ஞாயிறு, 10 நவம்பர், 2019

முதுபெரும் தலைவர் சுரேந்திரநாத் பானர்ஜி - நவம்பர் 10.

ஆயிரம் வருடங்களுக்கு மேலாக அன்னியர்கள் ஆட்சியை எதிர்த்துப் போராடியதுதான் பாரத நாட்டின் உண்மையான வரலாறு. தொடர் ஓட்டம் போல அந்தந்த காலகட்டத்தில் வெவ்வேறு தேசபக்தர்கள் தோன்றி சுதந்திர கனலை அணையவிடாமல் தகுதியான அடுத்தகட்ட தலைவர்களை உருவாக்கி அவர்கள் வசம் அந்த புனிதப் பணியை விட்டுவிட்டுச் சென்ற நெடிய வரலாறு நம் தேசத்தின் வரலாறு. அவ்வாறு பத்தொன்பதாம் நூற்றாண்டில் வங்காளத்தில் தோன்றிய முதுபெரும் தலைவர் சுரேந்திரநாத் பந்தோபாத்யாவின் பிறந்ததினம் இன்று. கொல்கத்தா நகரில் வசித்துவந்த துர்காசரண் பானர்ஜி என்ற மருத்துவரின் மகனாக 1848ஆம் ஆண்டு நவம்பர் 10ஆம் நாள் பிறந்தவர் சுரேந்திரநாத் பானர்ஜி. கொல்கத்தா நகரில் இன்று மாநிலக் கல்லூரி என்று அறியப்படும் ஹிந்து கல்லூரியில் பட்டப்படிப்பை முடித்த சுரேந்திரநாத் பானர்ஜி 1868ஆம் ஆண்டு இந்திய ஆட்சிப் பணிக்கான தேர்வை எழுத லண்டன் சென்றார். 1869ஆம் ஆண்டு அந்த தேர்வில் அவர் வெற்றி பெற்றார். ஆனால் அவர் வயதில் எழுத சர்ச்சையால் ஆங்கில அரசு அவரின் வெற்றியை செல்லாது என அறிவித்தது. எனவே மீண்டும் 1871ஆம் ஆண்டு அதே தேர்வை எழுதி வெற்றிபெற்றார். அதனைத் தொடர்ந்து ஆங்கில அரசு அவரை இன்று பங்களாதேஷ் நாட்டில் இருக்கும் சில்ஹெட் நகரின் உதவி ஆட்சித் தலைவராக நியமித்தது. ஆனால் மிகச் சிறிய தவறை காரணம் காட்டி அரசு அவரை அந்தப் பதவியில் இருந்து நீக்கியது. பாரத மக்கள் யாருக்கும் ஆட்சி செய்யும் தகுதி இல்லை என ஆங்கில அரசின் கருத்துதான் இதற்கான பின்புலம். தனக்கு இழைக்கப்பட்ட அநீதியை எதிர்த்து மேல் முறையீடு செய்ய சுரேந்திரநாத் பானர்ஜி மீண்டும் லண்டன் சென்றார். ஆனால் அவருக்கு ஆங்கில ஆட்சியில் நீதி கிடைக்கவில்லை. ஆனால் லண்டன் நகரில் தங்கியிருந்த காலத்தில் அவர் படித்த புத்தகங்கள் அவரின் சிந்தனைப் போக்கை மாற்றி அமைத்தது.

1875ஆம் ஆண்டு நாடு திரும்பிய பானர்ஜி வித்யாசாகர் கல்லூரி ( மெட்ரோபாலிட்டன் கல்லூரி ) ஸ்காட் சர்ச் கல்லூரி ஆகிய நிறுவனங்களில் ஆங்கிலப் பேராசிரியராகப் பணியாற்றினார். அதன் பின்னர் அவர் ரிப்பன் கல்லூரி என்ற என்ற கல்வி நிலையத்தை நிறுவினார். இன்று அது சுரேந்திரர்நாத் பானர்ஜி கல்லூரி என்று அழைக்கப்படுகிறது. 1876ஆம் ஆண்டு அவர் இந்திய தேசிய இயக்கம் என்ற அமைப்பைத் தொடங்கினார். அதன் கூட்டங்களில் மதங்களைக் கடந்து, மொழிகளைக் கடந்து நாம் அனைவரும் ஒரு தாயின் பிள்ளைகள், நாட்டின் முன்னேற்றத்திற்க்காக நாம் அனைவரும் இணைத்து செயல் புரிய வேண்டும் என்று மீண்டும் மீண்டும் வலியுறுத்திப் பேசினார்.

