வியாழன், 25 ஜூலை, 2019

வேட்டைக்காரனிலிருந்து காப்பாளனாக ஜிம் கார்பெட் - ஜூலை 25உலகத்தில் இதுவரை தோன்றிய உயிரினங்களில் கடைசியாகத் தோன்றிய உயிரினம் மனிதன், ஆனால் உலகம் முழுவதும் அவனுக்கே உரிமை என்றும் மற்ற எல்லா உயிரினங்களும் அவனது தேவைக்குத் தோன்றியதாகவே மனிதன் எண்ணிக்கொண்டு இருக்கிறான். அடர்ந்த காடுகளில் வசிக்கும் மிருகங்களை கொன்று குவித்து பல உயிரினங்களை இல்லாமலேயே ஆக்கிய பெருமை அவனுக்கே உண்டு.

காட்டைப் பற்றிய அறிமுகம் முதலில் நமக்கு கதைப் புத்தகங்களில் இருந்தே கிடைக்கிறது. அதுவும் எப்படி - அது ஒரு அடர்ந்த காடு. அதில் சிங்கம், புலி போன்ற கொடிய மிருகங்கள் வசித்து வந்தன என்று. சிங்கமும் புலியும் ஒரே காட்டில் வசிக்காது, வசிக்க முடியாது.; சிங்கம் புதர் காடுகளில் வசிக்கும் மிருகம், புலி அடர்ந்த மரங்கள் உள்ள மழைக்காடுகளில்தான் வசிக்கும். அவை கொடிய மிருகங்களும் கிடையாது. பொதுவாக மிருகங்கள் மனிதர்களைக் கொல்வதில்லை. மனிதர்களை உண்ணும் மிருகமாக ஒரு புலி எப்போது மாறுகிறது? இயற்கையிலேயே தனக்கு அந்நியமான, மாறுபட்ட ஒரு உணவான மனிதனை எப்படிப் புலியால் தின்ன முடிகிறது? தொண்ணூறு சதவிகிதக் காரணம், ஒரு புலிக்கு ஏற்படும் காயங்கள். குறிப்பாக அக்காலத்தில் துப்பாக்கியால் சுட்டுக் காயப்படுத்தப்பட்ட புலி, துப்பாக்கிக்குண்டு உள்ளேயே இருப்பதால் கால்களையோ உடலையோ அசைக்கும்போது வலி ஏற்பட்டுப் பிற மிருகங்களை வேட்டையாட முடியாமல் போகிறது. அதேபோல் சில சமயங்களில் முள்ளம்பன்றிகளை வேட்டையாடும்போது அதன் முட்கள் கால்களில் நன்றாக உள்ளே தைத்துவிடுவதாலும் அந்தக் காயங்கள் பெரிதாகி, பிற மிருகங்களைத் துரத்த முடியாமல் பல நாட்கள் பட்டினி கிடக்கும் சூழல் புலிகளுக்கு ஏற்படுகிறது. இந்தச் சூழலில் தற்செயலாகக் காடுகளில் சுள்ளிகள் சேகரிக்க வரும் மனிதர்களைப் பார்க்கும் புலிகள், எதேச்சையாக அவர்களைக் கொல்ல நேரிட்டு, முதன்முறையாக மனித மாமிசத்தை சாப்பிட்டுப் பழகி, இதன்பின் மனிதர்களை எளிதில் கொல்லமுடியும் என்று தெரிந்துகொண்டே மனித வேட்டையர்களாக மாறுகின்றன.

இதை எல்லாம் புலிகளுக்கு மிக அருகே இருந்து, மனிதர்களை வேட்டையாடிய புலிகளை கொன்று வீழ்த்திய ஒரு ஆங்கிலேயர் பதிவு செய்து உள்ளார். அவரது அனுபவங்களை அவர் ஒரு தேர்ந்த கதை சொல்லியாக பதிவும் செய்து உள்ளார். அவர் எழுதிய புத்தகத்தை " இவர்கள் நிஜமாகவே ஏழைகள். இந்தியாவின் பஞ்சை பராரிகள் என்று அழைக்கப்படுபவர்கள். இவர்கள் மத்தியில் நான் வாழ்ந்து இருக்கிறேன். இவர்களை நேசிக்கிறேன். இந்தப் புத்தகத்தில் இவர்களைப் பற்றித்தான் பேசப்போகிறேன். இந்தியாவின் ஏழை ஜனங்களாகிய என் நண்பர்களுக்கு இந்தப் புத்தகத்தைப் பணிவுடன் சமர்ப்பணம் செய்கிறேன்" என்று அவர் யார் மத்தியில் வாழ்ந்தாரோ அவர்களுக்கு சமர்ப்பணம் செய்திருக்கிறார்.

