிப்பில் சேர்த்தார். மேலும் துணைப்பாடமாக வரும் கணிதத்திற்குபதில் வேதியியல் பயில சிறப்புச் சலுகை பெற்றுத் தந்தார். இதனால் இயற்பியல், கணிதம், வேதியியல் என மூன்றிலுமே திறன் வாய்ந்தவராய் ராமச்சந்திரன் இருந்தார்.

அப்போதெல்லாம் இந்திய அறிவியல் கழகத்தில் ஆராய்ச்சி செய்பவர்கள், இளங்கலை பட்டம் எங்கே பெற்றார்களோ அந்தப் பல்கலைக்கழகத்தோடு இணைத்துக் கொண்டு மேலதிகப் பட்டம் பெறவேண்டும். ஒளியியல் தொடர்பான செயல்முறை மற்றும் கோட்பாடு சார்ந்த ஆராய்ச்சிகள் செய்தார். கலவையான ஊடகத்தில் பாயும் ஒளியின் பண்புகள் பற்றிய செயல்முறைகள், அது தொடர்பான சமன்பாடுகள், கோட்பாடுகள், ஏன்-எப்படி என்ற தத்துவார்த்தமான விவாதங்கள், முடிவுகள் கொண்ட ஆராய்ச்சி அது. 1944ல் சென்னைப் பல்கலைக்கழகம் ராமச்சந்திரனுக்கு முதுகலைப் பட்டம் வழங்கியது.

ராமனின் ஆய்வுக் கூடத்தில் தன் ஆராய்ச்சியைத் தொடர்ந்தார் ராமச்சந்திரன். வைரம், கூட்டு ஸ்படிகம், சுண்ணாம்பு மற்றும் ஜிங்  படிகங்களை – ( Quartz, Zinc Blende  Fluorspar ) பலவித ஒளிக்கற்றை கொண்டு ஆராய்ந்தார். அவற்றில் உள்ள அடுக்குமுறையை, ஒழுங்குமுறையை, கட்டமைப்பை, அதன் வலிமையை, அதற்கான காரணங்களை, அவற்றில் உள்ள ஏற்றத் தாழ்வுகளை, கோணல்களை, மெல்லிய விரிசல்களை, மாசுகளை பலவித வலுவான ஒளிக்கற்றைகளைப் பாய்ச்சி, அவை விலகிச் செல்லும் அளவு  பயணிக்கும் திசை, வேகம் கொண்டு ஆராய்ந்து அளந்தார். பின்னாளில் பலவித ஆராய்ச்சிகளுக்கும் - பொருட்களின் பண்பு சார்ந்த ஆராய்ச்சிகள், தொழில்நுட்பம், வாணிபம், புதிய கண்டுபிடிப்புகள் என பலவற்றிற்கு அடிகோலியது இத்தகைய ஆய்வுகள். அன்றைய காலக்கட்டத்தில், உலக அளவில் நடந்து கொண்டிருந்த ஆய்வுகளுக்கு நம் பாரதமும் பங்களித்தது. மிகவும் சிறந்த முறையில் உருவான இவரின் ஆராய்ச்சி, ஒரு சிறந்த ஆய்வுக் கட்டுரையாக வெளியிடப்பட்டது. அதுவும் தன் பெயர் வேண்டாம் என்றும், ஆய்வின் பலன் தன் அன்பு மாணவன் ராமச்சந்திரனையே முழுதாய் அடையவேண்டும் என்றும் ராமன் கூறிவிட்டார். இது இன்றளவும் மிக உன்னதமான செயல். இந்தக் கட்டுரை ராமச்சந்திரனுக்கு முனைவர் பட்டம் பெற்றுத்தந்தது.

தன்னை மிகவும் கவர்ந்த ப்ராகின் ( Bragg ) ஆராய்ச்சி சவால்களுக்குத் தீர்வு காண இங்கிலாந்து புறப்பட்டார். கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்தில், கேவன்டிஷ் ஆய்வகத்தின் இயக்குனர் ப்ராக.; அப்போது மிகப் பெருமைவாய்ந்த ஆராய்ச்சிப்  படிப்பு அது. உதவித் தொகையை பெறுவது மிகவும் கடினம். இங்கே நம் நாட்டில் ராமன் ஆய்வுக் கூடத்தில் எக்ஸ்ரே அலைவளைவு ஆய்வில் ராமச்சந்திரனுக்கு இருந்த முன்னனுபவமே இந்த வாய்ப்பு கிடைக்கக் காரணம். என்றாலும் ப்ராகிடம் பணி செய்ய வாய்ப்பு தரப்படவில்லை. வுஸ்டர் என்பவரிடமே ஆராய்ச்சிப் பணியை மேற்கொண்டார். அங்கே மீண்டும் முனைவர் பட்டம் பெற்றார் ராமச்சந்திரன். “ஒரு ஆராய்ச்சியை எடுத்துக்கொண்டு, ஒருசில ஆய்வுக் கட்டுரைகளை வெளியிடலாம். அதைவிட முனைவர் பட்டத்திற்காக முழுமனதுடன் ஆராய்ச்சியில் ஈடுபடுவது மிகவும் சவலானது. அதன்மூலம் வரும் ஆராய்ச்சிக் கட்டுரைகளின் தரமும் பெரியது. நம்நாட்டு அதிகாரிகளைக் கவர சாதாரண கட்டுரைகள் போதாது. நான் சென்னைப் பல்கலையில் துறைத்தலைவர; பதவியைப் பெற வெளிநாட்டில் நான் பெற்ற முனைவர் பட்டம் உதவியது என்றால் மிகையல்ல என்றே இப்போது நினைக்கிறேன்” என்றார் ராமச்சந்திரன்; தன் இரண்டாவது முனைவர் பட்டத்தைப் பற்றி நினைவு கூறுகையில்! கேம்ப்ரிட்ஜ் பல்கலையில் க்வாண்டம் ஜாம்பவான் டிராக்கின்(Dirac) பொழிப்புரைகளின் போது, வகுப்பறையில் நேரடி மாணவனாய் அமர்ந்து க்வாண்டம் இயற்பியல் பயின்றார். கூட அமர்ந்திருந்தவர்கள் இளங்கலை மாணவர்கள். ராமச்சந்திரனோ இரண்டாம்முறை முனைவர்பட்ட ஆராய்ச்சி மாணவர். எந்த ஒரு கூச்சமும் இன்றி இயற்பியலை, அணுஅணுவாய் அனுபவித்துக் கற்றவர். அங்கே கற்றவற்றை பின்னாளில் தக்கவாறு சமன்பாடுகள் எழுத பயன்படுத்தினார். மேலும் ராமச்சந்திரனின் முன் அனுபவமும், பரந்த பார்வையும், அந்த வகுப்புகளில்; சொல்லித் தரப்பட்ட கோட்பாடுகளை சீரிய முறையில் உள்வாங்கிக்கொள்ளவும் ஆய்வுகளோடு தொடர்புபடுத்தவும் உதவின. கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் மூன்றுவித பணிகளில் ஈடுபட்டிருந்தார் அவர் - புதிய புதிய கருவிகளை ஆராய்ச்சித் தேவைக்கேற்றபடி கட்டமைத்தல்,  மின்னணு கட்டமைப்பு,  எக்ஸ்-கதிர் பரவல் குறித்த கணித ஆய்வு. இவற்றின் மூலம் படிகங்களின் பண்புகளை ஆராய்ந்தார். ஆய்விற்காக தன்னை அர்ப்பணித்துக்கொண்ட ராமசந்திரனை மேலும் ஊக்கப்படுத்தியது ஒரு சந்திப்பு!

 கல்லூரிக் காலத்தில் தன்னுடைய வேதியியல் அறிவை மேன்மேலும் வளர;த்துக்கொள்ள அவர் நாடியவை லின்னஸ் பாலிங் எனும் மாமேதை எழுதியவை. பலருக்கு திரையுலகத்தில்  இருப்பவர்களும் , சிலருக்கு விடுதலைக்கு உழைத்தவர்களும் நாயகர்களாக  இருக்க, ராமச்சந்திரன் பாலிங்கைத் தன் நாயகனாகப் பார்த்தார். அறிவியல் கோட்பாடுகளைப் பற்றி கவிதைகள் புனைந்த ராமசந்திரன், சில கவிதைகளை  அறிஞர் பாலிங்கின் ஆராய்ச்சியின் மீது எழுதியிருந்தார்.  நிச்சயம் சகமாணவர்களிடமிருந்து  வித்தியாசமாய் இருந்திருப்பார்  என்றே தோன்றுகிறது. கேம்ப்ரிட்ஜ் பல்கலைக்கழகத்தில் லின்னஸ் பாலிங்கை சந்தித்ததிற்குப் பிறகு அவருடைய பார்வை பன்மடங்கு விரிந்தது.

1949ம்ஆண்டு கேம்ப்ரிட்ஜ் பல்கலையில் முனைவர் பட்டம் பெற்ற ஜி.என்.ராமசந்திரனை மேலை நாடுகள் பலவும் தம்மிடம் வரும்படி அழைத்தன. ஆய்வு வசதிகள் பலவற்றையும் தரக்கூடிய நிதிவசதியும் கட்டமைப்பும் அவற்றிடம் உண்டு. சுதந்திர பாரதம் அப்போதுதான் தன்னைச் செப்பனிட்டுக் கொண்டிருந்த சமயம். எல்லோருக்கும் உணவு, உள்நாட்டுப் பாதுகாப்பு என நம்நாடு மெதுமெதுவாய் முதல்அடி எடுத்தது ஒருபுறம்;  மிகச்சிறப்பான வசதிகளுடன் மேலே உயர வாய்ப்பளிக்கும் மேலைநாட்டு ஆய்வுக்கூடங்கள் மறுபுறம்! இந்தச் சூழ்நிலையில்  தன் நாட்டிற்கே வந்து, ஆய்வுப் பணியைத் தொடர்ந்தார்.  இத்தகு மேன்மக்கள் நம் வணக்கத்திற்கு உரியவர்கள்.  நம் பாடப்புத்தகங்களில் இத்தகையோர் பெயர்  வலம் வர வருடங்கள் ஆகுமோ? இன்றைய தொழில்நுட்ப வசதியைப் பயன்படுத்தி, இந்திய மண்ணின் அறிவியல் அறிஞர்களைப் பற்றிய வரலாற்றை நாமே தமிழில் பகிரலாமே!

இருபத்தியேழு வயதில் தாயகம் திரும்பிய ராமச்சந்திரன் 1952வரை பெங்களூர்  இந்திய அறிவியல் கழகத்தில் தான் பயின்ற இயற்பியல் துறையிலேயே துணைப் பேராசிரியராய் பணியமர்ந்தார். அந்த சமயத்தில் ராமன் அவர்கள்  ராமன் ஆய்வுக் கழகத்தை ( Raman Research Institute ) உருவாக்கி அதனை வழிநடத்திக் கொண்டிருந்தார். அதே சமயம் இந்திய அறிவியல் கழகத்தில், ராமன் தொடங்கிய பல ஆராய்ச்சிகளும் அவர்  ஏற்படுத்திய சீடர் குழாத்தின் மூலம் வெற்றிகரமாய் போய்க்கொண்டிருந்தது. ராமச்சந்திரனும் மாணவனாய் தானும் பங்கெடுத்து நிறுவிய எக்ஸ்கதிர; ஆய்வகத்தின் பொறுப்பை ஏற்றார். சி .ராதாகிருஷ்ணன், கோபிநாத்  கர்த்தா, Y T தாத்தாச்சாரி போன்ற பல இளைஞர்களைத் தம்மிடம் ஈர்த்தார். இவர்களைப்  பின்னாளில் மிகப் பெரும் விஞ்ஞானிகளாக உருவாக்கினார். இவர்கள் அனைவரின் ஈடுபாட்டால், அயராத உழைப்பால் மிகச் சிறந்த ஆய்வகமாக இது உயர்ந்தது. 

