திங்கள், 30 செப்டம்பர், 2019

குருஜியின் குரு - ஸ்வாமி அகண்டானந்தா - செப்டம்பர் 30.

ராமகிருஷ்ண பரமஹம்சரின் நேரடிச் சீடரும், ஸ்வாமி விவேகானந்தரின் தோழரும், ராமகிருஷ்ணா மடத்தின் மூன்றாவது தலைவரும், பரம பூஜனிய குருஜி கோல்வால்கரின் ஆன்மீக குருவுமான ஸ்வாமி அகண்டானந்தாவின் பிறந்ததினம் இன்று.ஸ்ரீமதா கங்கோபாத்யாய - வாமசுந்தரிதேவி தம்பதியினரின் மகனாக 1864ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 30ஆம் நாள் பிறந்தவர் சுவாமி அகண்டானந்தா. இவரது இயற்பெயர் கங்காதர் கதக். சிறுவயதில் இருந்தே ஆன்மீக நாட்டமும், இரக்ககுணமும் கொண்டவராக அவர் விளங்கினார். தனது பத்தொன்பதாம் வயதில் கங்காதர்,  தனது நண்பர் ஹரிநாத்துடன் ( பின்னாளில் ஸ்வாமி துரியானந்தா என்ற பெயரில் அறியப்பவர் இவர் ) ராமகிருஷ்ண பரமஹம்சரைமுதன்முதலாக சந்தித்தார். ஆத்ம சாதனைகள் ஒருபுறம் இருந்தாலும் கங்காதர் மக்கள் சேவையில் ஈடுபடவேண்டும் என்று விரும்பிய ராமகிருஷ்ணர் அவரை நரேந்தரநாத் தத்தாவோடு ( ஸ்வாமி விவேகானந்தர் ) அறிமுகம் செய்துவைத்தார். கங்காதருக்கு ராமகிருஷ்ண பரமஹம்சரோடும் விவேகானந்தரோடும் வாழ்நாள் முழுவதுமான உறவு இப்படித்தான் ஆரம்பமானது.

இல்லற வாழ்வில் கங்காதரரை ஈடுபடுத்த எண்ணிய அவர் தந்தை அவருக்கு ஒரு வேலை வாங்கிக் கொடுத்தார். சில மாதங்கள் அந்த வேலையில் இருந்த கங்காதர், அதனை துறந்து முழுநேரமும் ராமகிருஷ்ண பரமஹம்சரின் சேவைக்கே தன்னை அர்பணித்துக் கொண்டார். ராமக்ரிஷ்ணரின் மறைவுக்குப் பின்னர், கங்காதர் இமயமலை சாரலிலும் திபேத் நாட்டிலும் பல்வேறு இடங்களுக்கு பயணித்து, வேதாந்தத்தை கற்றுத் தேர்ந்தார். அவரது பயண அனுபவங்களை அவர் ஸ்ம்ரிதி கதா என்ற புத்தகமாகவும் எழுதினார். கையில் பணமோ மாற்றுத்துணியோ இல்லாமல் அவர் சுற்றிவந்தார்.

1890 ஆம் ஆண்டு அவர் துறவறத்தை மேற்கொண்டார். அவருக்கு அகண்டானந்தா என்ற யோக பட்டம் அளிக்கப்பட்டது. மீண்டும் ஸ்வாமி விவேகானந்தரோடு இமயமலைப் பயணங்களை அவர் தொடங்கினார். ராமகிருஷ்ணரின் நேரடி சீடர்கள் பதினேழு பேர் முதலில் சன்யாசம் பெற்று, நாடெங்கும் அலைந்து திரிந்து சமுதாய சேவையையும் அதே நேரத்தில் வேதாந்த ஞானத்தை மக்களுக்கு புகட்டும் வேலையையும் செய்யத் தொடங்கினார்கள்.

ஸ்வாமி அகண்டானந்தா அவதூத கீதை, பாணினியின் வடமொழி இலக்கண நூலுக்கு பதஞ்சலி எழுதிய விளக்கவுரை, மஹாபாரதம், பஞ்சதஸி, மருத்துவம் பற்றிய சரகர் - சுஸ்ருதர் எழுதிய நூல்கள், சுக்ல யஜுர் வேதம், யோகவாசிஷ்டம் ஆகிய நூல்களைக் கற்றுத் தேர்ந்தார்.

ராமகிருஷ்ணரின் சீடர்களில் சமுதாய சேவையை முன்னெடுத்தவர் என்ற பெருமை ஸ்வாமி அகண்டானந்தாவையே சாரும். 1894ஆம் ஆண்டு ராஜஸ்தானின் கத்ரி சமஸ்தானத்தில் இருந்தபோது வீடு வீடாகச் சென்று பெற்றோர்களிடம் பேசி, அவர்கள் குழந்தைகளை பள்ளியில் படிக்க வைக்குமாறு கூறினார். அவரது உழைப்பின் காரணமாக பள்ளிகளில் மாணவர் வருகை பலமடங்கு உயர்ந்தது. அவரது வழிகாட்டுதலின் பேரில் கத்ரி சமஸ்தானத்தின் மன்னர் அஜித்சிங் பல்வேறு கிராமங்களில் பள்ளிக்கூடங்களை நிறுவினார்.

