செவ்வாய், 31 டிசம்பர், 2019

அறிவியல் தமிழ் வளர்த்த பெ நா அப்புஸ்வாமி பிறந்தநாள் - டிசம்பர் 31.

சென்றிடுவீர் எட்டுத் திக்கும் -கலைச் செல்வங்கள் யாவும் கொணர்ந்திங்கு சேர்ப்பீர். 
பிறநாட்டு நல்லறிஞர் சாத்திரங்கள் தமிழ்மொழியில் பெயர்த்தல் வேண்டும்
இறவாத புகழுடைய புதுநூல்கள் தமிழ்மொழியில் இயற்றல் வேண்டும் 
என்று முழங்கிய பாரதியின் கனவை நிறைவேற்றும் வண்ணம் எளிய தமிழில் அறிவியலை பொதுமக்களுக்குக் கொண்டு சேர்த்த அறிஞர் பெருங்குளம் யக்ஞ நாராயண அப்புஸ்வாமி என்ற பெ நா அப்புஸ்வாமியின் பிறந்ததினம் இன்று.


இன்றய தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த, நவதிருப்பதி திவ்ய தேசங்களில் ஒன்றான பெருங்குளம் கிராமத்தைச் சார்ந்த நாராயண ஐயர் - அம்மாகுட்டி ஆகியோரின் மகனாக 1891ஆம் ஆண்டு டிசம்பர் 31ஆம் நாள் பிறந்தவர் பெ நா அப்புஸ்வாமி அவர்கள். சட்டப் படிப்பை முடித்த அப்புஸ்வாமி சென்னை உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பணியாற்றிவந்தார். இவரது நெருங்கிய உறவினரும், தமிழ் புதினத்தில் முன்னோடியான அ மாதவையாதான் அப்புஸ்வாமியை எழுதத் தூண்டியவர். நான் முறையாகத் தமிழ் படித்தவன் அல்ல,  என் மனைவிக்குக் கூட இதுவரை ஒரு காதல் கடிதம் எழுதியவன் அல்ல, நான் எப்படி தமிழில் எழுத என்று அப்புஸ்வாமி குழம்பி நின்றபோது, " உங்கள் வீட்டில் தமிழ் புத்தகங்கள் பல உண்டு, நீ அதனைப் படித்திருக்கிறாய், தமிழ் அறிஞர்கள் பலர் உன் நண்பர்கள், தயங்காமல் எழுது, தேவையென்றால் அதனை நான் திருத்திக் கொள்கிறேன்" என்று கூறி அப்புஸ்வாமியை ஆற்றுப்படுத்தியவர் அ மாதவையாதான்.

இப்படித் தயங்கி நின்ற அப்புஸ்வாமிதான் நூற்றுக்கும் மேலான புத்தகங்களை, ஐயாயிரத்திற்கும் மேலான கட்டுரைகளை எழுதிக் குவித்தார். தமிழில் இருந்து ஆங்கிலத்திற்கும், ஆங்கிலத்தில் இருந்து தமிழுக்கும் என்று பல்வேறு கட்டுரைகளை மொழிபெயர்த்து பிரசுரித்தார்.  இவரது கட்டுரைகள் கலைமகள், கலைக்கதிர், ஆனந்த விகடன், வீரகேசரி, தினமணி ஆகிய இதழ்களில் தொடர்ந்து வெளிவந்தன. கலைமகள் இதழின் ஆரம்ப காலத்தின் பொறுப்பாசிரியராகவும் இவர் இருந்தார்.

கா சுப்ரமணிய பிள்ளை, கே ஏ நீலகண்ட சாஸ்திரி, வையாபுரிப் பிள்ளை, பி ஸ்ரீ ஆச்சாரியா ஆகிய அறிஞர்கள் அப்புஸ்வாமியின் உடன் பயின்றவர்கள். அதுபோக உ வே சாமிநாத ஐயருடனும் அப்புஸ்வாமிக்கு நெருக்கமான தொடர்பு இருந்தது. ஒவ்வொரு வாரமும் இவரது இல்லத்தில் ராஜாஜி, டி.கே.சி, கல்கி, எஸ்.வையாபுரிப்புள்ளை, வாசன், ஏ.என்.சிவராமன், கி.வா.ஜ.,  ராகவ அய்யங்கார், ரா.பி.சேதுபிள்ளை. அ.சீனிவாசராகவன், கி.பட்சிராஜன், ஆர்.ராகவ அய்யங்கார், டி.எல்.வெங்கட்ராம அய்யங்கார், நாராயணசாமி அய்யங்கார் ஆகியோர் கூடி தமிழ் இலக்கியங்களையும், தமிழ் ஆராய்ச்சி பற்றிய கருத்துகளையும் பரிமாறிக்கொள்வார்கள்.

தனது  இருபத்தி ஆறாம் வயதில் எழுதத் தொடங்கிய பெ நா அப்புஸ்வாமி தனது தொன்னூற்றி ஐந்தாம் வயதில் அதாவது 1986ஆம் ஆண்டு மே மாதம் 16ஆம் நாள் இறக்கும் வரை எழுதிக்கொண்டு இருந்தார். தான் எழுதிய ஒரு கட்டுரையை ஹிந்து பத்திரிகைக்கு அஞ்சலில் சேர்த்து விட்டு வரும் போதுதான்  இறந்தார்.

அற்புத உலகம், மின்சாரத்தின் கதை, வானொலியும் ஒலிபரப்பும், அணுவின் கதை, ரயிலின் கதை, அறிவியல் கதைகள்  என்று ஐம்பதுகளில் அறுபதுகளில் எளிய மொழியில் அறிவியலை தமிழர்களுக்கு அறிமுகம் செய்த  பெருமை அப்புஸ்வாமிக்கே சேரும். சிறுவர்களுக்காக சித்திர விஞ்ஞானம், சித்திர வாசகம், சித்திர கதைப் பாட்டு என்ற நூல்களையும் இவர் எழுதி உள்ளார். அதுமட்டுமல்ல நாம் வாழும் உலகம் கம்ப்யூட்டர் மயமாகி வருகிறது என்று எழுபதுகளின் தொடக்கத்திலேயே அப்புஸ்வாமி சரியாக கணித்து கூறுகிறார்.

அணுப்பிளவு (Atomic Fission), துணைக்கோள் (Satellite), நுண்ணணு, மின்னணு (Electron) , புத்தமைப்பு (Invention), மூலகம் (Element), வார்ப்படச்சாலை (Foundry), நுண்ணோக்கி (Microscope), கதிரியக்கம் (Radiation), உந்து கருவி (Rocket), அங்கக ரசாயணம் (Organic Chemistry), துரிதகாரி (Accelerator), கணையம் (Pancreas), பொங்கியெழு கேணி (Artesian Well),  அறிவிக்குறி எண் (Intelligent Quotient) என்று மிக இயல்பாக அறிவியல் சொற்களுக்கு இணையான தமிழ் சொற்களை அப்புஸ்வாமி பயன்படுத்தி உள்ளார்.

ஆங்கிலத்திலும் புலமை பெற்ற அப்புஸ்வாமி பல்வேறு சங்கப் பாடல்களையும், பாரதியின் பாடல்களையும் ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து உள்ளார். இவ்வளவு எழுதிக் குவித்த பெ நா அப்புஸ்வாமி பெருமளவில் அங்கீகாரம் அடையவில்லை. அவரின் அறிவை ஆட்சியில் இருந்த திராவிட கட்சிகள் மதிக்கவில்லை. ஆனாலும் பலனின் மீது பற்று வைக்காமல், தனது பணியை வாழ்வின் இறுதிநாள்வரை செய்து கொண்டே இருந்தார் திரு பெ நா அப்புஸ்வாமி அவர்கள்.

அப்புஸ்வாமியின் மகள் திருமதி அம்மணி சுப்பிரமணியம் திருநெல்வேலி காந்திமதி அம்பாள் பள்ளியின் முதல்வராகப் பணியாற்றியவர். அவரின் மருமகன் வழக்கறிஞர் திரு எஸ் ஜி சுப்பிரமணியம் ஆர் எஸ் எஸ் இயக்கத்தின் திருநெல்வேலி மாவட்ட சங்கசாலக்காக இருந்தவர்.

திங்கள், 30 டிசம்பர், 2019

குலபதி முன்ஷி பிறந்தநாள் - டிசம்பர் 30

வழக்கறிஞர், சுதந்திரப் போராட்ட வீரர், நாடாளுமன்ற உறுப்பினர், பாரத அரசியலமைப்பு சட்டத்தை வடிவமைத்த குழுவின் உறுப்பினர், எழுத்தாளர், பாரதிய வித்யா பவன் கல்வி நிறுவனத்தைத் தொடங்கியவர் என்று பல்முக ஆளுமையாக விளங்கிய கனையாலால் மனேக்லால் முன்ஷி என்ற குலபதி முன்ஷியின் பிறந்தநாள் இன்று.குஜராத் மாநிலத்தின் பரூச் பகுதியைச் சேர்ந்த முன்ஷி 1887ஆம் ஆண்டு டிசம்பர் 30ஆம் நாள் பிறந்தவர். பரோடா கல்லூரியில் இளங்கலை ஆங்கில இலக்கியத்திலும், பின்னர் மும்பை சட்டக் கல்லூரியில் சட்டப் படிப்பையும் முடித்த முன்ஷி மும்பை உயர்நீதி மன்றத்தில் வழக்கறிஞராகப் பணியாற்றத் தொடங்கினார். பரோடாவில் இவரது ஆசிரியராக இருந்தவர் மஹரிஷி அரவிந்த கோஷ் அவர்கள். முன்ஷியின் மனதில் தேசபக்தியை விதைத்தது அரவிந்தரே ஆவார்.

மும்பையில் பணியாற்றிக்கொண்டு இருந்த போது முன்ஷி, ஹோம் ரூல் இயக்கத்தில் தீவிரமாக ஈடுபடத் தொடங்கினார். 1920ஆம் ஆண்டு அஹமதாபாத் நகரத்தில் சுரேந்திரநாத் பானர்ஜி தலைமையில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில் கலந்து கொண்டு அதன் பின்னர் காங்கிரஸ் இயக்கத்திலும் பணியாற்றினார். 1927ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் பம்பாய் ராஜதானியின் சட்டசபை உறுப்பினராக முன்ஷி தேர்ந்ததெடுக்கப்பட்டார். பர்தோலி சத்தியாகிரஹப் போராட்டத்தைத் தொடர்ந்து முன்ஷி அந்தப் பதவியை ராஜினாமா செய்தார்.

சட்ட மறுப்பு இயக்கம், தனிநபர் சத்தியாகிரஹம் போன்ற போராட்டங்களில் கலந்து கொண்டு பல்வேறு முறை சிறையானார். அன்றய ஐக்கிய மஹாராஷ்டிரா பகுதியின் முக்கியமான தலைவராக காங்கிரஸ் கட்சியால் இனம் காணப்பட்ட முன்ஷிக்கு பல்வேறு கட்சிப் பொறுப்புகள் வரத் தொடங்கின. காங்கிரஸ் காரிய கமிட்டி உறுப்பினர், காங்கிரஸ் பாராளுமன்ற குழுவின் செயலாளர் என்ற பொறுப்புகளும், மஹாராஷ்டிர மாநிலத்தின் உள்துறை அமைச்சர் பதவியும் முன்ஷியைத் தேடி வந்தது. சிறிதுகாலம் காங்கிரஸ் கட்சியில் இருந்து விலகி இருந்த முன்ஷியை, காந்தி வற்புறுத்தி மீண்டும் கட்சியில் இணைய வைத்தார்.

நாடு சுதந்திரம் அடையும் சமயத்தில், முன்ஷி அரசியலமைப்பு நிர்ணய சபைக்கு தேர்ந்தெடுக்கப்பட்டார். நாட்டின் அரசியலமைப்பு சட்டத்தை உருவாக்கிய ஏழு உறுப்பினர் அடங்கிய குழுவின் உறுப்பினராகவும் முன்ஷி பணியாற்றனார். நாட்டின் அலுவல் மொழியாக தேவநாகரி எழுத்தில் எழுதப்படும் ஹிந்தி இருக்கும், பதினைந்து ஆண்டுகளுக்கு ஆங்கிலமும் இணைப்பு மொழியாக இருக்கும்  என்று வரையறை செய்த அரசியலமைப்பின் 17ஆவது பிரிவு என்பது முன்ஷி - கோபால்சாமி ஐயங்கார் ஆகியோரால் உருவாக்கப்பட்ட ஒப்பந்தத்தின் அடிப்படையிலேயே அமைந்த ஒன்றாகும். அரசியலமைப்பு சட்டம் வரையறுக்கும் அடிப்படை உரிமைகள் பற்றிய பகுதிகள் முன்ஷியால் முன்னெடுக்கப்பட்டவைதாம்.

அந்நிய ஆக்கிரமிப்பாளர்களால் இடிக்கப்பட சோமநாதபுர ஆலயத்தை மீண்டும் புதுப்பிக்க சர்தார் வல்லபாய் படேல் முடிவு செய்தார். ஆனால் அந்தப் பணி முடியும் முன்னரே படேல் இறந்து போக, அந்தப் பணியை முன்ஷி தொடர்ந்தார், இன்று சோமநாதபுரத்தில் சிவனின் ஆலயம் எத்தனை முறை ஆக்கிரமிக்கப்பட்டாலும் மீண்டும் தன்னைத்தானே புதுப்பித்துக் கொள்ளும் பாரத ஆன்மாவின் குறியீடாக கம்பீரமாக காட்சி அளிக்கிறது.

1950 - 1952 ஆண்டுகளில் இடைக்கால அரசின் விவசாயம் மற்றும் உணவுத்துறை மந்திரியாக முன்ஷி நியமிக்கப்பட்டார். நாடெங்கும் நடைபெறும் மரம் நடு விழாவான வனமஹோஸ்தவம் முன்ஷியின் திட்டமே ஆகும். 1952 முதல் 1957ஆம் ஆண்டு வரை உத்திரப்பிரதேசத்தின் ஆளுநராகவும் முன்ஷி பணியாற்றினார். நாட்டின் முன்னேற்றம் சோசலிசத்தின் மூலமாகவே நடைபெறும் என்று நேரு எண்ணினார். ஆனால் தாராள பொருளாதாரத் கொள்கைதான் பலன் அளிக்கும் என்று எண்ணிய முன்ஷி, ராஜாஜி தொடங்கிய ஸ்வதந்தரா கட்சியில் இணைந்து கொண்டார். ராஜாஜியின் மறைவுக்குப் பின்னர் ஸ்வதந்திரா கட்சி செயல்படாமல் போக, முன்ஷி ஜனசங் கட்சியில் இணைந்து செயல்பட்டார். சங்கத்தின் முக்கியமான சகோதர அமைப்பான விஸ்வ ஹிந்து பரிஷத்தின் நிறுவனர்களில் முன்ஷியும் ஒருவர்.

நெடுங்காலம் அரசியலில் இருந்தாலும், கல்விப் புலத்திலும், இலக்கியத்திலும் முன்ஷியின் பங்களிப்பு மகத்தானது. மும்பை பல்கலைக்கழகத்தின் செனட் உறுப்பினராகவும், பல்வேறு கல்வி நிறுவனங்களின் வழிகாட்டியாகவும் முன்ஷி செயல்பட்டார். அவர் தொடங்கிய பாரதிய வித்யா பவன் நிறுவனம் இன்று நாட்டின் முன்னணி கல்வி நிறுவனங்களில் ஒன்றாக விளங்குகிறது.

ஹிந்தி, ஆங்கிலம் மற்றும் குஜராத்தி மொழிகளில் பல்வேறு புத்தகங்களை முன்ஷி எழுதி உள்ளார். கிருஷ்ணாவதார் என்ற ஏழு பகுதிகள் கொண்ட மஹாபாரதம் பற்றிய தொகுப்பு அவர் எழுதியதில் முக்கியமான ஒன்றாகும்.

பல்வேறு ஆசிரியர்களைக் கொண்டு பல்லாயிரம் மாணவர்களுக்கு கல்வி கற்பிக்கும் குருமார்களை குலபதி என்று பெருமையாக அழைப்பது நமது வழக்கம். அப்படியான கல்வி சேவையைச் செய்ததால் முன்ஷியை நாடு குலபதி முன்ஷி என்று கொண்டாடுகிறது.

எண்பத்தி மூன்று ஆண்டுகள் வாழ்ந்து நாட்டுக்கு பெரும் சேவையாற்றிய குலபதி முன்ஷி 1971ஆம் ஆண்டு பிப்ரவரி 8ஆம் நாள் காலமானார். சோமநாதபுர ஆலயம் உள்ளவரை, பாரதிய வித்யா பவன் கல்வி நிறுவனங்கள் உள்ளவரை முன்ஷியும் இருப்பார் என்பதில் ஐயமில்லை. 

ஞாயிறு, 29 டிசம்பர், 2019

உமேஷ் சந்திர பானெர்ஜி பிறந்ததினம் - டிசம்பர் 29

பத்தொன்பதாம் நூற்றாண்டில் பாரத நாட்டின் சிந்தனைப் போக்கை வங்காள மாநிலமே வடிவமைத்தது. பிரிட்டிஷ் இந்தியாவின் தலைநகரமாக கொல்கத்தா நகரம் இருந்தது. பாரத சிந்தனையை மேற்கத்திய அறிவுப் புலத்தோடு இணைத்து நாட்டில் மறுமலர்ச்சியைத் தொடங்கிய அறிஞர்கள் பலர் வங்காளத்தில் தோன்றினார்கள். இயல்பாகவே அந்த சிந்தனை தேச முன்னேற்றத்திலும், தேச விடுதலைக்கும் வித்திட்டது. அப்படி வங்காளத்தில் தோன்றிய தலைவர்களில் முக்கியமானவரான திரு உமேஷ் சந்திர பந்தோபாத்தியா  அவர்களின் பிறந்ததினம் இன்று.


1844ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 29ஆம் நாள் பிறந்த உமேஷ் சந்திரா தனது பள்ளிப்படிப்பை முடித்த பின்னர் தனது பதினெட்டாம் வயதில் 1862ஆம் ஆண்டு W P கிலாண்டர்ஸ் என்ற வழக்கறிஞரின் உதவியாளராகச் சேர்ந்தார். பணிபுரிந்த இரண்டு ஆண்டுகளில் சட்டம் பற்றிய புரிதல் அவருக்கு ஏற்பட்டது. 1864ஆம் ஆண்டு சட்டம் படிக்க உமேஷ் சந்திரா இங்கிலாந்து சென்றார். 1867ஆம் ஆண்டு தனது சட்டப்படிப்பை வெற்றிகரமாக முடித்து அவர் இங்கிலாந்து நாட்டில் சட்டத்துறையில் பணியாற்றும் தகுதியைப் பெற்றார். 1868ஆம் ஆண்டு நாடு திரும்பிய உமேஷ் சந்திரா கொல்கத்தா உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞராகப் பணியாற்றத் தொடங்கினார். மிகக் குறுகிய காலத்தில் கொல்கத்தா நகரின் முக்கியமான வழக்கறிஞர்களில் ஒருவராக உமேஷ் சந்திரா அறியப்படலானார். 1882 ஆம் ஆண்டு அவர் அரசு வழக்கறிஞராக நியமிக்கப்பட்டார். அரசு வழக்கறிஞராக நியமிக்கப்பட்ட முதல் பாரத வழக்கறிஞர் உமேஷ் சந்திராதான். உமேஷ் சந்திரா கொல்கத்தா பல்கலைக்கழகத்தின் சட்டத்துறை தலைவராகவும், அன்றய சட்டசபையின் உறுப்பினராகவும் செயல்பட்டார்.

பொதுவாகவே சட்டத்துறையில் இருப்பவர்கள்தான் அரசியலில் ஈடுபாடு காட்டுவார்கள். உமேஷ் சந்திராவும் அதில் விலக்கல்ல. கிழக்கிந்திய கம்பனியின் கொடுமை தாங்காது பாரத மக்கள் புரட்சியில் ஈடுபட்டனர். இந்தியாவின் முதல் சுதந்திரப் போர் நாட்டின் பெரும்பான்மையான இடங்களில் நடைபெற்றது. அதனைத் தொடர்ந்து பாரத நாட்டின் ஆட்சியை ஆங்கில அரசு நேரடியாக நிர்வகிக்கத் தொடங்கியது. மீண்டும் ஒரு புரட்சி வெடித்து விடாமல் இருக்கவும், மக்களின் எண்ணத்தை கோரிக்கை மூலம் ஆங்கில அரசுக்குத் தெரியப்படுத்தவும் இந்திய தேசிய காங்கிரஸ் என்ற அமைப்பு உருவானது. காங்கிரஸின் முதல் மாநாடு 1885ஆம் ஆண்டு மும்பை நகரில் நடைபெற்றது. அதன் தலைவராக உமேஷ் சந்திர பானர்ஜி தேர்ந்தெடுக்கப்பட்டார். இருபதே ஆண்டுகளில் நாட்டின் விடுதலையை முன்னெடுக்கும் இயக்கமாக காங்கிரஸ் மாறியது.