அந்த சமயத்தில், கல்விக்கான தொலைதூரப் பார்வையோடு வாழ்ந்தவர் டாக்டர் ஏ  லட்சுமணசாமி முதலியார்.  சென்னைப் பல்கலைக்கழகத்தின் துணைவேந்தராய் அதை வழிநடத்தி வந்தார்.  சென்னைப் பல்கலைக்கழகம் தன்னுடன் இணைந்த கல்லூரிகளில் பயின்றவர்களுக்கு  இயற்பியல் பாடத்தில் இளங்கலை, முதுகலை, முனைவர் பட்டம் தந்துகொண்டிருந்தது. நம் ராமச்சந்திரன்  கூட சென்னைப் பல்கலை மூலம் தானே எல்லாப் பட்டங்களையும் பெற்றிருந்தார். ஆனால் அந்தப் பல்கலைக்கழகத்திற்கென இயற்பியல் துறை ( University Department of Physics ) கிடையாது. கொஞ்சம் விந்தைதான் இது!!  இது நடத்திய கல்லூரிகளில் இயற்பியல்துறை உண்டு, ஆனால் தன்னிடம் அத்துறை கிடையாது. முதலியார் அந்தக் குறையை நீக்க முனைந்தார். இயற்பியலில் நோபல் பரிசு பெற்ற ராமனிடம் கேட்டுப் பார்த்தால்  என்ன என நினைத்திருப்பார். அதற்குமுன் நம் தாய்நாடும் அறிவியலில் சாதனை படைக்க வேண்டுமென்றால்  மிகச் சிறந்த ஆய்வுகள் செய்ய நல்லகட்டமைப்பும், நிதி உதவியும், பரந்த ஆய்வகம் அமைக்க போதிய இடமும் வேண்டுமே. ஆய்வாராச்சித்துறை மட்டும் போதுமா? கோட்பாடு சார்ந்த ஆராய்ச்சியும் தேவைதானே? சரி! எல்லா ஏற்பாடுகளையும் செய்து விட்டார்.  ஆய்வு ஆராய்ச்சி இயற்பியல் துறையை ( Experimental Physics ) தலைமை ஏற்று நடத்துமாறு சர் .சி.வி.ராமனை கேட்டுக் கொண்டார்  லட்சுமணசாமி முதலியார்.  கட்டற்ற வசதிகளும், தடங்கல் இல்லாத உதவிகளும் உண்டு என வாக்களித்தார். உலகத் தரம்வாய்ந்த இயற்பியல் ஆராய்ச்சி சென்னைப் பல்கலையில் நடக்க எல்லா வசதிகளும் செய்யத் தயார் என்றும் கூறினார;. எல்லாவற்றையும் கேட்டு மகிழ்ந்த ராமன், ‘‘என்னைவிட சிறந்த ஒருவரை உங்களுக்குத் தருகிறேன். உங்களின் தொலைதூரப் பார்வையில் தெரிவதை வெற்றி கொள்ள அதே பார்வை உடைய ஓர; இளைஞன் தேவை. அதே சமயம் நல்ல அனுபவமும், ஆழ்ந்த அறிவும், அயராத உழைப்பும், நாட்டுப்பற்றும் மிகமிக அவசியம்,’’  என்றார். பதிலுக்கு. வியப்பு அடங்கும் முன்னே, ‘‘அவன்தான் என் மனதுக்கினிய மாணவன், ஜி.என்.ராமச்சந்திரன், உங்கள் லட்சியத்தை எனக்குப் பதிலாக நிறைவேற்றுவான்” என்றார் சர் சி.வி.ராமன்.

முப்பது வயதேயான ஜி.என். ராமச்சந்திரன்  சென்னைப் பல்கலைக்கழகத்தின் இயற்பியல்துறையின் முதல்பேராசிரியராய், துறைத்தலைவராய், ஆய்வாராய்ச்சிகளை மேற்கொள்ள அக்டோபர்  1952ல் சென்னை வந்தார். மெரினா கடற்கரை எதிரே உள்ள பல்கலைக்கழக வளாகத்தில் இயற்பியல் துறைக்கான  அறை ஒதுக்கப்பட்டது. ஆய்வகம் சென்னை கிண்டியில், அழகப்பா வளாகத்தில் துவங்கப்பட்டது. I I T Madras 1959ல் தான் உருவானது. ஜி.என் ஆர் . என அழைக்கப்பட்ட ராமசந்திரனின் ஆய்வாராய்ச்சிகள், வெளியிட்ட ஆய்வுக் கட்டுரைகள், ஆய்வுமுடிவுகள் சென்னைப் பல்கலைக்கழகத்தின்மேல் உலக அறிவியலின் பார்வையைத்  திருப்பியது. அந்நாட்களிலேயே இரண்டுமுறை உலகளவிலான ஆராய்ச்சி சார்ந்த  கருத்தரங்குகளை நடத்தினார். எக்ஸ் கதிர்கள் மூலம்  படிகங்களின் மூலக்கூறுகளை ஆராய்ந்த அவர்  தன் ஆராய்ச்சியை பலவிதமான மூலக்கூறுகளின் பக்கம் திருப்பினார; - முக்கியமாக உயிரியியல் மூலக்கூறுகள். மூலக்கூறு உயிரியியல் (Molecular Biology )  மற்றும் உயிரிஇயற்பியல் ( Bio Physics ) ஆகிய துறைகள் நம் நாட்டில் வேர் பிடித்து செழித்து வளர மிகப் பெரிய காரணம் இவரின் ஆராய்ச்சிதான்.  

மிகச் சிறந்த மாணவர;களை சட்டென அடையாளம் கொள்வது எல்லா ஆசிரியர்களுக்கும் வராது. அத்தகையோரை அடையாளம் கொண்டு, அவர்களின் தனித்தன்மையை இனம்கண்டு, அவர்களுக்கான பாதையை வகுக்க உதவுவதோடு, தேவையான ஊக்கத்தையும், நிதியுதவியையும், கட்டமைப்பையும் தாராளமாய் தந்து, அவர்களை நெறிப்படுத்தவும் செய்யக்கூடிய ஒரு ஆசானே, ஆராய்ச்சியில் தொடர்ந்து  நீடிக்கமுடியும். அத்தகைய  நல்வழிகாட்டி  சர் சி.வி. ராமன், தன் சீடன் ஜி.என்.ஆருக்கும் இந்த சூட்சுமத்தை சொல்லித்தந்திருப்பார; போல! தனிநபர் ஆராய்ச்சி ஓரளவு வெற்றி தரலாம். ஆனால் ஒரு குழுவாய், பல ஆண்டுகள் ஆராய்ச்சிக்களத்தில் நீடிக்க ஆசிரியரும், ஆண்டாண்டுகளில் மாறிக்கொண்டே வரும் மாணவர்களும் ஓத்தார் போல் இயைந்து செயல்படவேண்டும். மாறிக்கொண்டே வரும் ஆராய்ச்சித் தேவைகள், அறிவியல் உலகின் பாதைகள், அகண்டுகொண்டே வரும் தலைமுறை இடைவெளிகள், நவீனமயமாக்கல், பணவீக்கம், செலவதிகரிப்பு என எல்லாவற்றையும் ஒருங்கே சமாளிக்கக் கூடியவர்களே ஆராய்ச்சித் துறையில் தொடர்ந்து  பரிமளிக்க முடியும். அத்தகைய ஆளுமை பெற்றிருந்த பேராசிரியர்  ஜி.என்.ஆர் 1970வரை சென்னைப் பல்கலையின் உயிரி இயற்பியல் துறையில் தலைவராக அரும்பணியாற்றினார;. 

லின்னஸ் பாலிங், சிவிர; ஒகோஆ, மோரிஸ் வில்கின்ஸ், பால் ஃப்லாரி, ஜே.டி.பெர;னால் என பலப்பல அறிவியல் மேதைகள் இத்துறைக்கு வந்தவண்ணம், ஆராய்ச்சி மாணவர;களுடன் கலந்துரையாடியவண்ணம் இருந்தனர;. இவரின் ஆராய்ச்சிக்குழு மெட்ராஸ்குழு ( Madras Group )  என்று உலகளவில் ப்ரபலமாய் இருந்தது. அந்தக் காலகட்டத்தில், அறிவியல் ஆராய்ச்சியில் மிகவும் பேசப்பட்ட ஒரு குழு அது, நினைத்துப் பார;க்கவே வியப்பளிக்கிறது! கட்டமைப்பு உயிரியியல் ( Structural Biology )  எனும் மிகப் புதிய துறைக்கு இக்குழுவின் பங்களிப்பை இணையதளத்தில் தேடிப் பார;த்து படிப்பது ஒவ்வொரு இந்தியனின் கடமை. நம் குழந்தைகளுக்கும், மாணவர்களுக்கும் இவர்களைப் பற்றி நாம் கூறும்போதுதான், நம் நாடு உலக அறிவியலுக்கு அளித்துள்ள பங்கு புரியும். இதனை நாமே செய்யவில்லையென்றால், நம்மைப் பற்றிய புரிதல், நம் பங்களிப்பு தெரியாமலேயே வாழ்க்கையை கடந்துவிடும் அபாயம் உள்ளது. நமக்கு நம் நாட்டு அறிவியலாளர்கள் பற்றிய புரிதல், தெளிவு வந்தால் மட்டுமே அடுத்த தலைமுறைக்கு அதைப்பற்றி எடுத்துக் கூறமுடியும்.

இக்குழுவின் மாபெரும் பங்களிப்பாக கோலஜென் எனும் ஒருவகை புரதத்தின் அமைப்பு முச்சுருள் ( Triple Helix )  வடிவில் உள்ளது என்பதாகும். மேலும்; உயிரிதொழில்நுட்பம், உயிரிவேதியியல், உயிரிஇயற்பியல் துறைகள் ராமச்சந்திரன் வரைபடம் ( Ramachandran Plot )  புரதமூலக்கூறுகளின் கட்டமைப்பை கண்டறிய இன்றுவரை உலக அளவில் பயன்படுத்தப்படுகிறது. DNA மூலக்கூறுகள் இருசுருள் கட்டமைப்பு உடையவை என்று கூறிய க்ரிக் மற்றும் வேட்ஸன் ஏனோ இவரின் அடுத்தகட்ட முச்சுருள் வடிவமைப்பிற்கு அத்தனை முட்டுக்கட்டை போட்டார்கள்.  நோபல்பரிசு பெற்ற அவர்களின் பேச்சிற்கு எவ்வளவுதான் சரியான வாதத்தை வைத்தாலும் பலப்பல சங்கடங்களை எதிர்நோக்க வேண்டியதாயிற்று. இதுவே பெரும் மன உளைச்சலை அவருக்குத் தந்தது. ஆனால் சிறிதும் தளராமல் ஆராய்ச்சியைத் தொடர்ந்தார் ஜி.என் ஆர்.  அவரின் ஆராய்ச்சிக்கான உலக அங்கீகாரமாக நோபல்பரிசு கிடைக்கும் என்றே பலர் நம்பினார்கள். அதுவும் ஏனோ நடக்கவில்லை! ஆனால், க்ரிக்-வேட்ஸனின் கோணமே தவறானது, அதில் சரியான தர்க்கம்  இல்லை என பிற்பாடு முடிவானது. ஆனால் ஜி.என்.ஆருக்கு கிடைக்க வேண்டிய அங்கீகாரம் கிடைத்ததா என்றால், அது கேள்விக்குறிதான்.  சிலகாலத்தில், இவரை இங்கு வரவழைத்து போதிய வசதிகள் செய்து தந்த துணைவேந்தர் லக்ஷ்மணசாமி முதலியார் பதவிக்காலம் முடிந்து வெளியேறியிருந்தார். ஆதனால் ஏற்பட்ட அதிகார மாற்றத்தில், ஆராய்ச்சிப்பணியைத் தொடர்வதில் பல தடங்கல்கள் ஏற்பட்டன.

சென்னையால் அவரின் மகத்தான பணிகளுக்கு இடம் கொடுக்கமுடியவில்லை. ஆனால், பெங்களூர்  இந்திய அறிவியல் கழகம் கரம்நீட்டி அவரை அரவணைத்தது. வழிகாட்டும் நல்லாசனே முக்கியம் என அவரின் குழு மாணவர்கள் அவரைத் தொடர்ந்தனர்.  1971முதல் அங்கே தன் ஆராய்ச்சிகளைத் தொடர்ந்தார். அவர்  அன்று வித்திட்ட பல ஆராய்ச்சிகள், இன்று பெரும் ஆலமரமாய் நாடுமுழுதும் பரவியுள்ளன. இவரின் ஆராய்ச்சிகளைப் பற்றி எழுத ஒரு தனிக்கட்டுரை போதாது. மிகப்பெரும் அறிவியல் பாரம்பரியத்தை நம்மிடையே விட்டுச்சென்றுள்ள பேராசிரியர் ஜி.என்.ராமசந்திரன் நமக்குக் கிடைத்த நல்வைரம். பல பதவிகளை பட்டங்களைப் பெற்றிருந்தாலும், ஒரு ஆசிரியராய் வழிகாட்டியாய் ஆராய்ச்சிப் பணிக்கே தன்னை அற்பணித்துக் கொண்டவர் . இவர் தன் வழிகாட்டி சர்  சி.வி.ராமனின் பாதையில், பெரும் போராட்டங்களுக்கு இடையில் ஆராய்ச்சிகளை இறுதிவரை தொடர்ந்து செய்தார்.  என் கடன் பணிசெய்து கிடப்பதே என வாழ்ந்த இத்தகைய ஆசிரியர்களை அறிவியல் மேதைகளை, வழகாட்டிகளை, ஆராய்ச்சியாளர்களை இந்த விஜயதசமி நன்னாளில் போற்றி வணங்குவோம்.

