ஞாயிறு, 17 நவம்பர், 2019

பஞ்சாப் சிங்கம் - லாலா லஜபதி ராய் - நவம்பர் 17


அந்நிய வல்லாதிக்கத்திற்கு எதிராக போராடிய வீரர்களின் தலைவர்களாக பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதிப்பகுதியிலும், இருபதாம் நூற்றாண்டின் தொடக்க காலத்திலும் இருந்தவர்கள் மூவர். மஹாராஷ்டிராவைச் சார்ந்த லோகமானிய பால கங்காதர திலகர், வங்காளத்தைச் சார்ந்த பிபின் சந்திர பால், பஞ்சாபைச் சார்ந்த லாலா லஜபதி ராய் ஆகியோரே அந்த மும்மூர்த்திகள். சுதேசி இயக்கம், அன்னியப் பொருள்களை வாங்காது இருத்தல், முழுமையான சுதந்திரம் என்பதே அவர்களின் இலக்காக இருந்தது. கூட்டங்கள் போட்டு தீர்மானம் நிறைவேற்றி அரசிடம் மனு கொடுப்பதால் எந்தப் பயனும் இல்லை என்பது இவர்களின் எண்ணம். ஆயுதம் ஏந்திப் போராடிய பல வீரர்கள் இவர்களின் சீடர்களாக இருந்தார்கள்.

1865ஆம் ஆண்டு ஜனவரி 28ஆம் நாள் பஞ்சாபி மாநிலத்தில் உள்ள துடுக்கி என்ற கிராமத்தில் வசித்து வந்த முன்ஷி ராதாகிருஷ்ண அகர்வால் - குலாப் தேவி தம்பதியரின் மகனாகப் பிறந்தவர் லஜபதி ராய். பள்ளிப் படிப்பை முடித்த லஜபதி ராய் லாகூர் நகரில் உள்ள அரசு கல்லூரியில் சட்டம் படிக்கத் தொடங்கினார். அந்த சமயத்தில் ஆரிய சமாஜத்தின் கொள்கைகளால் கவரப்பட்டு சமாஜத்தின் உறுப்பினர் ஆனார். கல்லூரியில் படிக்கும் காலத்திலேயே ஆர்ய கெசட் என்ற பத்திரிகையை தொடங்கி அதன் ஆசிரியராகவும் இருந்தார். ஹிந்து மதம் என்ற குடையின் கீழ்தான் மக்களை ஓன்று திரட்டி விடுதலைக்காக போராடுவதுதான் வெற்றிகரமாக இருக்கும் என்பதே லஜபதி ராயின் நிலைப்பாடாக இருந்தது.

ஹரியானா மாநிலத்தில் உள்ள ஹிஸார் நகரில் தனது வழக்கறிஞர் பணியைத் தொடங்கிய லஜபதி ராய் சிறிது காலத்திலேயே லாகூர் உயர்நீதிமன்றத்தில் பணியாற்றத் தொடங்கினார். ஹிஸார் நகரில் இருந்த போது அங்கே காங்கிரஸ் கட்சியின் கிளையையும், ஆரிய சமாஜத்தின் கிளையையும் தொடங்கினார். 1888 மற்றும் 1889 ஆம் ஆண்டுகளில் ஹிஸார் நகர காங்கிரஸ் கட்சியின் சார்பில் அகில இந்திய காங்கிரஸ் மாநாட்டின் பிரதிநிதியாகக் கலந்து கொண்டார்.

காங்கிரஸ் இயக்கத்தின் போராட்டங்களை முன்னெடுத்ததைத் தொடர்ந்து எந்த விசாரணையும் இல்லாமல் ஆங்கில அரசு இவரை இன்றய மியான்மர் நாட்டில் உள்ள மண்டலே நகருக்கு நாடு கடத்தியது. சில காலத்திலேயே அந்த உத்தரவு திருப்பிப் பெறப்பட, லஜபதி ராய் தாயகம் திரும்பினார். 1907ஆம் ஆண்டு சூரத் நகரில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாடு முக்கியமான ஒன்றாகும். அதில்தான் காங்கிரஸ் மிதவாதிகள், தீவிரவாதிகள் என்று இரண்டு பிரிவாக உடைந்தது. அந்த மாநாட்டின் தலைவர் பதவிக்கு லஜபதி ராய் போட்டியிட்டார். ஆனால் மாநாட்டில் ஏற்பட்ட குழப்பத்தாலும், கைகலப்பாலும் அவர் வெற்றி பெற முடியவில்லை.

ஆங்கில கல்விக்கு எதிராக தயானந்த் வேதிக் ஆங்கில பள்ளிகள் ( Dayanath Anglo Vedic Schools - DAV Schools ) என்ற கல்வி நிலையங்களை லஜபதி ராய் உருவாக்கினார். லாகூர் நகரில் தேசிய கல்லூரி என்ற நிலையத்தை உருவாக்கினார். இந்தக் கல்லூரி மாணவர்தான் புரட்சியாளர் பகத்சிங். பஞ்சாப் நேஷனல் வங்கி, லக்ஷ்மி இன்சூரன்ஸ் ஆகிய நிறுவனங்களும் லஜபதி ராய் துவங்கியவைதான். விடுதலை அடைவது மட்டுமல்லாது, அதனைத் தொடர்ந்து புனர்நிர்மாணப் பணிகள் பற்றியும் லஜபதி ராய் ஆழமாகச் சிந்தித்து செயலாற்றினார் என்பது அவர் நிறுவிய பல்வேறு நிறுவனங்கள் மூலம் புலனாகிறது.

