வெள்ளி, 1 மே, 2020

தொழிலதிபர் ஆனந்த் மஹிந்திரா பிறந்தநாள் - மே 1


இந்தியாவின் முன்னணி தொழிலதிபரும் மஹிந்திரா குழுமத்தின் தலைவருமான ஆனந்த் மஹிந்திராவின் பிறந்தநாள் இன்று. மஹிந்திரா குடும்பத்தின் மூன்றாம் தலைமுறையான ஆனந்த் 1955ஆம் ஆண்டு பிறந்தவர்.

தனது பள்ளிக்கல்வியை ஊட்டியை அடுத்துள்ள லவ்டேல் லாரன்ஸ் பள்ளியிலும் கட்டடக்கலை மற்றும் திரைப்படத் தயாரிப்பில் பட்டப்படிப்பை அமெரிக்காவில் உள்ள ஹார்வார்ட் பல்கலைக் கழகத்திலும் பயின்றார். தனது மேலாண்மை கல்வியையும் அங்கேயே பெற்ற ஆனந்த் தாய்நாடு திரும்பி மஹிந்திரா குழுமத்தில் தன்னை இணைத்துக்கொண்டார்.

1981 முதல் பல்வேறு மஹிந்திரா குழும நிறுவனங்களில் பணியாற்றிய ஆனந்த் 1991ஆம் ஆண்டு மஹிந்திரா குழுமத்தின் நிர்வாக இயக்குநர் மற்றும் தலைவராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். உதய் கோடக் அவர்களோடு இணைந்து கோடக் மஹிந்திரா வங்கியை உருவாக்கினார்.
இவர் தலைமையில் மஹிந்திரா குழுமம் டிராக்டர்கள் மற்றும் வாகனத் தயாரிப்பைத் தாண்டி பல்வேறு துறைகளிலும் கால் பதித்தது. இவர் பொறுப்பேற்ற காலம்தான் இந்தியா தனது கட்டுப்பாடான தொழில் கொள்கைகளைக் கைவிட்டு உலகமயமாக்கம், தாராளமயமாக்கம் மற்றும் தனியார்மயமாக்கம் என்று மாறியது. இந்த மாற்றங்கள் அளித்த வாய்ப்புகளை ஆனந்த் சரியாகப் பயன்படுத்திக் கொண்டார். பஞ்சாப் டிராக்டர் நிறுவனம் மற்றும் மின்வாகனங்கள் தயாரிப்பில் இருந்த ரேவ் நிறுவனம் போன்ற நிறுவனங்களை மஹிந்திரா குழுமம் வசப்படுத்தியது.

மோசடியான கணக்கை தாக்கல் செய்து பிரச்சனையில் சிக்கிய சத்யம் கம்ப்யூட்டர் நிறுவனத்தை வாங்கி அதனை தனது டெக் மஹிந்திரா நிறுவனத்தோடு ஆனந்த் இணைத்தார். இரு சக்கர வாகனங்கள், மின் வாகனத் தயாரிப்பு, படகு தயாரிப்பு, சிறிய விமானங்கள் தயாரிப்பு, கணினி மென்பொருள் துறை, இந்திய ராணுவத்திற்க்கான வாகனங்கள் மற்றும் தளவாடங்கள் தயாரிப்பு, நகர நிர்மாணம் என்று பல்வேறு துறைகளில் மஹிந்திரா நிறுவனம் இன்று சிறப்பாகச் செயல்பட்டு வருகிறது. திருப்பூர் நகருக்கான குடிநீர் வழங்குதல் மற்றும் கழிவுநீர் அகற்றுதல் ஆகிய சேவைகளை மஹிந்திரா நிறுவனம் நடத்தி வருகிறது.

நான்ஹி காலி என்ற பெயரில் திரு ஆனந்த் ஒரு சமுதாய சேவை நிறுவனத்தை நடத்தி வருகிறார். நான்ஹி காலி என்றால் அரும்புகள் அல்லது மொட்டு என்று பொருள். இதன்வழியாக ஒரு லட்சத்திற்கும் மேலான பொருளாதாரரீதியில் நலிவடைந்த குழந்தைகளின் படிப்பிற்க்கான உதவியை ஆனந்த் செய்து வருகிறார். இந்தியா போன்ற பரந்து விரிந்த நாட்டில் கோடி ரூபாயை ஒரு மனிதர் தருவதைக் காட்டிலும் ஒரு கோடி மக்கள் சிறிது பணம் கொடுப்பதுதான் சரி என்று கூறுவார். பல்வேறு தனிமனிதர்கள் சிறிய அளவில் பணம் அளிப்பதற்கான முறையை ஆனந்த் உருவாக்கி உள்ளார். பணத்தின் அளவல்ல, தரவேண்டும் என்ற எண்ணத்தை உருவாக்குவதே முக்கியம் என்பது அவர் கருத்து.

தொழிலில் சேர்ந்த 1981ஆம் ஆண்டே சிறு அளவில் தொடங்கிய இந்த முயற்சி இன்று மிகப் பெரும் அளவில் வளர்ந்துள்ளது. சமுதாயப் பணிக்காக நிறுவனங்கள் தங்கள் லாபத்தில் ஒரு பகுதியை அளிக்கவேண்டும் என்று அரசு சட்டமியற்றும் முன்பாகவே தானாகவே முன்வந்து தங்கள் நிறுவனத்தின் லாபத்தில் 1% அளவிற்கு சமுதாயப் பணிக்கு அளித்தவர் ஆனந்த். பொதுவாக கல்வி, அதிலும் பெண் குழந்தைகளுக்கான கல்வி, பாதுகாப்பான குடிநீர் வழங்குதல், சுகாதாரம் ஆகிய துறைகளில் ஆனந்த் கவனம் செலுத்துகிறார்.

ஆனந்த் மஹிந்திரா போல, இன்னும் பல பணம் படைத்தவர்கள் சமுதாய சேவையில் ஈடுபட்டால் இந்தியாவின் மனிதவளம் நாட்டின் வளர்ச்சிக்கு பெரும்பங்காற்றும் என்பதில் ஐயமில்லை.