எண்ணமும் எழுத்தும் 

பேராசிரியை திருமதி உத்ரா துரைராஜன் 

கேலிச்சித்திர கலைஞர் R K லக்ஷ்மன் பிறந்தநாள் - அக்டோபர் 24

பாரதம் அப்போதுதான் ஆங்கில ஆட்சியின் பிடியில் இருந்து விடுதலை அடைந்து இருந்தது. அந்நியர் ஆட்சி அகன்றதால் இனி நாட்டில் பாலாறும் தேனாறும் ஓடும் என்ற நம்பிக்கையை மக்களிடம் அரசியல்வாதிகள் விதைத்துக்கொண்டு இருந்தனர். அரசியலமைப்பு சட்டம் நிறைவேறி, பாரதம் தன்னை ஒரு ஜனநாயக குடியரசு நாடாக அறிவித்து இருந்தது. வயது வந்த அனைவரும் ஒட்டுப் போட்டு தங்கள் பிரதிநிதிகளைத் தேர்ந்தெடுக்கும் முதலாவது நாடாளுமன்ற தேர்தல் நடைபெற்ற இன்னும் ஒரு ஆண்டு காலம் இருந்தது.



பாராளுமன்றத் தேர்தல், ஜவஹர்லால் நேரு தலைமையிலான அரசு,ஐந்தாண்டு திட்டங்கள், சீனா உடனான போர், நேரு மறைவு, லால் பகதூர் சாஸ்திரி பிரதமராகப் பொறுப்பேற்றல், பாகிஸ்தானுடனான போர், தாஷ்கண்ட் ஒப்பந்தம், சாஸ்திரி மறைவு, இந்திரா பிரதமராகுதல், காங்கிரஸ் கட்சி பிளவு அடைதல், பாரதம் சோசலிச சித்தாந்தத்தில் கரைதல், வங்கிகள் தேசியமயமாக்கல், மன்னர் மானியம் ஒழிப்பு, வங்காள தேச விடுதலைக்காக மீண்டும் இந்தியா பாகிஸ்தான் போர், நெருக்கடி நிலை, ஜனதா கட்சி ஆட்சி, இரண்டரை ஆண்டுகளில் அதுவும் கவிழ்தல், மீண்டும் இந்திரா, பஞ்சாப் தீவிரவாதம், பொற்கோவிலில் ராணுவம் நுழைதல், இந்திராவின் படுகொலை, ராஜிவ் பதவி ஏற்பு , டெல்லியில் சீக்கியர்கள் மீதான தாக்குதல்கள், போபால் விஷவாயு கசிவு, போபோர்ஸ் பீரங்கி ஊழல், ஜனதாதளத்தின் சார்பில் வி பி சிங், அவரைத் தொடர்ந்து சந்திரசேகர் பிரதமராகுதல், ராஜிவ் படுகொலை, நரசிம்மராவ் பிரதமராகுதல், பொருளாதார தாராளமயமாக்கல், மீண்டும் தேவ கௌடா மற்றும் குஜரால் பிரதமர் பதவிக்கு வருதல், பாரதிய ஜனதா கட்சி சார்பில் வாஜ்பாய் பதவி ஏற்றல், கார்கில் போர். மிகச் சரியாக பாரதம் விடுதலை பெற்ற ஐம்பது ஐந்து கால வரலாற்றை சுருக்கமாகச் சொன்னால், இப்படி சொல்லி முடிக்கலாம்.

இந்த வரலாற்றை அருகில் இருந்து எதுவும் பேசாமல், சாட்சியாக மட்டும் இருந்து கவனித்து பதிவு செய்த ஒரு மனிதர் உண்டு. அவருக்கு பெயர் கூடக் கிடையாது. வேண்டுமானால் நாம் அவரை திருவாளர் பொதுஜனம் ( The common man ) என்று பெயரிட்டு அழைக்கலாம். அவரது உடையை இந்தியாவில் எந்த ஒரு குறிப்பிட்ட பகுதியிலும் மொத்தமாகப் பார்க்க முடியாது. ஒவ்வொரு பகுதியில் இருந்தும் ஒவ்வொன்றாய் எடுத்துப் போட்டு உருவான ஆடை அது. ஒரு பஞ்சாபி தென்னிந்தியரில் இருந்து மாறுபட்டு இருக்கலாம். ஒரு வங்காளி பீஹாரியைப் போல இல்லாமல் இருக்கலாம். ஆனால் மொத்த பாரதப் பிரஜைக்கும் ஒரு ஒற்றுமை உண்டு. அது, நாட்டில் தன்மீது அரசியல்வாதிகளால், பணம் படைத்தவர்களால் நடத்தப்படும் கொடுமைகள் அத்தனையும் பார்த்துக் கொண்டு, செய்வதறியாமல் தவித்து நிற்பதோடு, வாயைத் திறக்காமல் அத்தனையையும் சகித்துக் கொண்டு இருப்பதுதான். அப்படியான மக்களின் பிரதிநிதி பேசவா செய்வார் ? அவர் எல்லாவற்றையும் பேசாமலேயே பார்த்துக் கொண்டு இருப்பார். ஆனால் அவர் பேசவேண்டியவற்றை அவரது முகபாவங்களே காட்டி விடும். அப்படியான மக்களின் பிரதிநிதியை உருவாக்கிய கேலிச்சித்திர கலைஞர் ராசிபுரம் கிருஷ்ணஸ்வாமி லக்ஷ்மன் சுருக்கமாக ஆர் கே லக்ஷ்மன் அவர்களின் பிறந்த தினம் இன்று.



பாரதத்தின் முக்கியமான கதை சொல்லிகளின் ஒருவரான திரு ஆர் கே நாராயணனின் சகோதரர் ஆர் கே லக்ஷ்மன். இவர் தந்தை பள்ளி தலைமை ஆசிரியர். ஆறு மகன்களும், இரண்டு பெண்களும் உள்ள பெரிய குடும்பத்தின் கடைசி பிள்ளை லக்ஷ்மன். தந்தை மைசூரில் பணி புரிந்ததால், லக்ஷ்மன் படிப்பு மைசூர் நகரிலேயே நடைபெற்றது. சிறு வயதில் இருந்தே தரைகளிலும், சுவர்களிலும், பள்ளி புத்தகங்களிலும் படங்கள் வரைவது லக்ஷ்மணின் பழக்கம். இவரின் சிறு வயதிலேயே தந்தை இறந்து விட்டதால், தனது சகோதர்கள் ஆதரவில் லக்ஷ்மன் வளர்ந்தார். மைசூர் பல்கலைக்கழகத்தில் இளங்கலை பட்டம் பெற்றார். படிக்கும் போதே பல்வேறு பத்திரிகைகளுக்கு படம் வரைந்து கொடுப்பது இவரின் பகுதி நேரத் தொழிலாக இருந்தது.

ஸ்வராஜ்யா, பிளிட்ஸ், ஹிந்து போன்ற பத்திரிகைகளுக்கு படம் வரைந்து கொண்டிருந்த லக்ஷ்மன், Times of India பத்திரிகையில் இணைந்து கொண்டார். அப்போது அவரோடு சித்திரக்காரராக பணியாற்றியவர் மகாராஷ்டிராவின் முக்கியத் தலைவராக பின்னாளில் உருவெடுத்த பால் தாக்கரே. அப்போது உருவானவர்தான் இந்த திருவாளர் பொதுஜனம்.

சிறுது சிறிதாக உருமாறி, பாரத பிரஜைகளின் ஒட்டு மொத்த உருவமாக, அவர்களின் மனசாட்சியாக மாறியவர் அவர். ஐம்பதாண்டுகால பாரத நாட்டின் வரலாற்றை திருவாளர் பொதுஜனத்தின் பார்வையில் பார்ப்பது என்பது நமது வரலாற்றை நாமே மீள்பார்வையை பார்ப்பதாகும். கேப்டன் கோபிநாத் தொடங்கிய டெக்கான் விமான நிறுவனத்தின் அடையாளமாகவும் திருவாளர் பொதுஜனமே இருந்தார். திருவாளர் பொதுஜனத்திற்கு பூனா நகரிலும் மும்பையிலும் சிலைகள் உள்ளன.



 புகழ்பெற்ற நடனக் கலைஞரும் திரைப்பட நடிகையுமான பேபி கமலா என்பவரை லக்ஷ்மன் திருமணம் செய்து கொண்டார். ஆனால் அந்த மணவாழ்வு வெற்றிகரமாக அமையவில்லை. முறையான விவாகரத்துக்குப் பிறகு மீண்டும் கமலா என்ற பெயர் கொண்ட இன்னொரு பெண்மணியை அவர் மணந்து கொண்டார்.

பக்கவாதத்தால் பாதிக்கப்பட்ட லக்ஷ்மன் 2015ஆம் ஆண்டு ஜனவரி 26ஆம் நாள் காலமானார். 

புதன், 23 அக்டோபர், 2019

சுபேதார் ஜோகிந்தர் சிங் - நினைவுநாள் அக்டோபர் 23.

இந்திய ராணுவத்தின் மிக உயரிய விருதான பரமவீர்சக்ரா விருது பெற்ற சுபேதார் ஜோகிந்தர்சிங் அவர்களின் நினைவுநாள் இன்று. 1962ஆம் ஆண்டு நடைபெற்ற சீனாவுடனான போரில் பெரும் வீரத்தைக் காட்டி, உச்சகட்டமாக தன உயிரைத் தியாகம் செய்து வீரமரணம் அடைந்தவர் திரு ஜோகிந்தர்சிங் அவர்கள்.



பஞ்சாப் மாநிலத்தைச் சார்ந்த ஷேர்சிங் சஹனான் - கிருஷ்ணன் கவுர் தம்பதியரின் மகனாக 1921ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 26ஆம் நாள் பிறந்தவர் திரு ஜோகிந்தர் சிங். பள்ளிப் படிப்பை முடித்த பின்னர் அவர் அன்றய பிரிட்டிஷ் ராணுவத்தில் சிப்பாயாகச் சேர்ந்தார். அவர் அன்றய ராணுவத்தின் சீக்கிய பிரிவில் பணியாற்றத் தொடங்கினார். ராணுவத்தில் சிறப்பு பயிற்சிகளை முடித்து அவர் வீரர்களின் பயிற்சியாளராகவும் விளங்கினார். இரண்டாம் உலகப் போரிலும், பின்னர் 1947ஆம் ஆண்டு நடைபெற்ற பாகிஸ்தான் போரிலும் ஜோகிந்தர் கலந்துகொண்டார்.

1962ஆம் ஆண்டு சீனா இந்தியாமீது படையெடுத்தது. களநிலவரம் தெரியாமல் கற்பனையில் மூழ்கி இருந்த தலைமையால் இந்திய ராணுவம் தோல்வியைச் சந்தித்தது. ஆனாலும் எல்லா இடர்களுக்கு நடுவிலும், இந்திய ராணுவ வீரர்கள் தங்கள் துணிச்சலைக் காட்டி பெரும் சாகசங்களை நிகழ்த்தினர்.

அருணாச்சல் பிரதேசத்தில் உள்ள நம்கா சூ என்ற ஆற்றின் அருகே உள்ள தளத்தைக் காக்க சீக்கியப் படை பிரிவு களம் இறங்கியது. மிகக் குறைவான தளவாடங்களையும் அதைவிடக் குறைவான வீரர்களையும் கொண்ட ஒரு சிறு படைப்பிரிவு முழுவதுமாக தங்கள் உயிர்களைத் தியாகம் செய்து, முடிந்தவரை சீனப் படைகளைத் தடுத்து நின்றனர். ஆனாலும் எண்ணிக்கையில் கூடுதலாக இருந்த சீனப் படை எல்லா இந்திய வீரர்களையும் கொன்று அந்தத் தளத்தைக் கைப்பற்றியது.

