செவ்வாய், 6 ஆகஸ்ட், 2019

நீர் மேலாண்மை நாயகன் - ராஜேந்திரசிங் - ஆகஸ்ட் 6

நீரின்றி அமையா யாக்கைக்கெல்லாம் 
உண்டி கொடுத்தோர் உயிர் கொடுத்தோரே 
உண்டி முதற்றே உணவின் பிண்டம் 
உணவெனப் படுவது நிலத்தோடு நீரே   - புறம் 18. 

வாழும் உயிர்களுக்கு எல்லாம் மிக மிக அத்தியாவசியமானது தண்ணீர். ஆனாலும் பூமிப்பந்தில் இருக்கும் நீரில் 90% மேலான நீரை குடிதண்ணீராகப் பயன்படுத்த முடியாது. எனவே இருக்கும் நீரை, அதோடு மழைநீரை மிகச் சரியாகப் பயன்படுத்தி, அதனை காப்பாற்றினால்தால் மனிதர்கள் குடிக்கவும், பிற தேவைகளுக்கு பயன்படுத்தவும், விவசாயத்திற்கும், மாற்ற கால்நடைகள் பயன்படுத்தவும் உபயோகிக்க முடியும். அப்படியான ஒரு சேவையில் பல்லாண்டுகளாக தன்னை ஈடுபடுத்திக் கொண்டுள்ள ஒருவரைப் பற்றித்தான் இன்று நாம் பார்க்கப்போகிறோம்.

உத்திரப்பிரதேச மாநிலத்தில் மீரட் நகரின் அருகில் உள்ள பாக்பட் மாவட்டத்தைச் சார்ந்த ஒரு வசதியான குடும்பத்தில் முதல் மகனாக 1959ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 6ஆம் நாள் பிறந்தவர் ராஜேந்திரசிங். அவர் தந்தை அறுபது ஏக்கர் நிலத்தில் விவசாயம் செய்து வந்த செல்வந்தர். இவர் கல்லூரியில் படித்துக் கொண்டு இருக்கும் காலத்தில் இவரது கிராமத்திற்கு ரமேஷ் ஷர்மா என்ற காந்தியவாதி வருகை புரிந்தார். அவரது தொடர்பு ராஜேந்திரசிங்கை சமுதாயப் பணியில் ஈடுபட வைத்தது. நெருக்கடி நிலையை எதிர்த்து ஜெயப்ரகாஷ் நாராயணன் தொடங்கிய சத்தியாகிரக போராட்டமும், கல்லூரி ஆசிரியர்களின் வழிகாட்டுதலும் இவரை இன்னும் ஆற்றுப்படுத்தியது. ஹிந்தி இலக்கியத்தில் இளங்கலை பட்டமும், ஆயுர்வேத மருத்துவர் பட்டமும் என்று இரண்டு பட்டங்களை ராஜேந்திரசிங் முடித்தார்.

பட்டப்படிப்பை முடித்த டாக்டர் ராஜேந்திரசிங்  ராஜஸ்தான் மாநிலத்தில் அரசுப்பணியில் சேர்ந்தார். அங்கே அவர் தருண் பாரத் சங்கா ( இந்திய இளைஞர் அமைப்பு ) என்ற தொண்டு நிறுவனத்தில் தன்னை இணைத்துக்கொண்டார். மூன்றே வருடத்தில் அந்த அமைப்பின் செயலாளராக நியமிக்கப்பட்டார். பல்வேறு திசைகளில் அமைப்பு செயலாற்றிக்கொண்டு இருக்கிறது, அதனால் ஒரு நீடித்த மாறுதலை உருவாக்க முடியவில்லை என்று அவர் கருதினார். அதனை மற்ற அமைப்பாளர்களோடு விவாதித்தார். அமைப்பின் முழுப் பொறுப்பையும் ராஜேந்திரசிங் வசம் ஒப்படைத்து விட்டு மற்ற அமைப்பாளர்கள் விலகிக் கொண்டனர். அரசாங்க வேலையில் சலிப்படைந்த ராஜேந்திரசிங்  தனது வேலையை ராஜினாமா செய்துவிட்டு தன் நண்பர்கள் நால்வருடன் ஒரு பேருந்தில் ஏறி அது செல்லும் கடைசி கிராமத்திற்கு பயணம் மேற்கொண்டார். அவர் சென்றடைந்த இடம் ஆல்வார் மாவட்டத்தின் கிஷோரி கிராமம்.