காங்கிரஸ் அமைப்பின் இரண்டாவது மாநாடு 1886ஆம் ஆண்டு மும்பையில் நடைபெற்றது. அதன் தலைவராக தாதாபாய் நௌரோஜி தேர்வானார். இந்த மாநாட்டில் மாகாணவாரியாக காங்கிரஸ் அமைப்பு உருவாக்கப்பட வேண்டும் என்ற கருத்தை உமேஷ் சந்திர பானர்ஜி தெரிவித்தார். காங்கிரஸ் அரசியல் சார்ந்து மட்டுமே இயங்கவேண்டும், சமுதாய சீர்திருத்தங்களை மற்ற அமைப்புகள் செயல்படுத்தவேண்டும் என்றும் அவர் கூறினார். 1892ஆம் ஆண்டு ப்ரயக்ராஜ் நகரில் ( அன்றய அலஹாபாத் ) நகரில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டின் தலைவராகவும் உமேஷ் சந்திரா செயல்பட்டார்.

பின்னர் இங்கிலாந்து நாட்டில் வசிக்கத் தொடங்கிய உமேஷ் சந்திரா அங்கே ப்ரிவி கவுன்சில் அமைப்பில் வழக்கறிஞராகப் பணியாற்றத் தொடங்கினார். இங்கிலாந்து நாட்டின் நாடாளுமன்றத்திற்கு போட்டியிட்டு தோல்வி அடைந்தார். அதே தேர்தலில் தாதாபாய் நௌரோஜி வெற்றி பெற்று ஆங்கில நாடாளுமன்றத்தின் முதல் இந்திய உறுப்பினர் என்ற பெருமையை அடைந்தார்.

சுதந்திரத்திற்கு முற்பட்ட காலத்தின் முக்கிய தலைவராக விளங்கிய உமேஷ் சந்திர பானெர்ஜி 1906ஆம் ஆண்டு ஜூலை 21ஆம் நாள் இங்கிலாந்து நாட்டில் காலமானார்.

நாட்டின் முதுபெரும் தலைவருக்கு ஒரே இந்தியா தளம் தனது வணக்கங்களைத் தெரிவித்துக் கொள்கிறது. 

சனி, 28 டிசம்பர், 2019

ஒரு கனவின் கதை திருபாய் அம்பானி பிறந்தநாள் - டிசம்பர் 28

ஒரு நாட்டின் அரசியல் வரலாற்றில் ஒரு நிறுவனத்திற்கு என்ன பங்கு இருக்க முடியும் ? அரசாங்கங்களை உருவாக்கவும், கவிழ்க்கவும், அரசின் கொள்கை முடிவுகளை தங்களுக்குச் சாதகமாக உருவாக்கவும், கொள்கை முடிவு எடுக்கவேண்டிய அரசு அதிகாரிகளை வளைக்கவும், தங்களுக்கு தேவையான அதிகாரிகளை தேவைப்படும் பதவியில் அமர்த்தவும் ஒரு நிறுவனத்தால் முடியுமா ?


ஒருபுறம் பார்த்தால் மிக எளிய குடும்பப் பின்னணியில் இருந்து வந்து, ஆரம்பகாலத்தில் எதோ ஒரு வெளிநாட்டில் ஒரு சாதாரண வேலையில் தனது வாழ்க்கையைத் தொடங்கி, நூல் மற்றும் துணி விற்பனையில் நுழைந்து, தனது ஆயுள்காலத்தில் ஒரு மகத்தான வணிகசாம்ராஜ்யத்தைக் கட்டிக் காட்டிய தனிமனிதன்

மறுபுறமோ, எந்தவிதமான  நெறிமுறைகளுக்கும் அடங்காது, எல்லாச் சட்டத்தையும் தனக்கு சாதகமாக வளைத்த பேராசை படைத்த, தனக்குப் போட்டியாக வருவார்கள் என்று தோன்றிய பிற  தொழில் செய்பவர்களை அரசின் துணையோடு மீள முடியாத சிக்கல்களில் தள்ளிய இரக்கமற்ற ஒருவன்.

மற்றொருபுறம், மிகப் பெரிய அளவில்  இந்திய மத்தியத்தர மக்களை பங்குச்சந்தையில் பணம் உருவாக்க முடியும் என்று காட்டிய ஆசான்.

இப்படி பார்ப்பவர் கோணத்திற்கு ஏற்ப அமைந்த வாழ்வின் கலவைதான் திருபாய் அம்பானி. 1932ஆம் ஆண்டு பிறந்து எழுபது ஆண்டுகள் வாழ்ந்து 2002இல் மரணமடைந்த திருபாய் அம்பானியின் மிக முக்கியமான நிகழ்வுகள் எல்லாம் அவரது வாழ்க்கையின்  கடைசி முப்பது ஆண்டுகளில் நடந்தன, அந்தக் காலகட்டத்தில் அவர் விஸ்வரூபம் எடுத்தார்.

திருபாய் என்று அன்புடன் அழைக்கப்படும், தீரஜ்லால் ஹிராசந்த் அம்பானி 28.12.1932 அன்று குஜராத் மாநிலம் சோர்வாத் அருகேயுள்ள குகாஸ்வாடாவில் 28 டிசம்பர், 1932 அன்று நடுத்தர வர்க்க மோத் குடும்பத்தில் ஹீராசந்த் கோர்தன்பாய் அம்பானிக்கும், ஜமுனாபென்னுக்கும் மகனாய்ப் பிறந்தார்.

ஹீராசந்த் கிராமத்தில் பள்ளி ஆசிரியராய் இருந்தார். 16 வயதானபோது, அம்பானி ஏமனுக்கு சென்று விட்டார். அங்கு 300 ரூபாய் சம்பளத்தில் ஏ.பெஸி & கோ. நிறுவனத்தில் வேலை பார்த்தார். இரண்டு வருடங்களுக்குப் பின், ஏ. பெஸி & கோ. நிறுவனம் ஷெல் தயாரிப்புகளின் விநியோகஸ்தர்களாக ஆகினர். ஏடன் துறைமுகத்தில் நிறுவனத்தின் நிரப்பும் நிலையத்தை நிர்வகிக்கும் பொறுப்புக்கு திருபாய் அம்பானி உயர்த்தப்பட்டார். சாதாரண மனிதர்கள் படிப்படியாக உயர்ந்து தான் வேலை செய்யும் நிறுவனத்தில் முக்கியப் பதவிக்கு வரவேண்டும் என்றுதான் நினைப்பார்கள். ஆனால் அம்பானியோ தான் இதுபோன்ற ஒரு என்னை சுத்திகரிக்கும் ஆலையை நிறுவவேண்டும் என்று நினைத்தார். கனவு காண்பதில், அதிலும் மிகப் பிரமாண்டமான கனவுகளைக் காண்பதிலும், அதனை நினைவாக்கிக் காட்டுவதிலும் அம்பானியைப் போன்ற ஒருவரை இனம் காணுவது மிகக் கடினம்.

தனது உறவினர் ஒருவரோடு இணைந்து மும்பை நகரில் பாலிஸ்டர் நூல் இறக்குமதியையும், மிளகாய் ஏற்றுமதியையும் செய்யத் தொடங்கிய அம்பானி பின்னர் ரிலையன்ஸ் இண்டஸ்ட்ரீஸ் என்ற நிறுவனத்தைத் தனியாகத் தொடங்கினார். தனது அண்ணன் மகனின் பெயரால் விமல் என்ற துணி விற்பனையை ஆரம்பித்தார் அம்பானி. தனது விற்பனையாளர்கள் லாபம் அடைவதை எப்போதும் உறுதி செய்ததால், அம்பானியின் தொழில் கூட்டாளிகள் இன்றும் ரிலையன்ஸ் குழுமத்தோடு இணைந்தே உள்ளனர்.

துணிக்குப் பிறகு பாலிஸ்டர் இழைகளை உருவாக்குவதிலும், அதன் பின்னர் பாலிஸ்டர் இழையின் மூலப்பொருளான பெட்ரோலியத் துறையிலும் அம்பானி கால் பதித்தார். தான் உருவாக்கும் எந்தப் பொருளுக்கும் இன்றய தேவை என்ன ? அதில் தன் நிறுவனம் எந்த அளவு பங்கு வகிக்க வேண்டும் என்று எண்ணாமல், இன்னும் பத்தாண்டுகள் இருபதாண்டுகள் கழித்து என்ன தேவை இருக்கும் என்று எண்ணி அந்த அளவு தயாரிப்புக்கான ஆலைகளை நிறுவுவது அம்பானியின் பழக்கம். அதனால்தான் ரிலையன்ஸ் நிறுவனம் தொடங்கிய பல்வேறு துறைகளில் முன்னணியில் உள்ளது.

பெரும் வெற்றி, பெரும் பிரச்சனைகளையும் கொண்டு வருவது வாடிக்கைதான். திருபாய் அம்பானிக்கு பாம்பே டையிங் நிறுவன தலைவர் நூஸி வாடியாவிற்கும் இடையே நடைபெற்ற துணி தயாரிக்கும் துறையில் யார் முதன்மையாக இருப்பார்கள் என்ற யுத்தம் எண்பதுகளில் பெரும் புயலைக் கிளப்பியது. கட்டுமானத்துறையிலும் பொறியியல்துறையிலும் புகழ்பெற்று விளங்கும் எல் அண்ட் டி நிறுவனத்தை தனது கட்டுப்பாட்டுக்குள் கொண்டுவர திருபாய் மேற்கொண்ட முயற்சிகள் மற்றும் இந்தியன் எக்ஸ்பிரஸ் நிறுவனம் திருபாய் மீது தொடுத்த தாக்குதல்கள் எண்பதுகளில் முக்கியமான செய்திகள்.

எழுபதுகளின் நடுவில் பாரதம் தொழில் செய்ய உகந்த நாடாக இல்லை. சோஷலிச சித்தாந்தம் என்பது ஆளுபவர்களின் விருப்பமாக இருந்தது. வங்கிகள் தொழில்முனைவோருக்கு கடன் வழங்க பல்வேறு இடர்பாடுகள் இருந்த நேரம் அது. எனவே திருபாய் நேரடியாக மக்களிடம் சென்று தனது தொழிலுக்கு பங்குச்சந்தை வழியாக முதலீட்டைத் திரட்டினார். அதற்கு முன்புவரை பங்குகள் பற்றிய ஆர்வம் பொதுமக்களிடம் இல்லாமல் இருந்தது. பங்குகளில் வரும் ஈவுத்தொகை மட்டுமே முதலீட்டாளர்களின் நோக்கமாக இருந்தது. ஆனால் பங்குகள் தங்கள் மதிப்பில் உயரும், அதனால் லாபம் வரும் என்பதைக் காட்டி பொதுமக்களைப் பங்குச்சந்தைக்கு வரவைத்ததில் திருபாய் அம்பானிக்கு பெரும்பங்கு உண்டு.

1986 ஆம் ஆண்டு திருபாய் அம்பானியை மாரடைப்பு தாக்கியது. அதனால் அவர் பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டு வலது கை செயலிழந்து இருந்தார். மீண்டும் 2002ஆம் ஆண்டு ஜூன் மாதம் மாரடைப்பால் பாதிக்கப்ப திருபாய் அம்பானி 2002ஆம் ஆண்டு ஜூலை மாதம் 6ஆம் நாள் காலமானார். சிறு வணிகராகத் தன் வாழ்க்கையைத் தொடங்கி 75,000 கோடி வியாபாரம் செய்யும் குழுமத்தின் தலைவராக உயர்ந்த திருபாயின் நினைவுக்கு அஞ்சலி செலுத்த அரசியல் தலைவர்கள் உள்பட பொதுமக்கள் பலரும் குவிந்தனர்.

சர்ச்சைகளின் நாயகராகவும் சாதனைகளின் நாயகராகவும் ஒரே நேரத்தில் திகழ்ந்த திருபாய் அம்பானியை விட்டு விட்டு பாரத வரலாற்றின் தொழில் வரலாற்றை எழுத முடியாது என்பதுதான் உண்மை. 

வியாழன், 26 டிசம்பர், 2019

உத்தம்சிங் என்றோர் உத்தம வீரன் - டிசம்பர் 26.

எல்லா வினைக்கும் ஒரு எதிர்வினை உண்டு. இது இயக்கவியலின் விதி. அந்த எதிர்வினை எப்போது நடைபெறும் என்பதுதான் வரலாற்றின் வினா. பாரத மண்ணில் நடைபெற்ற வினைக்காக இருபத்தி ஒரு ஆண்டுகள் காத்திருந்து லண்டன் மாநகரத்தில் எதிர்வினையாற்றிய மாவீரன் உத்தம்சிங்கின் பிறந்தநாள் இன்று.


அடக்குமுறை சட்டத்தை எதிர்த்து ஆயுதம் எதுவும் இல்லாமல் கூடிய பாரத மக்களை " சுட்டேன் சுட்டேன் குண்டு தீரும்வரை சுட்டேன்" என்று படுகொலை செய்த பாதகன் ஜெனரல் ரெஜினால்ட் டயர். அவனுக்கு அனுமதி அளித்து இந்த படுகொலைக்கு பின்புலமாக இருந்தவன் அன்றய பஞ்சாப் ஆளுநர் மைக்கேல் ஓ டயர். இந்த வினைக்கு எதிர்வினையாக சிந்திய பாரத ரத்தத்திற்கு பதிலாக லண்டன் நகரில் மைக்கெல் டயரை சுட்டுக் கொன்ற உத்தம்சிங்கின் பிறந்தநாள் இன்று.

1889 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 26ஆம் நாள் பஞ்சாப் மாநிலத்தின் சுனாம் கிராமத்தில் சர்தார் முக்தாசிங் - ஆஷாகபூர் தம்பதியரின் மகனாகப் பிறந்தவர். இவரின் இயற்பெயர் ஷேர்சிங் என்பதாகும். சிறு வயதிலேயே பெற்றோரை இழந்த ஷேர்சிங்கையும் அவர் சகோதரரையும் சீக்கிய மத குருமார்கள் தாங்கள் நடத்தும் விடுதியில் அடைக்கலம் கொடுத்து வளர்த்தனர். அங்கேதான் இவருக்கு உத்தம்சிங் என்று பெயரிடப்பட்டது. நாடெங்கும் ஆங்கில ஏகாதிபத்தியத்திற்கு எதிரான கருத்து உருவாக்கிக்கொண்டு இருந்த காலம் அது. வீரத்திற்கும், தியாகத்திற்கும், நாட்டுப் பற்றுக்கும் பேர் போன சீக்கிய இனக்குழுவில் பிறந்து வளர்ந்தவர் உத்தம்சிங். அவரும் தியாக சீலராக வளர்வதில் வியப்பென்ன இருக்க முடியும் ?

அப்போதுதான் சீக்கியர்களின் முக்கியமான பண்டிகையான பைசாகி திருநாள் அன்று ஜாலியன்வாலாபாகில் கூடிய மக்களை ஜெனரல் டயர் சுட்டுக் கொன்றான். நாடெங்கும் பெரும் அதிர்ச்சியையும் கோபத்தையும் உருவாக்கிய படுகொலை இது. இந்தக் கொலைக்கு பழிவாங்கிய தீரவேண்டும் என்ற முனைப்பு பல தேசியப் போராட்ட வீரர்களுக்கும் உருவானது. அதில் உத்தம்சிங்கும் ஒருவர். இந்த கனல் அவரை பல்வேறு நாடுகளுக்குப் பயணப்பட வைத்தது. தென்னாபிரிக்கா, நைரோபி ஆகிய நாடுகளில் பல்வேறு பணிகளில் இருந்து விட்டு பின்னர் உத்தம்சிங் அமெரிக்கா சென்றார்.

அமெரிக்காவில் இருந்து பாரத சுதந்திரத்திற்கு லாலா ஹர்தயாள் போன்றவர்கள் செயல்பட்டுக்கொண்டு இருந்தார்கள். அவர்களின் கதர் இயக்கத்தில் இணைந்து பயிற்சி பெற்ற உத்தம்சிங் 1927ஆம் ஆண்டு பாரதம் திரும்பினார். காவல்துறையால் கைது செய்யப்பட்டு சிறைப்பட்ட உத்தம்சிங் சிறையில் பகத்சிங் முதலான வீரர்களின் நம்பிக்கைக்கு பாத்திரமானவராக இருந்தார். சிறையில் இருந்து விடுதலையான பிறகும் காவல்துறை அவர்மீது கண் வைத்தபடியே இருந்தது. எனவே காஷ்மீர் சென்று ஜெர்மன் வழியாக உத்தம்சிங் லண்டன் சென்று சேர்ந்தார். நாட்டின் எதிரியை அவன் நாட்டிலேயே கொன்று பழி தீர்ப்பதுதான் அவரின் லட்சியமாக இருந்தது.

1940ஆம் ஆண்டு மார்ச் மாதம் 13ஆம் நாள் கூட்டம் ஒன்றில் மைக்கெல் டயர் பேச வருவதாகத் தகவல் கிடைத்தது. ஏற்கனவே லண்டன் நகருக்குள் தான் கடத்தி வந்த கைத்துப்பாக்கியோடு உத்தம்சிங்கும் அந்த கூட்டத்திற்கு சென்றார். கூட்டத்தில் நேருக்கு நேராக உத்தம்சிங் மைக்கேல் டயர் மீது குறிபார்த்துச் சுட்டார். டயரின் நெஞ்சை ஒரு குண்டு துளைக்க, இரண்டாயிரம் பாரத மக்களைப் படுகொலை செய்யக் காரணமாக இருந்த ஆங்கிலேயன் அங்கேயே மரணமடைந்தான். இருபது ஆண்டுகளும், உலகமெங்கும் சுற்றி, பல்வேறு இன்னல்களை எதிர்கொண்டு நாட்டின் கறையை ஆங்கில குருதிகொண்டு துடைத்தார் உத்தம்சிங்.

ஆளுநர் டையரின் கொலை இந்தியாவில் பெரும் விளைவுகளை ஏற்படுத்தியது. மக்கள் மைக்கேல் ஓ டையரின் கொடும் செயலை மறக்கவில்லை. வழக்கம் போல் காந்திஜி அவரது செயலைக் கண்டித்தார். ஜெர்மனி வானொலி ஒடுக்கப்பட்ட மக்கள் குண்டுகளால் பேசிவிட்டனர் என்றும் இந்தியர்கள் யானையைப் போல எதிரிகளை மன்னிக்கவே மாட்டார்கள் என்றும் 20 ஆண்டுகள் கழித்தும் அவர்கள் பழிதீர்த்துவிட்டார்கள் என்றும் கூறியது. பெர்லின் பத்திரிக்கை உத்தம் சிங் இந்திய சுதந்திரத்தின் வழிகாட்டி என்று கூறியது. இந்துசுத்தான் சோசலிசக் குடியரசு அமைப்பு பகத் சிங் மற்றும் உத்தம் சிங்கின் செயல் குறித்த காந்திஜியின் விமர்சனத்தைக் கண்டித்தது

லண்டன் நீதிமன்றத்தில் விசாரணை நடந்தது. தன்னை ராம் முஹம்மது சிங் ஆசாத் என்று அறிமுகம் செய்துகொண்டார் உத்தம்சிங். பாரத நாட்டின் முக்கியமான மதத்தில் உள்ள அனைவருக்கும் பொதுவானது விடுதலை என்ற பொருளில் இந்தப் பெயரை அவர் பயன்படுத்தினார். குற்றவாளிக் கூண்டில் நிறுத்தப்பட்ட உடனே உத்தம்சிங் வெடித்தார். “பிரிட்டிஷ் ஏகாதிபத்திய நீதிமன்றத்திற்குத் என்னை விசாரிக்கும் உரிமையோ தகுதியோ கிடையாது. மைக்கேல் ஓ.டயரைக் கொன்றதற்காக நான் வருத்தப்படவில்லை. இந்த தண்டனை  அவனுக்குக் கொடுக்கப்பட வேண்டியதே. நான் மரணத்திற்குப் பயப்படவில்லை. என் தாய் நாட்டை விடுவிக்க உயிர் துறப்பதற்காக பெருமைப்படுகிறேன். நான் போனபிறகு என்னுடைய இடத்திற்கு  என் தேசத்தின் மக்கள் வருவார்கள்.   உங்களை அவர்கள் விரட்டுவார்கள். நீங்கள் இந்தியாவிற்கு வருவீர்கள். பிறகும் பிரிட்டனுக்குத் திரும்பி பிரபு ஆவீர்கள். நாடாளுமன்றத்திற்குப் போவீர்கள்.  நாங்கள் பிரிட்டனுக்குள் வந்தால் தூக்கில் போடுவீர்கள். ஆனால் நீங்கள் பாரத தேசத்திலிருந்து வேரோடும் வேரடி மண்ணோடும் களையப்படுவீர்கள். உங்கள் பிரிட்டிஷ்  ஏகாதிபத்தியம் சுக்குநூறாக உடைந்து சிதறும்.” என்று முழங்கினார்.

