புதன், 25 டிசம்பர், 2019

வீரமங்கை வேலு நாச்சியார் நினைவுதினம் - டிசம்பர் 25.

பாரத நாட்டின் வரலாற்றில் தாயகத்தைக் காக்க ஆண்களுக்கு நிகராக பெண்களும் ஆயுதம் ஏந்திப் போராடியது உண்டு. கல்வியிலும் வீரத்திலும் ஆணுக்கு இங்கே பெண் இளைப்பில்லை காண் என்று உதாரண நாயகியாக முதல் சுதந்திரப் போருக்கு முன்னே ஆங்கில ஏகாதிபத்தியத்தை தோற்கடித்த வீரப்பெண்மணி வேலுநாச்சியாரின் நினைவுதினம் இன்று.1730ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 3ஆம் நாள் ராமநாதபுர மன்னரான முத்து விஜயரகுநாத செல்லமுத்து சேதுபதி - முத்தாசாள் நாச்சியார் தம்பதியரின் மகளாகப் பிறந்தவர் வேலுநாச்சியார். தனது ஒரே மகளை மகன் போலவே வளர்த்தார் விஜயரகுநாத சேதுபதி. வேலுநாச்சியாரும் சிலம்பம், வாள்வீச்சு, குதிரையேற்றம் என்று போர்கலைகளிலும் தமிழ், ஆங்கிலம், உருது, பிரெஞ்சு போன்ற மொழிப்பாடத்திலும் சிறந்து விளங்கினார்.

உரிய வயதில் வேலுநாச்சியாரை சிவகங்கை இளவரசர் முத்துவடுகநாத உடையதேவர் திருமணம் செய்துகொண்டார். களரி என்ற ஆயுதத்தைப் பயன்படுத்துவதில் இணையற்ற வீரராக திகழ்ந்தவர் முத்துவடுகநாதர். வீரமும் இறை நம்பிக்கையும், மக்களின் நல்வாழ்வில் அக்கறையும் கொண்ட ஆதர்ச தம்பதியராக முத்துவடுகநாதரும் வேலுநாச்சியாரும் இருந்தனர்.

1772ஆம் ஆண்டு ஆற்காடு நவாப் ஆங்கிலேயர்களோடு இணைந்து சிவகங்கை சீமையின் மீது படையெடுத்தார். காளையார்கோவிலில் நடந்த அந்தப் போரில் முத்துவடுகநாதர் வீரமரணம் அடைந்தார்.
நாட்டின் ஆட்சியை மீண்டும் கைப்பற்றும் உறுதியோடு வேலுநாச்சியார் சிவகங்கை சீமையை விட்டு வெளியேறினார். திண்டுக்கல் நகரின் அருகே உள்ள விருப்பாட்சிபாளையத்தின் அரசர் கோபாலநாயகர் வேலுநாச்சியாருக்கு அடைக்கலம் கொடுத்தார். ஏற்கனவே ஆங்கிலேயர்களோடு சண்டையில் ஈடுபட்டுக்கொண்டு இருந்த ஹைதர் அலியின் உதவியை வேலுநாச்சியார் நாடினார். ஹைதர் அலியும் வேலுநாச்சியாருக்கு உதவுவதாக வாக்களித்தார்.

விருப்பாட்சிபாளையத்தில் தங்கி இருந்தவாறே தனது படைகளைத் திரட்டிய வேலுநாச்சியார், முதலில் காளையார்கோவிலைக் கைப்பற்றினார். அதனைத் தொடர்ந்து தனது படைகளை இரண்டு பிரிவாகப் பிரித்து சின்ன மருதுவின் தலைமையில் ஒரு பிரிவை திருப்பத்தூரில் தங்கி இருந்த ஆங்கிலப் படையை தாக்குமாறு கூறி, மற்றொரு பிரிவை பெரிய மருதுவின் தலைமையில் சிவகங்கையை தாக்குமாறும் ஆணையிட்டார்.

அது நவராத்திரி விழாக்காலம். தீமையை அழித்து நன்மையை நிலைநாட்டிய சக்தியை வழிபடும் விஜயதசமி திருநாள். அன்று தனது பெண்கள் படையோடு மாறுவேடத்தில் சிவகங்கை கோட்டைக்குள் நுழைந்த வேலுநாச்சியார், அங்குள்ள ஆங்கில வீரர்களைத் தாக்கி அவர்களைத் தோற்கடித்தார். ராணியின் மெய்க்காவல் படையைச் சேர்ந்த குழலி என்ற பெண் தன்னையே எரிந்துகொண்டு கோட்டையில் இருந்த ஆங்கிலேயர்களின் ஆயுதக் கிடங்கை முழுவதுமாக எரித்து சாம்பலாக்கினாள். உலகின் முதல் தற்கொலை தாக்குதல் இதுதான். ராணியைக் காட்டிக் கொடுக்க மறுத்து வெள்ளையரால் வெட்டுப்பட்டு மரணமடைந்த உடையாள் என்ற பெண்ணுக்கு நடுகல் நாட்டி, தனது திருமாங்கல்யத்தை முதல் காணிக்கையாகச் செலுத்தினார் வேலுநாச்சியார்.  அந்த வழிபாடு... வாழையடி வாழையாகத் தொடர்ந்து, கொல்லங்குடி வெட்டுடைய காளியம்மன் கோயிலில் இன்றும் சிறப்பாக நடக்கிறது.

