வியாழன், 3 அக்டோபர், 2019

பாரதத்தின் முதல் பெண் மருத்துவர் - கதம்பினி கங்குலி - அக்டோபர் 3.

சூரியனே அஸ்தமிக்காத ஆங்கில சாம்ராஜ்யத்தில் பட்டப்படிப்பை முறைப்படி முடித்த பெண் இங்கிலாந்து நாட்டில் அல்ல பாரத நாட்டைச் சார்ந்தவர் என்பது பலருக்கு புது தகவலாக இருக்கும். புகழ்பெற்ற ஆக்ஸ்போர்ட் மற்றும் கேம்பிரிட்ஜ் பல்கலைக் கழகங்கள் பெண்களை படிக்க அனுமதிக்காதாத காலத்தில், கல்கட்டா பல்கலைக்கழகம் பெண்களை அனுமதித்தது என்பது நம்மில் எத்தனை பேருக்குத் தெரியும்.1861ஆம் ஆண்டு ஜூலை 18ஆம் நாள் பிஹாரில் உள்ள பகல்பூர் நகரில் ஆசிரியராகப் பணியாற்றிக்கொண்டு இருந்த பிரஜாகுமார் போஸ் என்பவரின் மகளாகப் பிறந்தவர் கதம்பினி. ப்ரம்மசமாஜத்தில் தீவிரமாக செயலாற்றிக்கொண்டு இருந்த தந்தை அன்றய நடைமுறைக்கு எதிராக தனது மகளை ஆங்கிலக் கல்வி பயில வைப்பதில் ஆர்வத்தோடு இருந்தார். மகள் கதம்பினியும் படிப்பில் சிறப்பானவராகவே இருந்தார்.

தனது ஆரம்பக்கல்வியை கதம்பினி முதலில் டாக்கா நகரிலும், பின்னர் கொல்கத்தா நகரிலும் முடித்தார். பள்ளியில் இவரது ஆசிரியராகவும் வழிகாட்டியாகவும் அமைந்தவர் துவாரகாநாத் கங்குலி. பள்ளிப்படிப்பை முடித்த கதம்பினி கல்லூரிப் படிப்புக்காக கொல்கத்தா பல்கலைக்கழகத்தின் நுழைவுத் தேர்வுக்கு விண்ணப்பித்தார். அன்று ஆங்கில சாம்ராஜ்யத்தின் எந்த கல்லூரிகளிலும் பெண்களை அனுமதிக்கும் பழக்கம் இல்லை. துவாரகாநாத் கங்குலியின் தொடர்ந்த முன்னெடுப்பால் கொல்கத்தா பல்கலைக்கழகம் கதம்பினியை நுழைவுத் தேர்வு அனுமதித்தது. அவரோடு சரளா என்ற மாணவியும் தேர்வு எழுத இருந்தார். ஆனால் திருமணம் ஆனதால் அவர் தேர்வு எழுதவில்லை. கதம்பினி நுழைவுத்தேர்வு எழுதி வெற்றி பெற்றார். அவரும் சந்திரமுகி பாசு என்ற பெண்மணியும் 1882 ஆண்டு கொல்கத்தா பல்கலைக்கழகத்தின்  தேர்வில் வெற்றிபெற்று இந்தியாவில் ஏன் ஆங்கில சாம்ராஜ்யத்தின் முதல் பெண் பட்டதாரிகள் ஆனார்கள். அவர்களின் பட்டமளிப்பு விழா 1883ஆம் ஆண்டு நடைபெற்றது.

அதனைத் தொடர்ந்து மருத்துவம் படிக்க கதம்பினி முடிவு செய்தார். ஆனால் அப்போது கல்கத்தா மருத்துவக் கல்லூரி பெண்களை அனுமதிக்கவில்லை. சென்னை மருத்துவக் கல்லூரி 1875ஆம் ஆண்டிலேயே பெண்களை மருத்துவம் படிக்க அனுமதிக்கத் தொடங்கிவிட்டது. மீண்டும் போராட்டம், அதன் பிறகு 1884ஆம் ஆண்டு கொல்கத்தா மருத்துவக் கல்லூரியில் கதம்பினி சேர்த்துக் கொள்ளப்பட்டார். பெண்களின் வெற்றி எல்லா காலங்களிலும் ஆண்களின் கண்களை உறுத்திக் கொண்டுதான் இருக்கும். அப்படியான மனநிலையில் இருந்த ஒரு பேராசிரியர்  கதம்பினியை உடல்கூறு மருத்துவத்தில் தோல்வி அடைந்தார் என்று அறிவித்தார். எனவே மருத்துவப் பட்டம் அல்லாது மருத்துவத்தில் பட்டயம்தான் அவருக்கு வழங்கப்பட்டது.