1897ஆம் ஆண்டு வங்காளத்தில் ஆங்கிலேயர்களால் செயற்கையாக உருவாக்கப்பட்ட பஞ்சத்தை எதிர்கொள்ள ஸ்வாமிஜி தயாரானார். கடுமையான முயற்சிக்குப் பிறகு அவர் உணவுப் பொருள்களை பல்வேறு இடங்களில் இருந்து சேகரித்து, வறுமையின் பிடியில் இருந்த ஏழைகளுக்கு வழங்கினார். பெர்ஹாம்பூர் நகரில் ஒரு ஆதரவற்ற குழைந்தைகள் விடுதி, சர்கஞ்சி பகுதியில் ஒரு ஆஸ்ரமம், பின்னர் அதோடு இணைந்த பள்ளி ஆகியவைகளை அவர் ஆரம்பித்தார். சிறிது காலத்தில் அந்தப் பள்ளியில் தச்சு வேலையும், துணி நெய்யும் படிப்பும் மாணவர்களுக்கு கற்றுக் கொடுக்க ஆரம்பிக்கப்பட்டது.

ராஷ்டிரிய ஸ்வயம்சேவக சங்கத்தின் இரண்டாவது சர்சங்கசாலக் குருஜி கோல்வாக்கர், சுவாமி அகண்டானந்தாவின் சீடர். நீண்ட காலம் குருஜி ஸ்வாமிகளோடு தங்கி, வேதாந்தத்தைப் பயின்றார். ஸ்வாமிஜி குருஜி கோல்வாக்கர் அவர்களுக்கு தீக்ஷை அளித்தார்.

துறவிக்கான இலக்கணத்தோடு வாழ்ந்த ஸ்வாமிஜி 1937ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 7ஆம் நாள் மஹாசமாதி அடைந்தார். ஸ்வாமிஜி காட்டிய வழியில் இன்றும் ராமகிருஷ்ண மடத்தின் பல்வேறு துறவிகள் உலகெங்கிலும் சமுதாயப் பணியை மேற்கொண்டு வருகிறார்கள்.

ஞாயிறு, 29 செப்டம்பர், 2019

நீதியரசர் கபாடியா பிறந்ததினம் - செப்டம்பர் 29.

இரண்டு லட்சத்திற்கும் குறைவாக மக்கள்தொகை உள்ள ஒரு மிகச்சிறு சிறுபான்மையினத்தில் இருந்து, அதுவும் மிகவும் ஏழ்மை நிலையில் இருந்து நாட்டின் உச்சநீதிமன்ற தலைமைநீதிபதியாக உயர்ந்த திரு சரோஷ் ஹோமி கபாடியாவின் பிறந்தநாள் இன்று.1947ஆம் ஆண்டு செப்டம்பர் 29ஆம் நாள் எளியநிலையில் இருந்த ஒரு பார்சி குடும்பத்தில் பிறந்தவர் திரு கபாடியா. ஆசியாவின் முதல் சட்டக் கல்லூரியான மும்பை சட்டக்கல்லூரியில் சட்டம் பயின்றவர் திரு கபாடியா. அந்த காலகட்டத்தில் மும்பையில் ஒரு நிறுவனத்தில் கடைநிலை ஊழியராகப் பணியாற்றினார். பெரோஸ் தாமானியா என்ற வழக்கறிஞரிடம் பயிற்சி பெற்று பின்னர் மும்பை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பணியாற்றத் தொடங்கினார்.

மும்பை காட்கோபர் பகுதியில் 3,000 குடும்பங்களை வெளியேற்ற மும்பை மாநகராட்சி ஆணை பிறப்பித்தபோது, அதனை எதிர்வழக்காடி அந்த ஆணையை ரத்து செய்ய வைத்ததன் மூலம் கபாடியா மும்பையின் முக்கியமான வழக்கறிஞராக உருவானார்.

1991ஆம் ஆண்டு நாற்பத்தி நான்காம் வயதில் திரு கபாடியாவை அரசு மும்பை நீதிமன்றத்தின் நீதிபதியாக நியமித்தது. 2003ஆம் ஆண்டு உத்திரகாண்ட் மாநிலத்தின் உயர்நீதிமன்ற தலைமை நீதிபதியாகவும், அதனைத் தொடர்ந்து உச்ச நீதிமன்ற நீதிபதியாகவும் நியமிக்கப்பட்டார். 2010ஆம் ஆண்டு பாரதத்தின் உச்சநீதிமன்றத்தின் முப்பத்தி எட்டாவது தலைமைநீதிபதியாக கபாடியா நியமிக்கப்பட்டார். தனியார் நிறுவனத்தில் கடைநிலை ஊழியராகத் தொடங்கி உச்சநீதிமன்ற தலைமைநீதிபதியாக வளர திறமையும் உழைப்பும் நேர்மையும்தான் தேவை என்று திரு கபாடியாவின் வாழ்க்கை நமக்கு புலப்படுத்துகிறது. தனது நீண்ட நெடிய நீதிபதி வாழ்க்கையில் பல முக்கியமான தீர்ப்புகளை திரு கபாடியா வழங்கினார்.

