கன்னட மொழியின் மிக முக்கியமான எழுத்தாளர் ஒரு தமிழர் என்பது நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும். ஞானபீட விருது பெற்ற மாஸ்தி வெங்கடேச ஐயங்காரின் பிறந்த தினம் இன்று. அவரின் நினைவு தினமும் இன்றுதான்.
1891ஆம் ஆண்டு ஜூன் மாதம் 6ஆம் நாள் கோலார் மாவட்டத்தில் ஒரு தமிழ் பேசும் ஸ்ரீவைஷ்ணவ குடும்பத்தில் பிறந்தவர் வெங்கடேச ஐயங்கார். தனது இளமைக்காலத்தில் மாஸ்தி கிராமத்தில் கழித்த ஐயங்கார், சென்னை பல்கலைக்கழகத்தில் ஆங்கில இலக்கியத்தில் முதுகலைப் பட்டம் பெற்றவர். அன்றய மைசூர் சமஸ்தானத்தின் ஆட்சிப் பணியில் வேலை பார்க்கத் தொடங்கிய ஐயங்கார் 1943 ஆம் ஆண்டு தனது பதவியை ராஜினாமா செய்தார். வேலை பார்க்கும் காலத்திலேயே ஸ்ரீனிவாஸ் என்ற புனைபெயரில் அவர் எழுதிக்கொண்டிருந்தார்
ஆரம்பத்தில் ஆங்கிலத்தில் எழுதிக் கொண்டிருந்த ஐயங்கார் பின்னர் கன்னட மொழியில் எழுதலானார். இவர் எழுதிய முதல் நூல் ரங்கன மதுவே 1910ஆம் ஆண்டு வெளியானது. இவரது கேலவு சன்ன கேட்டகளு ( சில சிறுகதைகள் ) என்ற தொகுப்பு நவீன கன்னட இலக்கியத்தின் முக்கியமான படைப்பாகக் கொண்டாடப்படுகிறது. தத்துவங்கள், அழகியல், சமுதாயம் பற்றிய பல கவிதைகள், பல நாடகங்கள், மொழிபெயர்ப்பு என்று எழுத்தில் எல்லா தளங்களிலும் ஐயங்கார் தொடர்ந்து இயங்கிக் கொண்டிருந்தார். கன்னட மொழியில் 120 புத்தகங்களும் ஆங்கிலத்தில் 17 புத்தகங்களும் இவரால் எழுதப்பட்டன.
கர்நாடகத்தின் குடகு பகுதியை ஆண்ட கடைசி மன்னன் சிக்கவீர ராஜேந்திரன். கட்டுப்பாடற்ற வளர்ப்பினால் ஒரு அரசனுக்குரிய எந்த தகுதியையும் வளர்த்துக் கொள்ளாத மன்னன் இவன். தொடர்ந்து இவன் செய்த தவறுகளால் அரச குடும்பத்தினரும், மந்திரிகளும் மன்னனுக்கு எதிராகத் திரும்ப, ஆங்கிலேயர் வசம் குடகு அடிமைப்பட நேர்ந்தது. இந்தக் களத்தில் மாஸ்தி வெங்கடேச ஐயங்கார் எழுதிய சிக்கவீர ராஜேந்திரன் என்ற புதினம் ஐயங்காருக்கு ஞானபீடப் பரிசைப் பெற்றுத் தந்தது. இந்த புதினத்தை ஐயங்கார் தனது 92ஆம் வயதில் எழுதினார்.
ஒழுங்கீனமும் பொறுப்பற்ற தன்மையும் சிக்கவீர ராஜேந்திரன் போன்ற பல மன்னர்களின் பழக்கமாக இருந்திருந்திருக்கலாம். அதனாலேயே ஆங்கில ஆட்சிக்கு பொதுமக்கள் தங்கள் எதிர்ப்பைக் காட்டாமல் இருந்திருக்கலாம் என்றுதான் எண்ணத் தோன்றுகிறது. பதவியை இழந்த ராஜேந்திரன் லண்டன் சென்று விக்டோரியா மஹாராணியைச் சந்தித்து தனது நாட்டை மீண்டும் ஒப்படைக்கக் கோருகிறான். தனது பெண்ணான கௌரியம்மாவை ராணியின் வசத்தில் அவன் ஒப்படைக்கிறான் அங்கே கிருத்துவ மதத்திற்கு மாற்றப்படும் ராஜகுமாரி, தன்னை விட முப்பது வயது மூத்த ஒரு ராணுவ அதிகாரியை மணந்து தனது இருபத்திமூன்றாம் வயதில் அவர் காலமானார்.
தனது 95ஆம் வயதில் காலமான மாஸ்தி வெங்கடேச ஐயங்கார் நினைவாக கர்நாடக அரசு கன்னட மொழி எழுத்தாளர்களுக்கான விருது வழங்கி சிறப்பிக்கிறது. இவர் வாழ்ந்த வீடு இவரது நினைவில்லமாக செயல்பட்டு வருகிறது.