உத்தம்சிங்கை ‘சாகும்வரை தூக்கில் போடவேண்டும்’ என்று தீர்ப்பெழுதிப் பேனாவை முறித்தார் வெள்ளைக்கார நீதிபதி ஹட்கின்ஸன். நீதிமன்றத்திலிருந்து உடனே அவரை இழுத்துச் செல்லுமாறும் உத்தரவிட்டார். ‘வந்தேமாதரம்! ‘ என்று நீதிமன்ற  அறையே அதிரும் வகையில் முழங்கிச் சென்றார் உத்தம்சிங். 1940 ஜூலை 31ந்தேதி தூக்குத்தண்டனைக்கான நாளாகக் குறிக்கப்பட்டது. லண்டனில் உள்ள பென்டோவில் சிறையில்  அடைக்கப்பட்டிருந்த உத்தம்சிங் புன்னகை ததும்பிய முகத்துடன் தூக்குக் கயிற்றை முத்தமிட்டார். வந்தேமாதரம் சொல்லி பாரதமாதாவை வாழ்த்தினார். பிரிட்டிஷ் வழக்கப்படி வெண்ணிற துணியைப் போட்டு முகத்தை மூடி தூக்கிலிட்டனர். சொந்த தேசத்து மக்களைக் கொன்றவனை ஒரு வேள்வியைப் போல 21 ஆண்டுகள் காத்திருந்து பழிதீர்த்து விடுதலை வீரரின் உயிர் உடலைவிட்டுப் பிரிந்தது.

லண்டன் பென்டோவில் சிறை வளாகத்தில் உத்தம்சிங் புதைக்கப்பட்டு இந்திய மாவீரன் உடலால் ஆறடிமண் இங்கிலாந்தில் ஆக்கிரமிக்கப்பட்டது வரலாற்றின் மைல்கல். முப்பது ஆண்டுகளுக்குப் பின் அவரது  உடல் தோண்டி எடுக்கப்பட்டு இந்தியா கொண்டு வரப்பட்டது. பஞ்சாப் முழுவதும் மரியாதையுடன் ஊர்வலமாக எடுத்துச் செல்லப்பட்ட அவரது  சவப்பெட்டி, உத்தம்சிங் பிறந்த சுனாம் கிராமத்தில் புதைக்கப்பட்டு அவரது  தியாகத்தைப் போற்றும் நினைவுச் சின்னமும் எழுப்பப்பட்டுள்ளது.

பகத்சிங், உத்தம்சிங் போன்ற போராளிகளின் புரட்சிப் போராட்டங்களால் நிறைந்ததுதான் இந்தியப் விடுதலைப் போராட்ட வரலாறு. சிப்பாய்க் கலகம் எனப்படும் முதல் இந்திய சுதந்திரப் போர், சௌரிசௌரா உழவர்களின் பேரெழுச்சி, சிட்டகாங் ஆயுதக் கிடங்குச் சூறையாடல், பகத்சிங், குதிராம் போஸ், உத்தம்சிங் போன்றவர்களின் புரட்சிகர சாகசங்கள் முதல், தபால்- தந்தி ஊழியர்கள் மற்றும் மாபெரும் கடற்படை எழுச்சி என்று இலட்சக்கணக்கான மக்களின் இரத்தத்தால் சிவந்ததுதான் இந்திய விடுதலைப் போராட்டப் பாதை.

நாட்டின் சேவைக்காக பலிதானியான தியாகிகளை என்றும் நினைவில் கொள்வோம். அவர்கள் வழியில் நடப்போம். 

புதன், 25 டிசம்பர், 2019

வீரமங்கை வேலு நாச்சியார் நினைவுதினம் - டிசம்பர் 25.

பாரத நாட்டின் வரலாற்றில் தாயகத்தைக் காக்க ஆண்களுக்கு நிகராக பெண்களும் ஆயுதம் ஏந்திப் போராடியது உண்டு. கல்வியிலும் வீரத்திலும் ஆணுக்கு இங்கே பெண் இளைப்பில்லை காண் என்று உதாரண நாயகியாக முதல் சுதந்திரப் போருக்கு முன்னே ஆங்கில ஏகாதிபத்தியத்தை தோற்கடித்த வீரப்பெண்மணி வேலுநாச்சியாரின் நினைவுதினம் இன்று.1730ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 3ஆம் நாள் ராமநாதபுர மன்னரான முத்து விஜயரகுநாத செல்லமுத்து சேதுபதி - முத்தாசாள் நாச்சியார் தம்பதியரின் மகளாகப் பிறந்தவர் வேலுநாச்சியார். தனது ஒரே மகளை மகன் போலவே வளர்த்தார் விஜயரகுநாத சேதுபதி. வேலுநாச்சியாரும் சிலம்பம், வாள்வீச்சு, குதிரையேற்றம் என்று போர்கலைகளிலும் தமிழ், ஆங்கிலம், உருது, பிரெஞ்சு போன்ற மொழிப்பாடத்திலும் சிறந்து விளங்கினார்.

உரிய வயதில் வேலுநாச்சியாரை சிவகங்கை இளவரசர் முத்துவடுகநாத உடையதேவர் திருமணம் செய்துகொண்டார். களரி என்ற ஆயுதத்தைப் பயன்படுத்துவதில் இணையற்ற வீரராக திகழ்ந்தவர் முத்துவடுகநாதர். வீரமும் இறை நம்பிக்கையும், மக்களின் நல்வாழ்வில் அக்கறையும் கொண்ட ஆதர்ச தம்பதியராக முத்துவடுகநாதரும் வேலுநாச்சியாரும் இருந்தனர்.

1772ஆம் ஆண்டு ஆற்காடு நவாப் ஆங்கிலேயர்களோடு இணைந்து சிவகங்கை சீமையின் மீது படையெடுத்தார். காளையார்கோவிலில் நடந்த அந்தப் போரில் முத்துவடுகநாதர் வீரமரணம் அடைந்தார்.
நாட்டின் ஆட்சியை மீண்டும் கைப்பற்றும் உறுதியோடு வேலுநாச்சியார் சிவகங்கை சீமையை விட்டு வெளியேறினார். திண்டுக்கல் நகரின் அருகே உள்ள விருப்பாட்சிபாளையத்தின் அரசர் கோபாலநாயகர் வேலுநாச்சியாருக்கு அடைக்கலம் கொடுத்தார். ஏற்கனவே ஆங்கிலேயர்களோடு சண்டையில் ஈடுபட்டுக்கொண்டு இருந்த ஹைதர் அலியின் உதவியை வேலுநாச்சியார் நாடினார். ஹைதர் அலியும் வேலுநாச்சியாருக்கு உதவுவதாக வாக்களித்தார்.

விருப்பாட்சிபாளையத்தில் தங்கி இருந்தவாறே தனது படைகளைத் திரட்டிய வேலுநாச்சியார், முதலில் காளையார்கோவிலைக் கைப்பற்றினார். அதனைத் தொடர்ந்து தனது படைகளை இரண்டு பிரிவாகப் பிரித்து சின்ன மருதுவின் தலைமையில் ஒரு பிரிவை திருப்பத்தூரில் தங்கி இருந்த ஆங்கிலப் படையை தாக்குமாறு கூறி, மற்றொரு பிரிவை பெரிய மருதுவின் தலைமையில் சிவகங்கையை தாக்குமாறும் ஆணையிட்டார்.

அது நவராத்திரி விழாக்காலம். தீமையை அழித்து நன்மையை நிலைநாட்டிய சக்தியை வழிபடும் விஜயதசமி திருநாள். அன்று தனது பெண்கள் படையோடு மாறுவேடத்தில் சிவகங்கை கோட்டைக்குள் நுழைந்த வேலுநாச்சியார், அங்குள்ள ஆங்கில வீரர்களைத் தாக்கி அவர்களைத் தோற்கடித்தார். ராணியின் மெய்க்காவல் படையைச் சேர்ந்த குழலி என்ற பெண் தன்னையே எரிந்துகொண்டு கோட்டையில் இருந்த ஆங்கிலேயர்களின் ஆயுதக் கிடங்கை முழுவதுமாக எரித்து சாம்பலாக்கினாள். உலகின் முதல் தற்கொலை தாக்குதல் இதுதான். ராணியைக் காட்டிக் கொடுக்க மறுத்து வெள்ளையரால் வெட்டுப்பட்டு மரணமடைந்த உடையாள் என்ற பெண்ணுக்கு நடுகல் நாட்டி, தனது திருமாங்கல்யத்தை முதல் காணிக்கையாகச் செலுத்தினார் வேலுநாச்சியார்.  அந்த வழிபாடு... வாழையடி வாழையாகத் தொடர்ந்து, கொல்லங்குடி வெட்டுடைய காளியம்மன் கோயிலில் இன்றும் சிறப்பாக நடக்கிறது.

சிவகங்கை மீண்டும் சுதந்திர நாடாக மாறியது. கோட்டையின் உச்சியில் சிவகங்கையின் அனுமக்கொடி மீண்டும் கம்பீரமாகப் பறக்கத் தொடங்கியது. இதனை அவர் நிகழ்த்திக் காட்டியது தனது ஐம்பதாவது வயதில். சிவகங்கைச் சீமையை மீட்டு, 1780-ம் ஆண்டு முதல் 1789-ம் ஆண்டு வரை ராணியாக மக்கள் போற்ற ஆட்சி புரிந்தார் நாச்சியார். இந்திய சுதந்திரப் போராட்ட வரலாற்றில் வெள்ளையர்களை வென்று முடி சூட்டிய ஒரே ராணி, வீரமங்கை வேலு நாச்சியார்.

1780 வரையிலும் தான் அரசவையின் அரசியாக இருந்து சிவகங்கையை ஆண்டு வந்த  வேலு நாச்சியார். தனக்குப்பின் வெள்ளச்சியை அரசியாக்கினார். வெள்ளச்சி அரசியாக பதவியேற்கும்போது திருமணம் ஆகவில்லை என்றாலும் 1793ல் வெங்கம் உடையனத்தேவருக்கு மணம் முடித்து கொடுத்து, அதன் பின்னர் அரசராக அவரை அறிவித்தார் வேலு நாச்சியார்.  வெள்ளச்சியின் மறைவுக்குப்பின்னர் மனமுடைந்த வேலுநாச்சியார் விருப்பாட்சி அரண்மனையில் தங்கலானார். அங்கேயே 1796ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 25ஆம் நாள் வேலுநாச்சியார் காலமானார்.

வீரர்களுக்கும் வீராங்கனைகளுக்கு என்றுமே மரணம் கிடையாது. வேலுநாச்சியாரின் வழியில் இன்று பாரத தேசத்தின் ராணுவத்தில் பல பெண்கள் தங்களின் திறமையை தியாகத்தை பறை சாற்றிக்கொண்டே இருக்கிறார்கள். 

வளர்ச்சி நாயகன் அடல் பிஹாரி வாஜ்பாய் - டிசம்பர் 25

ராஷ்டிரிய ஸ்வயம்சேவக சங்கத்தின் மூத்த பிரச்சாரகரும், பாரதிய ஜனதா கட்சியை நிறுவிய தலைவரும், முதல் முதலாக காங்கிரஸ் அல்லாத ஆட்சியை ஐந்தாண்டுகள் வழிநடத்திய பிரதமரும், கேட்பவர் மனதை மயக்கும் பேச்சாளரும், சிறந்த கவிஞரும் ராஜதந்திரியுமான அடல் பிஹாரி வாஜ்பாய் அவர்களின் பிறந்ததினம் இன்று.


கிருஷ்ண பிஹாரி வாஜ்பாய் - கிருஷ்ணா தேவி தம்பதியரின் மகனாக 1924ஆம் ஆண்டு டிசம்பர் 25ஆம் நாள் குவாலியர் நகரில் பிறந்தவர் திரு அடல் பிஹாரி வாஜ்பாய் அவர்கள். அவரது தாத்தா பண்டிட் ஷ்யாம்லால் வாஜ்பாய் காலத்திலேயே அவரது குடும்பம் உத்திரப்பிரதேசத்தில் இருந்து மத்தியப்பிரதேசத்திற்கு குடிபுகுந்தது. கிருஷ்ண பிஹாரி வாஜ்பாய் ஒரு பள்ளி ஆசிரியர். வாஜ்பாய் குவாலியரில் தனது ஆரம்ப பள்ளி படிப்பை முடித்தார். குவாலியரில்
தற்போது ராணி லக்ஷ்மிபாய் கல்லூரி என்று அறியப்படும் விக்டோரியா கல்லூரியில்  இந்தி, ஆங்கிலம் மற்றும் சமஸ்கிருத மொழிகளில் பட்டம் பெற்றார். கான்பூரில் உள்ள டி.ஏ.ஏ. கல்லூரியில் அரசியல் அறிவியல் துறையில் பட்டம் பெற்றார். அதனைத் தொடர்ந்து சட்டம் படிக்கச் சேர்ந்த வாஜ்பாய் சுதந்திரத்தை ஒட்டி நடைபெற்ற கலவரங்களால் தனது படிப்பை பாதியிலேயே விட்டு விட்டார்.

சிறுவயதில் இருந்தே ஆர்எஸ்எஸ் அமைப்பில் பற்றுக் கொண்டிருந்த வாஜ்பாய், சிலகாலம் ஆர்ய சமாஜத்தின் இளைஞர் அமைப்பான ஆர்ய குமார் சபாவின் செயலாளராகவும் பணியாற்றினார். அதனைத் தொடர்ந்து தன்னை சங்கத்தின் முழுநேர ஊழியராக இணைத்துக் கொண்ட வாஜ்பாய் உத்திரப்பிரதேசத்தில் சங்கத்தை வளர்க்கும் பணியில் ஈடுபட்டார். தீனதயாள் உபாத்யாவோடு வாஜ்பாய் பாரதிய ஜனசங்கத்தை வளர்க்கும் பொறுப்பில் சங்கத்தால் நியமிக்கப்பட்டார். தேசசேவைக்காக அரசியலில் வாஜ்பாய் அடியெடுத்து வைத்தது அப்போதுதான். ராஷ்டிரதர்மா, பாஞ்சஜன்யா, ஸ்வதேஷ், வீர் அர்ஜுன் போன்ற ஹிந்துத்துவ பத்திரிகைகளில் வாஜ்பாய் தொடர்ந்து எழுத ஆரம்பித்தார்.

1957ஆம் ஆண்டு நடைபெற்ற நாட்டின் இரண்டாவது பொதுத்தேர்தலில் உத்திரப்பிரதேசத்தின் பாலக்பூர்  தொகுதியில் இருந்து வெற்றிபெற்று நாடாளுமன்றத்தில் நுழைந்தார். மாநிலங்களவைக்கு இரண்டு முறையும் மக்களவைக்கு ஒன்பது முறையும் என்று நீண்ட ஐம்பதாண்டுகால நாடாளுமன்ற உறுப்பினர் திரு வாஜ்பாய். மத்தியப்பிரதேசத்தின் குவாலியர் மற்றும் விதிஷா, உத்திரப்பிரதேசத்தின் பாலக்பூர், லக்நோ, புதுடெல்லி என்று நாட்டின் பல்வேறு இடங்களில் இருந்து மக்களவைக்கு வாஜ்பாய் தேர்ந்தெடுக்கப்பட்டார். வாஜ்பாயின் பாராளுமன்ற விவாதங்கள் பெரும் வரவேற்பைப் பெற்றன. அன்றய பிரதமர் நேரு வாஜ்பாய் ஒருகாலத்தில் பாரதத்தின் பிரதமராக வருவார் என்று சரியாகக் கணித்தார்.

பண்டிட் தீனதயாள் உபாத்தியாவின் மரணத்திற்குப் பின் பாரதிய ஜனசங்கத்தின் தலைமை வாஜ்பாயை வந்தடைந்தது. அத்வானி, பால்ராஜ் மதோக் மற்றும் நானாஜி தேஷ்முக் ஆகியோர் வாஜ்பாயின் துணைக்கு வந்தனர். 1975ஆம் ஆண்டு இந்திரா நெருக்கடி நிலையை அறிவித்தார். பல்வேறு தலைவர்களோடு வாஜ்பாயும் சிறையானார். நெருக்கடி நிலை விலக்கிக்கொண்டு பிறகு அனைத்து எதிர்க்கட்சிகளும் ஜனதா கட்சி என்ற பெயரில் ஒருங்கிணைந்தன. அந்த கூட்டமைப்பில் பாரதிய ஜனசங்கமும் இணைந்தது. தேர்தலில் வெற்றிபெற்ற வாஜ்பாய் மொரார்ஜி தலைமையில் அமைந்த ஆட்சியில் வெளியுறவுத்துறையின் அமைச்சராக நியமிக்கப்பட்டார். இரண்டே ஆண்டுகளில் ஜனதா கட்சியின் ஆட்சி கவிழ, அந்த சோதனை தோல்வியில் முடிந்தது.

பழைய ஜனசங்கம் பாரதிய ஜனதா கட்சி என்ற பெயரில் புதிய அவதாரம் கண்டது. கட்சியின் முதல் தலைவராக வாஜ்பாய் நியமிக்கப்பட்டார். மெதுவாக ஆனால் மிக உறுதியாக பாஜக வளரத் தொடங்கியது. வாஜ்பாயின் பேச்சாற்றலும், அத்வானியின் செயல்திறனும் பல்வேறு இளம்தலைமுறையினரின் கடின உழைப்பும் கட்சியை வளர்த்தெடுத்து. அடுத்தடுத்த தேர்தல்களில் கூடுதலான இடங்களைக் கைப்பற்றி 1996ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் மிக அதிக இடங்களைக் கொண்ட கட்சியாக பாஜக விளங்கியது. அன்றய குடியரசுத் தலைவர் சங்கர் தயாள் ஷர்மா வாஜ்பாயை ஆட்சி அமைக்க அழைத்தார். முதல்முறையாக வாஜ்பாய் நாட்டின் பத்தாவது பிரதமராகப் பதவியேற்றார். செங்கோட்டையில் காவிக்கொடி பறக்கத் தொடங்கியது. ஆனால் நாடாளுமன்றத்தில் பாஜகவால் தனது பெரும்பான்மை பலத்தை நிரூபிக்க முடியவில்லை. வாஜ்பாய் பதவி விலகினார். " மிக விரைவில் தனி பெரும்பான்மையோடு நாங்கள் ஆட்சி அமைப்போம், மத்திய அரசில் மட்டுமல்ல மாநிலங்கள் அனைத்திலும் எங்கள் ஆட்சி இருக்கும், இதனை விரைவில் நீங்கள் பார்ப்பீர்கள்" என்று வாஜ்பாய் சூளுரைத்தார்.

சிறுபான்மை அரசை தேவ கௌடாவும் அவரைத் தொடர்ந்து ஐ கே குஜராலும் அமைத்தனர். இரண்டு ஆட்சியையும் காங்கிரஸ் கவிழ்த்தது. மீண்டும் ஒரு தேர்தல் திணிக்கப்பட்டது. 1998ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் கூட்டணி அரசு அமைந்தது. மீண்டும் வாஜ்பாய் பிரதமரானார். ஆனால் ஜெயலலிதா தனது ஆதரவை விலக்கிக்கொள்ள மீண்டும் ஆட்சி கவிழ்ந்தது. 1999ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் கூட்டணி கட்சிகளோடு இணைந்து பெரும்பான்மை பலத்தோடு மூன்றாம் முறையாக வாஜ்பாய் பிரதமரானார். முழுமையாக ஐந்தாண்டுகள் அவர் ஆட்சி செய்தார். இதன்மூலம் தனது பதவிக்காலத்தை முழுவதும் ஆட்சி செய்த முதல் காங்கிரஸ் அல்லாத பிரதமர் என்ற பெருமையை வாஜ்பாய் பெற்றார்.

ராஜஸ்தான் பாலைவனத்தில் பொக்ரான் பகுதியில் அணுகுண்டு சோதனையை நடத்தி, நாட்டின் வலிமையை வாஜ்பாய் உலகமெங்கும் பறைசாற்றினார். கார்கில் பகுதியில் அத்துமீறி நுழைந்த பாகிஸ்தான் ராணுவத்தை விரட்டும் வரை எந்த பேச்சுவார்த்தையும் நடத்தப் போவதில்லை என்று உறுதியாக இருந்தார். மேலை நாடுகள் பாரதத்தின் மீது விதித்த பொருளாதாரத் தடையை உடைத்து நாட்டின் ஆன்ம பலத்தையும் பொருளாதார பலத்தையும் நிரூபித்தார். நாடெங்கும் நான்குவழிச் சாலைகளை அமைத்து பொருளாதார வளர்ச்சிக்கு அடிகோலினார். அவரது ஆட்சிக்காலத்தில் நாட்டின் பொருளாதாரம் பெரும்வளர்ச்சியைச் சந்தித்தது.

