ஞாயிறு, 24 நவம்பர், 2019

குரு தேஜ் பகதூர் பலிதானதினம் - நவம்பர் 24

சீக்கியர்களின் குரு பரம்பரையின் ஒன்பதாவது குருவான குரு தேஜ் பகதூரின் பலிதான தினம் இன்று. தர்மத்தின் வழி நிற்பதா இல்லை மரணத்தைத் தழுவுவதா என்ற கேள்வி எழுந்த போது, அழியும் உடலுக்காக அழியாத தர்மத்தை விடக்கூடாது என்று செயலில் காட்டியவர் குரு தேஜ்பகதூர்.


சீக்கியர்களின் ஆறாவது குருவான குரு ஹர்கோவிந்த் அவர்களின் மகனாக 1621ஆம் ஆண்டு ஏப்ரல் 1ஆம் நாள் அமிர்தசர் நகரில் பிறந்தவர் குரு தேஜ் பகதூர். இவரின் இயற்பெயர் தியாகாமால் என்பதாகும். தேஜ் பகதூர் என்ற பெயருக்கு வாள் சண்டையில் விற்பன்னர் என்று பொருள். இவரது வீரத்தினால் குரு இந்தப் பெயரில் அறியப்பட்டார். அன்று அமிர்தசர் நகரம் சீக்கியர்களின் அறிவிக்கப்படாத தலைநகரமாக விளங்கியது. சீக்கிய குருமார்களின் இருப்பிடமாக அது இருந்தது, குதிரையேற்றத்திலும், பல்வேறு தற்காப்பு பயிற்சியிலும் சிறந்து விளங்கிய தேஜ் பகதூர் வேதங்களையும் உபநிஷதங்களையும் தெளிவாகக் கற்றுத் தேர்ந்திருந்தார். மாதா குஜிரி என்பவரை குரு திருமணம் செய்திருந்தார்.

தனது வாழ்வின் இறுதிக்கட்டத்தில் குரு ஹர்கோவிந்த் அம்ரித்சர் நகரின் அருகில் உள்ள பக்கலா என்ற சிறுநகருக்கு  குடிபெயர்ந்தார். தேஜ் பகதூரும் அங்கேயே வசிக்கத் தொடங்கினார். குரு ஹர் ராய், குரு ஹர் கிருஷ்ணன் ஆகியோரைத்  தொடந்து சீக்கியர்களின் ஒன்பதாவது குருவாக குரு தேஜ்பகதூர் 1664ஆம் ஆண்டில் நியமிக்கப்பட்டார்.

பெரும் வீரராக மட்டுமல்லாது குரு தேஜ் பகதூர் சிறந்த கவிஞராகவும், தத்துவ ஞானியாகவும் விளங்கினார். வட இந்தியாவில் பல்வேறு இடங்களுக்கு விஜயம் செய்து சீக்கிய தர்மத்தைப் பரப்பவும், பல்வேறு மக்களை நல்வழிப் படுத்தவும் என்று அவர் செயலாற்றிக்கொண்டு இருந்தார். அவரது முயற்சியால் பல்வேறு இடங்களில் சீக்கியர்கள் குடிநீர் குளங்களை அமைத்தும் லங்கர் என்று அழைக்கப்படும் இலவச உணவு வழங்கும் நிலையங்களையும் அமைத்தனர். கிழக்கே அசாம் முதல் மத்திய பாரதத்தில் பிலாஸ்பூர், மேற்கே வடமேற்கு எல்லைப்புற மாகாணங்கள் வடக்கே காஷ்மீர் என்று பல்வேறு இடங்களுக்கு குரு விஜயம் செய்தார். மதுரா, ஆக்ரா வாரணாசி என்று பல்வேறு நகரங்களுக்கு சென்று குரு தர்மப் பிரச்சாரம் செய்து வந்தார். பஞ்சாப் மாநிலத்தின் முக்கிய நகரமாக விளங்கும் அனந்தபூர் சாஹிப் நகரம் குரு தேஜ் பகதூர் அவர்களால் உருவாக்கப்பட்ட ஒன்றாகும். சீக்கியர்களின் புனித நூலான குரு கிரந்த  சாஹிப்பில் குரு தேஜ் பகதூர் இயற்றிய எழுநூற்று எண்பதுக்கும் மேலான பிரார்த்தனை பாடல்கள் இடம்பெற்று உள்ளன.