ராஜேந்திரசிங்கும் அவர் நண்பர்களும் அங்கே மக்களுக்கு கல்வி கற்றுக்கொடுக்கும் பணியிலும், மருத்துவத்திலும் ஈடுபட்டனர். பொதுவாகவே ராஜஸ்தான் மாநிலம் ஒரு வறண்ட பிரதேசம், அங்கே பெய்யும் மழையின் அளவு மிகக் குறைவு. மக்கள் தண்ணீர்க்குக்காக பல மைல் தூரம் நடக்க வேண்டி இருக்கும் இடம் அது. பெய்யும் மழையை குளங்களிலும், கசிவுநீர் குட்டைகளிலும் சேமிக்கும் பழக்கம் மறைந்து, ஆழ்துளை கிணறுகளை மக்கள் பயன்படுத்தத் தொடங்கி இருந்த காலம் அது. குளங்கள் தூர்வாரப்படாமல், அதனால் மழைநீர் சேமிக்கப்படாது, எனவே நிலத்தடிநீர் இன்னும் இன்னும் கீழே சென்று கொண்டு இருந்தது. "குடிநீர் என்பது இப்போது கல்வியை விட முக்கியம்" என்று ஒரு கிராமத்துவாசி சொன்னது ராஜேந்திரசிங்கை உலுக்கியது. அருகில் உள்ள ஒரு குளத்தை தூர்வாரி ஆழப்படுத்த அவர் முடிவு செய்தார். ஆனால் கடினமான உடலுழைப்புக்கு தயாராக இல்லாத அவரது நண்பர்கள் ராஜேந்திரசிங்கை விட்டு விலகிச் சென்று விட்டனர்.

உள்ளூர் இளைஞர்களின் துணையோடு ராஜேந்திரசிங் ஒரு குளத்தை தூர்வாரி அதன் கரைகளை உயர்த்தினார். தெய்வத்தால் ஆகாதெனினும் முயற்சி தன் மெய்வருத்தக் கூலி தருமல்லவா, அதுபோல மழைக்காலம் வந்தது, குளமும் நிரம்பியது, மெல்ல மெல்ல அருகில் உள்ள நிலத்தடிநீரின் மட்டமும் உயரத் தொடங்கியது. அருகிலுள்ள கிராம மக்கள் இந்த விளைவைப் பார்த்து தங்கள் கிராமங்களிலும் மழைநீர்  சேமிப்பைத் தொடங்கினர். வறட்சியான மாவட்டங்கள் என்று அரசு குறிப்பிட்டிருந்த இடங்கள் வளமையான பகுதிகளாக மாறத் தொடங்கின.

அருகிலுள்ள கிராமங்களில் எல்லாம் சென்று மக்களிடம் பேசிப் பேசி ராஜேந்திரசிங் பெரும் மாற்றத்தை உருவாக்கினார். அறுபது ஆண்டுகளுக்கு மேலாக நீரோட்டம் இல்லாமல் இருந்த ஆர்வரி நதியை மீட்டெடுக்கும் முயற்சி ஆரம்பமானது. மழைநீரை சேமிக்கவும், தொடர்ச்சியான தடுப்பணைகளை கட்டியும் என்ற முயற்சிகளின் மூலம் இன்று ஆர்வரி நதியில் வருடம் முழுவதும் நீரோட்டம் உள்ளது.

அரசாங்கத்தோடு இணைந்து சரிஸ்கா வனவிலங்கு சரணாலயத்தில் பல்வேறு நீர்ப்பிடிப்பு பகுதிகளை ராஜேந்திரசிங் உருவாக்கினார். அந்த சரணாலயத்தில் வெளிப்பகுதியில்தான் இன்று தருண் பாரத் சங்காவின் அலுவலகம் செயல்பட்டுக் கொண்டு உள்ளது. இன்று நாடு முழுவதும் பல்வேறு இடங்களுக்குச் சென்று நீர் மேலாண்மை பற்றிய விழிப்புணர்வை ராஜேந்திரசிங் உருவாக்கி வருகிறார்.

தன்னலமற்ற சேவைக்காக இவருக்கு மகாசாய் விருது, ஜம்னாலால் பஜாஜ் விருது, என்று பல்வேறு விருதுகள் வழங்கப்பட்டு உள்ளன. திரு ராஜேந்திரசிங் அவர்களுக்கு பிறந்தநாள் வாழ்த்துகளைத் தெரிவிப்பதில் ஒரே இந்தியா தளம் மிகுந்த மகிழ்ச்சி கொள்கிறது.