ஆனாலும் 2004ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் பாஜக ஆட்சி அமைக்கும் அளவிற்கான இடங்களை பெறவில்லை. வயதின் காரணமாகவும், உடல்நிலையில் காரணமாகவும் வாஜ்பாய் பொதுவாழ்வில் இருந்து விலகினார். பலகாலமாக இருந்த நீரழிவு நோயால் அவதிப்பட்ட வாஜ்பாய் 2009ஆம் ஆண்டு பக்கவாதத்தால் பாதிக்கப்பட்டார். ஆற்றொழுக்குப் போல பொழியும் அவரது பேச்சு அதனால் தடைபெற்றது. நீண்டகாலம் உடல்நலம் குன்றி இருந்த வாஜ்பாய் 2018ஆம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் 16ஆம் நாள் காலமானார். அடுத்த நாள் அரசு மரியாதையோடு பீரங்கி குண்டுகள் முழங்க வாஜ்பாயின் வளர்ப்பு மகள் நமீதா பட்டாச்சார்யா எரியூட்ட அந்த தேச பக்தர் நாட்டின் காற்றோடு கலந்தார்.

நாட்டின் சேவகன் எப்படி வாழவேண்டும் என்ற இலக்கணத்தை வகுத்துக் கொடுத்த திரு அடல் பிஹாரி வாஜ்பாயின் வாழ்வு நம் அனைவருக்கும் வழிகாட்டியாக இருக்கும் என்பதில் எந்த ஐயமும் இல்லை. 

ஞாயிறு, 22 டிசம்பர், 2019

அன்னை சாரதா தேவி - அவதார தினம் டிசம்பர் 22.

ஸ்ரீ ராமகிருஷ்ண பரமஹம்சரின் வாழ்கைத்துணையாகவும், முதல் சீடராகவும் ராமகிருஷ்ண மடத்தைச் சார்ந்த துறவியருக்கும் மற்றும் பல பக்தர்களுக்கும் அன்னையாகவும் போற்றி வணங்கப்படும் அன்னை சாரதா தேவியரின் அவதாரதினம் இன்று.


இன்றய மேற்கு வங்காளத்தில் உள்ள ஜெயராம்பட்டி என்ற சிறு கிராமத்தில் ராமசந்திர முகோபாத்யாய - ஷ்யாம சுந்தரி தேவி தம்பதியரின் முதல் மகவாக 1853ஆம் ஆண்டு டிசம்பர் 22ஆம் நாள் அவதரித்தவர் சாரதா தேவி. அவரின் இயற்பெயர் சாரதாமணி என்பதாகும். கங்கை பாயும் செழிப்பான பூமியை ஆங்கிலேயர்கள் கொள்ளையடித்து மக்களை வறுமையின் பிடியில் வாட வைத்திருந்த காலம் அது. வறுமையில் வாடிய குடும்பம் ஒன்றில்தான் அன்னையும் பிறந்தார். அவர் பள்ளி சென்று படிக்கவில்லை. ஆனால் எல்லா ஹிந்து குடும்பங்களையும் போல இதிகாசங்களையும் வாழ்வியல் பாடங்களும் அவருக்கு கற்றுக்கொடுக்கப்பட்டது. சிலை வடிவில் ஆண்டவனை அமைத்து, பூஜை செய்வது அவரின் முக்கியமான வேலையாக இருந்தது.

அன்னையின் வாழ்வு கொல்கத்தா நகரில் இருந்த கதாகதரோடு இணைக்கப்பட்டு இருந்தது. தக்ஷிணேஸ்வர் கோவிலில் ஆன்ம சாதனையில் மூழ்கி இருந்தார் கதாகதர், அவரின் அருமை தெரியாத அவரின் குடும்பத்தினர் திருமணம் ஆகிவிட்டால் ஆவர் நம்மைப்போல உலகவாழ்வில் உழலும் மனிதராக மாறி விடுவார் என்று எண்ணி அதற்கான வேலையில் ஈடுபடத் தொடங்கினர். கதாகாதர் சாரதாமணிதான் தனக்கு சரியான துணை என்று கூற, அந்தத் திருமணம் நடைபெற்றது. கதாகாதர்தான் ராமகிருஷ்ண பரமஹம்சர் என்று அறியப்பட்ட ஜீவன் முக்தர். விவேகானந்தர் என்ற ஞானச்சுடரை இந்த உலகுக்கு கொடுத்த குருநாதர். திருமணம் நடைபெறும் போது சாரதாமணியின் வயது ஆறுதான். ராமகிருஷ்ணரின் வயது இருபத்தி மூன்று. அந்தக் கால வழக்கப்படி திருமணம் ஆன பிறகும் தனது தந்தையின் வீட்டிலே இருந்த அன்னை, தனது பதினெட்டாம் வயதில் தன் கணவரோடு இணைந்து கொண்டார். ராமகிருஷ்ணர் சாதாரண மனிதர் இல்லை என்பதை புரிந்து கொண்டு அவரின் முதல் சீடராக, தொண்டராக அவர் தன் வாழ்க்கையை நடத்தினார்.

இனிப்பை நோக்கி எறும்பு வருவது போல, ராமகிருஷ்ணரை நோக்கி பல்வேறு சீடர்கள் வரத் தொடங்கி இருந்தார்கள். தினம்தோறும் தனது தியானத்தையும், பூஜைகளையும் முடித்து ராமகிருஷ்ணருக்கும் அவரது சீடர்களுக்கும் உணவு தயாரித்து உபசரிப்பது அன்னையின் பணியாக ஆனது. இல்வாழ்வில் ஈடுபடாது இருந்த அன்னைக்கு ஆயிரமாயிரம் மகன்கள் கிடைத்தார்கள். பராசக்தியின் வடிவமாகவே அன்னையைக் கண்ட ராமகிருஷ்ணர் அன்னையையே பீடத்தில் அமர்த்தி மாதா திரிபுரசுந்தரியாக வரித்து பூஜை செய்வதும் உண்டு. ராமகிருஷ்ணரின் மறைவுக்குப் பின்னர் விதவைக்கோலம் பூணத் தொடங்கிய அன்னையின் முன் ராமகிருஷ்ணர் தோன்றி " நான் எங்கே சென்று விட்டேன், இங்கேதானே ஒரு அறையில் இருந்து மற்றொரு அறைக்கு சென்றுளேன்" என்று கூறி அதனை தடுத்து விட்டார். ராமகிருஷ்ணரின் மறைவுக்குப் பின்னர் முப்பத்தி நான்கு ஆண்டுகளுக்கு மேலாக அப்போதுதான் தொடங்கப்பட்ட ராமகிருஷ்ண மடத்தின் ஆணிவேராக அன்னை செயல்பட்டார்.

தனது பெண் சீடர்கள் தொடர அன்னை காசி, மதுரா மற்றும் அயோத்தி ஆகிய புனித நகரங்களுக்கு யாத்திரை மேற்கொண்டார். பின்னர் ராமகிருஷ்ணர் பிறந்த கமர்புக்கூர் கிராமத்தில் ஓராண்டு தங்கி இருந்தார். அங்கே இருந்தவர்களுக்கு அன்னையின் அருமை தெரியவில்லை. அவரையும் தன்னை வெளிப்படுத்திக் கொள்ளவில்லை. அன்னையின் நிலையைத் தெரிந்து கொண்ட ராமகிருஷ்ணரின் சீடர்கள் அன்னையை மீண்டும் கொல்கத்தாவிற்கே அழைத்து வந்தனர். அங்கே பல்வேறு மனிதர்கள் அன்னையின் சீடர்களாக ஆனார்கள். ராமகிருஷ்ண மடத்து துறவிகளை சமுதாய சேவைக்கு தூண்டியது அன்னையின் பெரும் கருணையேயாகும். அமெரிக்கா நாட்டுக்கு அனைத்து சமய மாநாட்டுக்கு செல்லலாமா என்ற கேள்விக்கு விடையளித்து விவேகானந்தரை அங்கே அனுப்பி வைத்ததும் அன்னையே.

அமெரிக்காவிலும் ஐரோப்பிய நாடுகளிலும் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பாரத ஞானத்தை விவேகானந்தர் பரப்பினார். அங்கே அவருக்கு பல்வேறு அயல்நாட்டினர் சீடர்களாக மாறி பாரதம் வந்தார்கள். அவர்கள் அனைவரையும் தனது குழந்தைகளாக ஏற்று தனது கருணையெனும் அமுதமழையில் அன்னை ஆசீர்வதித்தார். மிக எளிய சொற்களைக் கொண்டு ஆழ்ந்த கருத்துக்களை தெரிவிக்கும் திறன் அவருக்கு இயல்பாகவே இருந்தது. கனவிலே அன்னை தனக்கு மந்திர உபதேசம் செய்தார் என்று பலர் கூறுவதும் உண்டு.

"உங்களுக்கு நிம்மதி வேண்டும் என்றால் பிறரின் குறைகளை பார்ப்பதை நிறுத்துங்கள், அதற்குப் பதில் உங்கள் குறைகளை கண்டறியுங்கள். உலகம் முழுவதையும் உங்கள் உறவு என்று நினைக்கப் பழகுங்கள். உலகில் யாரும் உங்களுக்கு அந்நியர் அல்ல, அனைவரும் உறவினர்கள்தான்" இது அன்னை அளித்த உபதேசம். பெண் கல்வியின் முக்கியத்தை அறிந்த அன்னை, தனது சீடர்களை பெண்களுக்கான கல்வி நிலையங்களைத் தொடங்க வைத்தார்.

ஜீவன் முக்தரின் வாழ்க்கைத்துணையாக, தன்னலத்தை ஒழித்த துறவியர் வரிசையின் ஆணிவேராக, உலக மக்களின் தாயாக விளங்கிய அன்னை சாரதாதேவி 1920ஆம் ஆண்டு ஜூலை 20ஆம் நாள் தனது உடல்கூட்டை உதறி பரம்பொருளோடு கலந்தார்.

அன்னையின் நினைவு நம்மை எல்லாப் பொழுதும் நல்வழியில் செலுத்தட்டும். எத்தனையோ ஞானிகள் இந்த மண்ணில் அவர்கள் அனைவருக்கும் எங்கள் வணக்கங்கள்.  

புதன், 18 டிசம்பர், 2019

சைவநெறிக் காவலர் நல்லூர் ஆறுமுக நாவலர் அவதார தினம் - டிசம்பர் 18.

தமிழ் உரைநடையின் தந்தை, சைவ சமயத்தின் ஐந்தாம் சமயக் குரவர்  என்று போற்றப்படுபவரும்
நாயனார் நாற்குரவர் நாவலர் தென் ஞாலமிசை 
மேயினார் ஈசனருள் மேல் என்று சி வை தாமோதரன் பிள்ளையால் போற்றப்பட்ட நல்லூர் ஆறுமுக நாவலர் அவர்களின் திருவவதார தினம் இன்று.


பத்தொன்பதாம் நூற்றாண்டின் ஆரம்ப கட்டங்களில் இலங்கையில் வெள்ளை ஏகாதிபத்தியம் வலுவாக நிலைகொண்டு இருந்தது. அவர்களின் படைகளில் முக்கியமான பாதிரிபடை இலங்கை முழுவதையும் கிருத்துவமயமாகும் பணியில் மும்முரமாக இயங்கிக்கொண்டு இருந்தது.கல்வி வாய்ப்புக்காகவும், அரச ஊழியத்துக்காகவும் தமிழ்மக்கள் சைவ சமயத்தைவிட்டு கிறித்துவ மதத்திற்கு மாறிக் கொண்டிருந்தார்கள். தமிழ்க் கல்வி புறக்கணிக்கப்பட்டு ஆங்கில மோகம் மக்களை ஆட்டிப்படைத்தது. அப்போதுதான் தமிழையும் சைவத்தையும் புதுப்பொலிவோடு மக்களுக்கு எடுத்துரைக்கும் வகையில் தென்னாடுடைய ஈசன் கருணையால் ஆறுமுகநாவலர் அவதரித்தார்.

யாழ்ப்பாணத்தின் நல்லூர் என்ற பகுதியில் கந்தப்பிள்ளை - சிவகாமி அம்மையாரின் திருமகனாக 1822ஆம் ஆண்டு டிசம்பர் 18ஆம் நாள் ஆறுமுக நாவலர் பிறந்தார். இவரின் இயற்பெயர் ஆறுமுகம் பிள்ளை என்பதாகும். நாவலரின் குடும்பமே தமிழில் தோய்ந்த குடும்பம். இவர் உடன்பிறந்தவர்கள் நான்கு சகோதர்களும் மூன்று சகோதரிகளும் ஆவார்கள்.

தமது இளமைப் பருவத்திலே நல்லூர் சுப்பிரமணிய உபாத்தி யாயர், இருபாலை சேனாதிராய முதலியார், நல்லூர் சரவணமுத் துப் புலவர் ஆகியோரிடம் குருகுல முறைப்படி இலக்கிய, இலக்கணங்களையும் , சைவசமயம், சாத்திரங்களையும், பயின்று வட மொழியையும் பயின்றார். யாழ்ப்பாணம் வெஸ்லியன் மெதடிஸ்ட் மிஷன் மத்திய கல்லூரியில் ஆங்கில மொழியைக் கற்றதுடன் அக்கல்லூரியில் சிலகாலம் ஆசிரியராகவும் பணியாற்றினார். ஆசிரியராகப் பணியேற்றதோடு, அப்பாடசாலை நிறுவுனரான பேர்சிவல் பாதிரியாரின் கிறிஸ்தவ வைபிளைத் தமிழில் மொழிபெயர்க்கும் முயற்சிக்கு உறுதுணையாக செயற்பட்டார்.

ஆனாலும் சைவ சமயத்தை இழித்தும் பழித்தும் கூறி மக்களை கிருத்தவ மதத்தின் பக்கம் திருப்பும் பாதிரிகளின் செயலைப் பார்த்து மனம் நொந்த ஆறுமுகம், சைவத்தின் மேன்மையையும், தமிழின் இனிமையையும் மக்கள் அறிந்து கொள்ளவே தனது வாழ்வை அர்பணிக்கத் தீர்மானித்தார். வண்ணார்பண்ணை வைத்தீஸ்வரன் கோயிலில் 1847 முதல் ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் சொற்பொழிவு ஆற்றினார். இதனால் பலரும் சிவதீட்சை பெற்றனர். அசைவ உணவைத் தவிர்த்தனர். இவரது முயற்சியால் பல கோயில்கள் புதுப்பிக்கப்பட்டு, பூஜைகள் நடைபெறத் தொடங்கின.

கல்வித் தளத்தில் ஏற்பட்ட அறிவியல் மாற்றங்களை அவர் வரவேற்றார். கிறித்தவர்கள் தங்கள் மதத்தைப் பரப்பச்  செய்யக் கையாண்ட கருவிகள் ஒவ்வொன்றையும் நாவலர் சைவத்தை வளர்க்கக் கையில் ஏந்தினார்!  கிறித்தவ பாதிரிமார்கள் சமயம் வளர்க்க பல பள்ளிகள் நிறுவினார்கள். நாவலரும் அரும்பாடு பட்டு சைவப் பள்ளிகள்நிறுவினார். அந்தப் பள்ளிகளில் சமய சாத்திரங்கள் (தேவார திருவாசகங்கள், புராணங்கள், நாலடியார், திருக்குறள், மெய்கண்ட சாத்திரங்கள்) படிப்பிப்பதற்கு ஒரு பாடத் திட்டத்தையே வகுத்தார். அத்தோடு மேற்குநாட்டுச் சாத்திரங்களான வரலாறு, பூகோளம், கணிதம், இயற்பியல், வேற்பியல் கற்பிக்க ஏற்பாடு செய்தார். ஆசிரியர்களுக்கு ஊதியம் கொடுக்க வீடுதோறும் பிடி அரிசி திரட்டும் திட்டத்தை உருவாக்கினார்.

கிறித்தவர்கள் தங்கள் மதபோதனைகளைப் பரப்ப அச்சு யந்திரசாலைகளை அமைத்து நிறையப் புத்தகங்களை அச்சிட்டு மக்களிடம் கொடுத்தார்கள். நாவலரும் அவ்வாறே அச்சுக் கூடங்களை யாழ்ப்பாணத்திலும் சிதம்பரத்திலும் நிறுவி ஓலைகளில் இருந்த சைவசமய நூல்களை ஒப்புநோக்கி, பாடபேதங்கள் நீக்கிப் பதிப்பித்து வெளியிட்டார்.

கிறித்தவர்கள் வினா விடை பாணியில் (catechism) சமயக் கோட்பாடுகளை விளக்கியது போல் நாவலரும் சைவ வினாவிடை நூல்களை எழுதினார். பல நூல்களுக்கு உரை எழுதினார். அவரது நண்பர்கள், மாணாக்கர்கள் எழுதிய நூல்களைப் பரிசோதித்துப் பதிப்பித்தார். அல்லது பதிப்பிக்க உதவினார். நாவலரது உழைப்பால் வெளிவந்த நூல்களுக்கு அளவில்லை.

நன்னூல் விருத்தியுரை
நன்னூல் காண்டிகையுரை
நைடதவுரை
சூடாமணி நிகண்டுரை
திருமுருகாற்றுப்படை உரை
இலக்கணக் கொத்து
திருவிளையாடற புராணம்
சிவ பூசாவிதி
பால பாடம் (1.2.3.4)
ஆத்திசூடி உரை
கொன்றை வேந்தன் உரை
மருதூரந்தாதியுரை
கோயிற்புராண உரை
சைவ சமயநெறி உரை
கந்தபுராணம்
பெரியபுராணம் (உரைநடை)
திருக்குறள் (பரிமேலழகர் உரை)
திருக்கோவையாருரை
தொல்காப்பியம்
சவுந்தரிய லகரி
சைவ எல்லப்ப நாவலர்
பாரதம்
கொலை மறுத்தல்
வைராக்கிய தீபம்
வைராக்கிய சதகம்
திருவுந்தியார்
தாயுமானவ சுவாமிகள் பாடல்கள்

திருவாடுதுறை ஆதீனத்தில் இவர் ஆற்றிய உரையைக் கேட்டு மகிழ்ந்த அன்றய குரு சன்னிதானம் இவருக்கு நாவலர் என்ற பட்டத்தை வழங்கினார்.

1870-இல் நாவலர் கோப்பாயில் ஒரு வித்தியாசாலையை ஆரம்பித்து தமது செலவில் நடத்தினார். 1871 இல் வண்ணார்பண்ணையில் ஜோன் கில்னர் என்பவர் நடத்திய வெசுலியன் ஆங்கிலப் பாடசாலையில் சைவ மாணாக்கர் விபூதி அணிந்து சென்றமைக்காகப் பாடசாலையிலிருந்து வெளியேற்றப்பட்டனர். அப்பிள்ளைகளின் நன்மை கருதிய நாவலர், சைவ ஆங்கிலப் பாடசாலை ஒன்றை வண்ணர்பண்ணையில் 1872 தை மாதத்தில் நிறுவி நடத்தினார். நிதி வசதி இன்மையால் இப்பாடசாலை நான்கு ஆண்டுகளே நடைபெற்றது.

1872 ஐப்பசி மாதத்தில் தாம் அதுவரை பெற்ற அனுபவத்தால் அறிந்த உண்மைகளைத் திரட்டி எழுதி அதற்கு யாழ்ப்பாணச் சமய நிலை எனப் பெயர் தந்து வெளிப்படுத்தினார். 1875க்கும் 1878க்கும் இடைப்பட்ட காலத்தில் நன்னூல் விருத்தியுரை, நைடதவுரை, திருவிளையாடல் புராணம், நன்னூற் காண்டிகையுரை, சிவபூசா விதி, மூன்றாம் அனுட்டான விதி, குரு சிஷ்யக் கிரமம், பூசைக்கு இடம்பண்ணும் விதி, சிராத்த விதி, தருப்பண விதி, போசன விதி, தமிழ் அகராதி, தமிழ்-சமக்கிருத அகராதி, தமிழ்-ஆங்கில அகராதி முதலிய நூல்களை எழுதுவதிலும் சைவப் பிரசங்கங்கள் செய்வதிலும் நாவலர் ஈடுபட்டார்.

செய்யுள் வடிவில் இருந்த தமிழ் இலக்கிய மரபை வசன நடைக்கு மாற்றி காற்புள்ளி, அரைப்புள்ளி, நிறுத்தற்குறிகளோடு எழுதும் மரபைத் தொடங்கி வைத்தவர் ஆறுமுக நாவலரே ஆவார். இன்றய தமிழ் மேடைப்பேச்சுக்கு ஆரம்பமே இவர் செய்துகொண்டு வந்த பிரசாங்கங்கள்தான்.

