செவ்வாய், 28 ஏப்ரல், 2020

இரா செழியன் பிறந்தநாள் - ஏப்ரல் 28

திராவிட இயக்கத்தில் தொடங்கி தேசியவாதியாக மலர்ந்த இரா செழியன் அவர்களின் பிறந்தநாள் இது. தஞ்சை மாவட்டத்தில் திருக்கண்ணபுரத்தில் பிறந்த இவரது இயற்பெயர் ராஜகோபால். அன்றய திராவிட சிந்தனைப்படி தனது பெயரை செழியன் என்று மாற்றிக்கொண்டார். நடமாடும் பல்கலைக்கழகம் என்று திராவிடவாதிகளால் கொண்டாடப்பட்ட நெடுஞ்செழியனின் உடன்பிறந்த சகோதரர்.

அண்ணாமலைப் பல்கலைக்கழகத்தில் கணிதத்தில் பட்டம் பெற்ற செழியன், அண்ணாதுரை அவர்களுக்கு நெருக்கமானவராக மாறினார். அண்ணா திமுகவை ஆரம்பிக்கும்போதே உடனிருந்தவர்களில் இவரும் ஒருவர். திமுகவின் சார்பின் 1962ஆம் ஆண்டு பெரம்பலூர் தொகுதியில் இருந்தும், 1967 மற்றும் 1971ஆம் ஆண்டுகளில் கும்பகோணம் தொகுதியில் இருந்தும் நாடாளுமன்ற உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்.

கருணாநிதி தலைமையிலான அரசு மாநில சுயாட்சித் தீர்மானத்தை, ராஜமன்னார் கமிட்டி மற்றும் இரா செழியன் - முரசொலி மாறன் இருவரும் அளித்த அறிக்கையின்படியே சட்டமன்றத்தில் நிறைவேற்றியது.

ஏறத்தாழ பதினைந்தாண்டு காலம் டெல்லியில் திமுகவின் முகமாகவும் குரலாகவும் செழியன் விளங்கினார். இவரது நாடாளுமன்ற விவாதங்கள் பாடமாக வைக்கும் அளவிற்குத் தரமானவை. அவை மக்களுக்கான நாடாளுமன்றம் ( Parliament For the People ) என்று தொகுக்கப்பட்டு உள்ளது. நாடாளுமன்றம் என்பது ஆளும் கட்சியும் எதிர்க்கட்சியும் மோதிக் கொள்ளும் இடமல்ல, அது மக்கள் நலனைப் பற்றி கவலைப்படவும், மக்கள் நிம்மதியாக வாழவும், அவர்கள் முன்னேறவும் தேவையானவற்றைப் பற்றி விவாதித்து சட்டம் இயற்றவேண்டிய இடம் என்பதில் செழியன் உறுதியாக இருந்தார்.

தலைநகர் அவருக்கு நண்பர்கள் பலரைக் கொடுத்தது. செழியனின் அறிவும் புலமையும் பிற கட்சியினரையும் அவர்பால் ஈர்த்தது. இந்திய வரலாற்றின் கரும்புள்ளியாக நெருக்கடி நிலை பிரகடனத்தை எதிர்த்து  இவரைக் கைது செய்யக் காத்துக்கொண்டு இருந்த காவல்துறைக்கு சிக்காமல் நாடாளுமன்றத்தில்  அவர் முழங்கியது இந்திராவையே கலங்கடித்து. அந்த காலகட்டத்தில் ஜெயப்ரகாஷ் நாராயணனின் தலைமையினால் ஈர்க்கப்பட்ட செழியன் இந்திராவை எதிர்த்து உருவான ஜனதா கட்சியில் இணைந்தார். 1978 முதல் 1984 வரை ஜனதா கட்சியின் சார்பில் மாநிலங்களவை உறுப்பினராகப் பணியாற்றினார். மொரார்ஜி தேசாய் தலைமையிலான அரசுக்கு இவர் அளித்த பரிந்துரைகள்தான் இன்று சட்டமாகி உள்ள "பஞ்சாயத்து ராஜ்" முறைக்கு அடித்தளமாக அமைந்தது.

1984ஆம் ஆண்டு தென்சென்னை தொகுதியில் செழியன் போட்டியிட்டார். இவரை எதிர்த்து காங்கிரஸ் கட்சி நிறுத்தியது நடிகை வைஜயந்திமாலா பாலியை. "அவரை லோக்சபாவிற்கு அனுப்புங்கள்,  வைஜயந்திமாலாவை ஆர் ஆர் சபாவுக்கு அனுப்புங்கள்" என்று துக்ளக் சோ அட்டைப்படம் போட்டார். ஆனால் சினிமா மோகத்தில் மூழ்கியுள்ள தமிழகம் ஒரு தலைசிறந்த நாடாளுமன்றவாதியைப் புறக்கணித்து நடிகையை தேர்ந்தெடுத்தது. முடியும் வரை ஜனதா பரிவாரத்தில் இயங்கிய செழியன் மெதுவாக பொது வாழ்க்கையை விட்டு விலகினார். அரசியலில் பணம் சேர்க்காத மிகச் சில அரசியல்வாதிகளில் ஒருவரான செழியன் தனது கடைசிக் காலத்தில் தனது நாடாளுமன்ற சகாவான விஸ்வநாதனின் வேலூர் தொழில்நுட்பப் பல்கலைக்கழகத்தில் கௌரவ பேராசிரியராகப் பணியாற்றினார்.

நெருக்கடி நிலைக்காலத்தில் நடைபெற்ற முறைகேடுகளை விசாரிக்க ஜனதா அரசு நீதிபதி ஷா தலைமையில் ஒரு விசாரணைக்குழுவை அமைத்தது. ஆனால் அந்தக் குழு அறிக்கை சமர்பிப்பதின் முன்னமே ஜனதா அரசு கவிந்தது. அந்த நேரத்தில் பதவிக்கு வந்த காங்கிரஸ் அரசு தேடித்தேடி அந்த அறிக்கையை இல்லாமல் ஆக்கியது. எதிர்பாராத விதமாக செழியன் மூன்று பாகம் கொண்ட அந்த அறிக்கையை தனது சொந்த புத்தகச் சேகரிப்பில் கண்டெடுத்தார். அதை மீண்டும் பதிப்பித்து சுதந்திர இந்தியாவின் முக்கியமான ஆவணத்தை மீண்டும் உயிர்பெறச் செய்தார். அவரது பங்களிப்பில் மிக முக்கியமான ஒன்றாக இது விளங்கும்.

தனது தொன்னூற்று மூன்றாம் வயதில் 2017ஆம் ஆண்டு ஜூன் 6ஆம் நாள் செழியன் காலமானார். வெற்று அறிக்கைகளோடு நமது அரசியல் தலைவர்கள் தங்கள் கடமையை முடித்துக்கொண்டனர். தான் உண்மை என்று நம்பியதைக் காப்பாற்ற  வாழ்க்கை முழுவதும் போராடியே வாழ்ந்தவர்கள் சாகும்போதும் வழியனுப்ப மிகக் குறைவானவர்களே கூடுவதுதானே தமிழகத்தின் இயல்பு. அதுபோலவே செழியனும் வழியனுப்பப்பட்டார். ஆனால் இழப்பு அவருக்கல்ல., நமக்குத்தான்.