1888ஆம் ஆண்டு கதம்பினி டூபரின் சீமாட்டி மகளீர் மருத்துவமனையில் மருத்துவராக நியமிக்கப்பட்டார். இந்தியாவில் மருத்துவத்தை தொழில்முறையில் செய்யத் தொடங்கிய முதல் பெண்மணி என்ற பெருமையும் கதம்பினி அவர்களையே சாரும், ஆனாலும் அன்றய வங்காளத்தில் இருந்த ஆங்கிலப் பெண்கள், இவருக்கான மரியாதையை அளிக்கவில்லை என்று எண்ணிய கதம்பினி மருத்துவ மேற்படிப்புக்காக இங்கிலாந்து செல்ல முடிவு செய்தார். 1893ஆம் ஆண்டு லண்டன் சென்ற கதம்பினி அங்கே மூன்று சிறப்பு தகுதிகளுக்கான தேர்வுகளை எழுதி வெற்றிபெற்று மீண்டும் தாயகம் திரும்பினார்.

முன்னர் கிடைக்காமல் இருந்த அங்கீகாரம் இப்போது கிடைக்கத் தொடங்கியது. கொல்கத்தாவின் முக்கியமான மருத்துவராக கதம்பினி அறியப்படலானார். பலகாலமாக உடல்நலம் குன்றி இருந்த நேபாள அரச வம்சத்தின் ராஜமாதாவை நலமடைய வைத்ததன் மூலம், பல்வேறு அரச குடும்பங்கள் அவரின் சிகிச்சைக்காக அணுகத் தொடங்கினார்கள். 1923ஆம் ஆண்டு அவர் மரணிக்கும் வரை அவர் தனது மருத்துவ சேவையை தொடர்ந்து நடத்திக் கொண்டுதான் இருந்தார்.

மருத்துவதோடு சேர்ந்து பல்வேறு சமுதாயப் பணிகளிலும் கதம்பினி தன்னை ஈடுபடுத்திக் கொண்டார். 1889ஆம் ஆண்டு நடைபெற்ற காங்கிரஸ் மகாசபை கூட்டத்தின் நன்றியுரை இவர் அளித்ததுதான். காங்கிரஸ் கூட்டத்தில் பேசிய முதல் பெண்மணி என்ற பெருமையும் இவரையே சாரும்.

ஆனந்திபாய் ஜோஷி என்ற பெண்மணி 1886ஆம் ஆண்டு அமெரிக்காவில் உள்ள பென்சில்வேனியா மருத்துவக் கல்லூரியில் பட்டம் பெற்று இருந்தாலும், அவர் தனது பணியைத் தொடங்கும் முன்னே 1887ஆம் ஆண்டு காசநோயால் இறந்து போனார். எனவே பாரத நாட்டில் மருத்துவப் பட்டம் பெற்ற முதல் பெண் மற்றும் மருத்துவத் தொழிலில் ஈடுபட்ட முதல் பெண் என்ற பெருமை கதம்பினி அவர்களையே சாரும்.

தனது ஆசிரியரான துவாரகாநாத்தை கதம்பினி திருமணம் செய்து கொண்டார். துவாரகாநாத் ஏற்கனவே மணமாகி மனைவியை இழந்தவர், கதம்பினியை விட பத்தொன்பது வயது மூத்தவர். எனவே அன்றய ப்ரம்மசமாஜ உறுப்பினர்கள் இந்த மணத்தை ஏற்கவில்லை. ஆனால் அதனைப் பற்றி கவலைப்படாமல் திருமணம் செய்துகொண்ட கதம்பினி - துவாரகாநாத் தம்பதியினர் மகிழ்வோடுதான் இருந்தார்கள். கதம்பினியின் வெற்றிக்கு அவர் கணவர் காரணமாகவும் இருந்தார்.

பாரத பெண்களுக்கு உதாரணமாகத் திகழும் மருத்துவர் கதம்பினி கங்குலி 1923ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 3ஆம் நாள் காலமானார்.