சனி, 4 ஜனவரி, 2020

பொருளாதார மேதை ஜே சி குமரப்பா பிறந்ததினம் - ஜனவரி 4

நீண்டதொரு வரலாறும், நெடிய பாரம்பரியமும் கொண்டது நமது பாரத நாடு. நம் நாட்டின் பிரச்சனைகளும் சவால்களும் தனித்துவமானவை. அதற்கான தீர்வை நமது வேர்களில் இருந்துதான் கண்டடைய வேண்டுமேயன்றி, மேலைநாட்டுச் சிந்தனைகளில் இருந்து நமக்கான தீர்வுகளை கண்டுகொள்ள முடியாது. இந்த நாட்டைப் பற்றி தெரிந்தவர்களின் எண்ணம் இப்படித்தான் இருக்க முடியும். அப்படி காந்திய சிந்தனைகளின் வழியே பொருளாதாரக் கொள்கையை வகுத்தளித்த ஜோசப் செல்லதுரை கொர்னிலியஸ்.என்ற ஜே சி குமரப்பாவின் பிறந்ததினம் இன்று.


தஞ்சாவூரில் அரசு பொதுப்பணித்துறை ஊழியரான சாலமன் துரைசாமி கொர்னிலியசுக்கும், எஸ்தருக்கும்  ஏழாவது குழந்தையாக 1892 ஆம் ஆண்டு ஜனவரி 4ஆம் நாள் குமரப்பா பிறந்தார். சென்னை கிருஸ்துவக் கல்லூரியில் படித்த குமரப்பா, பட்டயக் கணக்காளர் பட்டதைப் பெற்று, அதனைத் தொடர்ந்து பொருளாதாரத்திலும் மேலாண்மைத் துறையிலும் மேற்படிப்புக்காக அமெரிக்கா சென்றார். ஆங்கில ஆட்சி பாரத மக்களை மேம்படுத்தியது என்ற எண்ணம் பரவலாக இருந்த காலத்தில், மக்களின் வறுமைக்கான அரசியல் மற்றும் பொருளாதார காரணங்களைத் தேடி தனது ஆய்வை குமரப்பா மேற்கொண்டார். பிரிட்டிஷ் அரசின் சுரண்டல்தான் பாரத நாட்டின் வறுமைக்குக் காரணம் என்பதை தனது ஆய்வின் மூலம் கண்டறிந்த குமரப்பா, அந்நிய ஆட்சியை அகற்றினால்தான் மக்களின் வறுமை அகலும் என்ற முடிவுக்கு வந்து சேர்ந்தார். தனது ஆய்வுக் கட்டுரைக்கு முன்னுரை வழங்குமாறு, அதனை காந்திக்கு அனுப்பி வைத்தார். தனது சுதேசிக் கொள்கைக்கு குமரப்பாவின் ஆய்வு வலுச் சேர்ப்பதை அறிந்த காந்தி தனது எண்ணங்களுக்குக் கருத்தாக்க வடிவம் கொடுக்கவும், கிராமப்புற மேம்பாடு பற்றிய தனது கனவுகளை நனவாக்கவும், அவருடைய பணி உதவும் என நம்பினார்.

காந்தியின் அறிவுரையின் பேரில் குமரப்பா, குஜராத் வித்யாபீடத்தின் இரண்டு பேராசிரியர்கள் மற்றும் ஒன்பது மாணவர்களின் துணையோடு ஐம்பதிற்கும் மேற்பட்ட கிராமங்களில் சுற்றித் திரிந்து அதன் பொருளாதாரப் புள்ளிவிவரங்களைச் சேகரித்து அறிக்கை ஒன்றை காந்தியிடம் அளித்தார். தற்சார்புடைய கிராமங்கள், எதற்கும் எந்த பெருநகரத்தையும் நம்பி இருக்க வேண்டிய தேவை இல்லாத கிராமங்கள், இயந்திரங்கள் மூலமான உற்பத்தி அல்லாது, பலர் உழைப்பின் மூலம் பொருள்கள் உருவாக்கம், மிகச் குறைந்த அளவில் மக்களின் வாழ்வில் தலையிடும் அரசாங்கம் இதுதான் காந்தி கனவு கண்ட இந்தியா. அசைக்கமுடியாத ஆதாரங்களின் மீது உருவான குமரப்பாவின் ஆய்வு, காந்திய பொருளாதாரத்தின் அடிப்படையாக அமைந்தது. அரசின் திட்டங்கள் எப்படி தேவைப்படும் ஏழைகளை அடைவதில்லை என்பதையும் உண்மையில் பாரத மக்களின் வாழ்க்கைத்தரம் எப்படி இருக்கிறது என்பதையும் மட்டுமல்லாது, அதற்கான தீர்வையும், மாற்றுத் திட்டங்களையும் சேர்த்தே குமரப்பா கொடுத்தார்.