ஆங்கில நாட்டைச் சார்ந்த கிறிஸ்டோபர் வில்லியம் கார்பேட் ஆங்கில ராணுவத்தில் பணியாற்றிவிட்டு பின்னர் நைனிடால் நகரில் தபால்துறையில் பணியாற்றிவந்தார். அவரின் பதினாறு குழந்தைகளில் எட்டாவது குழந்தையாக 1875ஆம் ஆண்டு ஜூலை 25ஆம் நாள் பிறந்தவர் ஜிம் கார்பெட். தனது ஆறாவது வயதிலேயே தந்தையை இழந்த ஜிம் தனது பத்தொன்பதாம் வயதில் அன்றய வங்காள ரயில்வே துறையில் வேலைக்குச் சேர்ந்தார்.

1907ஆம் ஆண்டு முதல் 1935ஆண்டுக்குளாக மனிதர்களை வேட்டையாடி வந்த பனிரெண்டு புலிகளையும் இரண்டு சிறுத்தைகளையும் இவர் சுட்டுக் கொன்றார். அந்த அனுபவங்களை ஜிம் புத்தகங்களாக எழுதியுள்ளார்.

தேவையில்லாமல் புலிகளைக் கொல்லக்கூடாது என்ற இயல்புடையவர் கார்பெட். எப்போது ஒரு புலி மனிதர்களைக் கொல்ல ஆரம்பிக்கிறதோ, அப்போதுதான் அவற்றைக் கொல்லலாம் என்பது கார்பெட்டின் கருத்து. அப்போதுகூட நூறு மடங்கு உறுதியாகப் புலியை அடையாளம் தெரிந்தால்தான் கொல்லவேண்டும் என்பது அவர் கொள்கை. அதையும் மீறி இரண்டு சாதாரணப் புலிகளைத் தெரியாமல் கொன்றது பற்றி மிகவும் வருத்தப்பட்டிருக்கிறார்.

1920களில் படம் எடுக்கும் காமிராவை வாங்கிய ஜிம் கார்பெட், பல்வேறு உயிரினங்களை படமெடுத்து அவைகளை ஆவணப்படுத்தி உள்ளார். தனது நெடிய வேட்டை அனுபவத்தின் மூலம் மிகச் சில புலிகளே அதுவம் வேட்டையாட முடியாத நிலையில் உள்ள புலிகள்தான் மனிதர்களை கொன்று தின்கின்றன என்பதை அவர் உறுதிப்படுத்தி உள்ளார்.

பல்வேறு கல்வி நிலையங்களிலும், கூட்டங்களிலும் வனவிலங்குகளை பாதுகாப்பதின் முக்கியத்துவம் குறித்து உரையாற்றி ஜிம் கானுயிர்கள் பற்றிய விழிப்புணர்வை மக்களிடம் உருவாக்கினார்.
இவர் குமாவுனின் ஆட்தின்னிகள் (Man-eaters of Kumaon 1946), ருத்ரப்ரயாகின் ஆட்தின்னி சிறுத்தை (The man-eating leopard of Rudraprayag 1948), கோயில் புலியும் மேலும் சில குமாவுன் ஆட்தின்னிகளும்(Temple Tiger and maore man-eaters of Kumaon 1954) ஆகிய நூற்களில் தனது வேட்டை அனுபவத்தைப் பதிவு செய்தார். இந்திய ஊரக வாழ்க்கையை எனது இந்தியா (My India) என்ற நூலில் பதிவு செய்தார். புதர்க்காட்டின் போதனைகள் (Jungle lore) அவரது தன்வரலாற்று நூலாகக் கருதப்படுகிறது.குமாவுனின் ஆட்தின்னிகள் 27 மொழிகளில் மொழிபெயர்க்கப்பட்டது.

1947க்குப் பிறகு தனது சகோதரி மேகியுடன் கென்யாவிலுள்ள நியேரியில், ஆலமர வகையைச் சார்ந்த ஒரு மரத்தில் கட்டப்பட்ட குடிசையில் வசிக்கத் தொடங்கிய கார்பெட் 19 ஏப்ரல் 1955ல் மாரடைப்பு காரணமாக உயிர் துறந்தார். இவரது இறுதி வார்த்தைகள்: "எப்போதும் துணிச்சலோடிரு.இவ்வுலகை பிறர் வாழ்வதற்கு இன்னும் மகிழ்ச்சிகூடிய இடமானதாக முயன்று மாற்று" என்பதாகும்.

இறப்பதற்கு சில நாட்களுக்கு முன்னர் தனது ஆறாவது நூலான மர உச்சிகள் (Tree Tops)-ஐ எழுதி முடித்திருந்தார்.

இவரது வனவிலங்கு பாதுகாப்பு முயற்சிகளை நினைவுகூறும் விதமாக 1957ஆம் ஆண்டு பாரத அரசு ஹெய்லி தேசியப் பூங்காவிற்கு கார்பெட் சரணாலயம் என்று பெயர் சூட்டி மரியாதை செலுத்தி உள்ளது.