அதனைத் தொடர்ந்து முன்னேறிய சீனப்படையை பும்லா கணவாய் அருகே சீக்கியப் படையின் இன்னொரு பிரிவு எதிர்கொண்டது. அந்த படைக்கு தலைமை வகித்தவர் சுபேதார் ஜோகிந்தர் சிங். மொத்தம் இருபது வீரர்கள் கொண்ட படை அது. கேந்த்ர முக்கியத்துவம் வாய்ந்த அந்தத் தளத்தை கைப்பற்ற அடுத்தடுத்து மூன்று முறை தலா 200 வீரர்கள் கொண்ட படையை சீனா அனுப்ப வேண்டி வந்தது. இரண்டு முறை வந்த படையெடுப்பை வெற்றிகரமாக முறியடித்து, எதிரிகளை முழுவதுமாக சீக்கியப் படைப்பிரிவு கொன்றது. ஆனால் அதில் நமது படையின் பாதி வீரர்கள் மரணமடைந்தார். மூன்றாம் முறை அடுத்த 200 சீன வீரர்கள் தாக்குதலை பத்தே இந்திய வீரர்கள் எதிர்கொள்ள வேண்டி இருந்தது. இதற்கிடையில் இந்தியப் படையின் குண்டுகள் எல்லாம் காலியாகி விட்டது.

கையில் துப்பாக்கியோடு 200 சீன வீரர்கள் ஒருபுறம், தாயகத்தைக் காக்கும் பணியில் எந்த தளவாடங்களும் இல்லாத பத்து இந்திய வீரர்கள் மறுபுறம். ஆனாலும் போரில் பின்வாங்குவது என்பது சீக்கிய வீரர்களின் வரலாற்றிலேயே இல்லாத ஓன்று. துப்பாக்கியில் குண்டு இல்லாவிட்டால் என்ன ? துப்பாக்கி முனையில் சொருகப்பட்ட கத்தி உள்ளதே. 'ஜெய் போலோ ஸோ நிஹால் ஸத் ஸ்ரீ அகால்' இதுதான் சீக்கியப் படைப்பிரிவின் போர் முழக்கம். குரு கிரந்த சாஹிபின் புனித மந்திரமான ஸத் ஸ்ரீ அகால் என்ற முழக்கத்தோடு துப்பாக்கியில் உள்ள கத்தியை ஆயுதமாக கையில் ஏந்தி சுபேதார் ஜோகிந்தர்சிங் தலைமையில் மீதம் இருந்த பத்து வீரர்களும் எதிரிகளை நேருக்கு நேராக எதிர்கொண்டனர். எதிரியின் படையில் பெரும் சேதத்தை உருவாக்கி, அவர்கள் பாரத வீரத்தை பாரெங்கும் பறை சாற்றினர்.

எண்ணிக்கையிலும், தளவாடத்திலும் அதிகமாக இருந்த சீனர்கள் அந்தப் போரில் வெற்றி அடைந்தனர். ஆனால் அதற்காக அவர்கள் அளிக்க வேண்டிய விலை மிக அதிகமாக இருந்தது. சுபேதார் ஜோகேந்தர்சிங் போர் கைதியாக சீனர்களால் சிறை பிடிக்கப்பட்டார். ஆனால் சண்டையில் ஏற்பட்ட காயங்களால் அவர் மரணம் அடைந்தார்.

பிரமிக்கத் தக்க வீரத்தைக் காட்டி, மிகப் பெரும் தியாகத்தைச் செய்து பலிதானியான சுபேதார் ஜோகேந்தர்சிங் அவர்களுக்கு பாரத ராணுவத்தின் மிகப் பெரும் விருதான பரம்வீர் சக்ரா விருது அளிக்கப்பட்டது. முழுமரியாதையோடு ஜோகிந்தர்சிங்கின் அஸ்தியை சீனா பாரத நாட்டிடம் ஒப்படைத்தது.

எண்ணற்ற ராணுவ வீரர்கள் நாட்டின் எல்லையைக் காத்து நிற்கின்றனர். அவர்கள் அனைவருக்கும் நமது வணக்கங்கள். 

செவ்வாய், 22 அக்டோபர், 2019

புரட்சிவீரர் அஷ்பாகுல்லாகான் பிறந்தநாள் - 22 அக்டோபர்.

பாரதநாட்டின் விடுதலை என்பது பல்லாயிரக்கணக்கான தியாகிகளின் பலிதானத்தால் கிடைத்த ஓன்று. கத்தியின்றி ரத்தமின்றி என்று கூறப்பட்டாலும், தூக்குமேடையை முத்தமிட்டவர்கள், பீரங்கி குண்டுகளில் தங்கள் இன்னுயிரை ஈந்தவர்கள், நாடு கடத்தப்பட்டவர்கள், பல்வேறு வெளிநாடுகளில் இருந்து புரட்சிகீதம் இசைத்தவர்கள் என்று பலப்பல தியாகசீலர்களின் உதிரத்தால் உருவானது நாம் இன்று அனுபவித்துக்கொண்டு இருக்கும் சுதந்திரம். திட்டமிட்டு பல்வேறு தியாகிகளின் வரலாறு மறைக்கப்பட்டது என்றாலும் அதனைத் தாண்டி அந்த வீரர்களின் வாழ்க்கையைப் பதிவு செய்வதும், அதனை ஆவணப்படுத்துவதும் நமது கடமையாக இருக்கவேண்டும். எரிநட்ஷத்திரம் போல மிகக் குறுகிய காலமே வாழ்ந்தாலும், சர்வ நிச்சயமாக மரணம்தான் என்பதை உணர்ந்து, இன்று உந்தன் பாதத்தில் தாயே! நானே அர்ப்பணம் என்று பலிதானியான புரட்சிவீரர்களில் முக்கியமானவர் அஷ்பாகுல்லாகான்.



இன்றய உத்திரபிரதேச மாநிலத்தில் உள்ள ஷாஜஹான்பூரில் ஷபியுல்லாகான் - மெஹரின்நிசா   தம்பதியரின் ஆறாவது மகனாக 1900ஆவது ஆண்டில் அக்டோபர் 22ஆம் நாள் பிறந்தவர் அஷ்பாகுல்லாகான். இவர்கள் ஆப்கானிஸ்தானைச் சார்ந்த பட்டாணி இனத்தவர். அஷ்பாகுல்லாகான் வளரும் காலம் என்பது இந்திய நாட்டின் சுதந்திரப் போராட்டம் கொழுந்து விட்டு எரிந்து கொண்டிருந்த காலம். வங்கப் பிரிவினையும், திலகரின் பூரண ஸ்வராஜ் முழக்கமும், பின்னர் காந்தியின் விஸ்வரூபமும், ஜாலியன்வாலாபாக் படுகொலையும், பல்வேறு ஆயுதம் ஏந்திய போராட்ட முயற்சிகளும் என்று நாடு ஒரு கொந்தளிப்பான காலகட்டத்தில் பயணித்துக் கொண்டு இருந்தது. இதன் தாக்கம் அஷ்பாகுல்லாகான் வாழ்க்கையிலும் எதிரொலித்தது.

1922ஆம் ஆண்டில் காந்தி ஒத்துழையாமை இயக்கத்தை ஆரம்பித்தார். நாடெங்கும் ஆங்கில ஆட்சிக்கு பாரத மக்கள் ஒத்துழைக்கப் போவதில்லை என்று போராடத் தொடங்கினார்கள். ஆனால் சவுரிசவுரா என்ற இடத்தில் தங்கள் கட்டுப்பாட்டை இழந்த மக்கள் ஒரு காவல் நிலயத்தைத் தாக்கி அதனை தீக்கிரையாக்கினார். இதில் சில காவலர்கள் இறக்க நேரிட்டது. மக்கள் அஹிம்சை முறையிலான போராட்டத்திற்கு இன்னும் தயாராகவில்லை என்று கூறி காந்தி போராட்டத்தை திரும்பப் பெற்றார்.

இதனால் மனசோர்வுற்ற பல்வேறு இளைஞர்கள் ஆயுதப் போராட்டப் பாதைக்கு திரும்பினார். பாரத நாடெங்கும் பல்வேறு குழுக்களாக ஆயுதப் போராட்டத்திற்கு மக்கள் தங்களைத் தயார் செய்து கொண்டுதான் இருந்தார்கள், அவர்களுக்கு உலகத்தின் பல்வேறு நாடுகளில் வசித்துவந்த பாரத மக்கள் உதவிக் கொண்டுதான் இருந்தார்கள். ஆயுதம் ஏந்திய போராட்டத்திற்கும் ஒரு நீண்ட வரலாறு உண்டு என்பதுதான் உண்மை. அஷ்பாகுல்லாகான்ஹிந்துஸ்தான் சோசலிஸ்ட் ரிபப்ளிகன் அசோஸியேஷன் என்ற அமைப்பில் இணைந்துகொண்டார். அதாவது அஷ்பாகுல்லாகான் புகழ்பெற்ற புரட்சிவீரர்களான பகத்சிங், சுகதேவ், ராஜகுரு, சந்திரசேகர ஆசாத் ஆகியோரின் தோழரும், சகபோராளியுமாவார்.

ஆயுதம் தாங்கிய போராட்டம் என்றால் ஆயுதம் வேண்டாமா ? ஆயுதம் வாங்க பணம் வேண்டாமா ? எப்படி பணம் சம்பாதிக்க ? ஒரே வழி கொள்ளை அடிப்பதுதான், ஆனால் அதற்காக சக பாரத மக்களிடம் கொள்ளை அடிப்பது தவறு, வேறு என்ன செய்ய ? ஆங்கில ஆட்சியாளர்களிடம் இருந்து கொள்ளை அடிப்போம், அந்தப் பணத்தை வைத்து ஆயுதம் வாங்குவோம், அந்த ஆயுதங்களைக் கொண்டு ஆங்கில ஆட்சியை விரட்டுவோம் என்று வீரர்கள் முடிவு செய்தனர்.

1925ஆம் ஆண்டு ஆகஸ்ட் 9ஆம் நாள் - ஷஹரான்பூரில் இருந்து லக்நோ நகருக்கு வந்து கொண்டிருந்த புகைவண்டியை ககோரி என்ற இடத்திற்கு அருகே அபாயச்சங்கிலியை இழுத்து நிறுத்தினார்கள் புரட்சியாளர்கள். அதில் இருந்த பணம் ஏறத்தாழ ஒருலட்சம் ரூபாயை கொள்ளை அடித்து அங்கிருந்து தப்பிச் சென்றனர். துணிகரமான இந்த செயலில் அஷ்பாகுல்லாகான் உடன் ராம் பிரசாத் பிஸ்மி, சந்திரசேகர ஆசாத், சசீந்திர பக்ஷி, கேசப் சக்கரவர்த்தி, மன்மத்நாத் குப்தா, முராரிலால் குப்தா, பன்வாரிலால், முகுந்த்லால் ஆகியோர் பங்கெடுத்தனர். இதில் நடைபெற்ற கைகலப்பில் அஹ்மத் அலி என்ற பயணி கொல்லப்பட்டார்.

நாடெங்கும் தேடுதல் வேட்டை முடுக்கிவிடப்பட்டது. நாற்பது போராட்டக்காரர்கள் கைது செய்யப்பட்டனர். அந்தமான் சிறை வாசம் உள்பட பல்வேறு தண்டனைகள் வீரர்களுக்கு விதிக்கப்பட்டது. ராம் பிரசாத் பிஸ்மி, தாகூர் ரோஷன்சிங், ராஜேந்திரநாத் லஹரி, அஷ்பாகுல்லாகான் ஆகிய நால்வருக்கும் தூக்குத்தண்டனை விதிக்கப்பட்டது.

1927ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 19ஆம் நாள் அஷ்பாகுல்லாகான் தூக்கிலிடப்பட்டு மரணம் அடைந்தார். இருபத்தியேழு ஆண்டுகளே வாழ்ந்த அந்த வீரன் நாட்டின் விடுதலைக்காக தன்னையே தியாகம் செய்தார்.

பல்லாயிரம் வீரர்களின் பெரும் தியாகத்தால் கிடைத்தது நாம் இன்று அனுபவிக்கும் சுதந்திரம். அந்த வீரர்களை ஒரு நாளும் மறக்காமல் இருப்பது நமது கடமை. 

திங்கள், 21 அக்டோபர், 2019

சுர்ஜித் சிங் பர்னாலா பிறந்தநாள் - அக்டோபர் 21.

ஒரு முக்கியமான காலகட்டத்தில் பஞ்சாப் மாநிலத்தின் முதல்வராகவும், மத்திய அமைச்சராகவும், தமிழ்நாடு உள்பட பல்வேறு மாநிலங்களின் ஆளுநராகவும் பணியாற்றிய திரு சுர்ஜித்சிங் பர்னாலா அவர்களின் பிறந்தநாள் இன்று.



