வியாழன், 7 மே, 2020

குருதேவ் ரபீந்த்ரநாத் தாகூர் பிறந்தநாள் - மே 7

தெளிவான கோடுகளால் நாடுகள் பிரிக்கப்படாத காலம் அது. பணம் சம்பாதிக்க ஆப்கானிஸ்தான் நாட்டின் காபூல் நகரில் இருந்து பாரத நாட்டின் கொல்கத்தா நகருக்கு கிஸ்மிஸ், முந்திரி போன்ற உலர்பழங்களை விற்றுவந்த ரஹ்மான் என்ற சிறுவியாபாரிக்கும்   ஐந்து வயதேயான மினி என்ற சிறுபெண்ணுக்கும் இடையே உருவான பாசத்தைப் படம் பிடித்துக் காட்டும் கதை காபூலிவாலா. இரண்டாயிரம் கிலோமீட்டர் தொலைவில் இருக்கும் தன் மகளின் கைத்தடத்தை தன் சட்டைப்பையிலும், மகளை மனதிலும் சுமந்து வாழும் ரஹ்மான்  மினியின் வடிவில் தன் மகளைப் பார்க்கும்  கதை இது. பொருள்தேடி குடும்பத்தைப் பிரிந்து இருக்கும் பலருக்கு தங்களையே காட்டும் கண்ணாடி அது. விஷ்வகவி என்றும் குருதேவ் என்றும் மரியாதையோடு அழைக்கப்படும் ரபீந்த்ரநாத் தாகூர் எழுதிய பல்வேறு படைப்புகளில் இதுவும் ஓன்று.


பதினெட்டாம் நூற்றாண்டில் தொடங்கி இருபதாம் நூற்றாண்டு வரையான காலகட்டத்தில் பாரத நாட்டின் சிந்தனைப் போக்கை வங்காளமே முடிவு செய்தது. சிறந்த அறிஞர்கள், தத்துவ ஞானிகள், கலைஞர்கள், எழுத்தாளர்கள், அறிவியல் மேதைகள், தேசியத் தலைவர்கள் என்று சாரிசாரியாக தொடர்ந்து வங்காளம் அளித்துக் கொண்டே இருந்தது. அந்த வரிசையில் ஒளிவிடும் மாணிக்கமாக விளங்குபவர் ரபீந்த்ரநாத் தாகூர். பாரதம், வங்கதேசம் என்று இரு நாடுகள் இவரின் கவிதையை தங்கள் தேசியகீதமாக அறிவித்துள்ளன. கவிஞர், சிறுகதை எழுத்தாளர், ஓவியர், இசைக்கலைஞர், ஆயுர்வேத மருத்துவ நிபுணர் என்று தாகூர் பல்துறை விற்பன்னராக விளங்கினார்.

தேபேந்திரநாத் தாகூர் சாரதா தேவி தம்பதியரின் மகனாக 1861ஆம் ஆண்டு மே மாதம் 7ஆம் நாள் பிறந்தவர் ரபீந்த்ரநாத் தாகூர். மிகச் சிறுவயதிலேயே தாயாரை இழந்த ரபீந்த்ரநாத் தாகூர், உறவினர்களாலும், வேலையாள்களாலும் வளர்க்கப்பட்டார்.  கல்விக்கூடத்தில் சேர்ந்து முறையான கல்வியைப் பயிலாது, வீட்டிலேயே பல்வேறு ஆசிரியர்களால் தாகூர் கற்பிக்கப்பட்டார்.

பதின்மவயதில் தனது தந்தையோடு பாரதநாடு முழுவதும் சுற்றி அதன் மூலம் மிகச் சிறப்பான அனுபவங்களைப் பெற்ற தாகூர், சட்டம் படிக்க லண்டன் பயணமானார். ஆனால் சட்டத்தைக் காட்டிலும் இலக்கியம்தான் அவருக்கு நெருக்கமாக இருந்தது. ஷேக்ஸ்பியர் போன்ற ஆங்கில இலக்கியவாதிகளின் படைப்புகளை ஆழ்ந்து கற்றுக்கொண்டார். பட்டம் எதுவும் பெறாமலேயே அவர் பாரதம் திரும்பினார். ஆனால் லண்டன் வாழ்க்கை அவருக்கு பாரத கலையை மேற்கத்திய வடிவில் கூறும் திறமையை அளித்தது.

