வியாழன், 2 ஏப்ரல், 2015

முதலீட்டுக்கான சில வாய்புகள்

சரியான அளவில் ஆயுள் காப்பீடும், மருத்துவக் காப்பீடும் செய்து கொண்டு, அவசரக்கால தேவைகளுக்கு குறைந்தபட்சம் ஆறு மாதத்திற்கான தொகையையும் பாதுகாப்பாக சேமித்துவைத்து விட்டீர்கள். அதனைத்தாண்டியும் மாதாமாதம் ஒரு குறிப்பிட்ட தொகையை உங்களால் சேமிக்க முடியும், அதனை சரியாக முதலீடு செய்ய நினைகிறீர் என்றால் வாருங்கள் உங்களுக்காகத்தான் இந்தத் தொடர்.

இது நீங்கள் சம்பாதித்த பணம், அதற்காக நீங்கள் கடுமையாக உழைத்து இருப்பீர்கள். ஆகவே மற்ற எவரைக்காட்டிலும் அந்தப் பணத்தை பாதுகாப்பதில் உங்களுக்குத்தான் கவனம் அதிகமாக இருக்கவேண்டும் என்பதை நினைவில் வையுங்கள். மிக முக்கியமாக இந்தப் பதிவு முதலீட்டுக்கான ஒரு ஆரம்பநிலை தகவல்கள்தானே தவிர உங்கள் எல்லாக் கேள்விகளுக்கும் இங்கே பதில் இருக்கும் வாய்ப்பு இருக்கமுடியாது. உங்கள் தேடல்கள்தான் உங்களுக்கான பாதையை உருவாக்கிகொடுக்கும்.

சேமிப்பு, முதலீடு இவைகளுக்கான வேறுபாடுகளை நாம் ஏற்க்கனவே பார்த்தோம் அல்லவா. உங்கள் சேமிப்பை பணமாகவோ இல்லை தங்க நாணயங்களாகவோ மாற்றி உங்கள் வீட்டில் வைத்துக் கொண்டு இருப்பது சேமிப்பு. திருட்டுப் போவதைத்தவிர இந்த சேமிப்பு உங்களை விட்டுப் போகும் அபாயம் வேறு எதுவும் இல்லை. ஆனால் உங்கள் வீட்டில் நீங்கள் வைத்து இருக்கும் பணம் பொதுவாக வளர்ச்சி அடையாது. அதனால் நாம் இங்கே இதுபோன்ற சேமிப்புகளைப் பற்றி இல்லாது, வளர்ச்சி அடையும் முதலீடு பற்றிதான் பேசப் போகிறோம். ஆனால் வளர்ச்சி விகிதம் கூடும்போது பணத்தை இழக்கும் வாய்ப்பும் சேர்ந்தே இருக்கிறது என்பதனை நினைவில் கொள்ளுங்கள்.

நமக்கு இருக்கும் முதலீட்டுக்கான சில வாய்புகள் என்ன என்று பார்த்தோம் என்றால்


1. வங்கி நிரந்தர வைப்புக் கணக்கு ( Fixed Deposit in Banks )
2. நிதி நிறுவங்களின் வைப்புக் கணக்கு ( Non Banking Finance Company - Deposits )
3. சீட்டு நிறுவனங்கள் ( Chit Funds )
4. தனியார் நிறுவனங்களில் பணம் முதலீடு ( Investment in other commercial business )
5. தங்க நகைகள், தங்க நாணயங்கள் ( Gold Coins, Ornaments )
6. நிலம், வீடு, விவசாய நிலம் ( Land and Property )
7. பங்குச் சந்தை ( Share Market )
8. பரஸ்பர நிதித் திட்டங்கள் ( Mutual Funds )
9. கலைப் பொருள்கள் ( Art Collections )

இவைகளில் வங்கிகளில் நீண்டகால வைப்புக் கணக்கில் அநேகமாகப் பணம் பறிபோகும் வாய்ப்பு இல்லை, ஆனால் வட்டி விகிதம் குறைவாகவே இருக்கும். தேவைப்படும் போது மிகக் குறைந்த காலத்தில் பணத்தை எடுத்துக்கொள்ளும் வசதி உண்டு.

வங்கி சாரா நிதி நிறுவனங்களில் வங்கிகளைக் காட்டிலும் வட்டி கொஞ்சம் கூடுதலாகக் கிடைக்கும். இந்த நிறுவனங்களும் ரிசர்வ் வங்கியின் கட்டுப்பாட்டில் இருப்பதால், இழப்பை ஏற்ப்படுத்தும் வாய்ப்பு கொஞ்சம் குறைவுதான். குறுகியகாலத்தில் பணத்தைப் பெறுவது கொஞ்சம் கடினம்.

சிட்டு நிறுவனங்கள் குறுகிய கால சேமிப்பு என்ற பார்வையில் சிறந்தவை, ஆனால் அதிகம் நெறிமுறைப்படுத்தப் படாத தொழில். இழப்பின் வாய்ப்பு அதிகம்.

தெரிந்தவர்கள், உறவினர்கள், நண்பர்கள் இவர்களின் தொழிலில் முதலீடு செய்வது வருமானம் அதிகம் வரும் ஆனால் இழப்பின் வாய்ப்பு மிக அதிகம். கவனம் தேவை.

