ஞாயிறு, 1 டிசம்பர், 2019

காகா காலேல்கர் பிறந்தநாள் - டிசம்பர் 1

இந்த மனிதனை எந்த வரையறையில் சேர்க்க ? சுதந்திரப் போராட்ட வீரர், காந்தியின் சீடர், சமூக சீர்திருத்தவாதி, பத்திரிகையாளர், எழுத்தாளர் என்று பல்வேறு திசைகளில் ஒளிவீசும் ரத்தினமாகத் திகழ்ந்த தாத்தாத்ரேய பாலகிருஷ்ண காலேல்கர் என்ற காகா காலேல்கரின் பிறந்ததினம் இன்று.


மகாராஷ்டிர மாநிலம் சதாராவில் பிறந்து, பூனா பெர்கூசன் கல்லூரியில் தத்துவத்தில் இளங்கலை பட்டம் பெற்று, பரோடா நகரில் ஒரு பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றி, சுதந்திர உணர்ச்சியை தூண்டும் இடமாக அந்த பள்ளி விளங்கியதால் ஆங்கில அரசு அந்த பள்ளியைத் தடை செய்த பிறகு பத்திரிகையாளராகப் பணியாற்றி, பின்னர் கால்நடையாகவே இமயமலை பகுதிகளில் சுத்தித் திரிந்து, ஆச்சாரிய கிருபளானியோடு தொடர்பு ஏற்பட்டு, அவரோடு பர்மா சென்று, பின்னர் காந்தியைக் கண்டு, அவரின் சீடராக மாறி, சபர்மதி ஆசிரமத்தில் தங்கி, பல்வேறு போராட்டங்களில் கலந்து கொண்டு சிறை சென்று என்று அநேகமாக இருபதாம் நூற்றாண்டின் ஆரம்ப காலத்தில் பலரின் வாழ்க்கை போலத்தான் இவரின் வாழ்வும் இருந்தது.

இவரின் கைத்தடியைத்தான் தண்டி யாத்திரியையின் போது காந்தி பயன்படுத்தினார். எனவே தான் காந்தியின் கைத்தடி என்று காலேல்கர் தன்னை அறிமுகம் செய்து கொள்வது உண்டு. காந்தியின் ஆணைக்கேற்ப ஹிந்தி மொழியை பரப்பும் செயலிலும் காலேல்கர் ஈடுபட்டு இருந்தார். சென்னையில் உள்ள தக்ஷிண பாரத ஹிந்தி பிரச்சாரக சபாவின் முதல் பட்டமளிப்பு விழா இவரின் தலைமையில்தான் நடைபெற்றது. 1952 ஆம் ஆண்டு முதல் 1964ஆம் ஆண்டு வரை இவர் பாரத நாட்டின் ராஜ்யசபை உறுப்பினராக இருந்தார். நாட்டின் பிற்படுத்தப்பட்ட ஜாதியினரின் வாழ்க்கை நிலையை ஆராய்ந்து அவர்கள் முன்னேற்றத்திற்காக அரசுக்கு பரிந்துரை செய்ய என்று நிறுவப்பட்ட முதலாம் பிற்படுத்தப்பட்ட மக்கள் நல்வாழ்வுக் குழுவின் தலைவராகவும் காலேல்கர் பணியாற்றினார்.

இதையெல்லாம் விட முக்கியமானது என்பது ஹிந்தி, குஜராத்தி, மராட்டி ஆகிய மொழிகளில் காலேல்கர் எழுதிய நூல்கள்தான். அதிலும் முக்கியமானது ஜீவன் லீலா என்ற தலைப்பில் பாரத நாட்டின் நதிகளை நேரில் பார்த்து அவர் எழுதிய பயணக் கட்டுரைகளின் தொகுப்பு.