சிவகங்கை மீண்டும் சுதந்திர நாடாக மாறியது. கோட்டையின் உச்சியில் சிவகங்கையின் அனுமக்கொடி மீண்டும் கம்பீரமாகப் பறக்கத் தொடங்கியது. இதனை அவர் நிகழ்த்திக் காட்டியது தனது ஐம்பதாவது வயதில். சிவகங்கைச் சீமையை மீட்டு, 1780-ம் ஆண்டு முதல் 1789-ம் ஆண்டு வரை ராணியாக மக்கள் போற்ற ஆட்சி புரிந்தார் நாச்சியார். இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றில் வெள்ளையர்களை வென்று முடி சூட்டிய ஒரே ராணி, வீரமங்கை வேலு நாச்சியார்.

1780 வரையிலும் தான் அரசவையின் அரசியாக இருந்து சிவகங்கையை ஆண்டு வந்த  வேலு நாச்சியார். தனக்குப்பின் வெள்ளச்சியை அரசியாக்கினார். வெள்ளச்சி அரசியாக பதவியேற்கும்போது திருமணம் ஆகவில்லை என்றாலும் 1793ல் வெங்கம் உடையனத்தேவருக்கு மணம் முடித்து கொடுத்து, அதன் பின்னர் அரசராக அவரை அறிவித்தார் வேலு நாச்சியார்.  வெள்ளச்சியின் மறைவுக்குப்பின்னர் மனமுடைந்த வேலுநாச்சியார் விருப்பாட்சி அரண்மனையில் தங்கலானார். அங்கேயே 1796ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 25ஆம் நாள் வேலுநாச்சியார் காலமானார்.

வீரர்களுக்கும் வீராங்கனைகளுக்கு என்றுமே மரணம் கிடையாது. வேலுநாச்சியாரின் வழியில் இன்று பாரத தேசத்தின் ராணுவத்தில் பல பெண்கள் தங்களின் திறமையை தியாகத்தை பறை சாற்றிக்கொண்டே இருக்கிறார்கள். 

வளர்ச்சி நாயகன் அடல் பிஹாரி வாஜ்பாய் - டிசம்பர் 25

ராஷ்டிரிய ஸ்வயம்சேவக சங்கத்தின் மூத்த பிரச்சாரகரும், பாரதிய ஜனதா கட்சியை நிறுவிய தலைவரும், முதல் முதலாக காங்கிரஸ் அல்லாத ஆட்சியை ஐந்தாண்டுகள் வழிநடத்திய பிரதமரும், கேட்பவர் மனதை மயக்கும் பேச்சாளரும், சிறந்த கவிஞரும் ராஜதந்திரியுமான அடல் பிஹாரி வாஜ்பாய் அவர்களின் பிறந்ததினம் இன்று.


கிருஷ்ண பிஹாரி வாஜ்பாய் - கிருஷ்ணா தேவி தம்பதியரின் மகனாக 1924ஆம் ஆண்டு டிசம்பர் 25ஆம் நாள் குவாலியர் நகரில் பிறந்தவர் திரு அடல் பிஹாரி வாஜ்பாய் அவர்கள். அவரது தாத்தா பண்டிட் ஷ்யாம்லால் வாஜ்பாய் காலத்திலேயே அவரது குடும்பம் உத்திரப்பிரதேசத்தில் இருந்து மத்தியப்பிரதேசத்திற்கு குடிபுகுந்தது. கிருஷ்ண பிஹாரி வாஜ்பாய் ஒரு பள்ளி ஆசிரியர். வாஜ்பாய் குவாலியரில் தனது ஆரம்ப பள்ளி படிப்பை முடித்தார். குவாலியரில்
தற்போது ராணி லக்ஷ்மிபாய் கல்லூரி என்று அறியப்படும் விக்டோரியா கல்லூரியில்  இந்தி, ஆங்கிலம் மற்றும் சமஸ்கிருத மொழிகளில் பட்டம் பெற்றார். கான்பூரில் உள்ள டி.ஏ.ஏ. கல்லூரியில் அரசியல் அறிவியல் துறையில் பட்டம் பெற்றார். அதனைத் தொடர்ந்து சட்டம் படிக்கச் சேர்ந்த வாஜ்பாய் சுதந்திரத்தை ஒட்டி நடைபெற்ற கலவரங்களால் தனது படிப்பை பாதியிலேயே விட்டு விட்டார்.