தங்க நகைகள், தங்க நாணயங்கள் - அநேகமாக மனித சமுதாயம் தொடங்கிய உடனே ஆரம்பித்த சேமிப்பு. நம் எல்லோருக்கும் மனம் கவர்ந்த சேமிப்பு. உடனடியாக விற்கவோ அல்லது அடகு வைக்கவோ முடியும். எல்லாக் காலத்திலும் எல்லா நாட்டிலும் செல்லக்கூடிய பொருள். ஆனால் சேமிப்பு என்றால் நகையைக் காட்டிலும் தங்க நாணயங்கள் இன்னும் மேல். நகைகளை வாங்கும்போதும் விற்கும்போதும் கூலி சேதாரம் என்று இழக்க நேரிடும். பொது ஆண்டு 2000க்குப் பின்னர் அதிகமாக விலை ஏறியது. ஆனால் நீண்ட கால நோக்கில் லாபகரமான முதலீடாக வல்லுனர்கள் பரிந்துரை செய்வதில்லை.

நிலத்தில் சேமிக்க கைவசம் மிக அதிகமான பணம் வேண்டும். விற்பனை செய்வது கடினம். உடனடியாகப் பணமாக மாற்றமுடியாது. சட்டச் சிக்கல்களும், காப்பாற்றக் கடினமானதும் கூட.

பங்குக்சந்தை நீண்ட கால நோக்கில் மிக அதிகமான வருமானத்தைத் தரக்கூடியது. ஆனால் நிறுவனங்களின் ஆண்டு அறிக்கைகளையும், அவர்கள் நடத்தும் தொழிலின் சர்வதேச மாற்றத்தையும் உன்னிப்பாகக் கவனித்துவர வேண்டும். நிபுணர்கள் துணை அவசியம். உங்கள் முதலீட்டை இழக்கும் வாய்ப்பு மிக அதிகம்.

பரஸ்பர நிதி நிறுவனங்கள் - பங்குச்சந்தையில் முதலீடு செய்ய மிகச் சிறந்த வழி. நிறுவனங்களின் நிபுணர்கள் வழிகாட்டலில் முதலீடு நடப்பதால் சந்தையில் நேரடியாக முதலீடு செய்வதைக் காட்டிலும் கூடுதல் பாதுகாப்பானது. தொடர்ச்சியான நீண்டகால முதலீடிற்கு சிறந்த வழி. முதலீட்டை இழக்கும் வாய்ப்பு நேரடியான முதலீட்டை விடக் குறைவு.

கலைப் பொருள்களில் முதலீடு செய்வது இன்னும் இந்தியாவில் வளர்ச்சி அடையாத துறை. சரியான, உண்மையான கலைப் பொருள்களைக் கண்டு அறியப் பயிற்சி தேவை. போலிகள் பல நடமாடும் துறை. சாதாரண முதலீட்டாளர்கள் இதனைத் தவிர்த்து விடுவது நலம்.

உதாரணமாக அஞ்சல் துறை சேமிப்பு, காப்பீட்டில் சேமிப்பு என்று, இங்கே கூறியதைத் தாண்டியும் முதலீடு செய்யப் பல வழிகள் இருக்கலாம்.  நாம் இங்கே பொதுவாக மக்கள் தங்கள் பணத்தை சேமிக்கும் துறைகளைப் பற்றித்தான் பேசி இருக்கிறோம்.

ஓரளவிற்கு பல்வேறு சேமிப்புக்கான வழிகளையும், அதில் உள்ள சாதக பாதகங்களையும் இப்போது நாம் புரிந்துகொண்டு இருப்போம். அதிகமான வருமானத்திற்கு ஆசைப்பட்டு கைவசம் இருக்கும் பணத்தை இழந்து விடாதீர்கள். அதுபோல உங்கள் முதலீடுகளை ஒரே இடத்தில் குவிக்காமல், பல்வேறு இடங்களில் பரவலாக்குங்கள். வெவ்வேறு இடங்களில் முதலீடு செய்யும்போது பணம் பறிபோகும் வாய்ப்பு மிகவாகக் குறைகிறது.உங்களின் ஆசைகளைக் கனவுகளை இப்போது வரிசைப்படுத்தி எழுதுங்கள். இன்றிலிருந்து எந்த காலகட்டதில் உங்களுக்கு எவ்வளவு பணம் தேவைப்படும் என்று கணக்கிடுங்கள். உதாரணமாக நீங்கள் வசிக்க ஒரு வீடு வாங்க எண்ணினால், எந்த வருடம் வாங்கப் போகிறீர்கள், அதற்க்கு எத்தனை பணம் தேவைப் படும் என்று யோசியுங்கள். உங்கள் குழைந்தைகளின் மேற்ப்படிப்பு, அவர்கள் திருமணம் இவைகளுக்கு எந்த வருடம் எவ்வளவு தேவைப்படும், உங்களுக்கான ஓய்வுக்குப் பிறகு எவ்வளவு தேவைப்படும் என்பதை எழுதிப் பார்த்தல், நீங்கள் எங்கே இருக்கிறீர்கள், எங்கே செல்ல நினைக்கிறீர்கள், அதற்க்கான கால அவகாசம் உங்களிடம் எவ்வளவு உள்ளது என்பது தெரிந்து விடும். அப்போது நீங்க செல்ல நினைக்கும் இடத்திற்கு எப்படிப் போவது, அதற்க்கு எங்கே சேமிப்பது சரியாக இருக்கும் என்பதை மிக எளிதாகத் திட்டம் இட்டுவிடலாம்.


தொடர்புடைய பதிவுகள் 

எச்சரிக்கை - சிறிது நிதானம் தேவை 
பணவீக்கம் - ஒரு எளிய அறிமுகம் 
அவசரக்காலத் தேவைகளுக்கு