இன்றய ஹரியானா மாநிலத்தின் பேஜ்புர் கிராமத்தில் வசதியான குடும்பம் ஒன்றில் 1925ஆம் ஆண்டு அக்டோபர் 21ஆம் நாள் பிறந்தவர் சுர்ஜித்சிங் பர்னாலா அவர்கள். இவர் தந்தை நீதிபதியாக பணியாற்றி வந்தார். தந்தையின் அடியொற்றி பர்னாலாவும் 1946ஆம் ஆண்டு லக்னோ பல்கலைக்கழகத்தில் சட்டப் படிப்பில் தேறி வழக்கறிஞராகப் பணியாற்றத் தொடங்கினார். கல்லூரியில் படிக்கும் காலத்தில் வெள்ளையனே வெளியேறு போராட்டத்தில் கலந்து கொண்டார். வழக்கறிஞராகப் பணியாற்றும் போதே அரசியலில் ஈடுபட்ட திரு பர்னாலா, அகாலிதள் கட்சியின் முக்கியமான தலைவர்களில் ஒருவராக வெகு விரைவில் உருவானார்.

முதன்முதலாக 1969ஆம் ஆண்டு பஞ்சாப் மாநிலத்தின் கல்வி அமைச்சராக பர்னாலா நியமிக்கப்பட்டார். 1977ஆம் ஆண்டு மொரார்ஜி தேசாய் தலைமையில் அமைந்த காங்கிரஸ் அல்லாத அமைச்சரவையில் விவசாயத்துறை அமைச்சராக பர்னாலா பணியாற்றினார். அப்போதுதான் கங்கை நதி நீரை பங்களாதேஷ் நாட்டோடு பகிர்ந்து கொள்ளும் ஒப்பந்தம் கையெழுத்தானது.

மொரார்ஜி தேசாய் அரசு கவிழ்ந்த சமயத்தில், அன்றய ஜனாதிபதி நீலம் சஞ்சீவ ரெட்டி பர்னாலா தலைமையில் ஒரு அரசை அமைப்பது பற்றி ஆலோசித்தார் என்று கூறப்படுவது உண்டு.

பஞ்சாப் மாநிலத்தில் தீவிரவாதம் தலைவிரித்து ஆடிய காலகட்டத்தில், தன் பாதுகாவலர்களாலேயே அன்றய பிரதமர் இந்திரா படுகொலை செய்யப்பட்ட பிறகு 1985ஆம் ஆண்டு முதல் 1987ஆம் ஆண்டு வரை பர்னாலா பஞ்சாப் மாநில முதல்வராக இருந்தார். அவரது பதவிக்காலத்திற்கு முன்னும் பின்னும் அந்த மாநிலம் ஜனாதிபதி ஆட்சியின் கீழ் இருந்தது என்பதே அன்றய பஞ்சாப் மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு நிலைமையை காட்டும் அளவுகோலாகும்.

அதனைத் தொடர்ந்து 1990ஆம் ஆண்டு தமிழகத்தின் ஆளுநராக பர்னாலா நியமிக்கப்பட்டார். விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக அன்றய திமுக அரசு செயல்படுகிறது என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் கலைக்கப்பட்டது. அதற்கான அறிக்கையை அளிக்க பர்னாலா மறுத்துவிட்டார். பிஹார் மாநில ஆளுநராக அவர் மாற்றப்பட்டார். ஆனால் அதனை ஏற்க மறுத்து பர்னாலா தனது பதவியை ராஜினாமா செய்தார்.

1990ஆம் ஆண்டு முதல் 1993ஆம் ஆண்டு வரை அந்தமான் நிக்கோபார் யூனியன் பிரதேசத்தின் ஆளுநராக பணியாற்றினார். 1998ஆம் ஆண்டு அமைந்த வாஜ்பாய் ஆட்சியில் ரசாயன மற்றும் உரத்துறை அமைச்சராக பர்னாலா நியமிக்கப்பட்டார். 

அதன்பிறகு உத்தரகாண்ட் மாநிலத்தின் முதல் ஆளுநராகவும், அதனைத் தொடர்ந்து ஆந்திர பிரதேசத்தின் ஆளுநராகவும், இரண்டு முறை தமிழகத்தின் ஆளுநராகவும் பர்னாலா பணியாற்றினார்.

தனது நீண்ட அரசியல் வாழ்வில் ஏறத்தாழ மூன்றரை ஆண்டுகளுக்கு மேலாக பர்னாலா சிறையில் இருந்தார். திரு பர்னாலா ஒரு சிறந்த ஓவியரும் கூட, பல்வேறு இயற்கை காட்சிகளை அவர் ஓவியமாகத் தீட்டி உள்ளார்.

நீண்ட அரசியல் வாழ்வுக்கு சொந்தக்காரராக விளங்கிய திரு பர்னாலா தனது 91ஆம் வயதில் 2017ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 14ஆம் நாள் சண்டிகரில் காலமானார். 

ஞாயிறு, 20 அக்டோபர், 2019

எழுத்தாளர் தொ மு சிதம்பர ரகுநாதன் பிறந்தநாள் - அக்டோபர் 20

தமிழ்ச் சிறுகதை வரலாற்றை எழுதுகிறவர்களானாலும் சரி, தமிழின் தேர்ந்தெடுக்கப்பட்ட சிறுகதைகளைத் தொகுத்துப் போடுகிறவர்களானாலும் சரி, இணையத்தில் சிறுகதைகளைப் பதிவேற்றம் செய்யும் இணையதளக்காரர்களானாலும் சரி, ஞாபகமாகத் தவிர்த்துவிடும் ஒரு பெயர் தொ.மு.சி. ரகுநாதன். சாகித்ய அகாடெமி விருது பெற்ற அந்தப் படைப்பாளியின் பிறந்தநாள் இன்று. 



இவருடைய தாத்தா சிதம்பரத் தொண்டைமான், புகழ்பெற்ற ஒரு தமிழறிஞர். `ஸ்ரீரெங்கநாதர் அம்மானை', `நெல்லைப்பள்ளு' போன்ற நூல்களை எழுதியவர். ரகுநாதனின் அப்பா தொண்டைமான் முத்தையா, சிறந்த ஓவியர்; புகைப்படக் கலைஞர். அவருக்கும் அவருடைய இரண்டாவது மனைவி முத்தம்மாளுக்கும் இரண்டாவது மகனாக 1923 அக்டோபர் 20 அன்று  பிறந்தவர் ரகுநாதன். அவருக்கு ஓர் அண்ணன், மூன்று தமக்கையர், ஒரு தங்கை.

இந்திய ஆட்சிப்பணியில் இருந்த எழுத்தாளர் பாஸ்கர தொண்டைமான் இவரின் உடன்பிறந்த சகோதரர். சாகித்ய அகாடமி விருது பெற்ற பேராசிரியர் அ சீனிவாச ராகவன் தொ மு சியின் ஆசிரியராகவும், வழிகாட்டியாகவும் அமைந்தார். தொமுசியின் முதல் சிறுகதை பிரசன்ன விகடன் என்ற பத்திரிகையில் வெளியானது. சுதந்திரப் போராட்டத்தில் கலந்து கொண்டு தொமுசி சிறைத்தண்டனை அனுபவித்தார். பின்னர் தினமணி மற்றும் முல்லை என்ற இலக்கிய பத்திரிகைகளிலும் பணியாற்றினார். 

பத்திரிகைத் துறையில் சலிப்பேற்பட்டு சென்னையிலிருந்து மீண்டும் நெல்லைக்குத் திரும்பி, 1954-ல் `சாந்தி' என்ற இலக்கிய இதழை அவரே தொடங்குகிறார்.இரண்டு ஆண்டுகள் இலக்கியத்தில் சமரசமின்றி தரமான படைப்புகளுடன் அந்த இதழ் வெளிவருகிறது. தமிழ் ஒளி, ரகுநாதன், சுந்தர ராமசாமி, ஜி.நாகராஜன் உள்ளிட்ட பலரும் தங்கள் படைப்புகளை அதில் வெளியிட்டனர். பொருளாதாரக் காரணங்களால் மட்டுமே அந்த இதழ் நின்றுபோனது.

1939-ம் ஆண்டிலிருந்தே சிறுகதைகள் எழுதத் தொடங்கிய ரகுநாதனின் கதைகள், 1949-ம் ஆண்டில் தொகுப்பாக வெளியானது. அந்தத் தொகுப்பில் இருந்த `நீயும் நானும்' என்ற கதை, வாத பிரதிவாதங்களை இலக்கிய உலகில் உருவாக்கிப் பரபரப்பாகப் பேசியது. படைப்புலகில் இப்படி நுழையும்போதே பரபரப்பாகவும் அதிர்வெடிகளுடனும் நுழைந்தவரான ரகுநாதன், சாகும்பரியந்தம் வலுக்குறையாமல் அப்படியே இயங்கினார் என்பது வியப்பான செய்தி. நீயும் நானும் (1949), ஷணப்பித்தம் (1952), சேற்றிலே மலர்ந்த செந்தாமரை (1955), ரகுநாதன் கதைகள் (1957) ஆகிய நான்கு சிறுகதைத் தொகுப்புகளில் அவருடைய சிறுகதைகள் வந்தன. ஆனால், சோகம் என்னவெனில் அவர் தொடர்ந்து சிறுகதைகள் எழுதாமல் நிறுத்திக்கொண்டார். 1957-க்குப் பிறகு அவர் சிறுகதைகள் எழுதவில்லை. ஆய்வுகளின் மீது கவனம் செலுத்தி அந்தத் துறையில் சாதனைகள் படைத்தார்.

அவரது `பாரதி:காலமும் கருத்தும்' நூல் சாகித்ய அகாடமி விருது பெற்றது. இளங்கோவடிகள் யார் என்னும் ஆய்வு நூல், அதுகாறும் சேரன் செங்குட்டுவனின் தம்பிதான் இளங்கோவடிகள் என திராவிட இயக்கத்தார் கட்டியெழுப்பியிருந்த கற்பிதங்களை உடைத்து நொறுக்கி `இளங்கோ, மன்னர் வம்சத்தைச்  சேர்ந்தவரே அல்ல. அவர் ஒரு தனவணிகச் செட்டியார்' என்ற ஆதாரங்களுடன் நிறுவினார். 

1951-ம் ஆண்டில் ரகுநாதன் எழுதிய `பஞ்சும் பசியும்' நாவல்தான் அயல்மொழியில் மொழிபெயர்க்கப்பட்டு வெளியிடப்பட்ட முதல் தமிழ் நாவல். செக் மொழியில் மொழிபெயர்க்கப்பட்ட அந்த நாவல் 50 ஆயிரம் பிரதிகள் விற்பனையானது. மாக்ஸிம் கார்க்கியின் படைப்பான தாய் என்ற புகழ்பெற்ற புதினத்தை தமிழில் இவர் மொழிபெயர்த்தார். 

தன் இறுதிக்காலத்தை அவர் திருநெல்வேலியிலும் பாளையங்கோட்டையிலும் கழித்தார். 2001ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 31ஆம் நாள் ரகுநாதன் காலமானார். 

சனி, 19 அக்டோபர், 2019

நாமக்கல் கவிஞர் பிறந்தநாள் - அக்டோபர் 19

தமிழன் என்றோர் இனமுண்டு, தனியே அதற்கோர் குணமுண்டு.
தமிழன் என்று சொல்லடா, தலைநிமிர்ந்து நில்லடா 

இன்று திராவிட இயக்கத்தினராலும், தமிழ்த்தேசியவாதிகளாலும் அடிக்கடி கூறப்படும் இந்த சொற்தொடர்கள் ஒரு தேசியவாதியால் எழுதப்பட்டவை என்பது பலருக்கு தெரியாமலேயே இருக்கலாம். 



தமிழக அரசின் முதல் அரசவைக் கவிஞர், தேசியப் போராட்டங்களில் தன்னை இணைத்துக் கொண்டவர், மஹாகவி பாரதியால் பாராட்டப்பட்டவர், மூதறிஞர் ராஜாஜியின் தோழர், சிறந்த ஓவியர், உப்பு சத்யாகிரஹப் போரில் "கத்தி இன்றி ரத்தம் இன்றி யுத்தம் ஓன்று வருகுது, சத்தியத்தின் நித்தியத்தை நம்பும் யாரும் சேருவீர்" என்ற வழிநடைப் பாடலை எழுதியவர் என்ற பெருமைகளுக்குச் சொந்தக்காரர் நாமக்கல் கவிஞர் என்னும் ராமலிங்கம் பிள்ளை அவர்கள். 