சிறுவயதில் இருந்தே ஆர்எஸ்எஸ் அமைப்பில் பற்றுக் கொண்டிருந்த வாஜ்பாய், சிலகாலம் ஆர்ய சமாஜத்தின் இளைஞர் அமைப்பான ஆர்ய குமார் சபாவின் செயலாளராகவும் பணியாற்றினார். அதனைத் தொடர்ந்து தன்னை சங்கத்தின் முழுநேர ஊழியராக இணைத்துக் கொண்ட வாஜ்பாய் உத்திரப்பிரதேசத்தில் சங்கத்தை வளர்க்கும் பணியில் ஈடுபட்டார். தீனதயாள் உபாத்யாவோடு வாஜ்பாய் பாரதிய ஜனசங்கத்தை வளர்க்கும் பொறுப்பில் சங்கத்தால் நியமிக்கப்பட்டார். தேசசேவைக்காக அரசியலில் வாஜ்பாய் அடியெடுத்து வைத்தது அப்போதுதான். ராஷ்டிரதர்மா, பாஞ்சஜன்யா, ஸ்வதேஷ், வீர் அர்ஜுன் போன்ற ஹிந்துத்துவ பத்திரிகைகளில் வாஜ்பாய் தொடர்ந்து எழுத ஆரம்பித்தார்.

1957ஆம் ஆண்டு நடைபெற்ற நாட்டின் இரண்டாவது பொதுத்தேர்தலில் உத்திரப்பிரதேசத்தின் பாலக்பூர்  தொகுதியில் இருந்து வெற்றிபெற்று நாடாளுமன்றத்தில் நுழைந்தார். மாநிலங்களவைக்கு இரண்டு முறையும் மக்களவைக்கு ஒன்பது முறையும் என்று நீண்ட ஐம்பதாண்டுகால நாடாளுமன்ற உறுப்பினர் திரு வாஜ்பாய். மத்தியப்பிரதேசத்தின் குவாலியர் மற்றும் விதிஷா, உத்திரப்பிரதேசத்தின் பாலக்பூர், லக்நோ, புதுடெல்லி என்று நாட்டின் பல்வேறு இடங்களில் இருந்து மக்களவைக்கு வாஜ்பாய் தேர்ந்தெடுக்கப்பட்டார். வாஜ்பாயின் பாராளுமன்ற விவாதங்கள் பெரும் வரவேற்பைப் பெற்றன. அன்றய பிரதமர் நேரு வாஜ்பாய் ஒருகாலத்தில் பாரதத்தின் பிரதமராக வருவார் என்று சரியாகக் கணித்தார்.

பண்டிட் தீனதயாள் உபாத்தியாவின் மரணத்திற்குப் பின் பாரதிய ஜனசங்கத்தின் தலைமை வாஜ்பாயை வந்தடைந்தது. அத்வானி, பால்ராஜ் மதோக் மற்றும் நானாஜி தேஷ்முக் ஆகியோர் வாஜ்பாயின் துணைக்கு வந்தனர். 1975ஆம் ஆண்டு இந்திரா நெருக்கடி நிலையை அறிவித்தார். பல்வேறு தலைவர்களோடு வாஜ்பாயும் சிறையானார். நெருக்கடி நிலை விலக்கிக்கொண்டு பிறகு அனைத்து எதிர்க்கட்சிகளும் ஜனதா கட்சி என்ற பெயரில் ஒருங்கிணைந்தன. அந்த கூட்டமைப்பில் பாரதிய ஜனசங்கமும் இணைந்தது. தேர்தலில் வெற்றிபெற்ற வாஜ்பாய் மொரார்ஜி தலைமையில் அமைந்த ஆட்சியில் வெளியுறவுத்துறையின் அமைச்சராக நியமிக்கப்பட்டார். இரண்டே ஆண்டுகளில் ஜனதா கட்சியின் ஆட்சி கவிழ, அந்த சோதனை தோல்வியில் முடிந்தது.