இதழ் தொடர்பாகவும் இயக்கவேலைகள் தொடர்பாகவும் இந்தியா முழுக்க  இடைவிடாமல் பயணம் செய்யும் வாய்ப்பு  அவரைத் தேடி வந்தது. இயல்பாகவே பயணங்களில் ஆர்வம் கொண்ட காலேல்கர் அந்த வாய்ப்புகளை நல்ல முறையில் பயன்படுத்திக்கொண்டார். ஆறுகள் மீது தீராத காதல் கொண்டவராக, அவற்றைத் தேடித்தேடிப் பார்க்கும் பழக்கம் அவரிடம் இருந்தது. ஆறுகளை மட்டுமல்ல, அவை பிறக்கும் இடங்கள், தவழ்ந்து ஓடும் இடங்கள், அருவியாய்ப் பொழியும் இடங்கள், அவை தொட்டு இறங்கும் மலைகள், குன்றுகள், இறுதியாக சென்று சங்கமமாகும் கடல்கள் என எல்லா இடங்களையும் தேடிப் பார்ப்பவராக அவர் இருந்தார். ஜீவன் என்பதை வழக்கமான பொருளில் எடுத்துக்கொள்ளாமல் ’தண்ணீர்’ என்னும் பொருளில் எடுத்துக்கொள்கிறார் காலேல்கர். ஜீவன் லீலா என்பது தண்ணீரின் பலவிதமான லீலைகளை அடையாளப்படுத்துகிறது. தண்ணீர் மட்டுமே பாயுமிடங்களைக் குளிர்விக்கின்றது. பாலைவனத்தைச் சோலைவனமாக மாற்றுகிறது. எல்லா உயிர்களும் வாழ்க்கையை வகுத்துக்கொள்ள தண்ணீரே வழிபுரிகிறது. தண்ணீரைப் பார்த்தவுடன் அதன் அருகில் செல்ல விருப்பம் ஏற்படுகிறது. அந்த விருப்பத்தின் விசையாலேயே இமயம் தொடங்கி குமரி வரைக்கும் உள்ள பல முக்கியமான ஆறுகளையும் அருவிகளையும் ஏரிகளையும் தேடிப் பார்த்திருக்கிறார் காலேல்கர்.

காலேல்கருடைய பயணங்கள் இந்த நாட்டின் கலைக்கோவில்களையும் வரலாற்றுச் சிறப்பு மிக்க இடங்களையும் கடல்களையும் ஆறுகளையும் கண்டு களிக்கும் நோக்கத்தை மட்டும் கொண்டவை அல்ல, கோவிலுக்குச் சென்று இறைவனை வழிபடுவதற்கு நிகரான பக்தியும் நெருக்கமும் கொண்டவை. தாய்நாட்டின் ஒவ்வொரு இடத்தைப்பற்றியும் தனக்குத் தெரிந்திருக்கவேண்டும், அவற்றுடன் நெருக்கமானதொரு உறவை உருவாக்கிக்கொள்ள வேண்டும் என்னும் அடிப்படை விருப்பமே காலேல்கரை உந்திச் செலுத்திய சக்தியாகும். தன் புத்தகத்துக்கான முன்னுரைக்கு காலேல்கர் ‘நின்று கரம்குவித்துத் தொழுதல்’ என்று தலைப்பிட்டிருப்பதைக் கவனிக்கவேண்டும். நீர்நிலைகளை அவர் தெய்வமெனவே கருதுகிறார். ஆறுகளைத் தேடிச் செல்லும் பயணங்கள் அவரைப் பொறுத்த அளவில் தெய்வ தரிசனத்தை நாடிச் செல்லும் ஒரு பக்தனின் பயணங்களுக்கு நிகரானவை என்றே சொல்லவேண்டும்.

புத்தகத்தின் முதல் கட்டுரை பெல்காம் பகுதியில் வைத்தியனாத மலையிலிருந்து உற்பத்தியாகி பெலகுந்தி கிராமத்தை நோக்கி ஓடிவரும் மார்க்கண்டி நதியைப்பற்றியதாகும். அவர் பிறந்து வளர்ந்த இடத்தைச் சுற்றி ஓடும் நதி அது. சிவனின் அருளால் எமனின் பாசக்கயிறிலிருந்து பிழைத்து என்றென்றும் பதினாறு வயதுடையவனாகவே வாழ்ந்த மார்க்கண்டேயனின் பெயரால் அந்த நதி அழைக்கப்படுகிறது. அதைத் தன் குழந்தைப்பருவத் தோழி என்று குறிப்பிடுகிறார். தம் குடும்பத்துக்குச் சொந்தமான வயல்வெளியைத் தொட்டபடி ஓடும் அந்த நதிக்கரையில் மணிக்கணக்கில் நின்று வேடிக்கை பார்த்த அனுபவங்களை அதில் விவரிக்கிறார். இது 1928-ல் எழுதப்பட்டது. எழுபதாவது கட்டுரையான ‘மழைப்பாட்டு’ கார்வார் கடற்கரையில் பெய்யும் மழையனுபத்தை முன்வைத்து எழுதப்பட்டது. போகிற போக்கில் மழைத்தாரைகளை கடலைத் தொட்டு வெட்டும் ஆயுதங்கள் என கவித்துவம் ததும்ப  எழுதிச் செல்வதைப் படிக்கும்போது உருவாகும் மன எழுச்சி மகத்தானது. இது 1952-ல் எழுதப்பட்டது.

