ராஜாஜி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி
ராஜாஜி லேபிளுடன் இடுகைகளைக் காண்பிக்கிறது. அனைத்து இடுகைகளையும் காண்பி

புதன், 10 டிசம்பர், 2025

டிசம்பர் 10 - சக்ரவர்த்தி திருமகன் - ராஜாஜி பிறந்தநாள்

புகழ் பெற்ற வழக்கறிஞர், சுதந்திரப் போராட்ட வீரர், காந்தியின் மனசாட்சி என்று அறியப்பட்டவர், கருத்தியல் எதிரிகளால் மூதறிஞர் என்று போற்றப்பட்டவர், சமூக சீர்திருத்தவாதி, மேற்கு வங்க ஆளுநர், பாரதத்தின் கவர்னர் ஜெனரல், மத்திய உள்துறை அமைச்சர், சென்னை மாகாணத்தின் முதலமைச்சர், எதிர்க்கட்சியை இல்லாமல் இருந்த காலத்தில் காங்கிரசுக்கு எதிராக சுதந்திரா கட்சியை கட்டமைத்தவர், முதல்முதலாக தமிழகத்தில் மதுவிலக்கை அமுல் செய்தவர், விற்பனை வரி என்ற புதிய வரியை அறிமுகம் செய்தவர் என்றெல்லாம் அறியப்பட்ட சக்கரவர்த்தி ராஜகோபாலாச்சாரியாருக்கு எழுத்தாளர் என்ற ஒரு முகமும் உண்டு.


டிசம்பர் 1921 முதல் மார்ச் 1922 வரை மூன்று மாதங்கள் சிறையில் அடைப்பட்டுக்கிடந்த ராஜாஜி, வெளியே வந்ததும் `சிறையில் தவம்' எனும் நூலை எழுதி எழுத்தாளரும் நூலாசிரியரும் ஆனார். தமிழிலும் ஆங்கிலத்திலும் 40 நூல்கள் எழுதியுள்ளார். கவிதை, கதை, நாவல் என எல்லா வடிவங்களிலும் எழுதினார். சமய, இதிகாச, தத்துவ எழுத்தில் ஒரு புதிய பாணியைப் படைத்தார்.

ஏராளமான சிறுகதைகள் எழுதிய ராஜாஜிக்கு, கதைக்கொள்கையைப் பொறுத்தவரையில் தெளிவான சிந்தனையும் கோட்பாடும் உண்டு. சிறுகதை வேறு, நாவல் வேறு என்பதையும் இரண்டுக்கும் உள்ள வித்தியாசத்தையும் அவர் மிகக் கச்சிதமாக அறிந்துவைத்திருந்தார். 

"சிறுகதை நெடுங்கதையைப்போல் நீடித்த ஒரு காலப்போக்கையோ அல்லது ஒரு கதாநாயகனுடைய வாழ்க்கை முழுவதையுமோ சித்திரிக்காது. தனிப்பட்ட ஒரு சந்தர்ப்பத்தை மட்டிலும் எடுத்துக்கொண்டு சித்திரிப்பது சிறுகதை. சிறுகதையில் நிகழ்ச்சிச் செறிவு அதிகமாகக் காணப்பட மாட்டாது. சம்பவங்கள் குறைந்த எண்ணிக்கையாய்த்தான் இருக்கும். ஆனால், கதைக்கட்டு சாமர்த்தியமாகப் பதிந்திருக்கும். பாத்திரங்கள் பளிச்செனத் தூக்கிக்காட்டும் குண விசேஷங்களுடன் இருக்கும். நல்ல சிறுகதைக்கு அடையாளம் ஒன்றே. அதைப் படித்து முடிக்கும்போது நல்லவர்களுடைய மனதில் மகிழ்ச்சி தோன்றி உள்ளம் பூரிக்கும். இந்தக் கதைகளெல்லாம் நான் வெறும் பொழுதுபோக்காக எழுதவில்லை. என் நாட்டு மக்களுக்கு என்னுடைய எந்தக் கருத்து நன்மைபயக்குமோ, மக்களின் முன்னேற்றத்துக்கு எந்த அனுபவ உண்மை பயன்படுமோ அதைக் கதைபோலச் சொல்ல வேண்டும் என்பதே என்னுடைய நோக்கம். வெறும் கதையழகு, கலையழகுக்காக நான் இவற்றை எழுதவில்லை. என் அனுபவத்தில் நான் கண்ட சில உண்மைகளை என் நாட்டு மக்களுக்குச் சொல்கிறேன், அவ்வளவே.” " இது தனது கதைகளைப் பற்றி ராஜாஜியே செய்த திறனாய்வு.

மதுவிலக்குப் பிரசாரம், தீண்டாமை ஒழிப்பு போன்ற அன்றைய காங்கிரஸ் கட்சியின் நடவடிக்கைகளுக்குத் துணையாகப் பிரசாரம் செய்யும் நோக்குடன் நிறைய கதைகள் எழுதியவர் ராஜாஜி. அவர் எப்போதுமே ஓர் ஒழுக்கவாதி. ஆகவே, சிறுகதை உள்ளிட்ட எந்தப் படைப்பானாலும் அவசியம் ஒரு நீதி இருக்க வேண்டும் என்பதை அவர் வற்புறுத்துவார். அதனால் அவருடைய கதைகளில் பிரசார தொனி சற்றுத் தூக்கி நிற்கும். ஆனால், அத்தகைய பிரசாரம் ஏதுமில்லாத வாழ்க்கைக் கதைகளையும் அவர் சுவைபட எழுதியிருக்கிறார். ராஜாஜி வக்கீலாக இருந்ததாலோ என்னவோ, அவருடைய பெரும்பாலான கதைகளில் ஒரு வக்கீல் வந்து நின்றுவிடுகிறார்.