நாட்டின் 14ஆவது மத்திய லஞ்ச ஒழிப்பு ஆணையரைத்                       தேர்ந்தெடுக்கும் பொறுப்பு அன்றய பிரதமர் மன்மோகன்சிங், உள்துறை அமைச்சர் ப சிதம்பரம் மற்றும் எதிர்க்கட்சி தலைவர் சுஷ்மா ஸ்வராஜ் அடங்கிய குழுவிடம் ஒப்படைக்கப்பட்டது. மன்மோகன் சிங்கும் சிதம்பரமும் கேரளாவைச் சார்ந்த திரு தாமஸ் அவர்களை சிபாரிசு செய்ய, அவர் மீது ஊழல் குற்றச்சாட்டு உள்ளது, அதன் முடிவு வராமல் அவரை இந்தப் பதவியில் நியமிக்கக் கூடாது என்று  சுஷ்மா ஸ்வராஜ் மறுத்தார். ஆனால் அரசு தாமஸை அந்தப் பதவியில் நியமித்தது. இதனை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் பொதுநல வழக்கு தாக்கலானது. இந்த நியமனம் செல்லாது என்று நீதிபதி கபாடியா தீர்ப்பு வழங்கினார். நாட்டில் பெரும் பரபரப்பையும் சர்ச்சையையும் இந்த தீர்ப்பு உருவாக்கியது.

நீதி வழங்கப்பட்டால் மட்டும் போதாது, நீதி வழங்கப்பட்டது என்பது மக்களால் உணரப்படவும் வேண்டும். எந்த ஒரு நாகரிக சமுதாயத்திற்கும் இது ஒரு முக்கியமான கொள்கையாகும். அப்படி மக்கள் நம்பவேண்டுமானால், நீதிபதிகளின் நடவடிக்கைகள் சந்தேகத்திற்கு அப்பாற்பட்டதாக இருக்கவேண்டும். நீதிபதிகள் பொதுமக்களோடு, அரசு அதிகாரிகளோடு, அரசியல்வாதிகளோடு ஏன் மற்ற நீதிபதிகளோடுகூட கலந்து பழகுவது என்பது மிகக் குறைவாகவே இருக்கவேண்டும். தங்களுக்கு தாங்களே விதித்துக்கொண்ட இந்த விதிமுறையை நீதிபதி கபாடியா தனது வாழ்க்கை முழுவதும் கடைபிடித்தார். வெவ்வேறு ஊழல் குற்றச்சாட்டுகள் நாட்டின் மனசாட்சியை உலுக்கிய காலகட்டத்தில் நீதிபதி கபாடியா சந்தேகத்தின் நிழல்கூட தன்மீது படாதவாறு வாழந்தார்.

பதவியில் இருந்த காலத்தில், எந்த ஒரு ஊடகத்திற்கும் பேட்டி கொடுக்கவோ அல்லது பொது நிகழ்ச்சிகளில் கலந்து கொள்வதையோ நீதிபதி கபாடியா தவிர்த்தே வந்தார். தனது இருபத்தி இரண்டு ஆண்டு கால நீதிபதி வாழ்வில் அவர் ஒரு நாள் கூட விடுமுறை எடுக்கவில்லை. உச்சநீதிமன்றத்தில் வழக்குக்கள் விசாரிக்கப்படும் முறையை அவர் சீர்படுத்தினார்.

வரைமுறை இல்லாமல் இயற்கையை சிதைத்து சுரங்க பணிகள் நடைபெறுவதை அவர் தடுத்து நிறுத்தினார். இந்திய அரசியலமைப்பு சட்டத்தின்படி பொதுமக்களுக்கு உள்ள உயிர்வாழும் உரிமை என்பது சுகாதாரமான சுற்றுப்புறத்தில் வாழ்வதை உள்ளடக்கியதாகும் என்று அவர் தீர்ப்பு வழங்கினார்.

பார்சி சமுதாயத்தைச் சார்ந்த நீதிபதி கபாடியா பொருளாதாரம், ஹிந்து தத்துவவியல், புத்த தத்துவம், கோட்பாடு இயற்பியல் ஆகிய துறைகளிலும் அறிஞராக விளங்கினார்.

நீதிபதி கபாடியா தனது அறுபத்தி எட்டாவது வயதில் 2016ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 4ஆம் நாள் காலமானார்.  

சனி, 28 செப்டம்பர், 2019

இசைக்குயில் லதா மங்கேஷ்கர் பிறந்தநாள் - செப்டம்பர் 28

பாரத திரையிசை வரலாற்றில் தவிர்க்க முடியாத ஆளுமையாக எழுபதாண்டுகளாக கோலோச்சிவரும் லதா மங்கேஷ்கர் அவர்களின் தொண்ணூறாவது பிறந்தநாள் இன்று.

 1929ஆம் ஆண்டு செப்டம்பர் 28ஆம் நாள் இந்தோரில் வசித்துவந்த பண்டிட் தீனநாத் மங்கேஷ்கர் - செவ்வந்தி தம்பதியினரின் முதல் மகளாகப் பிறந்தவர் ஹேமா மங்கேஷ்கர். பண்டிட் தீனநாத் மங்கேஷ்கர் ஒரு இசைக்கலைஞரும் நாடக நடிகருமாவார். அவரின் நாடகத்தின் கதாநாயகியின் பெயரான லதா பெயரைக் கொண்டே பெற்றோர்கள் அழைக்க, பின்னாளில் ஹேமா லதா என்றே அழைக்கப்படலானார்.

தனது ஐந்தாம் வயதில் இருந்தே தந்தையிடம் இசைப்பயிற்சியைத் தொடங்கிய லதா மங்கேஷ்கர், பின்னர் அமான் அலிகான் சாஹிப் மற்றும் அமநாத்கான் ஆகியோரிடமும் பயின்றார். 1942ஆம் ஆண்டு அவரின் தந்தை மரணமடைய, குடும்ப நண்பரான விநாயக் தாமோதர் கர்நாடக்கி என்பவர் மங்கேஷ்கர் குடும்பத்திற்கு உதவி செய்து வந்தார். அவர்தான் லதா மங்கேஷ்கரை திரைத்துறையில் அறிமுகம் செய்துவைத்தார். 1942ஆம் ஆண்டு மராத்திய திரைப்படம் ஒன்றில் லதா தனது முதல் பாடலைப் பாடினார். ஆனால் அந்தப் பாடல் திரையில் இடம்பெறவில்லை.

