வெள்ளி, 2 ஆகஸ்ட், 2019

மக்களிடம் இருந்து மகோன்னதத்தை நோக்கி - பங்கர்ராய் - ஆகஸ்ட் 2
மிகப்பெரும் அளவில் தேசிய கல்விக்கொள்கைக்கான ஆதரவான குரல்களும், எதிர்கருத்துகளைம் ஓங்கி ஒலித்துத்துக் கொண்டிருக்கும் காலம் இது. ஆனால் இதுதான் கல்வியா என்ற கேள்வியையும் சேர்த்தே கேட்கவேண்டும் என்ற எண்ணத்தை ஏற்படுத்தும் ஒரு கல்விமுறை இன்றும் நமது நாட்டில் வெற்றிகரமாக நடந்துகொண்டு இருக்கிறது. நமது நாட்டின் சவால்களும் பிரச்சனைகளும் தனித்தன்மை வாய்ந்தவை. அதற்கான தீர்வுகளை முதலில் நமது மண்ணின் வேர்களில் இருந்துதான் தேடவேண்டும். நமது சவால்களின் விடைகள் இறக்குமதியான சித்தாந்தங்களில், கருத்துக்களில் இல்லை என்று நினைப்பவர்கள், அப்படி தேடுபவர்கள் பலர் இருக்கிறார்கள். அதில் முக்கியமானவர் பங்கர்ராய்.

ராஜிவ் காந்தி போன்ற உயர்வர்கத்தினர் பயிலும் டூன் பள்ளியில், டெல்லியின் ஸ்டீபன் கல்லூரியில் படிப்பு, ஸ்கவாஷ் விளையாட்டில் தேசிய அளவிலான வெற்றிகள், அந்த விளையாட்டில் உலக அளவிலான போட்டிகளில் பாரத நாட்டின் பிரதிநிதி என்று இருந்த இளைஞரின் கதை இது. அடுத்தபடியாக இந்திய ஆட்சிப் பணியிலோ அல்லது வெளிநாட்டில் படிப்பு அங்கேயே வேலை என்று சென்றிருக்க வேண்டிய வாழ்க்கை. ஆனால் நினைத்தது போல நடக்காமல் இருப்பதால்தான் வாழ்வின் சுவையே இருக்கிறதல்லவா !.

1967  ஆம் ஆண்டு பங்கர்ராய் கல்லூரிப் படிப்பை முடிக்கும் தருவாயில் பிஹாரில் பெரும் பஞ்சம் வந்தது. சமுதாய பணிக்கு வருமாறு இளைஞர்களை ஜெயப்ரகாஷ் நாராயணன் அழைத்தார். சிறிது காலம் அங்கே சென்று ஏதாவது செய்யலாம் என்று பங்கர் கிளம்பியபோது அந்த அனுபவம் தன் வாழ்வையே புரட்டிப் போட்டுவிடும் என்று நினைத்திருக்கவே மாட்டார். பஞ்சமும் பட்டினியும், மரணங்களும் அவரை உலுக்கி விட்டது.

பிஹார் - எப்படிப்பட்ட இடம். செழிப்பான கங்கை நதி பாயும் பிரதேசம், மாபெரும் மகத சாம்ராஜ்யம் உருவான நிலம். உலகின் செழிப்பான பாடலிபுத்திர நகரம் இருக்கும் மாநிலம். உலகின் பல்வேறு மூலைகளில் இருந்து கல்விபெற மாணவர்கள் தேடி வந்த நாலந்தா பல்கலைக்கழகம் இருந்த இடம். ஆனால் தொடர்ந்த சுரண்டலால் வளம் இழந்து, தாழ்வுற்று வறுமை மிஞ்சி பாழ்பட்டு நின்ற மாகாணம் பங்கர்ராயின் போதிமரமானது. தனது வாழ்வின் குறிக்கோளை  அவர் அங்கே கண்டுகொண்டார். வசதியான அதிகாரமிக்க வாழ்க்கை என்ற எண்ணம் மாறி, மக்களுக்கு ஏதாவது செய்யவேண்டும் என்ற எண்ணம் உருவானது.