ராஜாஜி கதைகள்', `பாற்கடல்', `பிள்ளையார் காப்பாற்றினார்', `நிரந்தரச் செல்வம்' ஆகிய தொகுதிகளிலும் தனியாகவும் என 60-க்கு மேற்பட்ட சிறுகதைகளை ராஜாஜி எழுதியிருக்கிறார். மணிக்கொடியும், ஆனந்த விகடனும் சிறுகதைக்கு இடம் கொடுக்கத் தொடங்கும் முன்னரே ராஜாஜி கதை எழுதத் தொடங்கிவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. 1929-ம் ஆண்டில் மதுவிலக்குப் பிரசாரத்துக்காகவே அவர் தொடங்கிய `விமோசனம்’ இதழில் அவர் கதைகள் எழுதினார்.

ராஜாஜியின் அறிவு முதிர்ச்சிக்கு மக்களிடத்தில் இருந்த செல்வாக்கே அவரது எழுத்துகளுக்கு மதிப்பைக்கொடுத்தது. அரசியலில் இருந்த புகழால் இலக்கியத் துறையில் பெரும்பெயர் பெற்ற ராஜாஜி, தமது எழுத்துத்திறனால் இலக்கியத் துறையிலும் தமக்கு நிரந்தரமான ஓர் இடத்தைப் பெற்றுக்கொண்டார். `சமீபகால இலக்கிய வரலாற்றில், அரசியலை இலக்கியத்துக்குள் கலந்தோருள் ராஜாஜி முதன்மையானவர்.

1954-ம் ஆண்டில் சென்னை முதலமைச்சர் பதவி காமராஜிடம் கைமாறியபோது, ராஜாஜிக்கு வயது 76. அதன் பிறகு ராமாயணத்துக்கு புத்துயிர் கொடுக்கும் முயற்சியில் இறங்கினார். . `கல்கி' வார இதழில் 23 மே 1954 முதல் 6 நவம்பர் 1955 வரை `சக்கரவர்த்தித் திருமகன்' எனும் பெயரில் ராமாயணச் சுருக்கத்தைத் தொடராக எழுதினார். ராஜாஜியின் தந்தை பெயர் சக்கரவர்த்தி வேங்கடார்யா ஐயங்கார். ஆகவே, `சக்கரவர்த்தித் திருமகன்' எனும் தலைப்பு ஒருவகையில் ராஜாஜிக்கேகூடப் பொருத்தமானதுதான். அந்தத் தொடர் மலிவுப் பதிப்பாக 1956 மார்ச் மாதம் ஒரு ரூபாய் விலையில் நூலாக வந்தபோது, தொடர்ந்து 33 பதிப்புகள் கண்டு லட்சக்கணக்கான பிரதிகள் விற்றுத் தமிழ்ப் புத்தக விற்பனையில் சரித்திரம் படைத்தது. அதுமட்டுமன்று, அதற்கு சாகித்திய அகாடமி பரிசும் 1958-ம் ஆண்டில் கிடைத்தது.

`குழந்தைகளுக்கான கதைகளும் எழுதினார் ராஜாஜி. சிறுவர்களை ஒன்றும் அறியாதவர்கள், அவர்களுக்குப் பெரியவர்களின் உபதேசம் தேவை என்ற எண்ணத்தை, முற்றிலும் இந்தக் கதைகளில் உடைத்துவிட்டார் ராஜாஜி. நன்கு புரிந்துகொள்ளக்கூடிய பக்குவமுடையவர்களை வைத்துக்கொண்டே கதைகளைச் சொல்லியிருக்கிறார்' என்று ராஜாஜியைப் பற்றி இந்திய இலக்கியச் சிற்பிகள் வரிசையில் நூல் எழுதிய ஆர்.வெங்கடேஷ் குறிப்பிடுகிறார்.

சேலத்தில் இலக்கிய வளர்ச்சிக்காக சேலம் இலக்கியச் சங்கத்தை நிறுவி, அதன்மூலம் தொடர்ந்து கூட்டங்களை நடத்தியவர் ராஜாஜி. Tamil Scientific Terms Society என்ற அமைப்பை நிறுவி தமிழில் அறிவியல் கலைச்சொற்கள் உருவாக்க காரணமாக இருந்தார்.

மஹாபாரதத்தை வியாசர் விருந்து என்ற பெயரிலும், கண்ணன் காட்டிய வழி என்று பகவத் கீதையை, திருமூலர் திருமொழி, சோக்கிரதர், உபநிடதப் பலகணி, குடி கெடுக்கும் கள், திக்கற்ற பார்வதி, ராஜாஜி கதைகள், ராஜாஜி கட்டுரைகள் என்று பல்வேறு புத்தகங்களையும் எழுதியுள்ளார்.

ராஜாஜி-கல்கி-சதாசிவம்-எம்.எஸ்.சுப்புலட்சுமி-ரசிகமணி ஆகியோர் நட்சத்திர நண்பர்களாக அன்றைய நாள்களில் மதிக்கப்பட்டவர்கள். ராஜாஜி கவிஞர் அல்லர். ஆனால், சில பாடல்களை எழுதியுள்ளார். அவர் எழுதி இசைக்குயில் எம்.எஸ்.சுப்புலட்சுமி பாடி உலகெங்கும் புகழ்பெற்ற ஒரு பாடல் `குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா...' என்ற பக்திப்பாடல்.