1879ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 5ஆம் நாள் ஆறுமுக நாவலர் சிவபதம் அடைந்தார். ஐம்பத்தி ஆறு ஆண்டுகளே வாழ்ந்த ஆறுமுக நாவலர்  பிறந்திரரேல் சைவசமயத்திற்கும் தமிழுக்கும் என்ன நடந்திருக்கும் என்பதை நாவலர் சிவபதமடைந்தபோது சி.வை. தாமோதரம்பிள்ளை எழுதிய இன்னொரு பாடல் இனிது விளக்குகிறது.

நல்லைநகர் ஆறுமுக நாவலர் பிறந்திலரேல்
சொல்லுதமி ழெங்கே சுருதியெங்கே – எல்லவரும்
ஏத்துபுரா ணாகமங்கள் எங்கேப்ர சங்கமெங்கே
ஆத்தனறி வெங்கே அறை.’

சைவநெறிக் காவலராக விளங்கிய ஆறுமுக நாவலரின் நினைவைப் போற்றுவோம். மத மாற்றத்தை எப்போதும் தடுப்போம். தொன்மையான சனாதன தர்மத்தின் கருத்துக்களை எல்லோரிடமும் பரப்புவோம். 

செவ்வாய், 17 டிசம்பர், 2019

காங்கிரஸ் வரலாற்றாசிரியர் பட்டாபி சீதாராமையா நினைவுநாள் - டிசம்பர் 17

ஆந்திரப்பிரதேசத்தின் முக்கியமான காங்கிரஸ் பேரியக்கத்தின் முக்கியமான தலைவராகத் திகழ்ந்த பட்டாபி சீதாராமையாவின் நினைவுநாள் இன்று.


ஆந்திரபிரதேசத்தின் கிருஷ்ணா மாவட்டத்தில் வசித்து வந்த ஒரு நியோகி ப்ராஹ்மண குடும்பத்தில் 1880ஆம் ஆண்டு நவம்பர் 24ஆம் நாள் பிறந்தவர் பட்டாபி சீதாராமய்யா. தனது கல்லூரிப் படிப்பை சென்னை கிருஸ்துவக் கல்லூரியில் முடித்த சீதாராமையா பின்னர் மருத்துவத்துறையில் பட்டம் பெற்றார். அதனைத் தொடர்ந்து ஆந்திரப் பகுதியில் உள்ள கிருஷ்ணா மாவட்டத்தின் மசூலிப் பட்டினத்தில் மருத்துவராகப் பணியாற்றத் தொடங்கினார். 1905ஆம் ஆண்டு கர்சான் பிரபு வங்காளத்தை இரண்டாகப் பிளந்தார். அதனைத் தொடர்ந்து பல்வேறு இளைஞர்கள் விடுதலைப் போராட்டத்தில் குதித்தனர். சீதாராமையாவும் தனது மருத்துவ சேவையை விட்டு விட்டு அரசியலில் ஈடுபடத் தொடங்கினார். ஆரம்ப காலகட்டத்தில் லால் - பால் - பால் - எனப்படும் லாலா லஜபதிராய் - பால கங்காதர திலகர் - பிபின் சந்திரபால் ஆகியோரைத் தலைவர்களாக ஏற்றுக் கொண்ட சீதாராமையா பின்னர் காந்தியின் தொண்டராக மாறினார்.

1912ஆம் ஆண்டிலேயே  சென்னை ராஜதானியில் இருந்து பிரிக்கப்பட்டு தெலுங்கு மொழி பேசும் மக்களுக்காகத் தனியான மாநிலம் அமைக்கப்படவேண்டும் என்று பல்வேறு பத்திரிகைகளில் கட்டுரைகள் எழுதினார். அதனைத் தொடர்ந்து லக்நோ நகரில் 1916ஆம் ஆண்டு நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில் ஆந்திராவிற்காக தனியான காங்கிரஸ் கமிட்டி அமைக்கப்படவேண்டும் என்று வாதாடி, அதனை நிறைவேற்றவும் செய்தார். ஆந்திரப் பிரதேச காங்கிரஸ் கமிட்டியின் தலைவராகவும் சீதாராமையா இருந்தார்.

1939ஆம் ஆண்டு திரிபுரியில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாடு முக்கியமான ஒன்றாகும். காங்கிரஸின் தலைவர் பதவிக்கு நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் போட்டியிட்டார். அவரை எதிர்த்து பட்டாபி சீதாராமையா போட்டியில் ஈடுபட்டார். காந்தியின் ஆதரவு சீதாராமையாவிற்கு இருந்தது. ஆனாலும் நேதாஜி அந்தத் தேர்தலில் வெற்றி பெற்றார். பட்டாபியின் தோல்வி என் தோல்வி என்று காந்தி அறிவித்தார்.

மசூலிப்பட்டின கடற்கரையில் தடையை மீறி உப்பு எடுக்கும் போராட்டத்திற்காகவுவம் பின்னர் சாராயக்கடை மறியல் போராட்டத்திலும் அவர் கைது செய்யப்பட்டார். பின்னர் தனிநபர் சத்தியாகிரஹத்தில் ஈடுபட்டும் கைதானார்.

வெள்ளையனே வெளியேறு இயக்கத்தை 1942ஆம் ஆண்டு காந்தி அறிவித்தார். உடனடியாக அனைத்து காங்கிரஸ் தலைவர்களும் கைது செய்யப்பட்டனர். அதில் சீதாராமையாவும் ஒருவர். மூன்றாண்டுகள் அவர் மஹாராஷ்டிர மாநிலத்தில் உள்ள அஹமத்நகர் கோட்டையில் சிறை வைக்கப்பட்டார். சிறை வாழ்வில் அவர் எழுதிய நாள்குறிப்புகள் பின்னர் பூக்களும் கற்களும் என்ற பெயரில் வெளியானது.

1948ஆம் ஆண்டு காங்கிரஸ் கமிட்டியின் தலைவராகவும், அரசியலமைப்பு சபை உறுப்பினராகவும் சீதாராமையா பதவி வகித்தார். மத்தியப் பிரதேசத்தின் ஆளுநராகவும் அவர் பணியாற்றினார்.

இந்திய தேசிய காங்கிரஸ் பேரியக்கத்தின் வரலாற்றை பட்டாபி சீதாராமையா எழுதினார். அதுவே அந்த இயக்கத்தின் அங்கீகரிக்கப்பட்ட வரலாறு. 1935ஆம் ஆண்டு முதல் பகுதியும் 1947ஆம் ஆண்டு இரண்டாம் பகுதியும் என்று இரண்டு தொகுதியாக வெளியான முக்கியமான ஆவணம் இது.

சுதேசி இயக்கத்தில் பெரும் ஈடுபாடு கொண்டிருந்த சீதாராமையா ஆந்திரா இன்சூரன்ஸ் கம்பெனி மற்றும் கிருஷ்ணா மாவட்ட கூட்டுறவு வங்கி ஆகியவற்றையும் உருவாக்கினார். புகழ்பெற்ற ஆந்திரா வங்கி இவரால் உருவாக்கப்பட்டதுதான்.

நாட்டின் முக்கியமான தலைவர்களில் ஒருவரான பட்டாபி சீதாராமையா 1959ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 17ஆம் நாள் காலமானார். 

ஞாயிறு, 15 டிசம்பர், 2019

தேர்தல் ஆணையர் T N சேஷன் பிறந்தநாள் - டிசம்பர் 15.

பாரத நாட்டின் வழிகாட்டு ஆவணம் நமது அரசியலமைப்புச் சட்டம். தேர்தல் மூலம் தேர்வான மக்கள் பிரதிநிதிகள் மூலம் உருவாக்கப்படும் சட்டங்கள், அந்த சட்டங்களை செயல்படுத்தும் அரசு அதிகாரிகள், சட்டங்கள் அரசியலமைப்பு சட்டத்தின் வழிகாட்டுதலுக்கு உள்பட்டு இருக்கிறதா என்பதை உறுதி செய்யும் நீதிமன்றங்கள் இவை அரசின் முக்கியமான அங்கங்கள். வரையறுக்கப்பட்ட அதிகாரங்களோடு ஒன்றின் வரைமுறைக்குள் மற்றொன்று தலையிடா வண்ணம் அமைக்கப்பட்டது நமது அரசியலமைப்பு சட்டம்.

ஆனால் காலம் செல்லச் செல்ல, ஆணவமிக்க சிலரால் மற்ற அமைப்பில் உள்ளவர்களை தங்கள் செல்வாக்கின் மூலம் செயலற்றவர்களாக ஆக்கி, தங்களுக்குச் தேவையானவற்றை நிறைவேற்றிக்கொள்ளும் கோலமும் உருவானது. அப்போது சட்டரீதியாக உருவாக்கப்பட்ட தேர்தல் ஆணையத்தின் அதிகாரம் என்ன என்பதை அமுல்படுத்திக் காட்டிய  திருநெல்லை நாராயண ஐயர் சேஷன் என்ற டி என் சேஷனின் பிறந்தநாள் இன்று


பாலக்காடு பகுதியில் தனது ஆரம்பக் கல்வியை முடித்த சேஷன் சென்னை கிருஸ்துவக் கல்லூரியில் இயற்பியலில் இளங்கலை பட்டப்படிப்பை முடித்தார். அதன் பிறகு 1950ஆம் ஆண்டு முதல் 1952ஆம் ஆண்டு வரை அதே கல்லூரியில் ஆசிரியராகப் பணியாற்றினார். 1953ஆம் ஆண்டு இந்திய காவல் பணிக்கான தேர்வில் வெற்றி பெற்றார், ஆனால் அதில் சேரவில்லை. அடுத்த ஆண்டு 1954ஆம் ஆண்டு இந்திய ஆட்சிப் பணிக்கான தேர்வில் வெற்றி பெற்று பணிக்குச் சேர்ந்தார்.

இந்திய ஆட்சிப் பணியில் தமிழகப் பிரிவில் சேர்ந்த சேஷன் கோயம்புத்தூர் மாவட்ட துணை ஆட்சியாளாராகப் பொறுப்பேற்றார். பின்னர் திண்டுக்கல் மாவட்ட உதவி ஆட்சியாளர், தமிழக ஊரக வளர்ச்சித் துறை, போக்குவரத்துத்துறை போன்ற பிரிவுகளில் பணியாற்றினார். மதுரை மாவட்ட ஆட்சியாளராகப் பணியாற்றி, பின்னர் ஹார்வார்ட் பல்கலைக்கழகத்தில் பொது நிர்வாகத்தில் முதுகலைபட்ட படிக்க அமெரிக்கா சென்றார்.

மீண்டும் தாயகம் திரும்பிய சேஷன் அணுசக்திதுறை, விண்வெளித்துறை ஆகியவற்றில் பணியாற்றினார். சுற்றுப்புறச்சூழல் மற்றும் காடுகள் துறை, பாதுகாப்பு ஆகிய துறைகளில் செயலாளராகவும் இருந்தார். அதனைத் தொடர்ந்து ஆட்சிப் பணியியேயே மிக உயரிய பதவியான அமைச்சரவை செயலாளர் ( Cabinet Secretary ) பதவியையும், தேசிய திட்டக்குழுவில் உறுப்பினராகவும் இருந்தார்.

இந்தியாவின் 10-வது இந்தியத் தலைமை தேர்தல் ஆணையராக 1990-ம் ஆண்டு டிசம்பர் 12-ம் தேதி பொறுப்பேற்றார். 1996-ம் ஆண்டு டிசம்பர் 11-ம் தேதி வரை அந்தப் பொறுப்பில் இருந்தார். டி.என்.சேஷன் தலைமைத் தேர்தல் ஆணையராகப் பதவி வகித்த காலத்தில்தான், வாக்காளர் அடையாள அட்டை வழங்கும் நடைமுறை தொடங்கியது. வேட்பாளர்கள் தாங்கள் போட்டியிடும் தொகுதியில் செலவு செய்ய வேண்டிய அதிகபட்ச தொகை குறித்த கட்டுப்பாடும் விதிக்கப்பட்டது. பல்வேறு விமர்சனங்கள் எழுந்தாலும் அதைப்பற்றி கவலைகொள்ளாமல் தேர்தல் சீர்திருத்தப் பணிகளில் மும்முரமாக செயல்பட்டார்.

விதிகளுக்கு உட்பட்டு தேர்தல் ஆணையம் தனது முழு அதிகாரத்தைப் பயன்படுத்தியது இவரது பதவிக்காலத்தில்தான் எனக் கூறலாம். இதன்காரணமாக இந்தியத் தேர்தல் நடைமுறையின் சீர்திருத்தவாதி என அழைக்கப்பட்டார். இவருக்கு 1996-ம் ஆண்டு உயர்ந்த விருதான மகசேசே விருது வழங்கப்பட்டது

அரசங்கப் பதவிக்கு என்ன அதிகாரம் உள்ளது என்பதை சேஷன் ஐயம் திரிபுர நிரூபித்துக் காட்டினார். தேர்தல் பரப்புரை செய்வதில் நேரக் கட்டுப்பாடு, அனுமதிக்கப்பட்ட அளவில் தேர்தலுக்கான பணம் செலவழித்தல், வீட்டு உரிமையாளர் அனுமதி இன்றி சுவரில் விளம்பரம் செய்வதைத் தடுத்தல் என்று சட்டத்தில் சொன்னபடி தேர்தலை நடத்த முடியும் என்று செய்து காட்டியவர் திரு சேஷன் அவர்கள்.

பணியில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு குடியரசுத் தலைவர் தேர்தலில் சேஷன் போட்டியிட்டார். ஆனால் வெற்றி பெறவில்லை.சிலகாலம் முசோரியில் உள்ள லால் பகதூர் சாஸ்திரி பயிற்சி நிலையத்திலும், சென்னையில் உள்ள கிரேட் லேக்ஸ் மேலாண்மை நிறுவனத்திலும் சிறப்பு அழைப்பாளராக பயிற்றுநராக இருந்தார்.

திரு சேஷன் 2019ஆம் ஆண்டு நவம்பர் 10ஆம் நாள் காலமானார். தேர்தல் கமிஷன் என்ற அமைப்பு ஓன்று உள்ளது என்பதை பொது மக்களுக்கு புரியவைத்த சேஷன் இந்தியாவில் தேர்தல் நடைபெறும்வரை மக்கள் மனதில் குடியிருப்பார் என்பதில் ஐயமில்லை. 

சனி, 14 டிசம்பர், 2019

ஹிந்தி திரைப்பட நடிகர் ராஜ்கபூர் பிறந்தநாள் - டிசம்பர் 14.

ஏறத்தாழ ஐம்பதாண்டுகளுக்கு மேலாக ஹிந்தி திரைப்பட உலகின் முக்கியமான ஆளுமையாக விளங்கிய ரன்பிர் ராஜ்கபூர் என்ற ராஜ்கபூர் அவர்களின் பிறந்ததினம் இன்று.


ஹிந்தி திரைபட உலகின் தொடக்ககால நட்சத்திரங்களில் ஒருவரான பிரிதிவிராஜ்கபூரின் முதல் மகனாக பேஷவார் நகரில் 1924ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 14ஆம் நாள் பிறந்தவர் ராஜ்கபூர். இவரின் சகோதர்கள் சஷிகபூர், ஷம்மிகபூர் மற்றும் ஊர்மிளா என்ற சகோதரி. திரைப்பட நடிகராக பல்வேறு நகரங்களுக்கு மாறி மாறி பிரிதிவிராஜ்கபூர் வசித்ததால், அவரின் குடும்பமும் அவரோடே பயணப்பட வேண்டி இருந்தது. அதனால் ராஜ்கபூர் டெஹ்ராடூன், கொல்கத்தா, மும்பை என்று பல்வேறு நகரங்களில் உள்ள பள்ளிகளில் படித்துவந்தார்.

சிறுவயதில் இருந்தே கலைத்துறையில் ஆர்வம் கொண்டிருந்த ராஜ்கபூர் சினிமாவில் முதல்முதலாக கிளாப் அடிக்கும் வேலையில் இருந்துதான் தன் பயணத்தைக் தொடங்கினார். பல படங்களில் சிறுசிறு வேடங்களில் தலைகாட்டிய ராஜ்கபூர் முதல்முதலாக 1947ஆம் ஆண்டு நீல்கமல் என்ற படத்தில் கதாநாயகனாக நடித்தார். இந்தப் படத்தில் இவரது ஜோடி மதுபாலா.

தனது 24ஆம் வயதில் ஆர் கே ஸ்டூடியோ என்ற நிறுவனத்தை உருவாக்கி ஆக் என்ற படத்தை இயக்கினார். இந்தப்படத்தில் நர்கிஸ் இவருக்கு ஜோடியாக நடித்தார். இதன் மூலம் அந்த காலத்தில் மிக இளைய திரைப்பட இயக்குனர் என்ற பெருமை ராஜ்கபூரை வந்தடைந்தது. திலிப்குமார், நர்கிஸ் ஆகியோரோடு ராஜ்கபூர் நடித்த அன்டாஸ் என்ற படம் பெரும் வெற்றியை பெற்றது. ராஜ்கபூர் தயாரித்து, இயக்கி நடித்த பர்ஸாட் என்ற படம் திரையுலகின் முக்கியமான ஆளுமையாக ராஜ்கபூரை நிலைநிறுத்தியது.

தனது ஆர் கே ஸ்டுடியோ சார்பில் ராஜ்கபூர் தயாரித்து நடித்த ஆவாரா, ஸ்ரீ 420, ஜிஸ் தேஷ் மே கங்கா பெஹத்தி ஹை ஆகிய படங்கள் அன்றைய வெற்றிப்படங்கள். 1970களில் ராஜ்கபூர் மேரா நாம் ஜோக்கர் என்ற படத்தை தயாரித்து இயக்கி நடித்தார். ஆனால் இன்று கொண்டாடப்படும் இந்தப்படம் அன்று ஒரு தோல்விப்படமாக இருந்தது. 1973ஆம் ஆண்டு இவர் தயாரித்த பாபி என்ற திரைப்படம் மிகப்பெரும் வெற்றியைப் பெற்றது.

எழுபதுகளின் பிற்பாதிகளிலும் எண்பதுகளிலும் பெண் கதாபாத்திரங்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கும் பல படங்களை ராஜ்கபூர் தயாரித்து இயக்கினார். ஸிநத் அமன் நடித்த சத்தியம் சிவம் சுந்தரம், பத்மினி கோல்ஹாப்பூரி நடித்த பிரேம் ரோக், மந்தாகினி அறிமுகமான ராம் தேரி கங்கா மைலி ஆகியவை அதில் முக்கியமானவையாகும். இந்த காலகட்டங்களில் ராஜ்கபூர் குணசித்ர வேடங்களில் நடிக்கத் தொடங்கி இருந்தார்.

1946ஆம் ஆண்டு ராஜ்கபூர் கிருஷ்ணா மல்ஹோத்ரா என்ற பெண்மணியை திருமணம் செய்துகொண்டார். இவர்களுக்கு ஐந்து குழந்தைகள். அதில் ரன்திர்கபூர், ரிஷிகபூர், ராஜிவ்கபூர் ஆகியோரும் திரைத்துறையில்தான் இயங்கிக்கொண்டு உள்ளார்கள். இவரது மகளான ரீத்து எஸ்கார்ட்ஸ் குழுமத்தின் ராஜு நந்தாவைத் திருமணம் செய்துகொண்டு உள்ளார். இவர்கள் மருமகள்தான் அமிதாப் பச்சனின் மகள் ஸுவேதா. ராஜ்கபூரின் மற்றொரு மகளான ரீமா மனோஜ் ஜெயின் என்ற முதலீட்டு ஆலோசகரை மணந்து கொண்டுள்ளார். பிரிதிவிராஜ்கபூரின் தொடங்கி நான்கு தலைமுறையாக இவர்கள் குடும்பம் ஹிந்தி திரையுலகின் பல்வேறு துறைகளில் தனி முத்திரை பதித்து வருகிறது.

பல்வேறு திரைப்படங்களுக்காக ராஜ்கபூருக்கு மூன்று தேசிய விருதுகளும், பதினோரு பிலிம்பேர் விருதுகளும் வழங்கப்பட்டு உள்ளது. 1971ஆம் ஆண்டு பத்மபூஷன் விருதும் 1987ஆம் ஆண்டு தாதாசாஹேப்பால்கே விருதும் இவருக்கு வழங்கப்பட்டு உள்ளது.

திரு ராஜ்கபூர் 1988ஆம் ஆண்டு ஜூன் 2ஆம் நாள் காலமானார். திரை ரசிகர்கள் மனதில் இன்றும் ராஜ்கபூர் வாழ்ந்துகொண்டுதான் இருக்கிறார். 

வெள்ளி, 13 டிசம்பர், 2019

பாஜக தலைவர் மனோகர் பாரிக்கர் பிறந்தநாள் - டிசம்பர் 13.