1942ஆம் ஆண்டு வெளியான மராத்தி திரைப்படம் ஒன்றில் சிறு வேடத்தில் நடித்தார், அதே படத்தில் அவர் பாடிய பாடல்தான் திரையில் வெளியான அவரின் முதல் பாடல். அன்று தொடங்கிய இசைப்பயணம் எழுபதாண்டுகளாக வெற்றிப்பயணமாக அமைந்தது. அனில் பிஸ்வாஸ், ஷங்கர் ஜெய்கிஷன், நௌஷத், எஸ் டி பர்மன், சலீம் சவுத்ரி, கல்யாணிஜி ஆனந்த்ஜி, அனு மாலிக், இளையராஜா, ஆர் ரஹ்மான் என்று இந்தியாவின் தலைசிறந்த இசையமைப்பாளர்களின் இசையில் பல்லாயிரம் பாடல்களை லதா மங்கேஷ்கர் பாடியுள்ளார்.

1958 ஆம் ஆண்டு சலீம் சவுத்ரி இசையமைத்து வெளிவந்தமதுமதிஎன்ற திரைப்படத்தில், இவர் பாடியஆஜா ரெ பரதேசிஎன்ற பாடல், இவருக்கு முதல் ஃபிலிம்பேர் விருதினை பெற்றுத்தந்தது. பிறகு, 1961 ல் ஹேமந்த் குமார் இசையமைத்தபீஸ் சால் பாத்திரைப்படத்தில்கஹின் தீப் ஜலே கஹின் தில்என்ற பாடல் இவருக்கு இரண்டாவது ஃபிலிம்பேர் விருதினை பெற்றுத்தந்தது. 1973 ஆம் ஆண்டு,   ஆர்.டி பர்மன் இசையமைத்து வெளிவந்தபரிஜாய்என்ற திரைப்படதில் இவர் பாடியபீதி நா பிட்டைஎன்ற பாடல் சிறந்த பின்னனி பாடகருக்கான முதல்தேசிய விருதைபெற்றுத்தந்தது.

1961 ல் பஜனை பாடல்கள் அடங்கியஅல்லாஹ் தேரா நாம்மற்றும்பிரபு தேரா நாம்என்ற இரண்டு ஆல்பத்தை வெளியிட்டார். 1974ல்மீராபாய்பஜன்ஸ்’, ‘சான்வரே ரங் ராச்சி’, மற்றும்உத் ஜா ரெ காக’, 2007ல்சாத்கிஎன்ற ஆல்பத்தையும், 2012 ஆம் ஆண்டு அவருடைய சொந்த பெயரில் (எல்.எம்) ஒரு இசை ஆல்பத்தையும் வெளியிட்டார்.

லதா அவர்கள், 1970 ஆம் ஆண்டுகளின் தொடக்கத்தில் திரைப்படம் சாராத சில ஆல்பங்களையும் வெளியிட்டார். காலிப் கஜல், மராத்திய நாட்டுப்புற இசையில் ஒரு ஆல்பமும், சாந் துக்காராம் பற்றியஅபாங்க்ஸ்என்ற ஆல்பமும் இதில் அடங்கும்.

ஒரு பின்னணி பாடகராக மட்டுமல்லாமல், இசையமைப்பாளராகவும், தயாரிப்பாளராகவும் விளங்கியுள்ளார். 1953 ஆம் ஆண்டுவாடல்என்ற மராத்தி மொழித் திரைப்படத்தைத் தயாரித்து வெளியிட்டார். பிறகு, அதே ஆண்டு சி. ராமச்சந்திராவுன் இணைந்துஜஹாஞ்ச்கார்’, ‘காஞ்சன்’ (1955) மற்றும்லேகின்’ (1990) என்ற இந்தித் திரைப்படத்தையும் வெளியிட்டார். மகராஷ்டிர மாநில அரசின் சிறந்த இசையமைப்பாளருக்கான விருதைசதி மனசேஎன்ற திரைப்படத்திற்காகவும், “ஐராநிச்ய தேவா துலாஎன்ற பாடலுக்காக சிறந்த பாடகர் விருதையும் பெற்றார். 1960ல்ராம் ராம் பவ்ஹானஎன்ற திரைப்படத்தின் மூலம் இசையாமைப்பாளராக கால்பதித்த அவர், 1963ல்மராத்தா டிட்டுகா மேல்வாவமற்றும்மொஹித்யஞ்சி மஞ்சுளா’, ‘சதி மானசே’ (1965), ‘தம்படி மதி’ (1969) போன்ற திரைப்படங்களுக்கு இசையமைத்துள்ளார்.

1999 ஆம் ஆண்டு மாநிலங்களவை உறுப்பினராக தேர்தெடுக்கப்பட்ட லதா மங்கேஷ்கர், 2001 ஆம் ஆண்டு இந்தியாவின் மிக உயரிய விருதானபாரத ரத்தனா விருதுமத்திய அரசால் வழங்கி கெளரவிக்கப்பட்டார். 2001 ஆம் ஆண்டு மாஸ்டர் தீனநாத் மங்கேஷ்கர் மருத்துவமனையினை புனேவில் நிறுவினார்.