நாட்டின் கிழக்கு பகுதியில் உருவான எண்ணம் செயலானது மேற்குப் பகுதியில் உள்ள ராஜஸ்தானில். வறட்சி புரட்டிப் போடும் பாலைவனப் பிரதேசம். பெண்கள் தண்ணீருக்கே பல மைல் தூரம் நடக்க வேண்டி இருக்கும் இடம், இதில் படிக்க எங்கே நேரம் ? கடுமையான சவால்களுக்கு புதுமையான தீர்வுகள்தான் சரியாக இருக்கும். தண்ணீர் எடுக்கவும் ஆடு மாடு மேய்க்கவும் மட்டுமே  செய்து கொண்டு இருந்த குழந்தைகளை, அதிலும் பெருவாரியானவர்கள் தாழ்த்தப்பட்ட பொருளாதாரரீதியில் சங்கடப்படும் குடும்பத்தைச் சார்ந்தவர்கள், அவர்களுக்காக இரவில் நடைபெறும் பள்ளிகள் உருவாகின. வெளிச்சத்திற்கு சூரிய ஒளியைச் சேமித்து வைத்து இரவில் ஒளி கொடுக்கும் விளக்குகள் பயன்படுத்தப்படுகின்றன. இதற்கான விளக்குகளை உருவாகும் தொழில்நுட்பம் மக்களுக்கு கற்பிக்கப்பட்டு அவர்கள் தயாரிக்கும் விளக்குகளே பயன்படுத்தப்படுகின்றன.

இந்தப் பள்ளிகளில் வாழ்க்கைக்கான கல்வி கற்பிக்கப்படுகிறது. அடிப்படை அறிவியல், ஆரம்ப சுகாதாரம், கால்நடை வளர்ப்பு, பராமரிப்பு போன்றவை. இதில் கற்ற மாணவர்கள் தங்கள் மேற்படிப்புக்கு மற்ற பள்ளிகளுக்கோ அல்லது கல்லூரிகளுக்கோ அனுப்பி வைக்கப் படுகிறார்கள். இந்தப் பள்ளிகள் இங்கே படிக்கும் மாணவர்களாலேயே நிர்வகிக்கப் படுகிறது. ஒரு பிரதமர், அவருக்கு துணையாக அமைச்சர் குழு என்று மாணவர்களின் பிரதிநிதிகளே பள்ளி நிர்வாகத்தை நடத்துகிறார்கள்.

மின்சார வசதி இல்லாத கிராமங்களுக்கு சூரிய ஒளியின் மூலம் இயங்கும் விளக்குகளும், அடுப்புகளும் அளிக்கப் படுகிறது. அதாவது அதனை தயாரிக்கும் பயிற்சி அளிக்கப்படுகிறது. கிராமங்களில் இருக்கும் மூதாட்டியை கண்டறிந்து அவர்களுக்கு இந்தப் பயிற்சி வழங்கப்படுகிறது. குறுகிய காலத்தில் இதனை கற்றுக்கொள்ளும் தாய்மார்கள், பின்னர் தங்கள் கிராமங்களில் சூரிய விளக்குகளை தயாரித்து மற்றவர்களுக்கு அளிக்கிறார்கள்.

ஆப்பிரிக்கா, தென் அமெரிக்கா, ஆசியா என்று உலகின் பல்வேறு மூலைகளில் இருந்து எண்பத்தி ஐந்து நாடுகள் தங்கள் குடிமக்களை இங்கே அனுப்பி இந்த தொழில் நுட்பத்தில் பயிற்சி பெற வைத்துளார்கள்.

இந்தக் கல்லூரி எந்த விதமான சான்றிதழ்களை அல்லது பட்டங்களை அளிப்பதில்லை, ஆனால் வாழ்கைக்குத் தேவையான திறன்களை அளிக்கிறது. அதனால் தான் பங்கர்ராய் தனது கல்வி நிலையத்தை வெறும்பாத கல்லூரி என்று அழைக்கிறார்.

சற்றே நாம் கண்களை அகல விரித்துப் பார்த்தால் நமக்கு மிக அருகிலேயே யாரோ ஒருவர் எந்த பலனையும் எதிர்பாராமல் சமுதாயத்திற்கு உழைத்துக் கொண்டுதான் இருப்பார்.

இன்று எழுபத்தி ஐந்தாம் வயதை எட்டிப் பிடிக்கும் பங்கர்ராய் அவர்களுக்கு ஒரே இந்தியா தளம் தனது சிரம் தாழ்ந்த வணக்கத்தையும் வாழ்த்துக்களையும் தெரிவித்துக்கொள்கிறது. இன்னும் ஆயிரம் ஆயிரம் பங்கர்ராய்கள் பாரத தாயின் சேவைக்கு உருவாகட்டும்.