சனி, 11 ஜூலை, 2020

முன்னாள் மத்திய அமைச்சர் சுரேஷ் பிரபு பிறந்தநாள் - ஜூலை 11


வாஜ்பாய் மற்றும் மோதி அமைச்சரவைகளில் அமைச்சராகப் பதவி வகித்த திரு சுரேஷ் பிரபு அவர்களின் பிறந்தநாள் இன்று.

மஹாராஷ்டிர மாநிலத்தைச் சார்ந்த சுரேஷ் பிரபு ஒரு பட்டயக் கணக்காளரும், வழக்கறிஞருமாவார். மஹாராஷ்டிர மாநிலத்தின் ராஜாபூர் தொகுதியில் இருந்து 1996 முதல் 2009 வரை இவர் மக்களவைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். தற்போது ராஜ்யசபை உறுப்பினராக உள்ளார். தனது அரசியல் வாழ்க்கையை சிவசேனா கட்சியில் தொடங்கிய பிரபு, தற்போது பாஜகவில் உள்ளார்.

வாஜ்பாய் அரசில் சுற்றுப்புறத்துறை, உரத்துறை, மின்சாரத்துறை, கனரக தொழில்துறை ஆகிய இலாக்காக்களில் பிரபு மந்திரியாகப் பணியாற்றினார். குறிப்பாக இவர் மின்சாரத்துறையில் அமைச்சராகப் பணியாற்றிய போது 2003ஆம் ஆண்டு பல்வேறு சட்டங்களை ஓன்றுபடுத்தி, மாறிவரும் காலநிலைமைக்கு ஏற்ப புதிய சட்டம் உருவாக்கப்பட்டது. அநேகமாக திவால் நிலையில் இருந்த பல்வேறு மாநில மின்சார வாரியங்களை மீட்டெடுத்ததில் சுரேஷின் பங்கு மகத்தானது.

மோதியின் அரசில் ரயில்வே, தொழில்துறை, விமானப் போக்குவரத்து ஆகிய துறைகளில் சுரேஷ் பிரபு பணியாற்றினார். குறிப்பாக ரயில்வே துறையில் இவர் பணியாற்றிய போது பல்வேறு புதிய ரயில்கள், ரயில் நிலையங்களை சுத்தமாக வைத்திருப்பது, ரயில் நிலையங்களில் சூரிய ஒளியை வைத்து மின்சாரம் தயாரிப்பது ஆகிய புதிய முயற்சிகள் முன்னெடுக்கப்பட்டன.

இன்னும் பல்லாண்டு பூரண உடல்நலத்தோடு வாழ்ந்து பாரத நாட்டுக்கு சுரேஷ் பிரபு தனது பங்கை ஆற்றட்டும் என்று ஒரே இந்தியா தளம் வாழ்த்துகிறது