ராஜாஜி, தம் 37-ம் வயதில் மனைவி அலர்மேல்மங்கையை இழந்தார். அப்போது அவருடைய கடைசி மகள் லட்சுமிக்கு மூன்று வயது. மூத்த மருமகன் வரதாச்சாரி இறந்தபோது, மகள் நாமகிரிக்கு 26 வயது. இளைய மருமகன் தேவதாஸ் காந்தி மறைந்தபோது, மகள் லட்சுமிக்கு 45 வயது. இத்தகைய இழப்புகளையும் வாழ்க்கையில் பல இடர்களையும் சோதனைகளையும் சந்தித்தவண்ணம் இருந்த அவரால், `குறை ஒன்றும் இல்லை...' என்று எப்படிப் பாட முடிந்தது என்பது அதிசயம்தான்.

சில பத்தாண்டுகளைத் தாண்டிப் பார்க்கும் அறிவாற்றல் மிக்க தலைவரை இன்று மரியாதையுடன் ஒரே இந்தியா தளம் நினைவு கொள்கிறது.

வியாழன், 20 நவம்பர், 2025

நவம்பர் 20 - தடையற்ற பொருளாதார ஆதரவாளர் மினு மசானி பிறந்தநாள்



காங்கிரஸ் கட்சிக்குள் சோசலிச சித்தாந்தத்தை முன்னெடுத்தவர், ஆனால் அந்த முறை பயன்தராது என்று உணர்ந்தபோது மிகச் குறைந்த அரசு கண்காணிப்பில் இயங்கும் தொழில்முறைக்கு ஆதரவாக செயல்பட்டவர், நேருவுக்கு ஒரு காலத்தில் நெருங்கிய தோழராகவும், பின்னர் அவரது கடுமையான விமர்சகராகவும் மாறியவர், கடவுள் நம்பிக்கை இல்லாத, மாட்டுக்கறி உண்ணும் பார்சி ஆனால் காலம் முழுவதும் மது அருந்தாத, மாமிசம் உண்ணாத ராஜாஜி தொடங்கிய ஸ்வராஜ்யா கட்சியின் தலைமைப் பொறுப்பை ஏற்றவர் என்று பல்முக ஆளுமை மினு மசானியின் பிறந்தநாள் இன்று.

மும்பை பல்கலைக்கழத்தின் துணைவேந்தராகவும் மும்பை மாநகராட்சி ஆணையராகவும் இருந்த சர் ருஸ்தம் மசானியின் மகனாக 1905ஆம் ஆண்டு நவம்பர் 20ஆம் நாள் பிறந்தவர் மினோச்சேர் ருஸ்தம் மசானி, சுருக்கமாக மினு மசானி. மும்பையில் கல்வி கற்ற மினு மசானி லண்டனில் பொருளாதாரமும், அதனைத் தொடர்ந்து சட்டமும் பயின்றார்.

1929ஆம் ஆண்டு பாரதம் திரும்பிய மினு மசானி மும்பையில் வழங்கறிஞராகப் பணியாற்றத் தொடங்கினார். ஆனால் அடுத்த வருடமே காந்தியின் ஒத்துழையாமை இயக்கத்தில் ஈடுபட்டு வழக்குரைஞர் தொழிலை நிறுத்திக் கொண்டார். விடுதலைப் போராட்டத்தில் கலந்து கொண்டதற்காக பலமுறை சிறை தண்டனை அனுபவித்தார். 1932ஆம் ஆண்டு நாசிக் சிறையில் இருந்த போது ஜெயப்ரகாஷ் நாராயணனின் பழக்கம் ஏற்பட்டது. அன்றய இளைஞர்களுக்கு அதுவும் வெளிநாட்டில் படித்துவிட்டு வந்தவர்களுக்கு இயல்பாகவே கம்யூனிச சித்தாந்தத்தின் மீது ஒரு பிடிப்பு இருந்தது. உலகில் பெரும்பாலான நாடுகள் சில ஐரோப்பிய நாடுகளின் அடிமையாக இருக்கும் நேரத்தில், பாட்டாளி மக்களால் நடத்தப்படும் சோவியத் யூனியன் ஒரு கனவு தேசமாக தெரிந்ததால் ஆச்சர்யம் ஏதும் இல்லை.

1934ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சிக்கு உள்ளாகவே இந்தியன் சோசலிஸ்ட் காங்கிரஸ் என்ற அமைப்பை சோசலிச சித்தாந்தத்தில் பிடிப்புள்ளவர்கள் தொடங்கினார்கள். அதில் மினு மசானி முக்கியமான ஒருவர். இளைய தலைமுறை தலைவராக உருவாக்கிக்கொண்டு இருந்த நேருவும் சோசலிச சித்தாந்தத்தைத்தான் முன்னெடுத்தார். அதனால் இயல்பாகவே மசானி நேருவின் நெருங்கிய நண்பரானார். மினு மசானி மும்பை மாநகராட்சியின் மேயராகவும் அதன் பின்னர் அரசியலமைப்பு நிர்ணய சபையின் உறுப்பினராகவும் தேர்ந்தெடுக்கப்பட்டார். நாடு விடுதலையான பிறகு பிரேசில் நாட்டின் தூதுவராக நியமிக்கப்பட்டார். நாடு திரும்பிய மசானி Freedom First என்ற பத்திரிகையை ஆரம்பித்து நடத்திவந்தார்.