முழு நேர பாடகியாக கலைத்துறைக்கு தன்னை அர்ப்பணம் செய்துகொண்ட லதா மங்கேஷ்கர், திருமணம் செய்துகொள்ளவில்லை. பாடகி ஆஷா போஸ்லே இவரது சகோதரி என்பது குறிப்பிடத்தக்கது.

இந்திய அரசின் உயரிய விருதான பாரத ரத்னா, திரையுலகின் உயரிய விருதான தாதா சாகிப் பால்கே, 3 தேசிய விருதுகள், 6 பல்கலைக்கழகங்களின் டாக்டர் பட்டங்கள் இப்படி பல விருதுகளை, அங்கிகாரங்களை தனதாக்கியவர் லதா மங்கேஸ்கர்.

இசைக்குயில் லதா மங்கேஷ்கருக்கு ஒரே இந்தியா தளம் தனது நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறது.

வெள்ளி, 27 செப்டம்பர், 2019

நூலகவியலின் பிதாமகர் எஸ் ஆர் ரெங்கநாதன் நினைவுதினம் - செப்டம்பர் 27

ஒரு நூலகம் திறக்கப்படும்போது ஒரு சிறைச்சாலை மூடப்படுகிறது என்று அறிஞர்கள் கூறுவார்கள். மகத்தான மனிதர்கள் தங்கள் சிந்தனைகளை, வாழ்வியலை புத்தகங்கள் மூலமாகவே வரும் தலைமுறைக்கு எடுத்துச் செல்கிறார்கள். எல்லாவற்றைப் பற்றியும் நாம் அனுபவித்துத் தெரிந்து கொள்ள முடியாது, எனவே பல்வேறு புத்தகங்களைப் படிப்பதன் மூலமாகவே நாம் அறிவைப் பெருகிக் கொள்ள முடியும், அதன் அடிப்படையிலேயே அடுத்த கட்ட விவாதங்கள் மூலம் மனிதகுலம் முன்னேறமுடியும். அப்படியான சிறப்பான புத்தகங்களை பலரும் பயன்பெறும் வண்ணம் சேர்த்து, சேமித்து தேவைப்படும் ஆட்களுக்கு வழங்கும் நூலகங்களை இன்னும் சிறப்பாக மாற்றிக் காட்டியவர் சீர்காழி ராமாமிர்தம் ரெங்கநாதன் என்ற எஸ் ஆர் ரெங்கநாதன். பாரதநாட்டின் நூலகவியலின் தந்தை என்று திரு ரெங்கநாதன் கொண்டாப்படுகிறார்.ராமாமிர்த ஐயர் - சீதாலட்சுமி தம்பதியரின் மகனாக 1892ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 12நாள் பிறந்தவர் திரு ரெங்கநாதன். சிறுவயதிலேயே தனது தந்தையை இழந்த ரெங்கநாதனையும் அவரது உடன்பிறப்புகளையும் அவர் தாயார் வளர்த்து வந்தார். சீர்காழியில் உள்ள எஸ் எம் ஹிந்து பள்ளியில் தனது பள்ளியிறுதி வகுப்பை முடித்த ரெங்கநாதன், அதன் பின்னர் சென்னை கிருஸ்துவக் கல்லூரியில் கணிதத்தில் இளங்கலை மற்றும் முதுகலை பட்டங்களை பெற்றார். அதனைத் தொடர்ந்து ஆசிரியர் பயிற்சித் தேர்விலும் வெற்றிபெற்று ஆசிரியராகப் பணியாற்றத் தொடங்கினார். மங்களூரிலும், கோவையிலும் பணியாற்றிய ரெங்கநாதன் அதன் பின்னர் சென்னை மாநிலக் கல்லூரியில் பணியாற்றத் தொடங்கினார்.  அதே காலகட்டத்தில் சென்னையில் நடைபெற்றுவந்த ஆசிரியர் சங்கத்தின் இயற்பியல் மற்றும் கணிதத் துறையின் செயலாளராகவும் இருந்தார். பொதுமக்களும் மாணவர்களும் அறிவியல்துறையில் ஆர்வம் கொள்ள அவர் தொடர்ந்து பல்வேறு சொற்பொழிவுகளையும் நடத்தி வந்தார்.

1924ஆம் ஆண்டு சென்னை பல்கலைக்கழகத்தின் நூலகராக அவர் தேர்வானார். மாணவர்கள் சூழ ஆசிரியர் பணி செய்துகொண்டு இருந்த ரெங்கநாதனுக்கு ஆள்களே வராத நூலகத்தில் பணியாற்ற விருப்பமில்லை. ஆனால் நூலகவியல் பற்றி தெரிந்து கொள்ள இங்கிலாந்து செல்லுமாறும், அதன் பின்னரும் நூலகர் பணி விருப்பமானதாக இல்லாமல் இருந்தால் அவரை மீண்டும் ஆசிரியர் பணிக்கு மாற்றுவதாகவும் பல்கலைக்கழகம் உறுதி அளித்து, அவரை நூலகராக நியமனம் செய்தது.

