வெள்ளி, 19 ஜூன், 2020

சீக்கியர்களின் ஆறாவது குரு ஹர் கோபிந்த் பிறந்த நாள் - ஜூன் 19.


சீக்கியர்களை போர்க்குணம் கொண்ட இனக்குழுவாக வடிவமைத்த குரு ஹர்கோபிந்த் அவர்களின் பிறந்த தினம் இன்று. சீக்கியர்களின் ஐந்தாவது குருவான அர்ஜன் தேவ் அவர்களின் மகனாக 1595ஆம் ஆண்டு பிறந்தவர் இவர். குரு அர்ஜன் தேவ் அவர்களின் பலிதானத்திற்குப் பிறகு சீக்கியர்களின் குருவாக ஹர்கோபிந்த் தனது பதினோராம் வயதில் பதவி ஏற்றார்.

கொடுமையான சித்திரவத்தையினால் குரு அர்ஜன்தேவ் மரணமடைய, பெரும்பலம் வாய்ந்த மொகலாய சாம்ராஜ்ஜியத்தை எதிர்த்து நிற்க சீக்கியர்கள் உறுதி பூண்டனர். அந்த எண்ணத்தை ஆற்றுப்படுத்தி, தொடர்ந்த பயிற்சிகள் மூலம் சீக்கியர்களை போர்க்குணம் கொண்ட இனமாகிய பொறுப்பு குரு ஹர்கோபிந்த் அவர்கள் மீது விழுந்தது. அதுவரை ஹிந்து சமுதாயத்தில் உள்ள ஒரு ஜாதி வேறுபாடுகளை களையும் அமைப்பாக இருந்த சீக்கியம் இவர் காலத்திலேயே தனக்கான ஒரு தனி அடையாளத்தைக் கைகொள்ளத் தொடங்கியது.

தன்னைக் காப்பாற்றிக்கொள்ள ஒரு மெய்காவல் படையை உருவாக்கிக் கொள்ளவும், மொகலாய அடக்குமுறையில் இருந்த மக்களைக் காக்க ஆயுதம் எந்த எப்போதும் தயாராக இருக்கவும் குரு அர்ஜன் தேவ் இவருக்கு ஆணையிட்டார். அதன் படி எழுநூறு குதிரைகள் கொண்ட படையையும், அறுபது பேர் கொண்ட பீரங்கி படையையும் குரு ஹர்கோவிந்த் உருவாக்கினார். குரு எப்போதும் இரண்டு வாள்களை அணிந்து இருந்தார், அதில் ஓன்று இவ்வுலக அதிகாரத்தையும், மற்றொன்று அவரது ஆன்மீக அதிகாரத்தையும் குறித்தது. அம்ரித்ஸர் நகரைச் சுற்றி குரு கோட்டையை எழுப்பினார். பொற்கோவிலில் உள்ள ஹர்மந்தர் சாஹிப் இவரால் உருவாக்கப் பட்டது. இந்தியாவின் பல்வேறு பகுதிகளுக்கு சுற்றுப்பயணம் செய்து குரு சீக்கிய மதத்தைப் பரப்பினார்.

வளர்ந்து வரும் சீக்கிய மதத்தையும், அவர்களின் ராணுவ பலத்தையும் கண்டு பொறாமல் முகலாய மன்னர் ஜஹாங்கிர் குருவை குவாலியர் கோட்டையில் சிறை வைத்தார். ஆனால் அப்போது லாகூர் நகரில் ஆளுநராக இருந்த வாஜிர் கான் மற்றும் குருவின் நண்பர்கள் ஜஹாங்கீரின் மனதை மாற்றி குருவை விடுவிக்க வைத்தனர். ஆனால் குரு ஹர்கோவிந்த் தன்னோடு சிறையில் இருந்த 52 ஹிந்து மன்னர்களையும் விடுவிக்கவேண்டும் என்று வேண்டுகோள் விடுத்து, அவர்களையும் விடுவிக்க வைத்தார். விடுதலையான குரு அம்ரித்ஸர் நகருக்கு வந்தது ஒரு தீபாவளி நாள் அன்று. அதனால் இன்றும் சீக்கியர்கள் தீபாவளியை சிறப்பாகக் கொண்டாடுகின்றனர்.

ஜஹாங்கீருக்கும் சீக்கியர்களுக்கு ஏற்பட்ட நல்லுறவு சிலகாலமே நீடித்தது. புதிதாக பதவிக்கு வந்த ஷாஜஹான் மீண்டும் சீக்கியர்களோடு மோத ஆரம்பித்தார். தொடர்ச்சியான போராட்டங்கள் ஆரம்பமானது. முழுமையாக இஸ்லாமும் சீக்கியமும் எதிர் அணிகளில் இருப்பதற்கான விதை ஷாஜஹானால் ஊன்றப்பட்டது.

வெளிப்பார்வைக்கு மன்னன், ஆனால் உள்ளுக்குள் துறவி, எளியவர்களைக் காக்கவும், தீயவர்களை அழிக்கவும் ஆயுதம் ஏந்திய வீரன், உலகத்தைத் துறக்காமல் மாயையைத் துறந்த குரு என்று தன்னை பிரகடம் செய்துகொண்ட குரு தனது 48ஆவது வயதில் காலமானார்.

எத்தனையோ குருமார்கள் இந்த மண்ணில் அவர்கள் அனைவருக்கும் எங்கள் வணக்கங்கள்