1888ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 19ஆம் நாள் காவல்துறையில் பணியாற்றிக்கொண்டு இருந்த வெங்கடராம பிள்ளை - அம்மணி அம்மாள் தம்பதியினரின் எட்டாவது மகனாகப் பிறந்தவர் ராமலிங்கம் பிள்ளை. ஏழு பெண் குழந்தைகளுக்குப் பிறகு ராமேஸ்வரத்தில் பிரார்தனை செய்து அதன் பலனாகப் பிறந்ததால் இவருக்கு ராமலிங்கம் என்று பெயரிட்டார்கள். சிறுவயதிலேயே இதிகாச புராணங்களை சொல்லி இவர் தாயார் வளர்த்தார். 

தொடக்கக்கல்வியை நாமக்கல்லிலும், பின்னர் கோவையிலும், கல்லூரிப் படிப்பை திருச்சியிலும் பயின்றார். 1909ஆம் ஆண்டு தனது அத்தை மகளை மணந்து கொண்டார். இயற்கையிலேயே ஓவியம் வரையும் திறமை இவருக்கு இருந்தது. இவர் வரைந்த ஐந்தாம் ஜார்ஜ் மன்னரின் ஓவியத்தை பார்த்து மகிழ்ந்த மன்னரின் குடும்பம் இவருக்கு தங்கப்பதக்கம் ஒன்றை பரிசளித்து பாராட்டியது. 

1924ஆம் ஆண்டில் காங்கிரஸ் தலைவர் எஸ்.சீனிவாச ஐயங்கார் அறிவித்த ஒரு போட்டியில் தேசபக்திப் பாடல்களை எழுதித் தங்கப் பதக்கம் பரிசு பெற்றார். அதுமுதல் இவர் பல கவிதைகளைப் புனைந்து தள்ளினார். குடத்திற்குள் இட்ட விளக்காக விளங்கிய இவரது கவிதைத்திறன் 1930இல் உப்பு சத்தியாக்கிரகத்துக்காக எழுதிய “கத்தியின்றி” பாடல் மூலம் நாடு முழுவதும் பிரபலமானார். இவரது பாடல்களை சங்கு கணேசன் தனது “சுதந்திரச் சங்கு” பத்திரிகையில் வெளியிட்டு வந்தார்.

காரைக்குடிக்கு பாரதியார் வந்திருப்பதாக அறிந்த நாமக்கல் கவிஞருக்கு பாரதியாரைச் சந்திக்க வாய்ப்பு ஏற்பட்டது. ஓவியம் வரைவதிலும் கெட்டிக்காரர் என்று பாரதியாருக்கு நாமக்கல் கவிஞரை அறிமுகப்படுத்தினர். கவிதையும் எழுதுவார் என்று குறிப்பிட்டனர். கவிதை ஒன்று சொல்லுமாறு பாரதியார் கேட்டார். எஸ்.ஜி.கிட்டப்பா நாடகத்துக்காக தாம் எழுதிக் கொடுத்த ‘தம்மரசைப் பிறர் ஆள விட்டுவிட்டுத் தாம் வணங்கிக் கை கட்டி நின்ற பேரும்’ என்ற பாடலைப் பாடத் தொடங்கினார். பாடல் முழுவதையும் கேட்ட பாரதியார், ‘பலே பாண்டியா! பிள்ளை, நீர் ஒரு புலவன் என்பதில் ஐயமில்லை. தம்மரசைப் பிறர் ஆள விட்டுவிட்டுத் தாம் வணங்கிக் கை கட்டி நின்ற பேரும்... பலே, பலே இந்த ஓர் அடியே போதும்’ என்று பாராட்டித் தட்டிக் கொடுத்தார்.

1932ஆம் ஆண்டில் நடைபெற்ற சத்தியாகிரகத்தில் கலந்துகொண்ட நாமக்கல் கவிஞர், ஓராண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார்.1937ஆம் ஆண்டில் காங்கிரஸ் கட்சியினர் தேர்தலில் போட்டியிட்டனர். கவிஞர் சேலம் நகராட்சி உறுப்பினராகப் போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட்டார். தொடர்ந்து கவிஞரின் காங்கிரஸ் பணி தீவிரமானது.

இந்திய சுதந்திரத்துக்குப் பிறகு 1949இல் ஆகஸ்ட் 15 சுதந்திரத் திருநாளில் அப்போதைய சென்னை மாகாண கவர்னர் பவநகர் மகாராஜா தலைமையில் இவருக்கு ‘அரசவைக் கவிஞர்’ எனும் பதவி வழங்கப்பட்டது. 1956 ஆண்டிலும் பின்னர் 1962ஆம் ஆண்டிலும் தமிழக சட்ட மேலவை உறுப்பினராக இவர் செயல்பட்டார். 1971இல் இவருக்கு ‘பத்மபூஷன்’ விருது வழங்கப்பட்டது.

இவர் எழுதிய “மலைக்கள்ளன்” எனும் நெடுங்கதை கோவை பக்ஷிராஜா ஸ்டுடியோவினரால் திரைப்படமாக்கப் பட்டது. எம்.ஜி.ரமச்சந்திரன் பானுமதி நடித்த இந்தப் படம் பெரும் வெற்றியைப் பெற்ற ஒன்றாகும்.

சூரியன் வருவது யாராலே ?
சந்திரன் திரிவதும் எவராலே ?
காரிருள் வானில் மின்மினிபோல்
கண்ணிற் படுவன அவைஎன்ன ?
பேரிடி மின்னல் எதனாலே ?
பெருமழை பெய்வதும் எவராலே ?
யாரிதற் கெல்லாம் அதிகாரி ?
அதைநாம் எண்ணிட வேண்டாவோ ?

அல்லா வென்பார் சிலபேர்கள் ;
அரன்அரி யென்பார் சிலபேர்கள் ;
வல்லான் அவன்பர மண்டலத்தில்
வாழும் தந்தை யென்பார்கள் ;
சொல்லால் விளங்கா ‘ நிர்வாணம்’
என்றும் சிலபேர் சொல்வார்கள் ;
எல்லா மிப்படிப் பலபேசும்
ஏதோ ஒருபொருள் இருக்கிறதே !

அந்தப் பொருளை நாம்நினைத்தே
அனைவரும் அன்பாய்க் குலவிடுவோம்.
எந்தப் படியாய் எவர்அதனை
எப்படித் தொழுதால் நமக்கென்ன ?
நிந்தை பிறரைப் பேசாமல்
நினைவிலும் கெடுதல் செய்யாமல்
வந்திப் போம்அதை வணங்கிடுவோம் ;
வாழ்வோம் சுகமாய் வாழ்ந்திடுவோம்

எதைக் கேட்டாலும் இல்லையில்லை என்றும் சொல்லும் கண்மூடித்தனமான நாத்திகத்தையே பகுத்தறிவு என நினைக்கும் பலரின் மத்தியில் உண்மையான பகுத்தறிவு என்ன என்பதை விளக்கிட இதைவிடத் தெளிவான வெளிப்பாடு ஒன்று இருக்குமா எனத் தெரியவில்லை. பகுத்தறிவு மட்டுமல்லாமல், எல்லா மதங்களும் கூறும் உயர்வான பரம்பொருள் ஒன்றே என்பதையும் தெள்ளத்தெளிவாக விளக்கும் கவிதை இதுவே.

இவர் 1972ஆம் ஆண்டு ஆகஸ்ட் 24ஆம் தேதி இரவு 2 மணி அளவில்  மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். தமிழ் கவிதைகளை ரசிப்பவர்கள் உள்ளமட்டும் நாமக்கல் கவிஞரும் உயிரோடுதான் இருப்பார்.

திங்கள், 14 அக்டோபர், 2019

பரமவீர் சக்ரா விருது பெற்ற அருண் கேத்ரபால் பிறந்தநாள் - அக்டோபர் 14



2001ஆம் ஆண்டு எண்பது வயதான பாரத ராணுவ தளபதி  பிரிகேடியர் எம் எல் கேத்ரபால் பாகிஸ்தானில் உள்ள தனது பூர்விக இருப்பிடத்தைப் பார்க்க வேண்டும் என்ற எண்ணத்தில் சர்கோதா நகருக்கு பயணித்தார். அவரை பாகிஸ்தான் ராணுவத்தில் பணியாற்றிய பிரிகேடியர்மொஹம்மத் நாசர் என்ற ராணுவ தளபதி லாகூர் விமானநிலையத்தில் நேரில் வரவேற்று தனது வீட்டில் தங்க வைத்தார். அங்கிருந்து சர்கோதா நகருக்கு அவரை அனுப்பி வைத்து அவர் வாழ்ந்த இடங்களை பார்க்க நாசர் எல்லா ஏற்பாடுகளையும் செய்து தந்தார். மீண்டும் லாகூர் வந்த கேத்ரபால், மீண்டும் மொஹம்மத் நாசரின் வீட்டில் தாங்கினார். விருந்தோம்புதலிலோ அல்லது மரியாதையிலோ எந்த குறையும் இல்லாமல் இருந்தாலும், எதோ ஓன்று கேதர்பாலை நெருடிக்கொண்டே இருந்தது.

பிரிகேடியர் கேத்ரபால் பாரதம் திரும்பும் நாளுக்கு முந்தய இரவில், தனது பலத்தை எல்லாம் திரட்டிக் கொண்டு தளபதி நாசர் பேசத் தொடங்கினார் "ஐயா, பல நாட்களாக நான் உங்களிடம் ஓன்று சொல்ல வேண்டும் என்று நினைத்துக்கொண்டே இருக்கிறேன், ஆனால் உங்களை எப்படி தொடர்பு கொள்வது என்பது எனக்குத் தெரியாமலே இருந்தது. ஆனால் விதி உங்களை எனது மரியாதைக்குரிய விருந்தாளியாக அனுப்பி வைத்துள்ளது. இன்று நாம் ஒருவரோடு ஒருவர் நெருங்கிப் பழகி உள்ளோம், அது என்னை இன்னும் கடினமான நிலையில் வைத்து விட்டது. பாரத நாட்டின் இணையற்ற கதாநாயகனான உங்கள் மகனைப் பற்றித்தான் நான் பேசவேண்டும். கொடுமையான அந்த நாளில் நானும் உங்கள் மகனும் வெறும் போர்வீரர்கள் மட்டும்தான், அவரவர் நாடுகளின் மரியாதையையும், எல்லைகளையும் காக்க வேண்டி நாங்கள் எதிரெதிரே நிற்கவேண்டி இருந்தது. அன்று அருணின் வீரம் என்பது இணையில்லாமல் இருந்தது. தனது பாதுகாப்பைப் பற்றி கொஞ்சமும் கவலைப்படாமல் ,பயம் என்பதே இல்லாமல், பீரங்கிகளை அனாயசமாக ஓட்டி வீரசாகசம் புரிந்தார் உங்கள் மகன். இருபுறமும் பலத்த சேதம். முடிவில் நாங்கள் இருவர் மட்டுமே மிஞ்சினோம். எங்களில் ஒருவர்தான் உயிரோடு இருக்க முடியும் என்பது விதியின் எண்ணமாக இருந்தது. ஆமாம், உங்கள் மகன் என் கையால்தான் மரணித்தார். போர் முடிந்த பிறகுதான் அருண் எவ்வளவு இளையவர் என்பது எனக்குத் தெரிய வந்தது. காலமெல்லாம் உங்களிடம் மன்னிப்பு கேட்கவேண்டும் என்றுதான் நான் நினைத்துக்கொண்டு இருந்தேன், ஆனால் இப்போது இதனைக் கூறும்போதுதான் நான் மன்னிப்பு கேட்க விரும்பவில்லை, ஆனால் அந்த வீரனை வணங்குகிறேன் என்பதும் அதோடு அந்த வீரனை வளர்த்து வார்த்தெடுத்த உங்களையும் வணங்குகிறேன் என்பதும் புலனாகிறது" என்றார்.

1971ஆம் ஆண்டு பாரத பாகிஸ்தான் போரில் இணையற்ற வீரத்தைக் காட்டி, உச்சகட்ட தியாகமாக தனது உயிரை அளித்த வீரன் அருண்
கேத்ரபாலின் பிறந்ததினம் இன்று. பாரம்பரியமாக ராணுவ சேவையில் இருந்த பரம்பரையைச் சார்ந்தவர் அருண். அவரது தகப்பனாரின் தாத்தா ஆங்கிலேயர்களை எதிர்த்து நின்ற சீக்கியப்படையில் பணியாற்றியவர். தாத்தா முதல் உலகப் போரில் கலந்து கொண்டவர், தந்தை எம் எல் கேத்ரபால் ராணுவத்தில் பொறியாளர் பிரிவில் இருந்தவர். எனவே அருணுக்கு ராணுவ சேவைதான் குறிக்கோளாக இருந்ததில் எந்த ஆச்சரியமும் இல்லை.