சோவியத் ரஷ்யா பற்றி கட்டமைக்கப்பட்டிருந்த பிம்பங்கள் உண்மையில்லை என்பதை மிகவிரைவில் மினு மசானி புரிந்து கொண்டார். ஆனால் அவரின் இந்தப் புரிதல் அவர் மீது நேருவுக்கு ஒரு ஒவ்வாமையை உருவாக்கியது. நேரு நாட்டை சோஷலிச பாதையில் கொண்டு செல்ல வேண்டும் என்று விரும்பினார். ரஷ்யா போலவே விவசாய நிலங்களை எல்லாம் அரசின் கீழ் கொண்டுவந்து கூட்டுப் பண்ணை முறையை உருவாக்க வேண்டும் என்று விரும்பினார். சோசலிச முறை பாரத நாட்டின் பிரச்சனைகளை தீர்க்காது என்று கருதிய மசானி 1957ஆம் ஆண்டு தேர்தலில் ராஞ்சி தொகுதியில் சுயேட்ச்சை வேட்பாளராகப் போட்டியிட்டு வெற்றி பெற்றார்.

சுதந்திரம் கிடைத்து பத்து ஆண்டுகள்தான் ஆகி இருந்தது. நாட்டின் ஒப்பாரும் மிக்காரும் இல்லாத தலைவராக நேரு விளங்கினார். ஆனால் மக்களாட்சி முறைக்கு இது கேடு, நேருவின் கொள்கைகள் நாட்டை முன்னேற்றாது என்று எண்ணிய ராஜாஜி ஸ்வதந்தரா கட்சியைத் தொடங்கினார். அரசு என்பது அரசாட்சி செய்யவேண்டும், வணிகம் செய்வது அரசின் வேலை இல்லை என்பது ஸ்வதந்த்ரா கட்சியின் கொள்கை. சுருக்கமாகச் சொன்னால் 1990இல் நரசிம்மராவ் முன்னெடுத்த தாராளமயமாக்கள்தான். பேராசிரியர் என் ஜி ரெங்கா போன்ற தலைவர்கள் ஸ்வதந்தரா கட்சியில் இருந்தார்கள். கட்சியின் தலைவராக மினு மசானி தேர்ந்தெடுக்கப்பட்டார். ஸ்வதந்தரா கட்சி சார்பாக 1971ஆம் ஆண்டு வரை நாடாளுமன்ற உறுப்பினராக இருந்தார் மசானி.

பாரதிய ஜனசங்கம் அப்போது பெரிய கட்சியாக உருவாகவில்லை. நாடாளுமன்றத்தின் முக்கிய எதிர்க்கட்சியாக ஸ்வதந்தரா கட்சி விளங்கியது. நேருவிற்குப் பின் இந்திரா இன்னும் வேகமாக சோசலிச சித்தாந்தத்தை முன்னெடுத்தார். தொழிலதிபர்களை பணக்காரர்களை எதிர்மறையாகக் காட்டுவதன் மூலம், நாட்டின் பெரும்பாலான ஏழை மக்களின் ஓட்டைப் பெற்றுவிடலாம் என்று அவர் எண்ணினார். மன்னர் மானிய ஒழிப்பு, வங்கிகள் தேசிய மயமாக்கல் என்று இந்திரா அதிரடி ஆட்டங்களை ஆடினார். இவை சட்டபூர்வமானது அல்ல என்று மசானி நாடாளுமன்றத்தில் வாதாடினார். நீதிமன்ற உத்தரவுகளை புறம்தள்ளி அவசரச் சட்டங்களின் மூலம் தனது எண்ணத்தை இந்திரா நிறைவேற்றிக்கொண்டார்.

வங்க தேச விடுதலையை அடுத்து நடந்த 1971ஆம் ஆண்டு பொதுத் தேர்தலில் இந்திரா பெரும் வெற்றியைப் பெற்றார். கட்சியின் தோல்விக்குப் பொறுப்பேற்று மசானி கட்சியின் தலைமைப் பொறுப்பை ராஜினாமா செய்தார். அடுத்த வருடத்தில் ராஜாஜி இறக்க, ஸ்வதந்த்ரா கட்சி இல்லாமலே போனது. ஆனால் ராஜாஜியும் அவரது சகாக்களும் கூறியது உண்மை என்று காலம் நிரூபித்தது. சோசலிச முறை தோல்வி அடைய, சுதந்திரப் பொருளாதார முறைக்கு நாடு திரும்பியது.

1971ஆம் ஆண்டுக்குப் பிறகு தீவிர அரசியலில் இருந்து விலகிய மினு மசானி தனது பத்திரிகையை நடத்துவதிலும் பல்வேறு புத்தகங்களை எழுதுவதிலும் இயங்கி கொண்டு இருந்தார். 1975ஆம் ஆண்டு இந்திரா பிரகடனம் செய்த நெருக்கடி நிலை சமயத்தில் மசானியின் Freedom First பத்திரிகையும் தணிக்கைக்கு உள்ளானது. அப்போதும் அதை எதிர்த்து நீதிமன்றத்தில் வாதாடி தணிக்கையை மசானி ரத்து செய்ய வைத்தார்.

ஒரு காலத்தில் பாரத நாட்டு அரசியலில் தவிர்க்கமுடியாத அங்கமாக இருந்த மினு மசானி தனது தொண்ணூற்றி இரண்டாம் வயதில் 1998ஆம் ஆண்டு மே மாதம் 27ஆம் நாள் காலமானார். 

ஞாயிறு, 19 அக்டோபர், 2025

அக்டோபர் 19 - நாமக்கல் கவிஞர் பிறந்தநாள்

தமிழன் என்றோர் இனமுண்டு, தனியே அதற்கோர் குணமுண்டு.
தமிழன் என்று சொல்லடா, தலைநிமிர்ந்து நில்லடா 

இன்று திராவிட இயக்கத்தினராலும், தமிழ்த்தேசியவாதிகளாலும் அடிக்கடி கூறப்படும் இந்த சொற்தொடர்கள் ஒரு தேசியவாதியால் எழுதப்பட்டவை என்பது பலருக்கு தெரியாமலேயே இருக்கலாம். 