சீக்கிய குருமார்களின் காலம் பாரத நாட்டில் முகலாய அரசு நடைபெற்றுக் கொண்டு இருந்த காலம். ஹிந்து தர்மத்தின் ஒரு பகுதியாகத்தான் குரு நானக் முதல் குரு தேஜ் பகதூர் வரை சீக்கிய நம்பிக்கைகளை வடிவமைத்துக் கொண்டு இருந்தனர். ஆலயங்களை அழிப்பதும், பசுக்களை கொல்வதும், உருவ வழிபாட்டை  தடை செய்வதும், மக்களை இஸ்லாம் மதத்திற்கு கட்டாயமாக மாற்றுவதும் என்று பல்வேறு முகலாய அரசர்கள் ஈடுபட்டு வந்தனர். அதிலும் அவுரங்கசீப் காலத்தில் இந்த கொடுமைகள் அளவே இல்லாமல் இருந்தது. காஷ்மீரத்தில் உள்ள பண்டிதர்களை வலுக்கட்டாயமாக இஸ்லாமுக்கு மாற்ற அரசு நெருக்கடி கொடுத்தது. குரு தேஜ் பகதூரிடம் காஷ்மீர  பண்டிதர்கள் அடைக்கலம் நாடி வந்தனர். குரு தேஜ் பகதூரை  மதமாற்ற முடிந்தால் மற்றவர்களும் மாறுவார்கள் என்று குரு முகலாய அரசுக்கு பதில் அனுப்பினார்.

முகலாய அரண்மனைக்கு வருமாறு ஆணை பிறந்தது. எது நடக்கும் என்று உணர்ந்த குரு தேஜ் பகதூர் ஒன்பது வயதான தனது மகன் கோவிந்தசிம்மனை பத்தாவது குருவாக நியமித்து விட்டு டெல்லிக்கு பயணமானார். அவரோடு பாய் சதிதாஸ், பாய் மதிதாஸ், பாய் தயாள்தாஸ் ஆகியோரும் இணைந்து கொண்டனர். 1675ஆம் ஆண்டு 12 ஆம் நாள் டெல்லிக்கு அருகே குருவும் அவரது நண்பர்களும் சிறை பிடிக்கப்பட்டனர். இஸ்லாம் மதத்திற்கு மாற மறுத்த அவர்கள் கொடுமையான முறையில் சித்திரவதைக்கு உள்ளானார்கள். பாய் சதிதாஸ் உயிரோடு எரித்து கொல்லப்பட்டார். பாய் மதிதாஸ் துண்டு துண்டாக வெட்டிக் கொல்லப்பட்டார். பாய் தயாள்தாஸ் கொதிக்கும் நீரில் மூழ்கடிக்கப்பட்டு கொல்லப்பட்டார். இவை அனைத்தையும் கூண்டில் அடைக்கப்பட்டு இருந்த குரு பார்க்கும் வகையில் நடந்தது. இறுதியாக இஸ்லாம் மதத்திற்கு மாறினால் விடுதலை செய்யப்படுவீர்கள் என்று குருவிற்கு சொல்லப்பட்டது. தர்மத்தை கைவிடுவதைக் காட்டிலும் உயிரை விடுவது மேல் என்று குரு பதிலளிக்க, குருவின் தலையை வெட்டி அவரை கொலை செய்தனர் முகலாயர்கள்.

குரு அர்ஜான்சிங்கின் பலிதானம் சீக்கியர்களை ஒன்றிணைத்தது. குரு தேஜ் பகதூரின் பலிதானம் சீக்கியர்களை  இறுதிவரை தனிமனிதர்களின் வழிபாடு உரிமைக்கு போராடும் இனமாக மாற்றியது. குரு தேஜ் பகதூரின் மகனும் சீக்கியர்களின் பத்தாவது குருவுமான குரு கோவிந்தசிம்மன் போராட்ட குணமுடைய இனமாக சீக்கிய இனத்தை வார்த்தெடுத்தார். குரு தேஜ் பகதூரின் பலிதானத்தைத் தொடர்ந்து பல காஷ்மீர பண்டிதர்கள் சீக்கியர்களாக மாறி, கல்சா அமைப்பில் இணைந்து இஸ்லாமியர்களை எதிர்த்துப் போராடத் தொடங்கினார்கள்.

வெறும் உபதேசங்களால் அல்லாது உதாரணத்தால் வாழ்ந்து காட்டிய குருவின் வாழ்வும் பலிதானமும் நம்மை வழிநடத்தட்டும்.