1950ஆம் அக்டோபர் மாதம் 14ஆம் நாள் எம் எல் கேத்ரபால் - மஹேஸ்வரி தம்பதியினருக்கு முதல் மகனாகப் பிறந்தவர் அருண். ஹிமாச்சல் பிரதேச மாநிலத்தில் உள்ள லாரன்ஸ் பள்ளியில் படித்த அருண்,  நேஷனல் டிபென்ஸ் அக்கதெமியில் பயின்று இந்திய ராணுவத்தில் 1971ஆம் ஆண்டு ஜூன் 3ஆம் நாள் 17ஆவது பூனா குதிரைப் படையில் சேர்ந்தார்.

அருண் ராணுவத்தில் இணைந்த ஆறே மாதத்தில் கிழக்கு வங்க மக்களுக்கு துணையாக பாரத ராணுவம் போரில் இறங்க நேரிட்டது. வானிலும், மண்ணிலும் கடலிலும் போர் முழுவீச்சில் தொடங்கியது. பாகிஸ்தானில் உள்ள சிலாகோட் பகுதியில் பசந்தர் நதியில் பாலம் அமைத்து அந்த பகுதியை தங்கள் கட்டுப்பாட்டில் கொண்டு வருமாறு பூனா குதிரைப்படைக்கு உத்திரவு பிறப்பிக்கப் பட்டது ராணுவத்தில் உள்ள பொறியாளர் பிரிவு தாற்காலிகப் பாலத்தை அமைத்துக் கொண்டு இருந்த போது, பாகிஸ்தான் ராணுவத்தின் தாக்குதல் தொடங்கியது. ராணுவ முக்கியத்துவம் வாய்ந்த அந்த கேத்திரத்தை கைப்பற்றுவது யாரோ அவருக்குத்தான் வெற்றி வாய்ப்பு என்பதால் இரு நாடுகளின் படைகளும் முழுமூச்சில் போரில் ஈடுபட்டன.

களத்தில் முன்னேறிச் சென்ற பூனா குதிரைப்படை பிரிவு எதிரிகளின் பீரங்கிகளை வேட்டையாடத் தொடங்கியது. இந்தப் போரில் லெப்டினென்ட் அக்கலாவாட் வீரமரணம் அடைந்தார். இந்திய படையில் மூன்று பீரங்கி வண்டிகள் மட்டுமே இருந்தன. அருணின் தலைமையில் நமது வீரர்கள் பாகிஸ்தானின் பத்து பீரங்கிகளை அழித்தனர். அருண் மட்டுமே ஐந்து பீரங்கிகளை அழித்தார்.

அருணின் பீரங்கி வண்டி எதிரிகளின் தாக்குதலுக்கு உள்ளாகி எரியத் தொடங்கியது. ஆனாலும் களத்தை விட்டு அகலாது அருண் தாக்குதலைத் தொடர்ந்தார். பாகிஸ்தான் படையில் ஒரே ஒரு பீரங்கியும் இந்தியப் படையில் அருணின் பீரங்கியும் மட்டும்தான் மிஞ்சியது. கடைசி பீரங்கியை அழிப்பதற்கு முன்னர் நெஞ்சில் குண்டு பாய்ந்து அருண் வீரமரணம் எய்தினார். அப்போது அவருக்கு இருபத்தி ஒரு வயதுதான் ஆகி இருந்தது. ஏழு ராணுவ அதிகாரிகள், நான்கு இளநிலை அதிகாரிகள், இருபத்தி நான்கு ராணுவ வீரர்களை இழந்து பாரதம் இந்த வெற்றியைப் பெற்றது.

பாரத நாட்டின் மிக உயரிய விருதான பரமவீர் சக்ரா விருது அருண் கேத்ரபாலுக்கு அளிக்கப்பட்டது. மிக இளைய வயதில் இந்த விருதைப் பெற்ற சிறப்பும் அருண் அவர்களுக்கே உள்ளது.

நேஷனல் டிபென்ஸ் அக்காதெமியின் அணிவகுப்பு மைதானம், அரங்கம் மற்றும் முகப்பு வாயில் ஆகியவற்றுக்கு அருண் கேத்ரபாலின் பெயரை சூட்டி நாடு அந்த வீரருக்கு மரியாதை செலுத்தி உள்ளது.

நாட்டைக் காக்க பலிதானியாக மாறிய வீரர்களின் தியாகத்தை நாம் என்றும் நெஞ்சில் நிறுத்துவோம். 

ஞாயிறு, 13 அக்டோபர், 2019

சகோதரி நிவேதிதா மஹா சமாதி நாள் - அக்டோபர் 13.

பாரதிய மெய்யியல் ஞானத்தை நம்மவர்கள் புரிந்துகொள்வதற்கு முன்பே மேலைநாட்டவர்கள் கண்டுகொள்கிறார்கள். அப்படி கண்டுகொண்டு பாரத நாட்டுக்கும், பாரத பண்பாட்டிற்கும் தன்னலமற்ற சேவை புரிந்த சீமாட்டி, ஸ்வாமி விவேகானந்தரின் ஆன்மீக வாரிசு, மஹாகவி பாரதியின் குரு சகோதரி நிவேதிதையின் மஹாசமாதி தினம் இன்று. 



பாரத நாட்டை அடிமைப்படுத்தி வைத்திருந்தது போலவே, அயர்லாந்து நாட்டையும் ஆங்கிலேயர்கள் தங்கள் ஆளுமைக்குள் வைத்திருந்தார்கள். தங்கள் நாட்டை அடிமைப்பிடியில் இருந்து மீட்கப் போராடிய போராளிகளின் பரம்பரையில் பிறந்தவர் மார்கரெட் எலிசபெத் நோபிள். மத போதகராகப் பணியாற்றி வந்த சாமுவேல் ரிச்மன்ட் நோபிள் - மேரி இசபெல் ஹாமில்டன் தம்பதியினரின் மகளாக 1867ஆம் ஆண்டு அக்டோபர் 28ஆம் நாள் பிறந்தவர் மார்கெரெட் எலிசபெத் நோபிள். 

தனது கல்லூரிப் படிப்பை முடித்தபின் மார்கெரெட் நோபிள் ஆசிரியராகப் பணியாற்றிவந்தார். சிறுவயதில் இருந்தே ஏசு கிருஸ்து மீது உளமார்ந்த ஈடுபாடு கொண்டவராகவே நோபிள் விளங்கினார். மதம் என்பது கோட்பாடுகளை நம்புவதில் இல்லை, மெய்ஞானப் பொருளைக் கண்டடைவது என்ற தெளிவில் இருந்த அவரின் தேடல்களுக்கு கிருஸ்துவத்தில் பதில் கிடைக்கவில்லை. அதனால் புத்தரின் போதனைகளை கற்கத் தொடங்கினார். புத்தரின் வாழ்க்கையால் கவரப்பட்டாலும், அவரது ஆழமான கேள்விகளுக்கு பௌத்த சித்தாந்தத்திலும் அவரால் விடை காண முடியவில்லை. 

1895ஆம் ஆண்டு தோழி ஒருவரின் வீட்டில் ஸ்வாமி விவேகானந்தரின் சொற்பொழிவை கேட்க நோபிள் சென்றார். முதலில் அந்தப் பேச்சில் எந்த புதிய கருத்துக்களும் இல்லை என்றுதான் அவர் நினைத்தார். ஸ்வாமியின் கருத்துக்களோடு பல்வேறு இடங்களில் முரண்பட்ட நோபிள் ஸ்வாமியோடு தொடர்ச்சியான விவாதங்களில் ஈடுபடத் தொடங்கினார். மாணவர் தயாராக இருக்கும்போது, ஆசிரியர் தோன்றுவார் என்ற கருத்துக்கு ஏற்ப, நோபிளின் கேள்விகளுக்கும், சந்தேகங்களுக்கும் ஸ்வாமி விவேகானந்தர் விளக்கங்களை அளித்தார். 

பாரத நாட்டின் பெண்களுக்கு சரியான கல்வியை மார்கரெட் நோபிளால் வடிவமைத்து அளிக்க முடியும் என்று எண்ணிய ஸ்வாமி விவேகானந்தர், அவரை பாரத நாட்டிற்கு வருமாறு அழைத்தார். அதனை ஏற்று நோபிள் பாரதம் வந்தார். 1898ஆம் ஆண்டு ஜனவரி மாதம் பாரதம் வந்த எலிசபெத் நோபிளுக்கு அதே ஆண்டு மார்ச் மாதம் சன்யாசம் அளித்து அவருக்கு நிவேதிதை என்ற பெயரையும் விவேகானந்தர் சூட்டினார். 

1898 -ம் ஆண்டு. கல்கத்தாவின் ஸ்டார் தியேட்டர் அரங்கம்.ஆயிரக்கணக்கான மக்கள் கூடியிருந்த அந்த சபையில்தான் சுவாமி விவேகானந்தர் அந்தப் பெண்மணியை அறிமுகப்படுத்தினார்...

``இந்தியாவுக்கு இங்கிலாந்து பல நன்கொடைகளை வழங்கி உள்ளது. அவற்றுள் மிகவும் மதிப்புடையதாக சகோதரி நிவேதிதையைக் குறிப்பிடலாம். இந்தியப் பெண்களின் முன்னேற்றத்துக்காகப் பணியாற்ற இங்கே வந்திருக்கிறார். இந்தியாவைத் தன் தாய்நாடாக அவர் ஏற்றுக்கொண்டிருக்கிறார். எனவே, அவரை நம்முடைய உற்றார் உறவினர்களில் ஒருவராக ஏற்றுக்கொள்வது நம் கடமை.''

அந்த அரங்கத்திலோ, பெண்மணிகளின் பிரதிநிதியாக ஒருவர்கூட இல்லை. அதைக் கண்டதுமே நிவேதிதைக்கு நம் தேசத்துப் பெண்களின் நிலை புரிந்துவிட்டது. அதேநேரம், `இங்கிலாந்தில் இருந்து வந்திருக்கும் இவர் எங்கே நம் தேசத்தைப் புரிந்துகொண்டு சேவை செய்யப்போகிறார்... ஒருவேளை தன் மத பிரசாரத்துக்காக வந்திருக்கிறாரோ’ என்றெல்லாம் அரங்கில் இருந்தவர்கள் சந்தேகப்பட்டதை அவர்களுடைய முகபாவனையில் இருந்தே நிவேதிதை  தெரிந்துகொண்டார்.

மெல்லிய புன்னகையோடு அந்த அரங்கத்தில் பேச ஆரம்பித்தார் நிவேதிதை. அந்தப் பேச்சு அவர்களின் ஐயத்தைப் போக்கியது; அவரிடத்தில் நம்பிக்கையையும் மதிப்பையும் ஏற்படுத்தியது.

``உங்களுடைய கலாசாரமும் பண்பாடும் மிகத் தொன்மையானது. கடந்த ஆறாயிரம் ஆண்டுகளுக்கும் மேலாக நீங்கள் அதைக் கட்டிக் காப்பாற்றி வருகிறீர்கள். சுவாமிஜி இங்கிலாந்துக்கு வருவதற்கு முன்பு, எங்கள் மக்கள் இந்தியாவைப் பற்றி மிகத் தவறான எண்ணம் கொண்டிருந்தார்கள். மதப் பிரசாரகர்கள் புகட்டியதை எல்லாம் அவர்கள் நம்பினார்கள். பலர், இந்தியாவைப் பற்றி விபரீத கட்டுக்கதைகளை எல்லாம் பரப்புகின்றனர். ஆனால், இந்தியாவின் சிறப்புகளைப் பற்றிப் பேசுவதற்கு ஒருவருமே இல்லை.

ஐரோப்பா கண்டம் இன்று செல்வத்தில் திளைத்துக்கிடக்கிறது. வெற்று மோகத்தில் மூழ்கிக்கிடக்கிறது. ஆனால், எளிய வாழ்க்கையிலும் உயர்ந்த எண்ணங்களிலுமே நிலையான இன்பம் நிறைந்திருக்கும் என்பதை இந்தியாவிடம் இருந்து ஐரோப்பா அறிந்துகொள்ளும் காலம் விரைவிலேயே வரும். அதற்கு முன்னோட்டமாக அமைந்துவிட்டது சுவாமிஜியின் ஐரோப்பிய விஜயம்.''அரங்கத்தில் ஒலித்த கரவொலி,  நிவேதிதையை நம் தேசத்தில் ஒருவராக ஏற்றுக்கொண்டதை நிரூபித்தது.