இடைப்பட்ட முப்பத்திநான்கு ஆண்டு காலத்தில், தேசம் முழுதும் அலைந்து கங்கை, யமுனை, பிரம்மபுத்திரை, ஜீலம், இரவி, கிருஷ்ணா, தபதி, கோதாவரி, துங்கபத்திரை, காவேரி, நர்மதை, ஷராவதி, ஐராவதி, பினாகினி, லவணவாரி, அகநாசினி, தூத்கங்கா, ராவி, கடப்பிரபா, கூவம், அடையாறு என எண்ணற்ற ஆறுகளையும் நீர்நிலைகளையும் பார்த்து நெஞ்சை நிறைத்துக்கொண்ட அனுபவங்களை வெவ்வேறு தருணங்களில் தனித்தனி கட்டுரைகளாக எழுதினார். அதற்குப் பின்னரே அவை நூல்வடிவம் கண்டன.

எழுபது கட்டுரைகளும் ஒன்றையொன்று விஞ்சும் வகையில் இலக்கியத்தரத்துடன் எழுதப்பட்டுள்ளன. கங்கையைப்பற்றிய கட்டுரையில் அவருடைய வர்ணனைச்சொற்கள் அருவியெனக் கொட்டுகின்றன. கங்கோத்ரிக்கு அருகில் உள்ள பனிமூடிய பிரதேசங்களில் விளையாட்டில் ஈடுபட்ட கங்கையின் வாலைப்பருவம், உத்திரகாசியில் வானளாவியுள்ள தேவதாரு மரங்களால் நிறைந்த காவியமயமான பிரதேசத்தில் இதன் குமரிப்பருவம், தேவப்பிரயாகை குன்றுகளில் குறுகிய பாதைகளில் ஒளிபொருந்திய அலகநந்தா நதியுடன் இணைந்து விளையாடும் விளையாட்டு, கான்பூரையொட்டிப் பாயும்போது அதன் சரித்திரப்புகழ் பெற்ற பிரவாகம், பிரயாகையில் உள்ள பெரிய ஆலமரத்தின் மீது பாய்ந்து அங்கே யமுனையோடு திரிவேணி சங்கமமாவது என ஒவ்வொரு கட்டத்தையும்  கவியுள்ளத்தோடு எழுதுகிறார் காலேல்கர். கங்கையைச் சகுந்தலையென்றும் யமுனையை திரெளபதையென்றும் புராணப்பாத்திரங்களாக மாற்றிக் குறிப்பிட்டு அவர்  எழுதியிருக்கும் பகுதி சுவாரசியமானது. கங்கை, யமுனை ஆகிய நதிகளோடு மட்டும் அக்கட்டுரை நின்றுவிடவில்லை. அயோத்தி நகர் வழியாக வரும் சரயு நதி, ராஜா ரத்திதேவனை நினைவூட்டும் சம்பல் நதி, முதலையோடு கஜேந்திரன் புரிந்த போரை நினைவூட்டும் சோணபத்ர நதி, கண்டகி நதி என அனைத்து சிறுநதிகளைப்பற்றிய குறிப்புகளையும் கொண்டிருக்கிறது.

ஒவ்வொரு கட்டுரையும் வசீகரம் நிறைந்த ஒரு சொல்லோவியம். காலேல்கரின் முயற்சியை ஒருவகையில் சொல்லோவியங்களால் நம் தேசத்தின் வரைபடத்தைத் தீட்டும் முயற்சி என்றே சொல்லலாம். பி.எம்.கிருஷ்ணசாமியின் மொழிபெயர்ப்பில் சாஹித்ய அகாடமி வெளியீட்டில் வந்துள்ள இந்தப் புத்தகத்தைப் படிக்கும்போது கிட்டும் அனுபவம் காஷ்மீரிலிருந்து தனுஷ்கோடி வரைக்கும் பயணம் செய்த அனுபவத்துக்கு நிகரானது.

இலக்கியத்திற்க்காக சாஹித்ய அகாடமி விருதும் பொது சேவைக்காக பத்ம விபூஷண் விருதும் இவருக்கு வழங்கப்பட்டு உள்ளது.