முதலாம் உலகப் போர் நடந்த சமயத்தில் லஜபதி ராய் இங்கிலாந்து நாட்டிலும் அதனைத் தொடர்ந்து அமெரிக்காவிலும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு இருந்தார். அமெரிக்காவில் இருந்த பல்வேறு இந்திய விடுதலை வீரர்களை ஒன்றிணைக்கும் பணியில் அவர் ஈடுபட்டு இருந்தார்.

1920ஆம் ஆண்டு நாடு திரும்பிய லஜபதி ராய் அந்த ஆண்டு கொல்கத்தா நகரில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டின் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். ஜாலியன்வாலாபாக் படுகொலையை எதிர்த்து பல்வேறு போராட்டங்களை லஜபதி ராய் தலைமைதாங்கி நடத்தினார். காந்தி தொடங்கிய ஒத்துழையாமை இயக்கத்தின் பஞ்சாப் மாநிலத்தின் தளபதியாக செயல்பட்ட லஜபதி ராய், திடீர் என்று காந்தி அந்தப் போராட்டத்தை விலக்கிக் கொண்டதை ஏற்க மறுத்தார். சுதந்திர காங்கிரஸ் கட்சி என்ற அமைப்பை உருவாக்கினார். காங்கிரஸ் தொடர்ந்து முஸ்லிம்களுக்காக  அளவுக்கு அதிகமாக வளைந்து கொடுக்கிறது என்ற நிலைப்பாடு உடைய லஜபதி ராய் 1923ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் இந்துக்களும் முஸ்லிம்களும் ஒரே நாட்டில் வாழ முடியாது, எனவே இரண்டு நாடுகளாக நாட்டைப் பிரித்து, மக்களை இடம் மாற்றிக்கொள்ள வேண்டும் என்று பத்திரிகையில் எழுதினார். இது பெரும் சர்சையைக் கிளப்பியது.

இந்தியர்கள் எவரும் இல்லாத சைமன் கமிஷனை புறக்கணிக்க காங்கிரஸ் முடிவு செய்தது. 1928ஆம் ஆண்டு அக்டோபர் 30ஆம் நாள் சைமன் கமிஷனை புறக்கணித்து லாகூர் நகரில் நடைபெற்ற ஊர்வலத்தை லாலா லஜபதி ராய் தலைமைதாங்கி நடத்தினார். காவல்துறை கண்காணிப்பாளர் ஜேம்ஸ் ஸ்காட் தடியடி நடத்தி ஊர்வலத்தை கலைக்க உத்தரவிட்டார். காவலர்கள் லாலா லஜபதி ராயை லத்தியால் தாக்கினர். "இது என் மீது விழும் அடியல்ல, ஆங்கில ஏகாதிபத்தியத்தின் சவப்பெட்டியின் மீது அடிக்கப்படும் ஆணிகள்" என்று லஜபதி ராய் முழங்கினார்.

அறுபத்தி மூன்று வயதான தலைவர் தன்மீது தொடுக்கப்பட்ட தாக்குதலால் காயமுற்று மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். சிகிச்சை பலனளிக்காமல் 1928ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 17ஆம் நாள் பஞ்சாப் சிங்கம் லாலா லஜபதி ராய் மரணமடைந்தார்.

தலைவரின் மரணம் இளைஞர்களிடையே பெரும் கொந்தளிப்பை உருவாக்கியது. பழி வாங்குவோம் என்று ஹிந்துஸ்தான் சோசலிஸ்ட் ரிபபிளிக் படை உறுதி பூண்டது. ஜான் சாண்டர்ஸ் என்ற காவல் அதிகாரியை சுட்டுக் கொன்று பகத்சிங்கும் ராஜகுருவும் ஆங்கில ஆட்சிக்கு சவால் விட்டனர்.

பாரத  கல்வி முறை பற்றி, ஆங்கில அரசு பாரத நாட்டைச் சுரண்டியது பற்றி, தனது நாடுகடத்தல் தண்டனை பற்றி, ஆர்ய சமாஜ் பற்றி என்று பல்வேறு நூல்களை லஜபதி ராய் எழுதி உள்ளார்.

மும்பையில் வணிகவியல் கல்லூரி, மீரட் நகரில் மருத்துவக் கல்லூரி, பஞ்சாப் மாநிலத்தில் மோகா நகரில் தொழில்நுட்பக் கல்லூரி, ஹிஸார் நகரில் கால்நடை மருத்துவ பல்கலைக்கழகம் ஆகியவை இன்று லாலா லஜபதி ராய் பெயரைத் தாங்கி நடந்து வருகின்றன.

லஜ்பத் நகர் உள்ளிட்ட டெல்லியின் பல்வேறு பகுதிகளுக்கு லாலா லஜபதி ராய் பெயரைச் சூட்டி நாடு அந்த வீரரை மரியாதை செலுத்தி உள்ளது.