1924ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் இங்கிலாந்து சென்ற ரெங்கநாதன் ஏறத்தாழ ஒன்பது மாதங்கள் அங்கே தங்கி இங்கிலாந்து நாட்டில் நூலகங்கள் செயல்படும்விதம் பற்றி ஆராய்ந்தார். லண்டன் பல்கலைக்கழகத்தின் நூலகத்துறையின் விரிவுரையாளராக பணியாற்றிய பெர்விக் சாயேர்ஸ் என்பவர் நூலகத்துறையின் நுணுக்கங்களை ரெங்கநாதனுக்கு கற்றுக் கொடுத்தார். இங்கிலாந்து நாட்டிலுள்ள பல்வேறு நூலகங்களுக்கு ரெங்கநாதன் நேரில் சென்று பார்வையிட்டார். சிறுவர்கள், பள்ளி மற்றும் கல்லூரி மாணவர்கள், பணிபுரியும் தொழிலாளிகள், ஆராய்ச்சியாளர், பெண்கள் என்று சமுதாயத்தின் பல்வேறு பிரிவினருக்கும் ஏற்றவாறு நூலகங்களை எப்படி அமைக்க
வேண்டும் என்ற புரிதல் ரெங்கநாதனுக்கு ஏற்பட்டது. ஆசிரியர் பணியைக் காட்டிலும் நூலகராக தனது பணி இன்னும் தேவையானது என்ற உறுதியோடு அவர் 19025ஆம் ஆண்டு ஜூலை மாதம் பாரதம் திரும்பினார்.

நாடு திரும்பிய ரெங்கநாதன் சென்னை பல்கலைக்கழகத்தின் நூலகத்தை சீரமைக்கும் வேலையத் தொடங்கினார். நூலகத்திற்கு வாசகர்களின் வருகையைக் கூட்டுவதிலும், அவர்கள் நிம்மதியாக அமர்ந்து படிக்கும் அளவிற்கு தேவையான வசதிகளைச் செய்துகொடுக்கவும், புத்தகங்களை முறைப்படி அட்டவணைப் படுத்தவும் என்று அவரது வேலைகள் ஆரம்பமானது. இவரது சேவைகளைப் பார்த்த அன்றய அரசு, சென்னை பல்கலைக்கழக நூலகத்திற்கு போதுமான அளவில் நிதி ஒதுக்கி ஆதரவு தந்தது.

சென்னை நூலக சங்கத்தை நிறுவி, அதன் மூலம் பொதுமக்களின் ஆதரவையும், படிக்கும் பழக்கத்தையும் முன்னெடுக்கும் பணியும் ஆரம்பமானது. அன்றய சென்னை ராஜதானி என்பது இன்றய தமிழ்நாடு, கேரளா, கர்நாடகா மற்றும் ஆந்திரா வரை பரவியிருந்த பெரும் நிலப்பரப்பு என்பதையும் நாம் நினைவில் கொள்ளவேண்டும். இன்று தென்னிந்தியாவில் பரவியுள்ள நூலகங்கள் என்பது ரெங்கநாதனின் முயற்சியின் பலனே ஆகும்.

ஐந்து நூலக விதிகள். 

ரெங்கநாதனின் பெரும்பங்களிப்பு என்பது அவர் உருவாக்கிய நூலக விதிகளே ஆகும்.

1, புத்தகங்கள் என்பது பயன்படுத்தவே
2, ஒவ்வொரு வாசகருக்கும் எதோ ஒரு தேவையான புத்தகம்
3, ஒவ்வொரு புத்தகத்திற்கும் எதோ ஒரு வாசகன் உண்டு
4, வாசகரின் நேரத்தை நூலகம் வீணடிக்கக்கூடாது
5, நூலகம் என்பது தொடர்ந்து வளரும் நிறுவனம்.

சென்னையில் நூலகவியலுக்கான கல்லூரி ஒன்றை ரெங்கநாதன் 1929ஆம் ஆண்டு தொடங்கி, அதன் இயக்குனராக 15 ஆண்டு காலம் பணியாற்றினார். 1957ஆம் ஆண்டு சென்னை பல்கலைக்கழகத்தை நூற்றாண்டு கொண்டாட்டத்தின் பகுதியாக தனது மனைவி பெயரில் சாரதா ரெங்கநாதன் நூலக இருக்கையை உருவாக்க ஒரு லட்ச ரூபாய் நன்கொடை வழங்கினார்.

21 ஆண்டு கால நூலகப் பணிக்கு பின்னர் சென்னை பல்கலைக்கழகத்தில் இருந்து ரெங்கநாதன் விருப்ப ஓய்வு பெற்றார். தொடர்ந்து ஆராய்ச்சிப் பணியில் ஈடுபட எண்ணி இருந்த அவரை காசி ஹிந்து சர்வகலாசாலை தங்கள் நூலகத்தை சீரமைக்க அழைப்பு விடுத்தது. ஏறத்தாழ ஒரு லட்சம் புத்தகங்களைக் கொண்ட அந்த நூலகத்தை தனியொருவனாக ரெங்கநாதன் மேம்படுத்தினார்.

1947ஆம் ஆண்டு டெல்லி பல்கலைக்கழகத்தின் நூலகத்துறை ஆசிரியராக ரெங்கநாதன் பொறுப்பேற்றுக்கொண்டார். அவர் கண்காணிப்பில் டெல்லி பல்கலைக்கழகத்தில் நூலகப் பிரிவில் இளங்கலை மற்றும் முதுகலைப் பட்டப் படிப்புகள் தொடங்கப்பட்டது. டெல்லியிலும் நூலகத்துறை பற்றிய கலந்தாய்வு கூட்டங்களை ரெங்கநாதன் வாரா வாரம் தனது வீட்டில் நடத்தி வந்தார். நூலகங்கள் சந்திக்கும் சவால்கள், அவற்றுக்கான தீர்வுகள் ஆகியவை இந்தக் கூட்டங்களில் விவாதிக்கப்பட்டன.