வசதியான குடும்பப் பின்னணி, அதிலும் அந்நிய நாட்டில் பெரிய படிப்பு எனவே குமரப்பா ஆங்கில உடைகளைத்தான் அதுவரை அணிந்திருந்தார். ஆனால் மக்களின் நிலைமை அவர் மனதை மாற்றியது. ஆங்கில உடைகளைத் தவிர்த்து அவர் பாரத நாட்டின் உடைகளை கதர் ஜிப்பா, கதர் வேஷ்டி, கதர் குல்லாய் என்று அணியத் தொடங்கினார். கொர்னிலியஸ் என்ற பெயரையும் துறந்து தங்கள் குடும்பப் பெயரான குமரப்பாவை இணைத்துக்கொண்டு ஜே சி குமரப்பா என்று அறியப்படலானார்.

காந்தி தண்டி யாத்திரையை மேற்கொண்டபோது யங் இந்தியா பத்திரிகையின் ஆசிரியராக குமரப்பா பொறுப்பேற்றுக்கொண்டார். கருத்துச் செறிவு, அசைக்கமுடியாத ஆதாரங்களின் மேல் எழுதப்படும் கட்டுரைகள், ஆவேசமான நடை இவை குமரப்பாவிற்கு இயல்பாகவே கைவசம் ஆனது. இவை பிரிட்டிஷ் அரசை தடுமாறச் செய்தது. ஆங்கில அரசு யங் இந்தியா அச்சகத்தைப் பறிமுதல் செய்தது. பத்திரிகையை தட்டச்சு செய்து, நகலெடுத்து குமரப்பா வெளியிட்டார். இன்றய இந்திய அரசு பிரிட்டிஷ் மக்களின் எண்ணத்திற்கேற்பவே நடைபெறுகிறது, இது இந்திய மக்களுக்காக நடைபெறவில்லை. எனவே சட்டப்படி டெல்லியில் இருந்தல்ல லண்டனிலில் இருந்துதான் அரசு செயல்படவேண்டும் என்று குமரப்பா எழுதிய கட்டுரைக்காக அரசு அவரைச் சிறை பிடித்தது. மொத்தம் மூன்று முறை அவர் எழுதிய கட்டுரைகளுக்காக குமரப்பா சிறையானார்,

எந்தத் திட்டத்தையும் தீட்டும் முன்பு ஏழை மனிதன் ஒருவனின் விலா எலும்புகளை எண்ணிப் பாருங்கள். திட்டம் நிறைவேறிய பிறகு, அந்த விலா எலும்புகள் தெரியாத வண்ணம் அவனுக்கு சதை போட்டிருக்குமானால், உங்கள் திட்டம் வெற்றி அடைந்து விட்டது என்று கூறிவிடலாம். இதுதான் நாட்டின் திட்டத்தின் அளவுகோல் என்பது குமரப்பாவின் கருத்து.

சுரண்டலற்ற பொருளாதாரம் சாத்தியம் என்றும் அதுவே பாரதத்தின் பிரச்சனைகளுக்கு தீர்வு என்றும் குமரப்பா நம்பினார். இயற்கை வளம் என்பது நாம் நமது வருங்கால சந்ததியினரிடம் இருந்து பெற்ற கடன்தான், இயற்கை வளத்தை அவர்களுக்கு விட்டுச் செல்ல வேண்டும் என்பதுதான் குமரப்பாவின் கருத்து. ஆனால் அரசின் திட்டப்படி அமையும் பொருளாதாரம், பெரும் அணைகள், பெரிய தொழில்சாலைகள் ஆகியவை நேருவின் கனவாக இருந்தது. குமரப்பா ஓரம் கட்டப்பட்டார்.

உடல்நலம் குன்றிய குமரப்பா கல்லுப்பட்டி அருகே உள்ள காந்திகிராமத்தில் வந்து வசிக்கத் தொடங்கினார். நினைத்திருந்தால் பெரிய பதவிகளில் அமர்ந்து பெரும் பொருள் ஈட்டி இருக்கும் வாய்ப்பை உதறித்தள்ளிவிட்டு, திருமணமே செய்து கொள்ளாமல், நாட்டின் பொருளாதார சிந்தனையை கட்டமைப்பதிலே குமரப்பா தன்னை அர்ப்பணித்தார்.

நிலக்கரியையும் பெட்ரோலையும் அடிப்படையாகக் கொண்ட ஒரு பொருளாதாரம் மிகவும் ஆபத்தானது. எனவே, புதுப்பிக்கக்கூடிய வளங்களைக் கொண்ட ஒரு பொருளாதாரக் கொள்கை வேண்டும் என்று கூறியதோடு மட்டுமல்லாமல், தாவர எண்ணெயைக் கொண்டு எரியும் விளக்கு ஒன்றை வடிவமைத்துக் கொடுத்தார். சமையல் எரிவாயு மானியத்துக்கு அல்லல்படும் நமது மக்களின் இன்றைய துயரங்களைத் தொலைநோக்குடன் சிந்தித்ததாலோ என்னவோ, புகையில்லா அடுப்பை உருவாக்கினார், அதற்குக் கல்லுப்பட்டி அடுப்பு என்றே பெயர்.

1960ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 30ஆம் நாள் குமரப்பா பாரதத்தாயின் காலடியில் அர்ப்பணமானார்