பாஜகவின் முன்னணித் தலைவர்களில் ஒருவரும், கோவா மாநிலத்தின் முன்னாள் முதல்வரும், பாதுகாப்புத்துறை அமைச்சராகப் பணியாற்றியவருமான திரு மனோகர் கோபால கிருஷ்ண பிரபு பாரிக்கர் என்ற மனோகர் பாரிக்கர் அவர்களின் பிறந்தநாள் இன்று.


1955ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 13ஆம் நாள் பிறந்த திரு பாரிக்கர், தனது இளம்வயதிலேயே ராஷ்டிரிய ஸ்வயம்சேவக சங்கத்தில் தன்னை இணைத்துக் கொண்டார். மும்பையில் உள்ள புகழ்பெற்ற இந்திய தொழில்நுட்ப நிறுவனத்தில் ( IIT Mumbai ) உலோகவியல் பொறியியலில் ( Metallurgical Engineering ) பட்டம் பெற்றவர் இவர். ஐ ஐ டி பட்டதாரிகளில் சட்டசபை உறுப்பினராகத் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல் பட்டதாரியும் இவரே.

1978ஆம் ஆண்டு தனது பட்டப்படிப்பை முடித்த பாரிக்கர் கோவா திரும்பி தங்கள் குடும்பத் தொழிலில் ஈடுபட்டார். அதோடு சங்கப்பணியும் அவருக்கு காத்திருந்தது. தனது 26ஆம் வயதில் உள்ளூர் ஷாகாவின் சங்கசாலக் பொறுப்பு அவரை வந்தடைந்தது. அதோடு பாஜகவை கோவா மாநிலத்தின் வடக்குப் பகுதியில் வளர்க்கும் பணியும் அவருக்கு அளிக்கப்பட்டது. 1994ஆம் ஆண்டு கோவா மாநிலத்தின் சட்டசபைக்கு அவர் தேர்வானார். 1999ஆம் ஆண்டு குறுகிய காலகட்டத்திற்கு அவர் கோவா மாநிலத்தின் எதிர்கட்சித் தலைவர் பொறுப்பையும் வகித்தார்.

அடுத்து நடந்த தேர்தலில் பாஜவை வெற்றிபெற வைத்து 2000ஆம் ஆண்டு அக்டோபர் மாதத்தில் பாரிக்கர் முதல்வராகப் பொறுப்பேற்றார். அந்த ஆட்சி 2002ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் வரை நடைபெற்றது. அதிலிருந்து மரணமடையும் வரை பாரிக்கர் கோவா மாநிலத்தின் பாஜகவின் தவிர்க்க முடியாத ஆளுமையாக விளங்கினார்.

2014ஆம் ஆண்டு நடைபெற்ற பொதுத்தேர்தலிற்கு நரேந்திர மோதி அவர்களை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தவேண்டும் என்ற கோரிக்கையை முதலில் எழுப்பியவர்களில் மனோகர் பாரிக்கர் முக்கியமான ஒருவராவார். மோதி அமைச்சரவையில் 2014ஆம் ஆண்டு நவம்பர் மாதத்தில் பாதுகாப்புத்துறை அமைச்சராக பாரிக்கர் சேர்க்கப்பட்டார். தனது முதலமைச்சர் பதவியை ராஜினாமா செய்துவிட்டு பாரிக்கர் டெல்லி சென்றார்.

ராணுவத்திற்கான தளவாடங்கள் வாங்குவதில் வெளிப்படைத் தன்மையை உருவாக்கியதன்மூலமும், அதிநவீனரக ஆயுதங்களை ராணுவத்திற்குப் பெற்றுக் கொடுத்ததன் மூலமும் பாரிக்கர் தனது முத்திரையைப் பதித்தார். நாட்டின் எல்லைகளைக் காக்கும் ராணுவத்தினர் உயிரைக் காக்கும் தரமான ஆயுதங்களை வாங்கிக் கொடுத்ததன் மூலம் அவர் நாட்டுக்கு மிக முக்கியமான சேவையை ஆற்றினார்.

கோவா மாநிலத்தில் உருவான நிலையற்ற தன்மையை மாற்றும் பொருட்டு பாரிக்கர் மீண்டும் கோவா திரும்பி அந்த மாநிலத்தின் முதலமைச்சர் பொறுப்பை 2017ஆம் ஆண்டு மார்ச் மாதம் ஏற்றுக்கொண்டார். அவர் ஆட்சி செய்த காலத்தில் சட்டம் ஒழுங்கைப் பராமரிப்பதிலும், கோவாவின் சுற்றுலாதுறை வளர்ச்சிக்காகவும் எடுத்த நடவடிக்கைகள் இன்றும் மக்களால் நினைவு கூறப்படுகிறது.

துரதிஷ்டவசமாக கணைய புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பாரிக்கர் 2019ஆம் ஆண்டு மார்ச் மாதம் 17ஆம் நாள் காலமானார். அரசியல்வானில் சுடர்விட்டுப் பிரகாசித்து இருக்கவேண்டிய பல தலைவர்களை இள வயதிலேயே பாஜக இழந்து வருவது என்பது மிகவும் சோகமான ஒன்றாகும்.

இறுதி மூச்சுவரை ஒரு ஸ்வயம்சேவக் எப்படி இருக்கவேண்டும் என்பதற்கு உதாரணமாகத் திகழ்ந்த திரு மனோகர் பாரிக்கர் அவர்களை ஒரே இந்தியா தளம் மரியாதையோடு நினைவு கொள்கிறது. 

வியாழன், 12 டிசம்பர், 2019

விண்வெளி நிபுணர் நம்பி நாராயணன் பிறந்தநாள் - டிசம்பர் 12

பாரத நாட்டின் விஞ்ஞான வளர்ச்சியைத் தடுக்கும் விதமாக பின்னப்பட்ட சதிவலையை அறுத்தெறிந்து விட்டு வெற்றி வீரராக விளங்கும் நம்பி நாராயண் அவர்களின் பிறந்தநாள் இன்று. ஆனால் அதில் அவரும், நாடும் இழந்தது அதிகம்.


கன்யாகுமரி மாவட்டத்தின் தலைநகரான நாகர்கோவில் நகரில் 1941ஆம் ஆண்டு டிசம்பர் 12ஆம் நாள் பிறந்தவர் திரு நம்பி நாராயணன் அவர்கள். தனது படிப்பை முடித்த நாராயணன் இந்திய விண்வெளி ஆராய்சி நிலையத்தில் பணிக்குச் சேர்ந்தார். விக்ரம் சாராபாயின் தூண்டுதலின் பேரில் அமெரிக்காவில் உள்ள பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் ஏவுகணைக்கான திரவ எரிபொருள் பற்றிய படிப்பில் தனது மேற்படிப்பை முடித்தார். அமெரிக்காவில் கிடைத்த வேலைகளை உதறித்தள்ளிவிட்டு மீண்டும் பாரத நாட்டின் சேவைக்குத் திரும்பினார்.

அதுவரை திட எரிபொருள்கள்தான் பயன்பட்டுக் கொண்டிருந்ததை மாற்றி திரவ எரிபொருள்கள் மூலம் விண்ணில் செலுத்தப்படும் ராக்கெட்களுக்கான மோட்டார் தயாரிக்கும் முயற்சியில் நம்பி நாராயணன் ஈடுபட்டார். அவரது சோதனைகளுக்கு விண்வெளி ஆராய்சி நிலையத் தலைவர்களாக இருந்த சதிஷ் தவான் மற்றும் யு ஆர் ராவின் முழு ஒத்துழைப்பும் இருந்தது. மெதுவாக ஆனால் மிக உறுதியாக விண்வெளி ஆராய்சியில் பாரதம் முன்னேறிக்கொண்டு இருந்தது. பூமிப் பந்தின் மீது ஒரே இடத்தில் இருக்குமாறு, அதாவது பூமி சுழலும் அதே வேகத்தில் சுழலும் செயற்கைகோள்களை ஏவும் ஏவுகணைகளைத் தயாரிக்கும் பணியில் நம்பி நாராயணன் பணியாற்றிக்கொண்டு இருந்தார்.

அப்போதுதான் அந்த பூகம்பம் வெடித்தது. 1994ஆம் ஆண்டு நம்பி நாராயணன் மற்றும் சசிகுமார் என்ற மற்றொரு விஞ்ஞானி  மீது ராணுவ முக்கியத்துவம் வாய்ந்த ரகசியங்களை எதிரிநாட்டுக்கு அளித்ததாக ஒரு வழக்கு பதிவானது. அதோடு இந்த வழக்கில் இரண்டு மாலத்தீவைச் சார்ந்த இரண்டு இளம்பெண்கள் உள்ளனர் என்றும் இந்த ரகசியத்தை பகிர கோடிக்கணக்கான ரூபாய்கள் கைமாறியது என்றும் தகவல்கள் வந்தன. நாட்டையே உலுக்கிய விவகாரமாக இது வெடித்தது. நம்பி நாராயணன் கைது செய்யப்பட்டார்.

வழக்கு விசாரணையின் போது நாற்பத்தி ஆறு நாட்கள் அவர் காவலில் வைக்கப்பட்டார். விசாரணை என்ற பெயரில் கடுமையான சித்திரவதைக்கு உள்ளானதாக அவர் தெரிவித்தார். பிறகு 1996ஆம் ஆண்டு இந்த வழக்கு பொய்யாக ஜோடிக்கப்பட்டது என்று மத்திய புலனாய்வுதுறை தெரிவித்தது. புகழ்பெற்ற அறிஞரின் வாழ்க்கையை கெடுத்துவிட்டீர்கள் என்று தேசிய மனித உரிமை ஆணையம் கேரள அரசின் மீது கடுமையான கண்டணத்தைத் தெரிவித்தது. அவரிடம் மன்னிப்பு கோரி ஒரு கோடி ரூபாய் நஷ்டஈடு வழங்குமாறு அது கேரள அரசைக் கேட்டுக்கொண்டது. பத்து லட்ச ரூபாயை நஷ்டஈடாகக் கொடுக்கும்படி கேரள உயர்நீதிமன்றம் கேரள அரசுக்கு ஆணை பிறப்பித்தது.

நடந்த தவறுக்கு எந்தப் பரிகாரமும் தேடாமல், இதில் சம்பந்தப்பட்ட காவல் அதிகாரிகள் மீதான நடவடிக்கையை கேரள அரசு விலக்கிக் கொண்டது. இதனை எதிர்த்து நம்பி நாராயணன் மீண்டும் சட்டப் போராட்டத்தை முன்னெடுத்தார். நீதியரசர் தீபக் மிஸ்ரா தலைமையிலான மூன்று நீதிபதிகள் கொண்ட பெஞ்ச் நம்பி நாராயணன் அவர்களுக்கு ஐம்பது லட்சம் ரூபாய் நஷ்டஈடாகக் கொடுக்கும்படி உத்திரவு பிறப்பித்தது.

ஏறத்தாழ இருபத்தி ஐந்து ஆண்டுகளுக்குப் பிறகு திரு நம்பி நாராயணன் அவர்களுக்கு இழைக்கப்பட்ட கொடுமைக்கு பதில் கிடைத்தது. ஆனால் பாரதத்தின் விண்வெளிதுறை இதற்கு முன்னமே எட்டி இருக்கவேண்டிய வெற்றிகள் காலதாமதமானது.

நடந்த கொடுமைகளுக்கு பரிகாரமாக மத்திய அரசு திரு நம்பி நாராயணன் அவர்களுக்கு நாட்டின் உயரிய விருதுகளில் ஒன்றான பத்மபூஷன் விருதை வழங்கியது.

என்ன செய்தாலும் நம்பி நாராயணன் அவர்களுக்கு இழைக்கப்பட்ட அநீதிக்கு பரிகாரம் ஆகாதுதான். அவரிடம் மீண்டும் ஒரு முறை மன்னிப்பு கேட்பதும், அவருக்கு நிம்மதியான வாழ்வை அருளும்படி ஆண்டவனிடம் வேண்டிக் கொள்வதும்தான் இன்று நம்மால் செய்ய முடிந்த ஒன்றாகும்.

திரு நம்பி நாராயணன் அவர்களுக்கு உளம்கனிந்த பிறந்தநாள் வாழ்த்துகளையும், வணக்கங்களையும் ஒரே இந்தியா தளம் தெரிவித்துக் கொள்கிறது. 

புதன், 11 டிசம்பர், 2019

சர்சங்கசாலக் பாலாசாஹேப் தேவரஸ் பிறந்தநாள் - டிசம்பர் 11

குருஜி கோல்வாக்கருக்குப் பிறகு ராஷ்டிரிய ஸ்வயம்சேவக சங்கத்தை சர்சங்கசாலக்காக இருந்து வழிநடத்திய பரமபூஜ்யனிய மதுக்கர் தத்தாத்திரேய தேவரஸ் என்ற பாலாசாஹேப் தேவரஸ் அவர்களின் பிறந்ததினம் இன்று. 


மஹாராஷ்டிர மாநிலத்தைச் சார்ந்த தத்தாத்திரேய க்ரிஷ்ணாராவ் தேவரஸ் - பார்வதிபாய் தம்பதியினரின் எட்டாவது மகனாக 1915ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 11ஆம் நாள் பிறந்தவர் பாலாசாஹேப் தேவரஸ். மிக இளமைக்காலத்திலேயே சங்கத்தில் இணைந்து கொண்ட தேவரஸ் டாக்டர் ஹெட்கேவார் மற்றும் குருஜி கோல்வாக்கரால் பட்டை தீட்டப்பட்டார். சட்டத்துறையில் பட்டம் பெற்ற தேவரஸ், சங்கத்தின் முழுநேர பிரச்சாரகராகச் சேர்ந்தார். தேவரஸின் இளைய சகோதர் முரளிதர் தேவரஸும் சங்கத்தின் முழுநேர பிரச்சாரகர்தான். 

சங்கத்தின் பணியை முன்னெடுக்க பாலாசாஹேப் வங்காளத்திற்கு அனுப்பப்பட்டார். வெற்றிகரமாக வங்க மண்ணில் சங்கத்தை நிறுவி விட்டு நாக்பூர் திரும்பி சங்கத்தின் மராத்தி மொழி பத்திரிகையான தருண்பாரத் மற்றும் ஹிந்தி மொழியில் வெளியான யுகதர்மா ஆகிய பத்திரிகைகளின் பொறுப்பை தேவரஸ் ஏற்றுக்கொண்டார். சங்கம் ஒருபோதும் நேரடி அரசியலில் ஈடுபடுவது இல்லை. அதனால்தான் டாக்டர் ஹெட்கேவார் காந்தியின் சத்தியாகிரஹப் போராட்டத்தில் ஈடுபட்டு சிறைசென்ற போது, சங்கத்தின் பிரதிநிதியாக இல்லாமல் தனிப்பட்ட முறையிலேயே கலந்துகொண்டார். ஆனால் தவிர்க்கமுடியாமல் நேரடி அரசியல் பணியை சங்கம் முன்னெடுக்கவேண்டிய கட்டாயம் தேவரஸ் அவர்களுக்கு ஏற்பட்டது. 

1973ஆம் ஆண்டு சங்கத்தின் பொறுப்பு தேவரஸ் வசம் வந்தது. சிறிது காலத்திலேயே இந்திரா நெருக்கடி நிலையை அமுல் செய்தார். உடனடியாகத் தடை செய்யப்பட்ட இயக்கங்களின் பட்டியலில் சங்கமும் இருந்தது. நாக்பூரில் கைது செய்யப்பட்ட தேவரஸ் பூனா நகரின் ஏர்வாடா சிறையில் அடைக்கப்பட்டார். சங்கத்தின் முக்கியப் பொறுப்பாளர்கள் பலரும் கைது செய்யப்பட்டனர். பலர் தலைமறைவானார்கள். ஸ்வயம்சேவகர்களின் வீடுகள் பல்வேறு அரசியல் இயக்கங்களைச் சார்ந்தவர்களின் சரணாலயமானது. இருபத்திமூவாயிரத்திற்கு மேற்பட்ட ஸ்வயம்சேவகர்கள் கைது செய்யப்பட்டனர். பின்னர் நடைபெற்ற தொடர்ந்த போராட்டங்களில் நாற்பத்தியையாயிரம் சங்க தொண்டர்கள் கைதானார்கள். 

சர்வாதிகாரத்தை எதிர்த்த சங்கத்தின் பங்களிப்பைப் பற்றி 1976ஆம் ஆண்டு டிசம்பர் 12ஆம் தேதியிட்ட The Economist பத்திரிகை இப்படி எழுதியது. 

“The underground campaign against Mrs Gandhi claims to be the only non-left wing revolutionary force in the world, disavowing both bloodshed and class struggle. Indeed, it might even be called right wing since it is dominated by the Hindu communist party, Jan Sangh and its ‘cultural’ (some say paramilitary) affiliate the RSS. But its platform at the moment has only one non-ideological plank; to bring democracy back to India. The ground troops of this operation (the underground movement), consist of tens of thousands of cadres who are organized to the village level into four men cells. Most of them are RSS regulars, though more and more new young recruits are coming in. The other underground parties which started out as partners in the underground have effectively abandoned the field to Jan Sangh and RSS.”

நெருக்கடி நிலையை விலக்கிக்கொண்டு திடீர் என்று இந்திரா தேர்தலை அறிவித்தார். எல்லா எதிர்கட்சிகளையும் ஒரு குடைக்குள் கொண்டுவந்து இந்திராவை எதிர்க்க நானாஜி தேஷ்முக் தலைமையிலான ஸ்வயம்சேவகர்கள் ஈடுபட்டனர். குறுகிய கால இடைவெளிக்குள் நாடெங்கும் இந்திராவைத் தோற்கடிக்க ஸ்வயம்சேவகர்கள் உழைத்தனர். 

தேர்தல் முடிந்தபிறகு மீண்டும் சங்கம் தனது தேச புனர்நிர்மாணப் பணிக்கு திரும்பியது. எண்பதுகளின் இறுதிப் பகுதியில் மண்டல் கமிஷன் பரிந்துரைகளை அமுலாக்க வி பி சிங் முடிவு செய்தார்.  இந்த முடிவு நாடெங்கும் பெரும் சூறாவளியைக் கிளப்பியது. இந்த முடிவை எப்படி எதிர்கொள்ள என்று சங்கத்தின் அனைத்து நிலைகளிலும் விவாதங்கள் நடந்தன. ஏற்கனவே தீண்டாமை குற்றம் இல்லையென்றால் எதுவுமே குற்றமாகாது என்று மீண்டும் மீண்டும் கூறிக்கொண்டு இருந்த தேவரஸ், பெருவாரியான மக்களின் முன்னேற்றத்திற்காக இதனை ஏற்றுக்கொள்ளவேண்டும் என்று அறிவுறுத்தினார். 

தேவரஸ் காலத்தில் அயோத்தியில் சர்ச்சைக்குரிய கட்டிடம் இடிபட்ட போது மீண்டும் சங்கம் தடை செய்யப்பட்டது. அதில் இருந்தும் மீண்டும் பொலிவோடு முன்னெழ தேவரஸ் அவர்களின் பங்களிப்பு மிக அதிகம். 

1993ஆம் ஆண்டு தனது உடல்நிலையைக் கருத்தில் கொண்டு சர்சங்கசாலக் பொறுப்பில் இருந்து தேவரஸ் விலகிக் கொண்டார். அடுத்த தலைவராக ராஜுபையா என்ற பேராசிரியர் ராஜேந்திரசிங் பொறுப்பேற்றுக்கொண்டார். 

இருபது ஆண்டுகள் சங்கத்தை மிக சிக்கலான காலகட்டத்தில் வழிநடத்திய பாலாசாஹேப் தேவரஸ் 2003ஆம் ஆண்டு ஜூலை 13ஆம் நாள் பாரததாயின் தாளில் அற்பணமானார். 

சங்கத்தின் புகழ்வாய்ந்த தலைவருக்கு ஒரே இந்தியா தளம் தலை வணங்கி தனது மரியாதையைச் செலுத்துகிறது. 

செவ்வாய், 10 டிசம்பர், 2019

சக்ரவர்த்தி திருமகன் - ராஜாஜி பிறந்தநாள் - டிசம்பர் 10.

புகழ் பெற்ற வழக்கறிஞர், சுதந்திரப் போராட்ட வீரர், காந்தியின் மனசாட்சி என்று அறியப்பட்டவர், கருத்தியல் எதிரிகளால் மூதறிஞர் என்று போற்றப்பட்டவர், சமூக சீர்திருத்தவாதி, மேற்கு வங்க ஆளுநர், பாரதத்தின் கவர்னர் ஜெனரல், மத்திய உள்துறை அமைச்சர், சென்னை மாகாணத்தின் முதலமைச்சர், எதிர்க்கட்சியை இல்லாமல் இருந்த காலத்தில் காங்கிரசுக்கு எதிராக சுதந்திரா கட்சியை கட்டமைத்தவர், முதல்முதலாக தமிழகத்தில் மதுவிலக்கை அமுல் செய்தவர், விற்பனை வரி என்ற புதிய வரியை அறிமுகம் செய்தவர் என்றெல்லாம் அறியப்பட்ட சக்கரவர்த்தி ராஜகோபாலாச்சாரியாருக்கு எழுத்தாளர் என்ற ஒரு முகமும் உண்டு.