டெல்லியில் பணியாற்றிய காலத்தில் பாரத நாட்டில் நூலகத்துறையின் வளர்ச்சிக்கான முப்பதாண்டு கால வரைவு அறிக்கையை ரெங்கநாதன் உருவாக்கி மத்திய அரசுக்கு சமர்ப்பித்தார்.

உலகளவில் நூலகத்துறை செயல்படும் விதம் பற்றி அறிந்துகொள்ள சிறுது காலம் ஸுரிச் நகரிலும், பின்னர் பெங்களூரு நகரிலும் ரெங்கநாதன் வசிக்கத் தொடங்கினார். அப்போது அவர் மத்திய திட்டக்குழு மற்றும் பல்கலைக்கழக நிதி ஒதுக்கீடு குழு ஆகியவற்றின் ஆலோசகராகவும் இருந்தார். மத்திய அரசு அவரை தேசிய நூலக ஆராய்ச்சிப் பேராசிரியர் என்ற பட்டத்தை அளித்து சிறப்பித்தது. அந்தக் காலத்தில் இந்தப் பெருமையைப் பெற்ற ஐந்தாவது அறிஞர் ரெங்கநாதன். நூலகத்துறைக்கு திரு ரெங்கநாதன் ஆற்றிய சேவையைப் பாராட்டி மத்திய அரசு அவருக்கு பத்மஸ்ரீ விருது வழங்கியது. அறுபது புத்தகங்களையும், 2000 ஆராய்ச்சிக் கட்டுரைகளையும் ரெங்கநாதன் எழுதி உள்ளார்.

இவரது பிறந்தநாள் நாடெங்கும் தேசிய நூலகர் தினமாக அனுசரிக்கப்படுகிறது.

திரு ரெங்கநாதன் 1972ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 27ஆம் நாள் காலமானார். 

வியாழன், 26 செப்டம்பர், 2019

கலைக்களஞ்சியம் தொகுத்த மேதை - பெரியசாமி தூரன்

பழமையும் புதுமையும், இளமையும் கொண்ட செம்மார்ந்த தமிழ்மொழிக்கு தன்னலம் இல்லாமல் தொண்டாற்றியவர்களும் உண்டு, எங்களால்தான் தமிழ்மொழியே உயிர் வாழ்கிறது என்று தம்பட்டம் அடிப்பவர்களும் உண்டு. இருவேறு உலகத்து இயற்கை என்பது உண்மைதானே. தமிழின் கலைக்களஞ்சியத்தை தொகுப்பாசிரியராக இருந்து தொகுத்தவர், அதன் பின்னர் குழந்தைகள் கலைக்களஞ்சியத்தை தமிழில் உருவாக்கியவர்அப்பழுக்கற்ற தேசபக்தர், கல்விப் பணியில் ஈடுபட்டவர், மரபியல், உளவியல் பற்றி எளிய தமிழில் புத்தகங்களை இயற்றியவர், கதை, கட்டுரை, மொழிபெயர்ப்பு, நாடகம், கவிதை, குழந்தைகள் இலக்கியம் என்று தமிழின் எல்லா தளங்களிலும் இயங்கியவர், தமிழிசையில் பல்வேறு பாடல்களை இயற்றியவர், பத்திரிகை ஆசிரியர்   என்ற பன்முகவித்தகர் திரு பெரியசாமி தூரனின் பிறந்தநாள் இன்று

ஈரோடு மாவட்டம் மொடக்குறிச்சிக்கு அருகே உள்ள மஞ்சக்காட்டு வலசு என்ற சிற்றூரில் பழனிவேலப்பக்க கௌண்டர் - பாவாத்தாள் தம்பதியினரின் மகனாக 1908ஆம் ஆண்டு செப்டம்பர் 25ஆம் நாள் பிறந்தவர் இவர். கொங்குநாட்டின் தூரன் குலத்தைச் சேர்ந்தவர் என்பதால் இவர் பெரியசாமி தூரன் என்று அழைக்கப்பட்டார். தனது தொடக்கக் கல்வியை சொந்த கிராமத்திலும், உயர்நிலைப் படிப்பை ஈரோட்டிலும், பின்னர் சென்னை மாநிலக் கல்லூரியில் பட்டப் படிப்பையும் தொடர்ந்தார். புரட்சிவீரர்கள் பகத்சிங், சுகதேவ், ராஜகுரு ஆகியோரை ஆங்கில அரசு தூக்கில் இட்டதைத் தொடர்ந்து, கல்லூரியை விட்டு வெளியேறினார். பட்டப்படிப்பை முடிக்காமல் போனாலும் கோபிச்செட்டிபாளையம் வைரவிழா பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றினார்

அதனைத் தொடர்ந்து அவினாசிலிங்கம் செட்டியார் நடத்திவந்த ராமகிருஷ்ணா வித்தியாலயத்தில் ஆசிரியராகவும், பின்னர் தலைமையாசிரியராகவும் பணியாற்றினார். இவர் பணிபுரிந்த காலகட்டத்தில் அந்தப் பள்ளிக்கு மஹாத்மா காந்தி வருகை புரிந்து உள்ளார்அவினாசிலிங்கம் செட்டியார் பள்ளியில் ஆசிரியராக வேலை பார்த்தபோது, செட்டியார் மனமுவந்து அளித்த முப்பது ரூபாய் மாதச் சம்பளத்தை அதிகம் என்று மறுத்து வெரும் பதினைந்து ரூபாய் மட்டுமே பெற்றுக் கொண்டு பணியாற்றினார்

