ஞாயிறு, 14 ஜூன், 2020

தொழிலதிபர் குமார்மங்கலம் பிர்லா - ஜூன் 14

பாரம்பரியமிக்க குடும்பத்தில் பிறப்பது என்பது எப்படி ஒரு பெரும் வாய்ப்போ அதுபோலவே அது பெரும் சவால்கூட. குடும்பத்தின் பெருமையைக் காப்பதுவும், குடும்ப முன்னோர்களின் சாதனையைத் தாண்டிச் செல்வது என்பதும் மிகக் கடினமான ஓன்று. அந்த சவாலை சந்தித்து வெற்றிகரமாக விளங்கும் குமார்மங்கலம் பிர்லாவின் பிறந்தநாள் இன்று.


புகழ்பெற்ற பிர்லா குடும்பத்தின் நான்காம் தலைமுறை வாரிசு குமாரமங்கலம் பிர்லா. கொல்கத்தா நகரில் பிறந்த பிர்லா, மும்பையில் வளர்ந்தார். மும்பை பல்கலைக்கழகத்தில் இளங்கலைப் பட்டத்தைப் பெற்ற பிர்லா அதனைத் தொடர்ந்து லண்டன் மேலாண்மைக் கல்லூரியில் மேலாண்மைத் துறையில் முதுகலைப் பட்டத்தையும் பின்னர் பட்டயக் கணக்காளர் படிப்பையும் முடித்தார். 

பிர்லா குழுமத்தின் அன்றய தலைவரும், குமாரமங்கலம் பிர்லாவின் தந்தையுமான ஆதித்ய விக்ரம் பிர்லா புற்றுநோய் காரணமாக 1995ஆம் ஆண்டு தனது ஐம்பது ஒன்றாம் வயதில் மரணமடைய தனது இருபத்தி எட்டாம் வயதில் பிர்லா குழுமத்தின் தலைவராக குமாரமங்கலம் பிர்லா பொறுப்பேற்றுக் கொள்ள நேர்ந்தது. அவரது தலைமையில் பிர்லா குழுமம் இருபத்தி நான்கு ஆண்டுகளில் இரண்டு பில்லியன் அமெரிக்க டாலர் வியாபாரத்தில் இருந்து நாற்பத்தி எட்டு பில்லியன் அமெரிக்க டாலர் மதிப்புக்கு வளர்ச்சி அடைந்தது. 

அலுமினியம், தாமிரம், சிமெண்ட், துணிவகைகள், சூரிய மின்சக்தி, விவசாயப் பொருள்கள், தொலைத்தொடர்பு, சில்லறை வர்த்தகம், நிதி சம்மந்தமான சேவைகள் என்று பல்வேறு துறைகளில் பிர்லா குழுமத்தை முக்கியமான ஒன்றாக குமார்மங்கலம் பிர்லா மாற்றி உள்ளார். கடந்த இருபது ஆண்டுகளில் கனடா, சீனா, இந்தோனேசியா, ஆஸ்திரேலியா ஆகிய நாடுகளில் உள்ள  நாற்பது நிறுவனங்களை கையகப்படுத்தி பல துறைகளில் முக்கியமான நிறுவனமாக பிர்லா குழுமத்தை உயர்த்தி உள்ளார். நாற்பத்தி இரண்டு நாடுகளைச் சார்ந்த 1,20,000 தொழிலாளர்கள் பிர்லா குழுமத்தில் வேலை செய்கிறார்கள். 

தொழில் நிறுவனங்களை நடத்துவதோடு பிர்லா குழுமம் நாட்டில் பல முக்கியமான கல்வி நிலையங்களையும் நடத்தி வருகிறது. புகழ்வாய்ந்த பிர்லா தொழில்நுட்பக் கல்லூரியின் வேந்தராகவும் குமார்மங்கலம் பிர்லா பணியாற்றி வருகிறார். அஹமதாபாத் நகரில் உள்ள இந்திய மேலாண்மை கல்வி நிலையத்தின் நிர்வாகக் குழுவின் தலைவராகவும் அவர் உள்ளார். 

குமார்மங்கலம் பிர்லா முக்கியமான தொழிலதிபர் என்பதோடு தனது குழுமத்தின் மூலம் பல்வேறு சமுதாயப் பணிகளிலும் ஈடுபட்டு உள்ளார். ஏறத்தாழ ஐயாயிரம் கிராமங்களில் எழுபத்தி ஐந்து லட்சம் மக்களின் வாழ்வாதாரத்தை முன்னேற்றும் வகையில் கல்வி, சுகாதார வசதிகளை செய்து வருகிறார். நாற்பத்தி ஐயாயிரம் மாணவர்கள் படிக்கும் ஐம்பத்தி ஆறு பள்ளிகளையும் இருபத்தி இரண்டு மருத்துவமனைகளையும் பிர்லா குழுமம் சமுதாயத்தில் பொருளாதார ரீதியில் பிற்படுத்தப்பட்ட மக்களின் சேவைக்காக நடத்தி வருகிறது, இது போன்ற சேவைப் பணிகளுக்காக வருடம் ஒன்றுக்கு இருநூற்றி ஐம்பது கோடி ரூபாய்க்கும் அதிகமான பணம் செலவாகிறது. 

குமார்மங்கலம் பிர்லாவின் சாதனைகளை அங்கீகரிக்கும் வகையில் கர்நாடகாவில் உள்ள விஸ்வேஸ்வரய்யா தொழில்நுட்பப் பல்கலைக்கழகம், வாரணாசியில் உள்ள ஹிந்து சர்வகலாசாலை, கோவிந்தவல்லப பந்த் வேளாண்மை பல்கலைக்கழகம் ஆகிய பல்கலைக்கழகங்கள் அவருக்கு கௌரவ முனைவர் பட்டத்தை அளித்துள்ளன. 

பாரத நாட்டு இளைஞர்கள் தொழில் முனைவோர்களாக ஆகவும், அதில் வரும் பணத்தை சமுதாயப் பணிகளுக்காகச் செலவிடவும் குமார்மங்கலம் பிர்லா வழிகாட்டியாக விளங்குகிறார் என்றால் அது மிகையாகாது. 

தொழிலதிபர் குமார்மங்கலம் பிர்லா இன்னும் பல ஆண்டுகள் நீண்ட ஆயுளோடு வாழ்ந்து, நாட்டுக்கு சேவை புரிய வேண்டும் என்ற வேண்டுதலோடு அவருக்கு மனப்பூர்வமான வாழ்த்துகளை ஒரே இந்தியா தளம் தெரிவித்துக் கொள்கிறது.