டிசம்பர் 1921 முதல் மார்ச் 1922 வரை மூன்று மாதங்கள் சிறையில் அடைப்பட்டுக்கிடந்த ராஜாஜி, வெளியே வந்ததும் `சிறையில் தவம்' எனும் நூலை எழுதி எழுத்தாளரும் நூலாசிரியரும் ஆனார். தமிழிலும் ஆங்கிலத்திலும் 40 நூல்கள் எழுதியுள்ளார். கவிதை, கதை, நாவல் என எல்லா வடிவங்களிலும் எழுதினார். சமய, இதிகாச, தத்துவ எழுத்தில் ஒரு புதிய பாணியைப் படைத்தார்.

ஏராளமான சிறுகதைகள் எழுதிய ராஜாஜிக்கு, கதைக்கொள்கையைப் பொறுத்தவரையில் தெளிவான சிந்தனையும் கோட்பாடும் உண்டு. சிறுகதை வேறு, நாவல் வேறு என்பதையும் இரண்டுக்கும் உள்ள வித்தியாசத்தையும் அவர் மிகக் கச்சிதமாக அறிந்துவைத்திருந்தார். 

"சிறுகதை நெடுங்கதையைப்போல் நீடித்த ஒரு காலப்போக்கையோ அல்லது ஒரு கதாநாயகனுடைய வாழ்க்கை முழுவதையுமோ சித்திரிக்காது. தனிப்பட்ட ஒரு சந்தர்ப்பத்தை மட்டிலும் எடுத்துக்கொண்டு சித்திரிப்பது சிறுகதை. சிறுகதையில் நிகழ்ச்சிச் செறிவு அதிகமாகக் காணப்பட மாட்டாது. சம்பவங்கள் குறைந்த எண்ணிக்கையாய்த்தான் இருக்கும். ஆனால், கதைக்கட்டு சாமர்த்தியமாகப் பதிந்திருக்கும். பாத்திரங்கள் பளிச்செனத் தூக்கிக்காட்டும் குண விசேஷங்களுடன் இருக்கும். நல்ல சிறுகதைக்கு அடையாளம் ஒன்றே. அதைப் படித்து முடிக்கும்போது நல்லவர்களுடைய மனதில் மகிழ்ச்சி தோன்றி உள்ளம் பூரிக்கும். இந்தக் கதைகளெல்லாம் நான் வெறும் பொழுதுபோக்காக எழுதவில்லை. என் நாட்டு மக்களுக்கு என்னுடைய எந்தக் கருத்து நன்மைபயக்குமோ, மக்களின் முன்னேற்றத்துக்கு எந்த அனுபவ உண்மை பயன்படுமோ அதைக் கதைபோலச் சொல்ல வேண்டும் என்பதே என்னுடைய நோக்கம். வெறும் கதையழகு, கலையழகுக்காக நான் இவற்றை எழுதவில்லை. என் அனுபவத்தில் நான் கண்ட சில உண்மைகளை என் நாட்டு மக்களுக்குச் சொல்கிறேன், அவ்வளவே.” " இது தனது கதைகளைப் பற்றி ராஜாஜியே செய்த திறனாய்வு.

மதுவிலக்குப் பிரசாரம், தீண்டாமை ஒழிப்பு போன்ற அன்றைய காங்கிரஸ் கட்சியின் நடவடிக்கைகளுக்குத் துணையாகப் பிரசாரம் செய்யும் நோக்குடன் நிறைய கதைகள் எழுதியவர் ராஜாஜி. அவர் எப்போதுமே ஓர் ஒழுக்கவாதி. ஆகவே, சிறுகதை உள்ளிட்ட எந்தப் படைப்பானாலும் அவசியம் ஒரு நீதி இருக்க வேண்டும் என்பதை அவர் வற்புறுத்துவார். அதனால் அவருடைய கதைகளில் பிரசார தொனி சற்றுத் தூக்கி நிற்கும். ஆனால், அத்தகைய பிரசாரம் ஏதுமில்லாத வாழ்க்கைக் கதைகளையும் அவர் சுவைபட எழுதியிருக்கிறார். ராஜாஜி வக்கீலாக இருந்ததாலோ என்னவோ, அவருடைய பெரும்பாலான கதைகளில் ஒரு வக்கீல் வந்து நின்றுவிடுகிறார்.

ராஜாஜி கதைகள்', `பாற்கடல்', `பிள்ளையார் காப்பாற்றினார்', `நிரந்தரச் செல்வம்' ஆகிய தொகுதிகளிலும் தனியாகவும் என 60-க்கு மேற்பட்ட சிறுகதைகளை ராஜாஜி எழுதியிருக்கிறார். மணிக்கொடியும், ஆனந்த விகடனும் சிறுகதைக்கு இடம் கொடுக்கத் தொடங்கும் முன்னரே ராஜாஜி கதை எழுதத் தொடங்கிவிட்டார் என்பது குறிப்பிடத்தக்கது. 1929-ம் ஆண்டில் மதுவிலக்குப் பிரசாரத்துக்காகவே அவர் தொடங்கிய `விமோசனம்’ இதழில் அவர் கதைகள் எழுதினார்.

ராஜாஜியின் அறிவு முதிர்ச்சிக்கு மக்களிடத்தில் இருந்த செல்வாக்கே அவரது எழுத்துகளுக்கு மதிப்பைக்கொடுத்தது. அரசியலில் இருந்த புகழால் இலக்கியத் துறையில் பெரும்பெயர் பெற்ற ராஜாஜி, தமது எழுத்துத்திறனால் இலக்கியத் துறையிலும் தமக்கு நிரந்தரமான ஓர் இடத்தைப் பெற்றுக்கொண்டார். `சமீபகால இலக்கிய வரலாற்றில், அரசியலை இலக்கியத்துக்குள் கலந்தோருள் ராஜாஜி முதன்மையானவர்.

1954-ம் ஆண்டில் சென்னை முதலமைச்சர் பதவி காமராஜிடம் கைமாறியபோது, ராஜாஜிக்கு வயது 76. அதன் பிறகு ராமாயணத்துக்கு புத்துயிர் கொடுக்கும் முயற்சியில் இறங்கினார். . `கல்கி' வார இதழில் 23 மே 1954 முதல் 6 நவம்பர் 1955 வரை `சக்கரவர்த்தித் திருமகன்' எனும் பெயரில் ராமாயணச் சுருக்கத்தைத் தொடராக எழுதினார். ராஜாஜியின் தந்தை பெயர் சக்கரவர்த்தி வேங்கடார்யா ஐயங்கார். ஆகவே, `சக்கரவர்த்தித் திருமகன்' எனும் தலைப்பு ஒருவகையில் ராஜாஜிக்கேகூடப் பொருத்தமானதுதான். அந்தத் தொடர் மலிவுப் பதிப்பாக 1956 மார்ச் மாதம் ஒரு ரூபாய் விலையில் நூலாக வந்தபோது, தொடர்ந்து 33 பதிப்புகள் கண்டு லட்சக்கணக்கான பிரதிகள் விற்றுத் தமிழ்ப் புத்தக விற்பனையில் சரித்திரம் படைத்தது. அதுமட்டுமன்று, அதற்கு சாகித்திய அகாடமி பரிசும் 1958-ம் ஆண்டில் கிடைத்தது.

`குழந்தைகளுக்கான கதைகளும் எழுதினார் ராஜாஜி. சிறுவர்களை ஒன்றும் அறியாதவர்கள், அவர்களுக்குப் பெரியவர்களின் உபதேசம் தேவை என்ற எண்ணத்தை, முற்றிலும் இந்தக் கதைகளில் உடைத்துவிட்டார் ராஜாஜி. நன்கு புரிந்துகொள்ளக்கூடிய பக்குவமுடையவர்களை வைத்துக்கொண்டே கதைகளைச் சொல்லியிருக்கிறார்' என்று ராஜாஜியைப் பற்றி இந்திய இலக்கியச் சிற்பிகள் வரிசையில் நூல் எழுதிய ஆர்.வெங்கடேஷ் குறிப்பிடுகிறார்.

சேலத்தில் இலக்கிய வளர்ச்சிக்காக சேலம் இலக்கியச் சங்கத்தை நிறுவி, அதன்மூலம் தொடர்ந்து கூட்டங்களை நடத்தியவர் ராஜாஜி. Tamil Scientific Terms Society என்ற அமைப்பை நிறுவி தமிழில் அறிவியல் கலைச்சொற்கள் உருவாக்க காரணமாக இருந்தார்.

மஹாபாரதத்தை வியாசர் விருந்து என்ற பெயரிலும், கண்ணன் காட்டிய வழி என்று பகவத் கீதையை, திருமூலர் திருமொழி, சோக்கிரதர், உபநிடதப் பலகணி, குடி கெடுக்கும் கள், திக்கற்ற பார்வதி, ராஜாஜி கதைகள், ராஜாஜி கட்டுரைகள் என்று பல்வேறு புத்தகங்களையும் எழுதியுள்ளார்.

ராஜாஜி-கல்கி-சதாசிவம்-எம்.எஸ்.சுப்புலட்சுமி-ரசிகமணி ஆகியோர் நட்சத்திர நண்பர்களாக அன்றைய நாள்களில் மதிக்கப்பட்டவர்கள். ராஜாஜி கவிஞர் அல்லர். ஆனால், சில பாடல்களை எழுதியுள்ளார். அவர் எழுதி இசைக்குயில் எம்.எஸ்.சுப்புலட்சுமி பாடி உலகெங்கும் புகழ்பெற்ற ஒரு பாடல் `குறை ஒன்றும் இல்லை மறைமூர்த்தி கண்ணா...' என்ற பக்திப்பாடல்.

ராஜாஜி, தம் 37-ம் வயதில் மனைவி அலர்மேல்மங்கையை இழந்தார். அப்போது அவருடைய கடைசி மகள் லட்சுமிக்கு மூன்று வயது. மூத்த மருமகன் வரதாச்சாரி இறந்தபோது, மகள் நாமகிரிக்கு 26 வயது. இளைய மருமகன் தேவதாஸ் காந்தி மறைந்தபோது, மகள் லட்சுமிக்கு 45 வயது. இத்தகைய இழப்புகளையும் வாழ்க்கையில் பல இடர்களையும் சோதனைகளையும் சந்தித்தவண்ணம் இருந்த அவரால், `குறை ஒன்றும் இல்லை...' என்று எப்படிப் பாட முடிந்தது என்பது அதிசயம்தான்.

சில பத்தாண்டுகளைத் தாண்டிப் பார்க்கும் அறிவாற்றல் மிக்க தலைவரை இன்று மரியாதையுடன் ஒரே இந்தியா தளம் நினைவு கொள்கிறது.

திங்கள், 9 டிசம்பர், 2019

விடுதலை வீரர் ராவ் துலாராம் - டிசம்பர் 9.

அந்த விடுதலை வீரர் ஆங்கிலேயர்களுக்கு எதிராக ஆயுதம் தாங்கிய போராட்டத்தை முன்னெடுத்தவர். பலமுறை ஆங்கிலேயர்களின் கண்களில் மண்ணைத் தூவிவிட்டு தப்பித்துச் சென்றவர். பிறகு பாரதத்தை விட்டு விலகி வெளிநாட்டு ஆட்சியாளர்களின் உதவியுடன் ராணுவத்தை உருவாக்கியவர். ஆனால் தனது கனவு நிறைவேறும் முன்னால், வெளிநாட்டிலேயே மரணம் அடைந்தவர். நாம் சுபாஷ் சந்திரபோஸைப் பற்றி பேசிக்கொண்டு இருக்கவில்லை. அவருக்கு எண்பதாண்டுகளுக்கு முன்னம் அதே போல இருந்த ஒரு வீரரைப் பற்றித்தான் பேசிக்கொண்டு இருக்கிறோம்.


இன்றய தெற்கு ஹரியானா முதல் வடகிழக்கு ராஜஸ்தான் வரை உள்ள இடம் அஹிர்வால் பிரதேசம் என்று அறியப்படும் நாடாக இருந்தது. ரேவாரி அதன் தலைநகர். அதனை யது குலத்தைச் சார்ந்த மன்னர்கள் ஆட்சி செய்து வந்தனர். டெல்லிக்கு எண்பது கிலோமீட்டர் தொலைவில் இந்த நாடு இருந்தது. இந்த நாட்டை ஆண்டுகொண்டு இருந்த ராஜா ராவ் புரன் சிங் - ராணி ஞான் கவுர் தம்பதியினரின் மகனாக 1825ஆம் ஆண்டு டிசம்பர் 9ஆம் நாள் பிறந்தவர் துலா சிங் அஹிர். நாடாளுவதற்கு தேவையான ஆயுதப் பயிற்சி, ராணுவ வியூகங்கள் அமைத்தல் ஆகியவற்றை சிறுவயதில் இருந்தே மேற்கொண்டார் துலா சிங். அதோடு அவர் ஹிந்தி, பாரசீகம், உருது, ஆங்கிலம் ஆகிய மொழிகளிலும் நிபுணத்துவம் பெற்று இருந்தார். தனது பதினாலாம் வயதில் தந்தையை இழந்த துலா சிங் ராஜா ராவ் துலா ராம் என்ற பெயரோடு 1839ஆம் ஆண்டு அரியணை ஏறினார்.

பாரதம் கொந்தளிப்பான காலத்தில் இருந்த நேரம் அது. வணிகம் செய்யவந்த ஆங்கிலேயர்கள் சிறிது சிறிதாக பாரதத்தை தங்கள் கைக்குள் கொண்டு வந்து கொண்டிருந்தனர். அதனை எதிர்த்து முதலாம் சுதந்திரப் போர் தொடங்கியது. அதில் ராஜா ராவ் துலாராமும் கலந்துகொண்டார். கடைசி முகலாய அரசராக இருந்த பகதுர் ஷா ஜாபர் அவர்களின் உதவிக்கு ஐயாயிரம் வீரர்கள் கொண்ட படையோடு அவர் சென்றார். ஏற்கனவே ஆயுதம் தயாரிக்கும் தொழிற்சாலைகளை நிறுவி இருந்ததால், பல்வேறு ஆயுதங்களும் துலாராம் வசம் இருந்தது.

டெல்லிக்கு சற்று தொலைவில் உள்ள நசிபிபூரில் நடந்த சண்டையில் ஆங்கிலேயர்களை துலாராம் படைகள் தோற்கடித்தன. கர்னல் ஜான் ஜெரார்ட் மற்றும் கேப்டன் வாலஸ் ஆகியோர் இதில் கொல்லப்பட்டனர். ஆனால் பாட்டியாலா, கபூர்தலா போன்ற நாடுகளின் படைகள் ஆங்கிலேயர்களின் உதவிக்கு வர துலாராம் படைகள் பின்னடையவேண்டி இருந்தது. எப்படியும் ஆங்கிலேயர்கள் தன்னைப் பின்தொடருவார்கள் என்பதை அறிந்த துலாராம், தாந்தியா தோபேயின் துணையோடு மீண்டும் போராட்டத்தை தொடங்கினார். முழுமையான ஆதரவு இல்லாததால் முதல் சுதந்திரப் போர் வெற்றியில் முடியவில்லை.

சரணடைய விரும்பாத துலாராம், ஈரானுக்குச் சென்று அன்றய மன்னர் ஷாவைச் சந்தித்தார். ஷா அவருக்கு ராணுவ உதவி அளிப்பதாக வாக்களித்தார். அதனைத் தொடர்ந்து ஆப்கானிஸ்தான் வந்த துலாராம் அந்த நாடு எமிரையும் சந்தித்து உதவி கோரினார். அவரும் உதவி செய்ய ஒத்துக்கொண்டார். ஆப்கானிஸ்தானத்தில் இருந்தே ரஷிய மன்னரோடு துலாராம் தொடர்பு கொண்டார். ஏற்கனவே இவர்கள் அனைவரோடும் ஆங்கிலேயர்களுக்கு நல்ல உறவு இல்லை. அதனால் இவர்கள் அனைவரும் துலாராமிற்கு உதவி செய்யத் தயாராக இருந்தனர். ஆனால் துரதிஷ்டவசமாக 1863ஆம் ஆண்டு செப்டம்பர் 23ஆம் நாள் துலாராம் தனது முப்பத்தி எட்டாம் வயதில் ஆப்கானிஸ்தான் தலைநகர் காபூல் நகரில் மரணமடைந்தார்.

வீரர்கள் மரணமடையலாம், ஆனால் வீர வரலாறு மரணிக்காது. ராஜா ராவ் துலாராம் உள்ளிட்ட வீரர்களுக்கு நமது நன்றியும் வணக்கங்களும் என்றும் உரித்தாகுக. 

புதன், 4 டிசம்பர், 2019

பொம்மைகள் வழியாக விஞ்ஞானம் அரவிந்த்குப்தா டிசம்பர் 4

நாம் உணர்கிறோமோ இல்லையோ, நாம் வசிக்கும் பிரபஞ்சம் திட்டவட்டமான அறிவியல் விதிகளின்படியே இயங்குகிறது. ஆனால் பயனாளிகளுக்கு அறிவியல் விதிகள் சொல்லிக்கொடுக்கப்படுவது இல்லை. பொதுமக்களுக்கும் கல்விச்சாலைகளுக்கும் இடையே மிகப்பெரும் இடைவெளி இருக்கின்றது. மனப்பாடம் செய்து, கேள்விகளுக்கு பதில் சொல்லும்படிதான் நமது மாணவர்கள் பயிற்றுவிற்கப் படுகிறார்கள். பதில்கள் மீது கேள்வி கேட்கும் மாணவர்களை நமது கல்விமுறை ஊக்குவிப்பதில்லை. இந்த இடைவெளியை இல்லாமல் செய்ய பலர் முயற்சி செய்து வருகிறார்கள். அதில் முக்கியமானவர் அரவிந்த் குப்தா. நாம் குப்பைகள் என்று ஒதுக்கும் பொருள்களில் இருந்து பொம்மைகளைச் செய்து அதன் மூலம் அறிவியலை கற்றுக்கொடுக்கும் ஆசிரியர் இவர்.


அர்விந்த் குப்தா, பரேலி என்னும் ஊரில், மிக அதிகம் படிக்காத, ஆனால், கல்வியின் முக்கியத்துவம் அறிந்த பெற்றோருக்கு நான்காவது மகனாக 1953ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 4ஆம் நாள் பிறந்தார். பள்ளிப்படிப்பை முடித்த அரவிந்த் குப்தா 1972 ஆம் ஆண்டு, கான்பூர் இந்தியத் தொழில்நுட்பக் கழகத்தில் மின் பொறியியல் படிக்கச் சேர்ந்தார். அந்தக் காலத்தில் ஒரு நாள், கான்பூர் ஐஐடியில், கல்வியாளார் அனில் சட்கோபால் என்பவர் ஒரு உரை நிகழ்த்தினார். அனில் சட்கோபால், இந்திய வேளாண் கழகத்தில் முதுகலைப் பட்டமும், கலிஃபோர்னியாப் பல்கலைக்கழகத்தில், மூலக்கூறு உயிரியல் மற்றும் உயிர்த் தொழில்நுட்பத்தில் முனைவர் பட்டமும் பெற்றவர்.

வேளாண்மை, சுகாதாரம், கல்வி ஆகியவற்றில் கவனம் செலுத்தும் கிஷோர் பாரதி என்ற சேவை நிறுவனத்தை அனில் சட்கோபால் 1971ஆம் ஆண்டு துவங்கி இருந்தார். 1972 ஆம் ஆண்டு, ஹோஷங்காபாத் அறிவியல் கல்வித் திட்டம் (Hoshangabad Science Teaching Programme – HSTP) என்னும் திட்டத்தைத் துவங்கினார். இது துவக்கத்தில், 5-8 வரையிலான அரசுப் பள்ளி மாணவர்களுக்கு, அறிவியற் கல்வியைக் கற்பிப்பதற்காகத் துவங்கப்பட்டது. அவரின் உரை அரவிந்த் குப்தாவிற்கு புதிய திறப்பை அளித்தது.

