செவ்வாய், 24 செப்டம்பர், 2019

சீக்கிய குரு ராம்தாஸ் பிறந்ததினம் - செப்டம்பர் 24.

சீக்கிய குருமார்கள் வரிசையில் நான்காவது குருவான குரு ராமதாஸ் மஹாராஜின் பிறந்தநாள் இன்று.



1534ஆம் ஆண்டு செப்டம்பர் 24ஆம் நாள் இன்றய பாகிஸ்தானில் உள்ள லாகூர் நகரில் ஒரு எளிய ஹிந்து குடும்பத்தில் பிறந்தவர் குரு ராமதாஸ் மஹராஜ். இவரது இயற்பெயர் ஜெத்தா என்பதாகும். ஏழு வயதிலேயே பெற்றோர்களை இழந்த ஜெதாவை அவர் தாய்வழி பாட்டி வளர்த்து வந்தார்.

தனது பனிரெண்டாம் வயதில் ஜெத்தா சீக்கியர்களின் மூன்றாவது குருவான குரு அமர்தாஸ் மஹாராஜை சந்தித்தார். அப்போது முதல் குரு அமர்தாஸை தனது வழிகாட்டியாக ஏற்றுக்கொண்டு அவரின் சேவையில் தனது வாழ்வை அமைத்துக்கொண்டார். குரு அமர்தாஸ் தனது மகளான பீபீ பாணியை ஜெத்தாவிற்கு திருமணம் செய்து வைத்தார். தனக்கு முந்தய இரண்டு குருக்கள் போல, குரு அமர்தாஸும் தனது மகன்களில் ஒருவரை அடுத்த குருவாக நியமிக்காமல் பாய் ஜெதாவை பல்வேறு சோதனைகளுக்குப் பின்னர் 1574ஆம் ஆண்டு சீக்கியர்களின் அடுத்து குருவாக நியமித்தார். அதுமுதல் பாய் ஜெத்தா குரு ராமதாஸ் என்று அழைக்கப்பட்டார்.

குரு கிரந்த சாஹிபில் இவர் இயற்றிய 638 பாசுரங்கள் இடம்பெற்றுள்ளன. முப்பதிற்கும் மேற்பட்ட ராகங்களில் இவர் பாசுரங்களை இயற்றி உள்ளார்.

ராம்தாஸ்பூர் என்ற புதிய நகரத்தை குரு ராம்தாஸ் உருவாக்கினார். நகரின் நடுவில் ஒரு பெரிய குளமும் அதனைச் சுற்றி நகரும் அமையுமாறு அவர் அதனை வடிவமைத்தார். இன்று சீக்கியர்களின் புனிதத்தலமாக விளங்கும் அம்ரித்சர் நகர்தான் அது. பல்வேறு வியாபாரிகளையும், கைவினை கலைஞர்களையும் அந்த நகரில் அவர் குடியேற்றினார்.

இறை தியானம் மட்டுமல்ல மக்களின் சேவையும் முக்கியம் என்ற கருத்தை குரு ராம்தாஸ் வலியுறுத்தினார். இன்றய சீக்கியர்களின் திருமணம் என்பது குரு கிரந்தசாஹிபை நான்கு பாசுரங்கள் ஒலிக்க மணமக்கள் நான்குமுறை சுற்றிவந்து நடைபெறும். அந்த நான்கு பாசுரங்களும் குரு ராம்தாஸ் இயற்றியதுதான். அருகருகே இருப்பதால் அல்ல, இரண்டு உடல்களில் ஒரே ஆன்மாவாக இருப்பதால்தான் தம்பதியராக மாறுகிறார்கள் என்பது குருவின் கருத்து.

சீக்கிய மதத்தைப் பிரச்சாரம் செய்யும் தகுதியான ஆட்களைக் கண்டறிந்து, பல்வேறு இடங்களுக்கு அவர்களை அனுப்பும் பணி குரு ராம்தாஸால் தொடங்கப்பட்டது.

தனது மகனான அர்ஜனை அடுத்து குருவாக நியமித்து விட்டு குரு ராம்தாஸ் 1581ஆம் ஆண்டு செப்டம்பர் 1ஆம் தேதி மஹாசமாதி அடைந்தார்.

பாரத வரலாற்றில் சீக்கியர்களின் பங்களிப்பு என்பது பொன்னெழுத்துக்களால் பொறிக்கப்படவேண்டிய ஒன்றாகும். அதற்கு அடித்தளம் இட்ட குருக்களின் வரிசை நாம் என்றென்றும் நன்றியோடு நினைவு கொள்ள வேண்டிய ஒன்றாகும்.