தமிழக அரசின் முதல் அரசவைக் கவிஞர், தேசியப் போராட்டங்களில் தன்னை இணைத்துக் கொண்டவர், மஹாகவி பாரதியால் பாராட்டப்பட்டவர், மூதறிஞர் ராஜாஜியின் தோழர், சிறந்த ஓவியர், உப்பு சத்யாகிரஹப் போரில் "கத்தி இன்றி ரத்தம் இன்றி யுத்தம் ஓன்று வருகுது, சத்தியத்தின் நித்தியத்தை நம்பும் யாரும் சேருவீர்" என்ற வழிநடைப் பாடலை எழுதியவர் என்ற பெருமைகளுக்குச் சொந்தக்காரர் நாமக்கல் கவிஞர் என்னும் ராமலிங்கம் பிள்ளை அவர்கள். 

1888ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 19ஆம் நாள் காவல்துறையில் பணியாற்றிக்கொண்டு இருந்த வெங்கடராம பிள்ளை - அம்மணி அம்மாள் தம்பதியினரின் எட்டாவது மகனாகப் பிறந்தவர் ராமலிங்கம் பிள்ளை. ஏழு பெண் குழந்தைகளுக்குப் பிறகு ராமேஸ்வரத்தில் பிரார்தனை செய்து அதன் பலனாகப் பிறந்ததால் இவருக்கு ராமலிங்கம் என்று பெயரிட்டார்கள். சிறுவயதிலேயே இதிகாச புராணங்களை சொல்லி இவர் தாயார் வளர்த்தார். 

தொடக்கக்கல்வியை நாமக்கல்லிலும், பின்னர் கோவையிலும், கல்லூரிப் படிப்பை திருச்சியிலும் பயின்றார். 1909ஆம் ஆண்டு தனது அத்தை மகளை மணந்து கொண்டார். இயற்கையிலேயே ஓவியம் வரையும் திறமை இவருக்கு இருந்தது. இவர் வரைந்த ஐந்தாம் ஜார்ஜ் மன்னரின் ஓவியத்தை பார்த்து மகிழ்ந்த மன்னரின் குடும்பம் இவருக்கு தங்கப்பதக்கம் ஒன்றை பரிசளித்து பாராட்டியது. 

1924ஆம் ஆண்டில் காங்கிரஸ் தலைவர் எஸ்.சீனிவாச ஐயங்கார் அறிவித்த ஒரு போட்டியில் தேசபக்திப் பாடல்களை எழுதித் தங்கப் பதக்கம் பரிசு பெற்றார். அதுமுதல் இவர் பல கவிதைகளைப் புனைந்து தள்ளினார். குடத்திற்குள் இட்ட விளக்காக விளங்கிய இவரது கவிதைத்திறன் 1930இல் உப்பு சத்தியாக்கிரகத்துக்காக எழுதிய “கத்தியின்றி” பாடல் மூலம் நாடு முழுவதும் பிரபலமானார். இவரது பாடல்களை சங்கு கணேசன் தனது “சுதந்திரச் சங்கு” பத்திரிகையில் வெளியிட்டு வந்தார்.

காரைக்குடிக்கு பாரதியார் வந்திருப்பதாக அறிந்த நாமக்கல் கவிஞருக்கு பாரதியாரைச் சந்திக்க வாய்ப்பு ஏற்பட்டது. ஓவியம் வரைவதிலும் கெட்டிக்காரர் என்று பாரதியாருக்கு நாமக்கல் கவிஞரை அறிமுகப்படுத்தினர். கவிதையும் எழுதுவார் என்று குறிப்பிட்டனர். கவிதை ஒன்று சொல்லுமாறு பாரதியார் கேட்டார். எஸ்.ஜி.கிட்டப்பா நாடகத்துக்காக தாம் எழுதிக் கொடுத்த ‘தம்மரசைப் பிறர் ஆள விட்டுவிட்டுத் தாம் வணங்கிக் கை கட்டி நின்ற பேரும்’ என்ற பாடலைப் பாடத் தொடங்கினார். பாடல் முழுவதையும் கேட்ட பாரதியார், ‘பலே பாண்டியா! பிள்ளை, நீர் ஒரு புலவன் என்பதில் ஐயமில்லை. தம்மரசைப் பிறர் ஆள விட்டுவிட்டுத் தாம் வணங்கிக் கை கட்டி நின்ற பேரும்... பலே, பலே இந்த ஓர் அடியே போதும்’ என்று பாராட்டித் தட்டிக் கொடுத்தார்.

1932ஆம் ஆண்டில் நடைபெற்ற சத்தியாகிரகத்தில் கலந்துகொண்ட நாமக்கல் கவிஞர், ஓராண்டு சிறைத் தண்டனை விதிக்கப்பட்டு வேலூர் சிறையில் அடைக்கப்பட்டார்.1937ஆம் ஆண்டில் காங்கிரஸ் கட்சியினர் தேர்தலில் போட்டியிட்டனர். கவிஞர் சேலம் நகராட்சி உறுப்பினராகப் போட்டியின்றித் தேர்ந்தெடுக்கப்பட்டார். தொடர்ந்து கவிஞரின் காங்கிரஸ் பணி தீவிரமானது.