அவினாசிலிங்கம் செட்டியார் கல்வியமைச்சராகப் பணியாற்றிய போது, தமிழ்மொழி வளர்ச்சிக்காகவும், கலைச்சொற்களை தமிழில் உருவாக்கவும் தமிழ் வளர்ச்சிக் கழகம் என்ற அமைப்பை நிறுவினார். அந்த அமைப்பின் சார்பில் தமிழில் கலைக்களஞ்சியம் உருவாகும் முயற்சி தொடங்கியது. இந்த மகத்தான படைப்பை உருவாகும் பணிக்கு முதன்மை ஆசிரியராக தூரன் நியமிக்கப்பட்டார். பத்தொன்பது ஆண்டுகள் இடையறாது உழைத்து தூரன் கலைக்களஞ்சியத்தை வெளிக்கொண்டு வந்தார். அதன் பிறகு பத்து தொகுதிகள் கொண்ட சிறுவர்கள் கலைக்களஞ்சியத்தையும் அவர் உருவாக்கினார்

தமிழ்மொழியே இசையானது, இசைபோல இனிமையானது. தமிழில் தேர்ச்சி பெற்ற தூரனுக்கு இசைப்பாடல்கள் புனையும் திறமை இயல்பாகவே இருந்தது. அந்த காலகட்டத்தில் ராஜா சர் அண்ணாமலை செட்டியார், கல்கி கிருஷ்ணமூர்த்தி, ராஜாஜி, ரசிகமணி டி கே சி ஆகியோர் தமிழிசை மீண்டும் தழைக்கப் பாடுபட்டுக்கொண்டு இருந்தனர். அறுநூறுக்கும் மேற்பட்ட தமிழ் பாடல்களை தூரன் இயற்றினார்

திரு.தூரன் அவர்கள், நாட்டுபுறப் பாடல்களும், கர்னாடக இசைக் கீர்த்தனைகளும், ஸ்வரங்களும் இயற்றியுள்ளார். டி.கே.பட்டம்மாள், செம்மங்குடி ஸ்ரீனிவாச ஐயர், என்.சி.வசந்தகோகிலம், டி.வி.சங்கரநாராயணன், டைகர் வரதாச்சாரியார், முசிறி சுப்ரமணிய ஐயர், போன்ற இசையுலக ஜாம்பவான்கள், இவருடைய இசையறிவை மெச்சி, இவர் இயற்றிய பாடல்களுக்கு அடிமைகளாகவே இருந்து, தங்கள் கச்சேரிகளில் அவற்றைப் பாடாமல் இருந்ததில்லை என்று சொல்லலாம். ’சாரங்காராகத்தில் அமைந்தஞானநாதனே”, ‘பிருந்தாவன சாரங்காவில் அமைந்தகலியுக வரதன்”, ‘மாண்ட்ராகத்தில் அமைந்தமுரளீதரா கோபாலா”, ‘சாவேரியில் அமைந்தமுருகா முருகா”, ‘காபியில் பாடியபழனி நின்ற”, ‘கீரவாணியில் அமைந்தபுண்ணியம் ஒரு கோடி”, ‘சுத்த சாவேரிராகத்தில் அமைந்ததாயே திரிபுரசுந்தரிஆகியவை இவர் இயற்றியுள்ள மயங்கவைக்கும் கீர்த்தனைகளில் சில.

தூரனின் சாதனைகளில் முக்கியமானது பாரதியார் 1904 முதல் 1921 வரை சுதேசமித்திரன் இதழில் எழுதிய படைப்புகளைத் தேடி எடுத்து ஆவணப்படுத்தி காலவரிசைப்படி தொகுத்துபாரதி தமிழ்என்ற பேரில் வெளியிட்டது. பாரதி ஆய்வுகள் தமிழில் தொடங்கப்படுவதற்கான வழிகாட்டி முயற்சி என்பதுடன் பாரதி படைப்புகள் அழிந்துவிடாமலிருக்க தக்க நேரத்தில் செய்யப்பட்ட பெரும்சேவையுமாகும். திரு.வி.கவின் ஆலோசனைப்படி இதை தூரன் செய்ததாகச் சொல்லப்படுகிறது.

பாரம்பரியம், கருவில் வளரும் குழந்தை, பெற்றோர் கொடுத்த பெரும்கொடை என்று மரபியலிலும் , குழந்தை உள்ளம், தாழ்வு மனப்பான்மை, மனமும் அதன் விளக்கமும் என்று பல்வேறு புத்தகங்கள் உளவியலிலும் தூரன் எழுதி உள்ளார். இன்றுபோல அறிவியல் வளராத அம்பதுகளில், கலைச்சொற்கள் தமிழில் உருவாகாத காலத்தில் இப்படி எழுதவேண்டும் என்றால் அதற்காக தூரன் எவ்வளவு உழைத்து இருக்க வேண்டும் என்பதை எண்ணிப் பார்த்தாலே மலைக்க வைக்கிறது

தமிழ் இசை சங்கத்தின் இசைப் பேரறிஞர் விருது, தமிழக அரசின் கலைமாமணி விருது மற்றும் பாரத அரசின் பத்மபூஷன் விருதுகள் இவர்க்கு வழங்கப்பட்டு உள்ளன

வாழ்நாள் முழுவதும் தமிழ் மொழிக்காக அயராது பாடுபட்ட திரு பெரியசாமி தூரன் 1987ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 20ஆம் நாள் காலமானார்