பழைய ஜனசங்கம் பாரதிய ஜனதா கட்சி என்ற பெயரில் புதிய அவதாரம் கண்டது. கட்சியின் முதல் தலைவராக வாஜ்பாய் நியமிக்கப்பட்டார். மெதுவாக ஆனால் மிக உறுதியாக பாஜக வளரத் தொடங்கியது. வாஜ்பாயின் பேச்சாற்றலும், அத்வானியின் செயல்திறனும் பல்வேறு இளம்தலைமுறையினரின் கடின உழைப்பும் கட்சியை வளர்த்தெடுத்து. அடுத்தடுத்த தேர்தல்களில் கூடுதலான இடங்களைக் கைப்பற்றி 1996ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் மிக அதிக இடங்களைக் கொண்ட கட்சியாக பாஜக விளங்கியது. அன்றய குடியரசுத் தலைவர் சங்கர் தயாள் ஷர்மா வாஜ்பாயை ஆட்சி அமைக்க அழைத்தார். முதல்முறையாக வாஜ்பாய் நாட்டின் பத்தாவது பிரதமராகப் பதவியேற்றார். செங்கோட்டையில் காவிக்கொடி பறக்கத் தொடங்கியது. ஆனால் நாடாளுமன்றத்தில் பாஜகவால் தனது பெரும்பான்மை பலத்தை நிரூபிக்க முடியவில்லை. வாஜ்பாய் பதவி விலகினார். " மிக விரைவில் தனி பெரும்பான்மையோடு நாங்கள் ஆட்சி அமைப்போம், மத்திய அரசில் மட்டுமல்ல மாநிலங்கள் அனைத்திலும் எங்கள் ஆட்சி இருக்கும், இதனை விரைவில் நீங்கள் பார்ப்பீர்கள்" என்று வாஜ்பாய் சூளுரைத்தார்.

சிறுபான்மை அரசை தேவ கௌடாவும் அவரைத் தொடர்ந்து ஐ கே குஜராலும் அமைத்தனர். இரண்டு ஆட்சியையும் காங்கிரஸ் கவிழ்த்தது. மீண்டும் ஒரு தேர்தல் திணிக்கப்பட்டது. 1998ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் கூட்டணி அரசு அமைந்தது. மீண்டும் வாஜ்பாய் பிரதமரானார். ஆனால் ஜெயலலிதா தனது ஆதரவை விலக்கிக்கொள்ள மீண்டும் ஆட்சி கவிழ்ந்தது. 1999ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் கூட்டணி கட்சிகளோடு இணைந்து பெரும்பான்மை பலத்தோடு மூன்றாம் முறையாக வாஜ்பாய் பிரதமரானார். முழுமையாக ஐந்தாண்டுகள் அவர் ஆட்சி செய்தார். இதன்மூலம் தனது பதவிக்காலத்தை முழுவதும் ஆட்சி செய்த முதல் காங்கிரஸ் அல்லாத பிரதமர் என்ற பெருமையை வாஜ்பாய் பெற்றார்.

ராஜஸ்தான் பாலைவனத்தில் பொக்ரான் பகுதியில் அணுகுண்டு சோதனையை நடத்தி, நாட்டின் வலிமையை வாஜ்பாய் உலகமெங்கும் பறைசாற்றினார். கார்கில் பகுதியில் அத்துமீறி நுழைந்த பாகிஸ்தான் ராணுவத்தை விரட்டும் வரை எந்த பேச்சுவார்த்தையும் நடத்தப் போவதில்லை என்று உறுதியாக இருந்தார். மேலை நாடுகள் பாரதத்தின் மீது விதித்த பொருளாதாரத் தடையை உடைத்து நாட்டின் ஆன்ம பலத்தையும் பொருளாதார பலத்தையும் நிரூபித்தார். நாடெங்கும் நான்குவழிச் சாலைகளை அமைத்து பொருளாதார வளர்ச்சிக்கு அடிகோலினார். அவரது ஆட்சிக்காலத்தில் நாட்டின் பொருளாதாரம் பெரும்வளர்ச்சியைச் சந்தித்தது.

ஆனாலும் 2004ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் பாஜக ஆட்சி அமைக்கும் அளவிற்கான இடங்களை பெறவில்லை. வயதின் காரணமாகவும், உடல்நிலையில் காரணமாகவும் வாஜ்பாய் பொதுவாழ்வில் இருந்து விலகினார். பலகாலமாக இருந்த நீரழிவு நோயால் அவதிப்பட்ட வாஜ்பாய் 2009ஆம் ஆண்டு பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டார். ஆற்றொழுக்குப் போல பொழியும் அவரது பேச்சு அதனால் தடைபெற்றது. நீண்டகாலம் உடல்நலம் குன்றி இருந்த வாஜ்பாய் 2018ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 16ஆம் நாள் காலமானார். அடுத்த நாள் அரசு மரியாதையோடு பீரங்கி குண்டுகள் முழங்க வாஜ்பாயின் வளர்ப்பு மகள் நமீதா பட்டாச்சார்யா எரியூட்ட அந்த தேச பக்தர் நாட்டின் காற்றோடு கலந்தார்.

நாட்டின் சேவகன் எப்படி வாழவேண்டும் என்ற இலக்கணத்தை வகுத்துக் கொடுத்த திரு அடல் பிஹாரி வாஜ்பாயின் வாழ்வு நம் அனைவருக்கும் வழிகாட்டியாக இருக்கும் என்பதில் எந்த ஐயமும் இல்லை.