இந்திய சுதந்திரத்துக்குப் பிறகு 1949இல் ஆகஸ்ட் 15 சுதந்திரத் திருநாளில் அப்போதைய சென்னை மாகாண கவர்னர் பவநகர் மகாராஜா தலைமையில் இவருக்கு ‘அரசவைக் கவிஞர்’ எனும் பதவி வழங்கப்பட்டது. 1956 ஆண்டிலும் பின்னர் 1962ஆம் ஆண்டிலும் தமிழக சட்ட மேலவை உறுப்பினராக இவர் செயல்பட்டார். 1971இல் இவருக்கு ‘பத்மபூஷன்’ விருது வழங்கப்பட்டது.

இவர் எழுதிய “மலைக்கள்ளன்” எனும் நெடுங்கதை கோவை பக்ஷிராஜா ஸ்டுடியோவினரால் திரைப்படமாக்கப் பட்டது. எம்.ஜி.ரமச்சந்திரன் பானுமதி நடித்த இந்தப் படம் பெரும் வெற்றியைப் பெற்ற ஒன்றாகும்.

சூரியன் வருவது யாராலே ?
சந்திரன் திரிவதும் எவராலே ?
காரிருள் வானில் மின்மினிபோல்
கண்ணிற் படுவன அவைஎன்ன ?
பேரிடி மின்னல் எதனாலே ?
பெருமழை பெய்வதும் எவராலே ?
யாரிதற் கெல்லாம் அதிகாரி ?
அதைநாம் எண்ணிட வேண்டாவோ ?

அல்லா வென்பார் சிலபேர்கள் ;
அரன் அரி யென்பார் சிலபேர்கள் ;
வல்லான் அவன்பர மண்டலத்தில்
வாழும் தந்தை யென்பார்கள் ;
சொல்லால் விளங்கா ‘ நிர்வாணம்’
என்றும் சிலபேர் சொல்வார்கள் ;
எல்லாமிப்படிப் பலபேசும்
ஏதோ ஒருபொருள் இருக்கிறதே !

அந்தப் பொருளை நாம்நினைத்தே
அனைவரும் அன்பாய்க் குலவிடுவோம்.
எந்தப் படியாய் எவர்அதனை
எப்படித் தொழுதால் நமக்கென்ன ?
நிந்தை பிறரைப் பேசாமல்
நினைவிலும் கெடுதல் செய்யாமல்
வந்திப் போம்அதை வணங்கிடுவோம் ;
வாழ்வோம் சுகமாய் வாழ்ந்திடுவோம்

எதைக் கேட்டாலும் இல்லையில்லை என்றும் சொல்லும் கண்மூடித்தனமான நாத்திகத்தையே பகுத்தறிவு என நினைக்கும் பலரின் மத்தியில் உண்மையான பகுத்தறிவு என்ன என்பதை விளக்கிட இதைவிடத் தெளிவான வெளிப்பாடு ஒன்று இருக்குமா எனத் தெரியவில்லை. பகுத்தறிவு மட்டுமல்லாமல், எல்லா மதங்களும் கூறும் உயர்வான பரம்பொருள் ஒன்றே என்பதையும் தெள்ளத்தெளிவாக விளக்கும் கவிதை இதுவே.

இவர் 1972ஆம் ஆண்டு ஆகஸ்ட் 24ஆம் தேதி இரவு 2 மணி அளவில்  மாரடைப்பு ஏற்பட்டு உயிரிழந்தார். தமிழ் கவிதைகளை ரசிப்பவர்கள் உள்ளமட்டும் நாமக்கல் கவிஞரும் உயிரோடுதான் இருப்பார்.

சனி, 20 செப்டம்பர், 2025

செப்டம்பர் 20 - தோழர் பி ராமமூர்த்தி பிறந்தநாள்

எல்லோரும் எல்லாமும் பெறவேண்டும்  இங்கு இல்லாமை இல்லாத நிலைவேண்டும்  
வல்லான் பொருள் குவிக்கும் தனியுடமை - நீங்கி  வரவேண்டும் திருநாட்டில் பொதுவுடமை 

இன்று உலகத்தின் சீண்டப்படாத சித்தாந்தமாக, பாரத தேசத்தில் பெருவாரியான மக்களால் கைவிடப்பட சித்தாந்தமாக இருக்கும் பொதுவுடமை சித்தாந்தம் சென்ற நூற்றாண்டில் உலகத்தின் மூன்றில் ஒரு பங்குக்கு மேலான நாடுகளில் ஆட்சி அதிகாரத்தில் இருந்த ஒன்றாகும். நேர்மையும் தியாகமும் பொருந்திய பலர் அந்த சித்தாந்தத்தின் தளகர்த்தார்களாக இருந்தனர். தமிழகத்தில் பிறந்து, பாரத நாட்டின் பொதுவுடமை சித்தாந்தத்தின் முக்கிய தலைவராக விளங்கிய தோழர் பி ராமமூர்த்தியின் பிறந்தநாள் இன்று.


1908ஆம் வருஷம் செப்டம்பர் மாதம் 20ஆம் தேதி வேப்பத்தூர் பஞ்சாபகேச சாஸ்திரி என்ற சம்ஸ்கிருத பண்டிதரின் மகனாகச் சென்னையில் பிறந்தவர். இவருக்கு மூன்று வயதாகும் போது பஞ்சாபகேச சாஸ்திரி காலமாகிவிட்டார். சென்னை திருவல்லிக்கேணி இந்து உயர்நிலைப் பள்ளியில் கல்வி பயின்றார். இளம் வயதில் சுப்பிரமணிய பாரதியின் கவிதைகளில் மனதைப் பறிகொடுத்து பாரதி பக்தரானார்.
  
