செவ்வாய், 5 மே, 2020

தமிழில் கலைக்களஞ்சியம் தந்த அவினாசிலிங்கம் செட்டியார் பிறந்தநாள் - மே 5


எந்தவிதமான ஆர்ப்பாட்டமும், விளம்பரமும் இல்லாமல் தமிழுக்கு உண்மையாகவே தொண்டு புரிந்த பலர் உண்டு. அதில் முக்கியமானவர் திரு திருப்பூர் சுப்ரமணிய அவினாசிலிங்கம் செட்டியார் அவர்கள். அன்றய கோவை மாவட்டத்தின் பகுதியாக விளங்கிய திருப்பூர் நகரின் செல்வச்செழிப்புமிக்க குடும்பத்தில் பிறந்தவர். திருப்பூர், கோவை மற்றும் சென்னையில் பயின்று சென்னை சட்டக்கல்லூரியில் படித்து, வழக்கறிஞராகப் பணியாற்றியவர்.

படிக்கும் காலத்திலேயே ராமகிருஷ்ண பரமஹம்சர், விவேகானந்தர் ஆகியோரின் கருத்துக்களால் ஈர்க்கப்பட்டு, திருமணம் செய்துகொள்ளாமலேயே துறவி போன்ற வாழ்க்கையை வாழ்ந்து வந்தவர். அதே நேரத்தில் காந்தியின் பாதையை பின்பற்றி ஒத்துழையாமை இயக்கம், வெள்ளையனே வெளியேறு போராட்டங்களில் கலந்துகொண்டு நான்கு முறை சிறைத்தண்டனை அனுபவித்தவர்.

ஈரோடு, திருப்பூர் ஆகிய இன்றய மாவட்டங்களை உள்ளடக்கிய அன்றய கோவை மாவட்ட காங்கிரஸ் கட்சியின் தலைவராகப் பணியாற்றினார். ஹரிஜன மக்கள் முன்னேற்றம், விதவைகள் மறுமணம், கதர் துணி அணிவதை பரப்புதல் ஆகிய காந்திய வேலைத்திட்டத்தை கொங்கு பகுதியில் முன்னெடுத்தவர்.

கோவையில் ராமகிருஷ்ணா வித்யாலயா பள்ளியைத் தொடங்கி நடத்தினார். அங்கே ஜாதி பேதமில்லாமல் எல்லா மாணவர்களையும் சேர்த்துக்கொண்டார். பெண்கள் கல்விக்காக கலைக் கல்லூரி ஒன்றையும் நிறுவினார். அந்த நிறுவனம் இன்று நிகர்நிலைப் பல்கலைக்கழகமாக வளர்ச்சி பெற்றுள்ளது.

சென்னை ராஜதானியின் பிரதமராக பிரகாசம் மற்றும் ஓமன்தூர் ராமசாமி ரெட்டியார் ஆகியோர் பதவி ஏற்றபோது, அவர்கள் மந்திரிசபையில் அமைச்சராகப் பணியாற்றினார். அப்போது உயர்நிலைப் பள்ளிகளில் தமிழைப் பயிற்சி மொழியாகியது இவரது பெரும் சாதனையாகப் போற்றப்படுகிறது. அந்தக் காலகட்டத்தில் தமிழில் கலைக்களஞ்சியம் உருவாவதற்கான முயற்சியை மேற்கொண்டார். இவர் உருவாக்கிய தமிழ் வளர்ச்சி கழகம் சார்பில் பத்து தொகுதிகள் கொண்ட கலைக்களஞ்சியம் வெளியிடப்பட்டது. அதன் பிறகு சிறுவர் கலைக்களஞ்சியம் உருவாகும் குழுவின் தலைவராகவும் பணியாற்றினார். இவர் காலத்தில்தான் பாரதியார் பாடல்கள் நாட்டுடமை ஆக்கப்பட்டது. திருக்குறளை பாடத்திட்டத்தில் சேர்த்ததும் இவரே.

1952இல் அமைந்த முதலாம் நாடாளுமன்றத்தில் திருப்பூர் தொகுதியின் பிரதிநிதியாகவும், 1958 முதல் மாநிலங்களவை உறுப்பினராகவும் பணியாற்றினார். அவினாசிலிங்கம் செட்டியாரின் சேவைகளைப் பாராட்டும் விதமாக பாரத அரசு இவருக்கு 1970ஆம் ஆண்டு பத்மபூஷன் விருது வழங்கி சிறப்பித்தது.

சமூக சீர்திருத்தவாதி, சமுதாய சேவகர், சுதந்திரப் போராட்ட வீரர், கல்வியாளர் என்று பல்முகப் பரிமாணம் கொண்ட அவினாசிலிங்கம் செட்டியார் தனது 1991ஆம் ஆண்டு தனது 88ஆம் வயதில் காலமானார்.