ஞாயிறு, 29 டிசம்பர், 2019

உமேஷ் சந்திர பானெர்ஜி பிறந்ததினம் - டிசம்பர் 29

பத்தொன்பதாம் நூற்றாண்டில் பாரத நாட்டின் சிந்தனைப் போக்கை வங்காள மாநிலமே வடிவமைத்தது. பிரிட்டிஷ் இந்தியாவின் தலைநகரமாக கொல்கத்தா நகரம் இருந்தது. பாரத சிந்தனையை மேற்கத்திய அறிவுப் புலத்தோடு இணைத்து நாட்டில் மறுமலர்ச்சியைத் தொடங்கிய அறிஞர்கள் பலர் வங்காளத்தில் தோன்றினார்கள். இயல்பாகவே அந்த சிந்தனை தேச முன்னேற்றத்திலும், தேச விடுதலைக்கும் வித்திட்டது. அப்படி வங்காளத்தில் தோன்றிய தலைவர்களில் முக்கியமானவரான திரு உமேஷ் சந்திர பந்தோபாத்தியா  அவர்களின் பிறந்ததினம் இன்று.


1844ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 29ஆம் நாள் பிறந்த உமேஷ் சந்திரா தனது பள்ளிப்படிப்பை முடித்த பின்னர் தனது பதினெட்டாம் வயதில் 1862ஆம் ஆண்டு W P கிலாண்டர்ஸ் என்ற வழக்கறிஞரின் உதவியாளராகச் சேர்ந்தார். பணிபுரிந்த இரண்டு ஆண்டுகளில் சட்டம் பற்றிய புரிதல் அவருக்கு ஏற்பட்டது. 1864ஆம் ஆண்டு சட்டம் படிக்க உமேஷ் சந்திரா இங்கிலாந்து சென்றார். 1867ஆம் ஆண்டு தனது சட்டப்படிப்பை வெற்றிகரமாக முடித்து அவர் இங்கிலாந்து நாட்டில் சட்டத்துறையில் பணியாற்றும் தகுதியைப் பெற்றார். 1868ஆம் ஆண்டு நாடு திரும்பிய உமேஷ் சந்திரா கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பணியாற்றத் தொடங்கினார். மிகக் குறுகிய காலத்தில் கொல்கத்தா நகரின் முக்கியமான வழக்கறிஞர்களில் ஒருவராக உமேஷ் சந்திரா அறியப்படலானார். 1882 ஆம் ஆண்டு அவர் அரசு வழக்கறிஞராக நியமிக்கப்பட்டார். அரசு வழக்கறிஞராக நியமிக்கப்பட்ட முதல் பாரத வழக்கறிஞர் உமேஷ் சந்திராதான். உமேஷ் சந்திரா கொல்கத்தா பல்கலைக்கழகத்தின் சட்டத்துறை தலைவராகவும், அன்றய சட்டசபையின் உறுப்பினராகவும் செயல்பட்டார்.

பொதுவாகவே சட்டத்துறையில் இருப்பவர்கள்தான் அரசியலில் ஈடுபாடு காட்டுவார்கள். உமேஷ் சந்திராவும் அதில் விலக்கல்ல. கிழக்கிந்திய கம்பனியின் கொடுமை தாங்காது பாரத மக்கள் புரட்சியில் ஈடுபட்டனர். இந்தியாவின் முதல் சுதந்திரப் போர் நாட்டின் பெரும்பான்மையான இடங்களில் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து பாரத நாட்டின் ஆட்சியை ஆங்கில அரசு நேரடியாக நிர்வகிக்கத் தொடங்கியது. மீண்டும் ஒரு புரட்சி வெடித்து விடாமல் இருக்கவும், மக்களின் எண்ணத்தை கோரிக்கை மூலம் ஆங்கில அரசுக்குத் தெரியப்படுத்தவும் இந்திய தேசிய காங்கிரஸ் என்ற அமைப்பு உருவானது. காங்கிரஸின் முதல் மாநாடு 1885ஆம் ஆண்டு மும்பை நகரில் நடைபெற்றது. அதன் தலைவராக உமேஷ் சந்திர பானர்ஜி தேர்ந்தெடுக்கப்பட்டார். இருபதே ஆண்டுகளில் நாட்டின் விடுதலையை முன்னெடுக்கும் இயக்கமாக காங்கிரஸ் மாறியது.

காங்கிரஸ் அமைப்பின் இரண்டாவது மாநாடு 1886ஆம் ஆண்டு மும்பையில் நடைபெற்றது. அதன் தலைவராக தாதாபாய் நௌரோஜி தேர்வானார். இந்த மாநாட்டில் மாகாணவாரியாக காங்கிரஸ் அமைப்பு உருவாக்கப்பட வேண்டும் என்ற கருத்தை உமேஷ் சந்திர பானர்ஜி தெரிவித்தார். காங்கிரஸ் அரசியல் சார்ந்து மட்டுமே இயங்கவேண்டும், சமுதாய சீர்திருத்தங்களை மற்ற அமைப்புகள் செயல்படுத்தவேண்டும் என்றும் அவர் கூறினார். 1892ஆம் ஆண்டு ப்ரயக்ராஜ் நகரில் ( அன்றய அலஹாபாத் ) நகரில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டின் தலைவராகவும் உமேஷ் சந்திரா செயல்பட்டார்.

பின்னர் இங்கிலாந்து நாட்டில் வசிக்கத் தொடங்கிய உமேஷ் சந்திரா அங்கே ப்ரிவி கவுன்சில் அமைப்பில் வழக்கறிஞராகப் பணியாற்றத் தொடங்கினார். இங்கிலாந்து நாட்டின் நாடாளுமன்றத்திற்கு போட்டியிட்டு தோல்வி அடைந்தார். அதே தேர்தலில் தாதாபாய் நௌரோஜி வெற்றி பெற்று ஆங்கில நாடாளுமன்றத்தின் முதல் இந்திய உறுப்பினர் என்ற பெருமையை அடைந்தார்.

சுதந்திரத்திற்கு முற்பட்ட காலத்தின் முக்கிய தலைவராக விளங்கிய உமேஷ் சந்திர பானெர்ஜி 1906ஆம் ஆண்டு ஜூலை 21ஆம் நாள் இங்கிலாந்து நாட்டில் காலமானார்.

நாட்டின் முதுபெரும் தலைவருக்கு ஒரே இந்தியா தளம் தனது வணக்கங்களைத் தெரிவித்துக் கொள்கிறது.