வங்காளத்தில் தங்கள் குடும்ப சொத்தான சாந்திநிகேதன் என்ற போல்பூர் நகரில் உள்ள பண்ணை ஒன்றுக்கு குடிபெயர்ந்த தாகூர், அங்கே அவர் விஸ்வபாரதி சர்வகலாசாலையை உருவாக்கினார். பல்வேறு சிறுகதைகள், பாடல்கள், புதினங்கள், பயண கட்டுரைகள் நாடகங்கள்  என்று அவற்றின் படைப்புலகம் பெருகிக்கொண்டே போனது. அது போக ஏறத்தாழ இரண்டாயிரத்திற்கும் மேலான பாடல்களையும் தாகூர் இயற்றி உள்ளார். அந்தப் பாடல்கள் ரபீந்த்ர சங்கீதம் என்று அழைக்கப்படுகிறது. தனது அறுபதாவது வயதில் ஓவியம் வரையக் கற்றுக்கொண்டு தாகூர் மிகச் சிறந்த ஓவியராகவும் புகழப் பெற்றார்.

தாகூரின் சாதனைகளை அங்கீகரிக்கும் விதமாக ஆங்கில அரசு அவருக்கு சர் பட்டத்தை அளித்தது. ஆனால் ஜாலியன்வாலாபாக் படுகொலைக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் விதமாக தாகூர் அந்தப் பட்டத்தைத் துறந்தார். அன்றய தேசத்தலைவர்கள் பலரோடு தாகூருக்கு நெருங்கிய பழக்கம் இருந்தது. காந்தியை முதல்முதலாக மஹாத்மா என்று அழைத்தது தாகூர்தான். ஆனால் பிஹாரில் ஏற்பட்ட பூகம்பம், மக்களின் பாவத்திற்கான தண்டனை என்று காந்தி கூறியதை தாகூர் மறுத்து எழுதினார். அறிவியல் விஞ்ஞானி ஆல்பர்ட் ஐன்ஸ்டின் போன்ற பல்வேறு அறிஞர்கள் தாகூரின் நெருங்கிய நண்பர்களாக  இருந்தனர்.

1905ஆம் ஆண்டு நடைபெற்ற வங்காளப் பிரிவினையை எதிர்த்து தாகூர் எழுதிய அமர் சோனா பங்களா என்ற பாடலை வங்காளதேசம் தங்கள் தேசியகீதமாக ஏற்றுக்கொண்டது. ஆனந்த சமரக்கூன் என்ற சிங்களக் கவிஞர் எழுதிய ஸ்ரீலங்காமாதா என்ற பாடல் சிங்கள நாட்டின் தேசிய கீதமாக உள்ளது. சமரக்கூன் விஸ்வபாரதி சர்வகலாசாலையில் தாகூரின் சீடராக இருந்தவர். இந்தப்பாடல் தாகூரின் பாடல்களை ஒட்டியே எழுதப்பட்டது.

பாரதநாட்டிலும் வங்காளதேசத்தில் பல்வேறு பல்கலைக்கழகங்கள், கல்லூரிகள் மற்றும் அருங்காட்சியகங்கள் தாகூரின் பெயரைச் சூடி உள்ளன. நீண்ட தாடி, ஒளிவிடும் கண்கள் என்று பார்க்கும் போது பண்டையகால ரிஷிகளில் ஒருவர் போலத் தோற்றமளிக்கும் தாகூர் மரியாதையாக குருதேவ் என்ற அடைமொழியோடுதான் அளிக்கப்படுகிறார். தேசங்களின் எல்லைக்கோடுகளைத் தாண்டி உலகையே ஒன்றாக எண்ணி நேசித்த அந்த மகாகவிஞர் மிகப் பொருத்தமாகத்தான் விஸ்வகவி என்றும் போற்றப்படுகிறார்.