நிவேதிதை, முதலில் கல்கத்தாவில் ஒரு வீட்டில் பெண்களுக்கான பள்ளியைத் திறந்தார். ஒரு தாய் கற்றால், அந்தக் குடும்பமே பயனடை யும் என்ற எண்ணத்தில்  தாய்மார்களுக்கு கல்வி வழங்கினார். சித்திரம் வரைதல், மண் பொம்மைகள் செய்தல் போன்ற நுண்கலைகளையும் கற்றுக் கொடுத்தார். தான் எழுதிய புத்தகங்களில் இருந்து கிடைக்கும் ராயல்டி தொகையையும், தன்னுடைய இங்கிலாந்து நண்பர்கள் கொடுத்த நன்கொடைகளையும் இந்தியப் பெண்களின் முன்னேற்றத்துக்காகப் பயன்படுத்தினார்.

கல்விப்பணி மட்டுமல்லாது, மருத்துவ சேவைகளிலும் தம்மை ஈடுபடுத்திக்கொண்டார். ஒருமுறை கல்கத்தாவில் பிளேக் நோய் தாக்கியபோது, குடிசைப் பகுதிகளுக்கெல்லாம் சென்று அங்கிருந்த மக்களோடு மக்களாக நின்று  உதவிகள் செய்தார்.

1899-ம் ஆண்டு ஜூன் மாதத்தில் அமெரிக்கா, இங்கிலாந்து நாடுகளுக்குச் சென்றார். அங்கு தனது பள்ளிக்கான நிதியைத் திரட்டினார். மேலும் இந்தியாவைப் பற்றி மேலைநாட்டினர் கொண்டிருந்த பல தவறான நம்பிக்கைகளை மறுத்து, இந்தியாவின் பெருமைகளை விளக்கிப் பேசினார்.. லண்டன் பத்திரிகைகள், சகோதரி நிவேதிதாவை 'இந்தியாவின் போராட்ட வீராங்கனை' என்று போற்றிப் புகழ்ந்தது.

தனது வெளிநாட்டுப் பயணத்தை வெற்றிகரமாக முடித்த நிவேதிதா 1901-ம் ஆண்டு மீண்டும் இந்தியாவுக்கு வந்தார். சமூகப் பணிகளோடு தனது ஆன்மிகம் குறித்தத் தேடலையும் தொடங்கினார். கல்விப்பணி, சமூக சேவை என்று அயராது பாடுபட்ட சகோதரி நிவேதிதாவுக்கு 1902-ம் ஆண்டு ஜூலை மாதம் பெரும் சோகத்தைத் தந்தது. அவருடைய குருவான சுவாமி விவேகானந்தரின் மறைவு. குருவை இழந்த நிவேதிதா சோர்ந்து விடாமல், அவரது பணிகளை இன்னும் வேகமாகச் செய்யத் தொடங்கினார். சுவாமி விவேகானந்தர் தனக்கு எழுதிப் பரிசளித்த 'நல்வாழ்த்து' என்ற கவிதையை ஒரு பொக்கிஷமாகவே கருதி பாதுகாத்தார்.  

"தாயின் இதயமும் தலைவனின் உள்ளமும்  

ஆய தென்றலின் அற்புத இனிமையும் 

ஆரிய பீடத் தழகொளி விரிக்கும் 

சீரிய எழிலும் திகழும் வலிமையும் 

கனவிலும் முன்னோர் கண்டிரா வகையில் 

உனதென ஆகி ஓங்குக மென்மேல்! 

எதிர்காலத்தில் இந்திய மகனின் 

சீர்சால் தலைவியாச் செவிலியாய்த் தோழியாய் 

நேரும் ஒருமையில் நீயே ஆகுக!" 


நிவேதிதாவின் எழுத்தும் சிந்தனையும் எப்போதும் இந்திய விடுதலை குறித்தும், மக்களின் விழிப்புஉணர்வு குறித்தும் இருந்தது. இது இளைஞர்களைப் பெரிதும் கவர்ந்தது. பெண் கல்விக்கு பெரிதும் பாடுபட்ட நிவேதிதா, பழைமையான கல்வி முறையை மாற்றி, நவீன முறையில் கல்வி அமைப்பு உருவாகப் போராடினார். `இயற்கையோடு இணைந்து குழந்தைகள் பாடம் கற்க வேண்டும்’ என்று குரல் எழுப்பினார். இந்தியாவின் பாரம்பரியம், புராணங்கள், நம்பிக்கைகள் குறித்து அறிந்துகொண்ட பின் அவற்றின் பின்னணியில் இருந்த நல்ல கருத்துகளை மேலைநாட்டினர் புரிந்துகொள்ளும் வகையில் எழுதினார். நிவேதிதாவின் பேச்சும் எழுத்துகளும்தான் அந்த நாளில் இந்தியாவைப் பற்றி அமெரிக்கர்களுக்கு நல்ல அபிப்பிராயத்தை உருவாக்கின. நிவேதிதா காலத்தில்தான் வங்காளம் கற்றறிந்த மேதைகளின் இடமாக மாறத் தொடங்கியது.

இந்தியக் கலைகளை பெரிதும் போற்றி, அவை வளரத் தூண்டுகோலாக இருந்தார். குறிப்பாக இந்திய ஓவியங்களை புனரமைக்க பாடுபட்டார். 1907-ம் ஆண்டு கொல்கத்தாவில் காங்கிரஸ் தலைவர் ஆனந்தமோகன் போஸின் வீட்டில்தான் முதன்முதலாக மகாகவி பாரதியார் சகோதரி நிவேதிதாவைச் சந்தித்தார். முதல் சந்திப்பே அவரைப் பெரிதும் பாதிப்படையச் செய்தது. அப்போதுதான் பாரதியார் தனது பாடல்கள் யாவும் இனி தேச விடுதலைக்காகவே அர்ப்பணிக்கப்பட வேண்டும் என்று முடிவு செய்தார்.

பாரதியாரின் பாடல்களைப் பாராட்டிய சகோதரி நிவேதிதா அவரிடம் 'எங்கே உங்கள் மனைவி?' என்று கேட்டார். அவர் 'எங்கள் வழக்கப்படி பெண்களை வெளியே அழைத்து வருவதில்லை' என்று கூறினார். இதைக் கேட்டு நிவேதிதா `உங்கள் மனைவிக்கே விடுதலை கொடுக்காத நீங்கள், இந்தியாவின் விடுதலையைப் பெறுவது எப்படி சாத்தியம்?' என்று கேட்டார். அந்த ஒரு கேள்விதான் பாரதியை பழைமைவாதத்தில் இருந்து மீட்டு, புதிய சிந்தனைகளைத் தோற்றுவிக்கக் காரணமாக அமைந்தது.

"ஸ்ரீகிருஷ்ணன் அர்ஜுனனுக்கு விசுவரூபம் காட்டி ஆத்தும நிலை விளக்கியதொப்ப, எனக்கு பாரததேவியின் ஸம்பூர்ண ரூபத்தைக் காட்டி, ஸ்வதேச பக்தியுபதேசம் புரிந்தருளிய குருவின் சரண மலர்களில் இச்சிறு நூலைச் சமர்ப்பிக்கின்றேன்" என 1908 ஆம் ஆண்டு தாம் எழுதிய ’ஸ்வதேச கீதங்கள்’ முதல் பகுதியை பாரதியார் நிவேதிதைக்கு சமர்ப்பணம் செய்து எழுதியிருந்தார்.

1909 ஆம் ஆண்டு ’’ஸ்வதேச கீதங்கள்’ நூலின் இரண்டாம் பாகமான ’ஜன்ம பூமி’யையும் நிவேதிதைக்கு சமர்ப்பணம் செய்தார். "எனக்கு ஒரு கடிகையிலே மாதாவினது மெய்த் தொண்டின் தன்மையையும் துறவுப் பெருமையையும் சொல்லாமல் சொல்லி உணர்த்திய குருமணியும், பகவான் விவேகானந்தருடைய தர்ம புத்திரியும் ஆகிய ஸ்ரீமத் நிவேதிதா தேவிக்கு இந்நூலைச் சமர்ப்பிக்கின்றேன்" என்று எழுதியிருந்தார்.

அரவிந்தருடன் இணைந்து இந்திய விடுதலை இயக்கத்திலும் பங்கேற்றார். தனது இந்த ஈடுபாட்டினால் ஆங்கில அரசு இராமகிருஷ்ண இயக்கத்தை முடக்காமல் இருக்க அவ்வியக்கத்தில் இருந்து தன் அதிகாரபூர்வ பிணைப்பை விலக்கிக் கொண்டார். வங்காளத்தின் அனுசீலன் சமிதி முதலான புரட்சி இயக்கங்களுடனும் தொடர்பிலிருந்தார்.

1902 டிசம்பர் 19ஆம் தேதி சென்னைக்கு வந்த சகோதரி நிவேதிதை இந்து இளைஞர் சங்கம் சார்பில் பச்சையப்பா அரங்கத்தில் டிசம்பர் 20ஆம் தேதி ’இந்தியாவின் ஒருமைப்பாடு’ என்ற தலைப்பில் உரையாற்றினார். சென்னையில் பல்வேறு உரையாடல், சொற்பொழிவுகள் மற்றும் பேட்டிகளிலும் கலந்து கொண்டார். சித்தாரிப்பேட்டையில் நிவேதிதை நிகழ்த்திய சொற்பொழிவு குறித்து 1902 ஆம் ஆண்டு டிசம்பர் மாத ’த மெட்ராஸ் மெயில்’ பத்திரிக்கை மிகவும் புகழ்ந்திருந்தது. 1903 ஜனவரி 20 ஆம் தேதி சென்னையில் கொண்டாடப்பட்ட சுவாமி விவேகானந்தரின் ஜெயந்தி விழாவிலும் வந்து கலந்து கொண்டு மறுநாள் கல்கத்தா திரும்பினார் சகோதரி நிவேதிதை.

உபநிடதத்தில் இருக்கும் ருத்ரப் பிரார்த்தனைப் பாடல் ஒன்று சகோதரி நிவேதிதாவுக்கு விருப்பமானது `அஸதோ மா ஸதகமய தமஸோ ம ஜ்யோதிகமய ம்ருத்யோர் மா அம்ருதம் கமய’ என்ற இந்தப் பாடலை மனமுருகிக் கேட்பார். 1911-ம் ஆண்டு, அக்டோபர் மாதம், டார்ஜிலிங் சென்றிருந்த சகோதரி நிவேதிதா அங்கு தட்பவெப்பநிலை ஒப்புக்கொள்ளாமல் கடுமையாக பாதிக்கப்பட்டார்.

தனது இறுதிக்காலம் நெருங்குவதை உணர்ந்த நிவேதிதா, அக்டோபர் 7-ம் நாள் தனது சொத்துகள், படைப்புகள் எல்லாவற்றையும் இந்தியப் பெண்களின் கல்வி வளர்ச்சிக்கென எழுதி வைத்துவிட்டார். அக்டோபர் 13-ம் நாள் அதிகாலை சூரியனைக் கண்டு மகிழ்ந்து தனக்கு விருப்பமான ருத்ரப் பிரார்த்தனைப் பாடலைப் பாடி முடித்துவிட்டு 'என்னால் சூரிய உதயத்தைப் பார்க்க முடிகிறது' என்று சொல்லியவாறே தனது 44-வது வயதில் சமாதியானார் சகோதரி நிவேதிதா.

இந்திய விடுதலைப்போராட்ட வீராங்கனையாக, பாதிக்கப்பட்ட மக்களின் நம்பிக்கையாக, ஆன்மிகத் தேடலில் ஒரு வழிகாட்டியாக, இந்திய கல்வி முறையை சீர்திருத்திய கல்வியாளராக, பெண் விடுதலைப் போராளியாக, சிறந்த எழுத்தாளராக விளங்கியவர் சகோதரி நிவேதிதா. 44 ஆண்டுகள் மட்டுமே வாழ்ந்த இவர், இந்திய சரித்திரத்தில் அழுத்தமாக தன் தடத்தைப் பதிவு செய்திருக்கிறார்.

எங்கோ அயர்லாந்தில் பிறந்து, இங்கிலாந்தில் வளர்ந்து, இந்திய தேசம் வந்த இந்தச் சிறகில்லாத தேவதை எத்தனை எத்தனை சேவைகளை ஆற்றி இருக்கிறது! எத்தனையோ கலைஞர்களை உருவாக்கி, அவர்களின் வழியே இந்தியாவின் பெருமைகளை ஓங்கச் செய்த சகோதரி நிவேதிதாவின் நினைவு நாள் இன்று. கலை, கல்வி, போராட்டம், சமூக சேவை என பலவித தளங்களில் நின்று இந்தியாவைப் போற்றிய இந்த தெய்வீகத் துறவியை இந்த நாளில் போற்றுவோம்.