1920இல் மகாத்மா காந்தி இந்திய இளைஞர்கள் கல்வி நிலையங்களை விட்டு வெளியேறி சுதந்திரப் போரில் கலந்து கொள்ள அழைப்பு விடுத்த போது, இவர் தனது படிப்பை நிறுத்திவிட்டு வட இந்தியா பயணமானார். வீட்டுக்குச் சொல்லாமல் வெளியேறி இவர் அலகாபாத் நகரத்தை அடைந்தார். வார்தா சென்று காந்திஜியைச் சந்தித்தார். அவருடைய ஆசிரமத்தில் சேர்த்துக் கொள்ள வேண்டினார். அப்போது அங்கு இருந்த ராஜாஜி, இவரை ஊருக்குப் போய் படிப்பை முடித்துவிட்டு வா என்று திரும்ப அனுப்பி வைத்தார். ஊர் திரும்பிய ராமமூர்த்தி 1926இல் பள்ளி இறுதி வகுப்பு தேறினார். சென்னை மாநிலக் கல்லூரியில் இண்டர்மீடியட் வகுப்பில் சேர்ந்தார். இவரது கவனம் அரசியலில் ஈடுபட்டதால் படிப்பு இவருக்குப் பிடிக்கவில்லை. மறுபடி இவர் வட இந்தியா சென்றார். காசியில் பனாரஸ் இந்து பல்கலைக் கழகத்தில் சேர்ந்து படித்தார். மதன்மோகன் மாளவியா எனும் பெரும் காங்கிரஸ் தலைவர் தொடங்கிய இந்தப் பல்கலைக் கழகம் இவரது அரசியல் ஆர்வத்துக்கு இடமளித்தது.

பனாரஸ் பல்கலைக் கழகத்தில் படித்து முடித்த பின் ராமமூர்த்தி அயல்நாட்டுப் பொருட்களை பகிஷ்கரிக்கும் போராட்டத்தில் கலந்து கொண்டு ஆறு மாத சிறை தண்டனை பெற்றார். 1932இல் சட்ட மறுப்பு இயக்கத்தை மகாத்மா காந்தி தொடங்கினார். அதில் ராமமூர்த்தி கலந்துகொண்டு ஒன்பது மாத சிறை தண்டனை பெற்றார்.

1929இல் லாஹூரில் நடந்த அகில இந்திய காங்கிரஸ் கமிட்டிக் கூட்டத்தில், 1933இல் கல்கத்தா நகரில் நடந்த அகில இந்திய காங்கிரஸ் மகாநாட்டில், அதன் பின் பாட்னாவில் நடந்த அகில இந்திய காங்கிரசிலும் என்று பல்வேறு  கட்சியின் வருடாந்திர மாநாடுகளிலும் ராமமூர்த்தி கலந்து கொண்டார்.

காங்கிரசுக்குள் இருந்த இடதுசாரி சோஷலிச சிந்தனையாளர்களை ஒன்று திரட்டி ஜெயப்பிரகாஷ் நாராயண் ஒரு கூட்டம் நடத்தினார், அதில் இராமமூர்த்தி கலந்து கொண்டார். 1936இல் இரண்டாவது காங்கிரஸ் சோஷலிஸ்ட் கட்சி மகாநாடு மீரட் நகரில் நடந்தது. அதில் ராமமூர்த்தி கலந்து கொண்டார். 1934இல் இந்திய கம்யூனிஸ்ட் கட்சி தடைசெய்யப்பட்டது. ஆகையால் அந்த கட்சி உறுப்பினர்கள் காங்கிரசுக்குள் காங்கிரஸ் சோஷலிஸ்ட் என்ற பெயரில் செயல்படத் துவங்கினர். சென்னை மாகாண காங்கிரஸ் சோஷலிஸ்ட் இயக்கத்தை ராமமூர்த்தி தொடங்கி வைத்தார். அந்த இயக்கம் சார்பில் பல்வேறு துறைகளில் பணியாற்றிய தொழிலாளர்களுக்குத் தொழிற்சங்கங்கள் உருவாகின. மெல்ல மெல்ல இவரது தொழிற்சங்க, அரசியல் பணி தமிழ்நாடு முழுவதும் பரவத் தொடங்கியது.

1937இல் இந்திய மாகாண சர்க்காருக்கு ஆங்காங்கே தேர்தல் நடந்தது. சென்னை மாகாண தேர்தலையொட்டி ஜவஹர்லால் நேரு சென்னை வந்தார். அவருடைய தேர்தல் கூட்டச் சொற்பொழிவை ராமமூர்த்தி மொழிபெயர்ப்பு செய்தார். அதற்காக அவர் கூட்டம் முடிந்த பின் கைது செய்யப்பட்டார். அந்தத் தேர்தலில் சென்னை மாகாணத்தில் காங்கிரஸ் கட்சி பெரு வெற்றி பெற்றது. இங்கு ராஜாஜி தலைமையில் மந்திரிசபை அமைக்கப்பட்டது.

1937இல் இவர் காங்கிரசை விட்டு வெளியேறி கம்யூனிஸ்ட் கட்சியில் இணைந்தார். 1939இல் அகில இந்திய காங்கிரஸ் தலைமைக்கு சுபாஷ் சந்திர போசுக்கும் பட்டாபி சீதாராமையாவுக்கும் இடையே போட்டி. மகாத்மா காந்தி பட்டாபியை ஆதரித்தார். நேதாஜி சுபாஷ் சந்திர போசுக்கு ஆதரவாக ராமமூர்த்தி சென்னை மாகாணத்தில் ஆதரவு திரட்டினார்.