1879ஆம் ஆண்டு பெங்காலி என்ற ஆங்கிலப் பத்திரிகையை நிறுவினார். அதன் அவர் எழுதிய தலையங்கம் ஒன்றுக்காக கைது செய்யப்பட்டார்.அவரை விடுதலை செய்யக் கோரி வங்காளத்தில் மட்டுமல்லாமல் டெல்லி, ஆக்ரா, பூனா, லாகோர் ஆகிய நகரங்களிலும் கடையடைப்பு நடைபெற்றது என்றால் அவரது ஆளுமையை நாம் புரிந்துகொள்ளலாம். பானர்ஜி உருவாக்கிய இந்திய தேசிய இயக்கம் வருடம்தோறும் அந்த ஆண்டுக்கான பொதுக்கூட்டத்தை நடத்துவது வாடிக்கையாக இருந்தது.

ஒத்த கருத்தோடு உருவான இந்திய தேசிய காங்கிரஸ் இயக்கத்தில் பானர்ஜி தனது இயக்கத்தை 1886ஆம் ஆண்டு இணைத்துக் கொண்டார். 1895 மற்றும் 1902ஆம் ஆண்டு நடைபெற்ற காங்கிரஸ் மாநாடுகள் இவர் தலைமையில்தான் நடைபெற்றது. 1905ஆம் ஆண்டு கார்ஸன் பிரபு வங்காளத்தை இரண்டாகப் பிரித்தார். அதனை எதிர்த்து முழுமூச்சில் சுரேந்திரநாத் பானர்ஜி பல்வேறு போராட்டங்களை நடத்தினார். அடுத்த தலைமுறை தலைவர்களாக உருவான கோபால கிருஷ்ண கோகுலே, சரோஜினி நாயுடு ஆகியோரின் குருநாதராக சுரேந்த்ரநாத் பானர்ஜி விளங்கினார். பானர்ஜி மிதவாதிகளின் தலைவராக இருந்தார். அந்நிய துணி மறுப்பு, சுதேசி இயக்கம் ஆகியவைகள் அவர் முன்னெடுத்த முக்கியமான செயல்களாகும். அன்றய வங்காளத்தின் முடிசூடா மன்னர் என அவர் புகழப்பெற்றார்.

போராட்ட களம் மனுக்களை எழுதி, அரசாங்கத்திடம் கோரிக்கை வைக்கும் மிதவாதிகள் கையில் இருந்து பால கங்காதர திலகர்,  லாலா லஜபதி ராய் போன்ற தீவிர செயல்பாட்டில் நம்பிக்கை வைத்த தலைவர்கள் கைக்கு மாறியது. பல்வேறு இடங்களில் ஆயுதம் தாங்கிய போராட்ட வீரர்கள் தோன்ற ஆரம்பித்தனர். தென்னாபிரிக்கா நாட்டில் இருந்து காந்தி பாரதம் வந்தார். காட்சிகள் மாறின, காலங்கள் மாறின, மக்களின் எண்ணம் மாறியது. மிண்டோ மார்லி சீர்திருத்தங்களை பானர்ஜி வரவேற்றார். ஆனால் பெருவாரியான மக்கள் அந்த சீர்திருத்தங்களால் எந்தப் பயனும் இல்லை என்று எண்ணினார்கள். காந்தியின் ஒத்துழையாமை இயக்கம் பலன் தராது என்றும் மாண்டேகு செம்ஸ்போர்ட் சீர்திருத்தங்களை ஏற்றுக் கொள்ளலாம் என்று பானெர்ஜி கூறினார். பல்வேறு புதிய தலைவர்கள் அரசியல் வானில் சுடர்விட்டுப் பிரகாசிக்க, பானர்ஜி மெல்ல மெல்ல தனது முக்கியத்தை இழந்தார். 1925ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 6ஆம் நாள் சுரேந்தர்நாத் பானர்ஜி காலமானார்.

பெரும் கட்டிடங்களின் அஸ்திவாரங்கள் வெளியே தெரிவதில்லை, ஆனால் அவை இல்லாமல் கட்டிடங்கள் இல்லை. அதுபோல பாரத நாட்டின் ஆங்கில அரசை எதிர்த்து நடந்த போராட்டங்களில் சுரேந்திரநாத் பானர்ஜி போன்றவர்களின் ஆரம்பகால செயல்பாடு இல்லாமல் இருந்திருந்தால், சுதந்திரம் இன்னும் பல பத்தாண்டுகள் பின்னால் சென்றிருக்கும் என்பதுதான் உண்மை.

நாட்டின் மூத்த தலைவர்களில் ஒருவரான சுரேந்திரநாத் பானர்ஜிக்கு ஒரே இந்தியா தளம் தனது வணக்கத்தையும் மரியாதையையும் தெரிவித்துக் கொள்கிறது.