1940இல் கம்யூனிஸ்டுகள் காங்கிரசிலிருந்து வெளியேற்றப்பட்டனர். யுத்த எதிர்ப்பு நடவடிக்கைகளுக்காக ராமமூர்த்தி கைது செய்யப்பட்டு வீட்டுக் காவலில் வைக்கப் பட்டார். சென்னை சதி வழக்கு ((II): சென்னை சதி வழக்கு என்ற ஒன்று 1932இல் நடைபெற்றது.  இது இரண்டாவது சதி வழக்கு. வீட்டுக் காவலில் இருந்த ராமமூர்த்தி தப்பி தலைமறைவானார். அங்கிருந்தபடி இவர் கட்சிப் பணியாற்றி வந்தார். தலைமறைவான கம்யூனிச தோழர்களை  கண்காணித்த போலீஸ் அவர்களில் பலரை கைது செய்து சிறைக்கு அனுப்பியது. இவர்கள் மீது ஒரு சதி வழக்கு பதிவாகியது. இதில் பல கம்யூனிஸ்ட் தலைவர்கள் கைதானார்கள். ஏ.எஸ்.கே.ஐயங்கார், மோகன் குமாரமங்கலம், உமாநாத், ராமமூர்த்தி போன்றவர்கள் இதில் அடக்கம். 1941இல் இவர்கள் எல்லோரும் பெல்லாரி சிறையில் அடைக்கப்பட்டார்கள். பெல்லாரி சிறை கொடுமையான சிறையாக இருந்த போதிலும் அங்கு ராமமூர்த்தி மற்ற கைதிகளை உட்காரவைத்து மார்க்சிசம் பற்றிய வகுப்புகள் எடுத்து வந்தார்.

1941இல் ஜெர்மனியின் நாசி ஹிட்லர் சோவியத் யூனியன் மீது படையெடுத்தார். அது வரை ஏகாதிபத்திய யுத்தம் என்று வர்ணிக்கப்பட்ட யுத்தம் இப்போது மக்கள் யுத்தம் என்று கம்யூனிஸ்ட் கட்சியினரால் பிரகடனப் படுத்தப் பட்டது. இதையொட்டி இங்கிலாந்து நாடு ஜெர்மனிக்கு எதிராக நடத்தும் போருக்கு கம்யூனிஸ்டுகள் ஆதரவு கொடுத்தனர். அதனால் கம்யூனிஸ்ட் கட்சியினர் அனைவரும் சிறையில் இருந்து விடுதலை செய்யப்பட்டனர்.

1946இல் கம்யூனிஸ்ட்டுகளை வெளியேற்ற காங்கிரஸ் தீர்மானம் நிறைவேற்றியது. 1946இல் ராமமூர்த்தி மதுரையில் மில் தொழிலாளர் வேலை நிறுத்தத்துக்கு ஏற்பாடு செய்து போராடினார்.  மதுரை சதி வழக்கு என்று ஒன்றை இவர் மீது பிரிட்டிஷ் அரசாங்கம் தொடுத்தது. அதிலும் இவர் விடுதலையாகி விட்டார். சுதந்திரம் வரும் நேரம் இவரும் சுதந்திரமாக வெளிவந்தார். சுதந்திரத்துக்குப் பிறகு கம்யூனிஸ்ட் கட்சி சென்னை மாகாணத்தில் தடை செய்யப்பட்டது. ராமமூர்த்தி மறுபடியும் தலைமறைவானார். இவர் கைது செய்யப்பட்டு மீண்டும் சிறையில் அடைக்கப் பட்டார்.

1952இல் முதல் சுதந்திர இந்திய தேர்தல். ராமமூர்த்தி மதுரை வடக்கிலிருந்து போட்டியிட்டு சிறையில் இருந்தபடி வெற்றி பெற்றார். அந்த தேர்தலில் காங்கிரசுக்கு சென்னை மாகாண சட்டசபையில் மெஜாரிடி கிடைக்கவில்லை. உடனே காங்கிரசார் ராஜாஜியை அழைத்து மந்திரிசபை அமைக்கச் சொன்னார்கள். அவரும் அமைத்து, சில எதிர் கட்சி உறுப்பினர்களைத் தன்னுடன் சேர்த்துக் கொண்டு அரசு செய்யலானார். பி.ராமமூர்த்திதான் எதிர் கட்சித் தலைவர். மாகாண முதல்வராக ராஜாஜியும், எதிர்கட்சி வரிசையில் ராமமூர்த்தி முதலான பிரபல கம்யூனிஸ்டுகளும், அந்தக் கால சட்டசபை நடவடிக்கைகளும், விவாதங்களும் போல இனி இருக்க முடியுமா? சந்தேகம்தான்.

1952இல் இவர் கலப்புத் திருமணம் செய்து கொண்டார். இவர்களுக்கு பொன்னி, வைகை என்று இரண்டு பெண்கள். பின்னர் பல சித்தாந்த போராட்டங்களுக்குப் பிறகு கம்யூனிஸ்ட் கட்சி இரண்டாக உடைந்தது. இவர் மார்க்சிஸ்ட் கட்சிக்குச் சென்றார். அங்கு தொழிற்சங்கம் அமைந்தது. சி.ஐ.டி.யு. என்பது அது. அதன் தலைவர்களில் ஒருவரானார் ராமமூர்த்தி.


ஆரிய மாயையா - திராவிட மாயையா ? விடுதலை போராட்டத்தில் தமிழகம் என்று பி ராமமூர்த்தி ஒரு புத்தகத்தை எழுதி உள்ளார். விடுதலை போராட்ட காலத்தில் நடந்த பல்வேறு தகவல்களை இதில் காணலாம்.

முதிர்ந்த வயதின் காரணமாக இவர் 1987, டிசம்பர் 15 அன்று காலமானார்.