படிப்பை முடித்தபின் அரவிந்த் குப்தா டாடா மோட்டார் நிறுவனத்தில் இரண்டு ஆண்டுகள் பணிபுரிந்தார். பின்னர் ஓராண்டு விடுப்பு எடுத்துக்கொண்டு ஹோஷங்காபாத் சென்றார். சைக்கிளின் வால் ட்யூப்பையும், தீக்குச்சிகளையும் வைத்துக் கொண்டு, பல்வேறு விதமான வடிவங்களை அமைத்தார். அவற்றை வைத்துக் கொண்டு, கணித வடிவங்கள், வேதியியல் மூலக்கூறு அமைப்புகள், வீடுகள், கட்டுமானங்கள் முதலியவற்றைக் குழந்தைகளே செய்து, அறிந்து கொள்ளுமாறு பயிற்றுவித்தார். ஆறு மாதங்களுக்குப் பிறகு, அங்கிருந்து திருவனந்தபுரம் சென்று, கட்டிடக்கலை வல்லுநர் லாரி பேக்கரிடம் பணிபுரிந்தார.

மீண்டும் வேலைக்குத் திரும்பிய அரவிந்த் குப்தாவிற்கு, தான் மேற்கொள்ள வேண்டிய பணி எது என்பது தீர்மானமாகத் தெரிந்ததால், வேலையை விட்டு விட்டு கல்வி கிடைக்காத குழந்தைகளுக்கு பொம்மைகள் மூலம் அறிவியல் ஆர்வத்தைத் தூண்டும் பணியில் ஈடுபட முடிவு செய்து, வேலையை உதறினார். அந்தச் சமயத்தில் மத்திய அறிவியல் மற்றும் தொழில்நுட்பத் துறையின் செயலராக இருந்த பேராசிரியர் யாஷ்பால் அவர்கள் மூலமாக, ஒரு புத்தகம் எழுத ஒரு ஃபெல்லோஷிப் கிடைத்தது. “தீக்குச்சி மாதிரிகளும் மற்ற அறிவியல் பரிசோதனைகளும்”, என்னும் ஒரு புத்தகத்தை எழுதினார். இரண்டு ஆண்டுகளில், அந்தப் புத்தகம் 12 மொழிகளில் வெளியாகி, கல்வியாளர்களிடையே பெரும் வரவேற்பைப் பெற்றது.

அனில் சடகோபனின் ஏகலைவா நிறுவனத்துக்காக, அர்விந்த் குப்தா பல அறிவியல் நூல்களை எழுதினார். தரங்க் (சிற்றலைகள்) என்னும் தலைப்பில், 25 வருடங்களில், 125 நிகழ்ச்சிகளைத் தயாரித்து, தேசியத் தொலைக்காட்சிக்காக (தூர்தர்ஷன்) வழங்கினார். இதன் மூலமாக, மிகப் பிற்படுத்தப்பட்ட மாவட்டங்களுக்கும், எளிமையான அறிவியல் பரிசோதனைகளை அவர் பள்ளி மாணவர்களிடையே கொண்டு செல்ல முடிந்தது. தரங்க், தூர்தர்ஷனின் மிக வெற்றிகரமான நிகழ்ச்சிகளுள் ஒன்று.

பெரும் பொருள்செலவில் பள்ளிகளில் அறிவியல் சோதனைச்சாலைகள் அமைக்கப்பட வேண்டும் என்பதாலேயே, பல பள்ளிகளில் அவை இல்லாமலேயே ஆகி விடுகிறது. ஆனால் மிக எளிய முறையில், அதிகம் பொருள் செலவு இல்லாமலேயே அதே சோதனைகளை செய்து காட்டியும், குழந்தைகளே அந்த சோதனைகளைச் செய்ய வைப்பதன் மூலம் அவர்களின் அறிவியல் மீதான ஆர்வத்தைத் தூண்டுவதும் பெரும் பலனை அளிக்கும் என்பதை அரவிந்த் குப்தா நிரூபித்து உள்ளார்.

பல்வேறு பொம்மைகளின் மூலம் அறிவியல் சோதனைகளைச் செய்வது பற்றிய அவரின் செயல்முறை விளக்கங்களும், அது பற்றிய புத்தகங்களும் என்று அவரது வலைத்தளம் தேடுதல் உடையவர்களுக்கு ஒரு தங்கச் சுரங்கம்.

தனது கல்வியை, திறமையை சமுதாயத்தின் வளர்ச்சிக்கு என்று அர்ப்பணித்த அரவிந்த் குப்தாவிற்கு பல்வேறு விருதுகளும் அங்கீகாரங்களும் கிடைத்துள்ளன. அதில் முக்கியமானது பாரத அரசு 2018ஆம் ஆண்டு அவருக்கு வழங்கிய பத்மஸ்ரீ விருதாகும்.

நாட்டின் சிறப்புமிக்க அறிவியல் ஆசிரியருக்கு ஒரே இந்தியா தளம் தனது வணக்கங்களையும் வாழ்த்துகளையும் தெரிவித்துக் கொள்கிறது. 

செவ்வாய், 3 டிசம்பர், 2019

தொழிலதிபர் நவ்ரோஜி கோத்ரேஜ் பிறந்தநாள் டிசம்பர் 3

பத்தொன்பதாம் நூற்றாண்டின் இறுதிப் பகுதியில் பார்சி இனத்தைச் சார்ந்த இரண்டு சகோதர்கள் பூட்டு தயாரிக்கும் முயற்சியில் ஈடுபட்டனர். வழக்கறிஞர் பட்டம் பெற்ற அர்தேஷிர் கோத்ரேஜும் அவர் சகோதரர் பிரோஷா கோத்ரேஜும் 1897ஆம் ஆண்டு தொடங்கிய அந்த முயற்சி இன்று பூட்டுகள், இரும்புப் பெட்டிகள், சோப் தயாரிப்பு, கால்நடைகளுக்கான உணவுவகைகள், விண்வெளி ஆராய்ச்சிக்கான உபகரணங்கள், நிறுவனங்களுக்கான மேசை, நாற்காலி என்று பல்வேறு துறைகளில் தங்கள் தரத்தினால் தனி இடத்தைப் பிடித்துள்ள கோத்ரேஜ் குழுமமாக மாறி உள்ளது. கோத்ரேஜ் குழுமத்தின் இரண்டாம் தலைமுறை வாரிசான நவ்ரோஜி கோத்ரேஜ் என்று அறியப்பட்ட நேவல் பிரோஷா கோத்ரேஜ் அவர்களின் பிறந்தநாள் இன்று. 

பிரோஷா கோத்ரேஜின் இளைய மகனாக 1916ஆம் ஆண்டு டிசம்பர் 3ஆம் நாள் பிறந்தவர் நவ்ரோஜி கோத்ரெஜ். தனது மூன்றாம் வயதிலேயே தாயாரை இழந்த நவ்ரோஜி மற்றும் அவர் சகோதர்களை கராச்சி நகரில் வசித்து வந்த அவரது பாட்டி பராமரித்து வளர்த்து வந்தார். சிறுவயதிலிருந்தே இயந்திரங்கள் மீது ஆர்வம் கொண்டிருந்த நவ்ரோஜி, பள்ளிப் படிப்பை முடித்த உடனேயே தந்தையின் தொழில்சாலைக்கு தொழில் கற்க வந்துவிட்டார். வருங்கால முதலாளியாக குளிர்பதன அறையில் அமர்ந்து கொண்டிருக்காமல், தொழிலாளிகளில் ஒருவராக பல்வேறு பொருள்களைத் தயாரிக்கும் தளத்தில் அதிகநேரம் செலவிட்டதால் இயல்பாகவே நவ்ரோஜிக்கு உழைப்பின் மரியாதை தெரிந்ததோடு, பணியாளர்களை நிறுவனத்தின் வளர்ச்சியின் பங்குதாரர்களாகப் பார்க்கும் பக்குவமும் கைவசமானது. 

பல்வேறு இயந்திரங்களோடும் கருவிகளோடும் தன் மனதைப் பறிகொடுத்த நவ்ரோஜி, சுதேசித் தயாரிப்பில் தட்டச்சு இயந்திரத்தை ( Manual Typewriter ) தயாரிக்க முடிவு செய்தார். அன்றய காலகட்டத்தில் ஆசிய கண்டத்திலேயே எந்த நாட்டிலும் தட்டச்சு இயந்திரம் தயாரிக்கப்படவில்லை. ஆயிரத்திற்கும் அதிகமான உதிரிபாகங்களை இணைத்து தட்டச்சு இயந்திரத்தைத் தயாரிப்பது எனப்து மிகச் சவாலான வேலை. அதனை வெற்றிகரமாக செயலாக்கிக் காட்டியவர் நவ்ரோஜி கோத்ரேஜ். 1955ஆம் ஆண்டு ஆவடியில் நடந்த காங்கிரஸ் மாநாட்டில்  பாரதம் சோசலிஸ பாதையில் செல்லும் என்ற தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. அந்த மாநாட்டில்தான் முதல்முதலாக பாரதத்திலேயே தயாரான கோத்ரெஜ் தட்டச்சு இயந்திரம் அறிமுகம் செய்யப்பட்டது. அதனை நேரு பார்வையிடும் படத்தை  இன்றும் பல்வேறு கோத்ரெஜ் அலுவலங்கங்களில் நாம் காணலாம். 


1952ஆம் ஆண்டு நடைபெற்ற முதல் பொதுத்தேர்தலுக்கான வாக்குப்பெட்டிகளை கோத்ரெஜ் நிறுவனம் தயாரித்து வழங்கியது. பின்னர் முதல் இந்திய குளிர்சாதனப் பெட்டியை ( Refrigerator ) 1958ஆம் ஆண்டு கோத்ரெஜ் உருவாக்கியது. இதற்கெல்லாம் நவ்ரோஜியின் இயந்திரங்கள் மீதான புரிதல் பெரும் பங்காற்றியது. இந்திய விண்வெளி ஆராய்ச்சி மையத்திற்காக பல்வேறு துணைக்கருவிகளையும் 1976ஆம் ஆண்டு முதல் கோத்ரெஜ் தயாரித்து வருகிறது. இதற்கான தனிப் பிரிவையே நவ்ரோஜி உருவாக்கினார். 

தொழில் செய்வது, அதையும் சிறப்பாக, லாபகரமாகச் செய்வது என்பது ஓன்று. ஆனால் அதனை தர்மகர்த்தா முறையில் செய்வது என்பது வேறொன்று. கோத்ரெஜ் நிறுவனத்தின் மூன்றில் ஒரு பங்கு மூலதனம் கோத்ரெஜ் குழுமத்தின் அறக்கட்டளைகள் வசம் உள்ளன. ஆண்டுதோறும் நிறுவனம் ஈட்டும் லாபத்தில் இருந்து பல்வேறு சேவைகளை அவை செய்து வருகின்றன. மக்கள்தொகை கட்டுப்பாடு, இயற்கை வளங்களை காப்பாற்றுதல் ஆகியவை அறக்கட்டளையின் முக்கியப் பணிகளாக உள்ளன. தங்களுக்கு சொந்தமான விக்ரோலி பகுதியில் உள்ள சதுப்பு நிலக் காடுகளை அழிக்காமல் இன்றும் கோத்ரேஜ் நிர்வாணம் பராமரித்து வருகிறது. அநேகமாக இன்று மும்பை நகரின் நுரையீரலாக இந்தக் காடுகள் செயல்பட்டு வருகின்றன. 

சுத்தமும் சுகாதாரமும் வசதிகளும் கூடிய பணியாளர் குடியிருப்பை நவ்ரோஜி உருவாக்கினார். அவரின் தந்தை பெயரில் பிரோஷாநகர் என்ற பெயரில் அது  உருவானது.தொழிலாளர்களின் குழந்தைகள் படிக்க உதயச்சால் என்ற பள்ளி செயல்பட்டு வருகிறது. இன்று பெருவாரியாகப் பேசப்படும் நிறுவனங்களின் சமூகப் பொறுப்பு, தொழிலாளர் மனித வள மேம்பாடு என்ற சொற்கள் புழக்கத்திற்கு வருவதற்கு முன்னமே அவற்றை செயலாகிக் காட்டியவர் நவ்ரோஜி கோத்ரேஜ் அவர்கள். 

தொழில்துறை வளர்ச்சிக்கு நவ்ரோஜியின் பங்களிப்பை மரியாதை செலுத்தும் விதமாக அரசு அவருக்கு 1976ஆம் ஆண்டு பத்மபூஷன் விருது வழங்கிச் சிறப்பித்தது. 

பாரத நாட்டின் தொழில் வளர்ச்சிக்கான நவ்ரோஜி பிரோஷா கோத்ரேஜின் பங்களிப்பை ஒரே இந்தியா தளம் நன்றியோடு நினைவு கொள்கிறது. 

திங்கள், 2 டிசம்பர், 2019

அம்புலிமாமாவின் மாமா - B நாகி ரெட்டி - டிசம்பர் 2


இருபதாம் நூற்றாண்டின் கடைசி பத்தாண்டுகளுக்கு முன்னர் தங்கள் பாலியத்தை அனுபவித்தவர்களுக்குத் தெரியும் அது ஒரு சுகமான காலம் என்று. தொலைபேசியும் இணையத் தொடர்போடு கூடிய கைபேசியும் இல்லாத காலம் அது. குழந்தைகள் பிறந்த உடனேயே படிக்கவேண்டும், நூற்றுக்கு நூறு மதிப்பெண்கள் வாங்கவேண்டும், கணினித் துறையில் வேலைக்குச் சேரவேண்டும், உடனே வெளிநாடு செல்லவேண்டும் என்ற அழுத்தம் இல்லாமல் இருந்த காலம். வீடுகளில் தாத்தாவும் பாட்டியும், மாதத்தில் பாதி நாட்கள் தங்கி இருக்கும் உறவினர்களும் என்று பேசவும் பகிரவும் ஆள்கள் எப்போதும் இருந்த காலம். ஆங், அம்புலிமாமா, பாலமித்ரா, ரத்தினபாலா,  லயன் காமிக்ஸ், முத்து காமிக்ஸ் என்று பாடத்தைத் தாண்டியும் படிக்க புத்தகங்கள் இருந்த காலம் அது. சிறுவர்களுக்கான நூல்களில் முன்னோடியும், அறுபதாண்டுகளுக்கு மேலாக ஆங்கிலத்தோடு சேர்த்து பதின்மூன்று மொழிகளில் வெளியான அம்புலிமாமா என்ற பத்திரிகையை நடத்தி வந்த திரு நாகி ரெட்டியின் பிறந்தநாள் இன்று.

இன்றய ஆந்திர மாநிலத்தின் கடப்பா மாவட்டத்தைச் சார்ந்தவர் திரு நாகி ரெட்டி அவர்கள். இவரின் தந்தை சென்னையில் தங்கி இருந்து வெளிநாடுகளுக்கு காய்கறிகளை ஏற்றுமதி செய்துகொண்டு இருந்தார். நாகி ரெட்டியின் மூத்த சகோதரர் நரசிம்ம ரெட்டி. திரைப்படத் தயாரிப்பாளராகவும் இயக்குனராகவும் இருந்த நரசிம்ம ரெட்டியைப் பின்தொடர்ந்து நாகி ரெட்டியும் திரைப்படத் தயாரிப்பில் ஈடுபடலானார். நாகி ரெட்டி தனது நண்பரான சக்ரபாணி என்பவரோடு இணைந்து தமிழிலும், தெலுங்கிலும் பல்வேறு வெற்றிப்படங்களைத் தயாரித்து வெளியிட்டார்.

பாதாள பைரவி, மிஸ்ஸியம்மா, மாயா பஜார் போன்ற வெற்றிப்படங்களை நாகி ரெட்டி தயாரித்து வெளியிட்டார். சென்னையின் முக்கியமான திரைப்படத் தளமாக விளங்கிய விஜயா வாகினி ஸ்டுடியோவும் இந்த இரட்டையர்களுக்கு சொந்தமானதுதான். கன்னடம், மற்றும் ஹிந்தி மொழியிலும் இந்த நிறுவனம் திரைப்படங்களைத் தயாரித்து உள்ளது.

ஆனால் இது அனைத்தையும் விட நாகி ரெட்டியின் மகத்தான பங்களிப்பு என்பது ஏறத்தாழ அறுபதாண்டு காலத்திற்கும் மேலாக சந்தமாமா என்ற சிறுவர் பத்திரிகையை பல மொழிகளிலும் நடத்தியதுதான். 1947ஆம் ஆண்டு ஜூலை மாதம் சாந்தாமாமா என்று தெலுங்கிலும் அம்புலிமாமா என்று தமிழிலும் ஒரே நேரத்தில் சிறார் பத்திரிகையை நாகி ரெட்டி தொடங்கினார். 


1949ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் கன்னட மொழியில், 1949 ஆகஸ்ட் மாதம் ஹிந்தியில், 1952ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் மராத்தி மற்றும் மலையாள மொழியில், 1954ஆம் ஆண்டு குஜராத்தி மொழியில், 1955ஆம் ஆண்டு ஆங்கிலத்தில், 1956ஆம் ஆண்டு ஒரிய மற்றும் சிந்தி மொழியில், 1972ஆம் ஆண்டு வங்காள மொழியில், 1975ஆம் ஆண்டு பஞ்சாபி மொழியில், 1976ஆம் ஆண்டு அஸ்ஸாமிய மொழியில், 1978ஆம் ஆண்டு சிங்கள மொழியில், 1984ஆம் ஆண்டு ஸமிஸ்க்ரித மொழியில், சந்தாலி மொழியில் 2004ஆம் ஆண்டு என்று பாரதத்தின் முக்கிய மொழிகளில் எல்லாவற்றிலும் இந்தப் பத்திரிகை வெளிவந்தது.

பாரத நாட்டின் பண்பாட்டை பறைசாற்றும் கதைகள், பல்வேறு மொழிகளில் உள்ள நீதிக்கதைகள் என்று பாரதத்தின் பாரம்பரியத்தை சிறுவர்களிடம் எடுத்துச் சென்றதில் சந்தமாமா பத்திரிகை பெரும் பங்காற்றியது.

இரண்டாயிரம் ஆண்டுக்குப் பிறகு நாகி ரெட்டியின் குடும்பத்தினர் பத்திரிகையின் பங்குகளை வேறு சிலரோடு பகிர்ந்து கொண்டார்கள். தொழிலாளர் பிரச்னை காரணமாக ஓராண்டு இந்தப் பத்திரிகை வெளிவராமல் இருந்தது. மீண்டும் வெளிவரத் தொடங்கிய சந்தமாமா பத்திரிகை இன்று வெளிவருவது இல்லை. ஆனாலும் அறுபதாண்டுகளாக கலாச்சாரத்தை சிறுவர்களுக்கு போதித்த ஒரு பெரும் பங்களிப்பு எல்லாக் காலத்திலும் திரு நாகி ரெட்டியை நம் மனதில் நீங்காத இடத்தில் வைத்திருக்கும் என்பதில் ஐயமில்லை.

திரைத்துறையில் நாகி ரெட்டியின் பங்களிப்பை பல்வேறு மாநில அரசாங்கங்கள் அங்கீகரித்து பல்வேறு விருதுகளை வழங்கி உள்ளன. தமிழ்நாடு அரசின் கலைமாமணி விருது, ஆந்திர அரசின் நந்தி விருது, கன்னட மொழியின் சிறந்த திரைப்படத்திற்கான விருது, பிலிம்பேர் விருதுகள் என்று பல விருதுகள் இவரை வந்தடைந்தன. அனைத்திலும் சிகரம் போல பாரத அரசு திரைதுறையின் மிக உயரிய விருதான தாதா சாஹேப் பால்கே விருதை நாகி ரெட்டிக்கு 1986ஆம் ஆண்டு வழங்கியது.

ஆசிரியர் குழுவின் இளமைப் பருவத்தை இனியதாக மாற்றிய திரு நாகி ரெட்டி அவர்களை இன்று நாங்கள் நன்றியோடு நினைவு கூறுகிறோம். 

ஞாயிறு, 1 டிசம்பர், 2019

காகா காலேல்கர் பிறந்தநாள் - டிசம்பர் 1

இந்த மனிதனை எந்த வரையறையில் சேர்க்க ? சுதந்திரப் போராட்ட வீரர், காந்தியின் சீடர், சமூக சீர்திருத்தவாதி, பத்திரிகையாளர், எழுத்தாளர் என்று பல்வேறு திசைகளில் ஒளிவீசும் ரத்தினமாகத் திகழ்ந்த தாத்தாத்ரேய பாலகிருஷ்ண காலேல்கர் என்ற காகா காலேல்கரின் பிறந்ததினம் இன்று.


மகாராஷ்டிர மாநிலம் சதாராவில் பிறந்து, பூனா பெர்கூசன் கல்லூரியில் தத்துவத்தில் இளங்கலை பட்டம் பெற்று, பரோடா நகரில் ஒரு பள்ளியில் ஆசிரியராகப் பணியாற்றி, சுதந்திர உணர்ச்சியை தூண்டும் இடமாக அந்த பள்ளி விளங்கியதால் ஆங்கில அரசு அந்த பள்ளியைத் தடை செய்த பிறகு பத்திரிகையாளராகப் பணியாற்றி, பின்னர் கால்நடையாகவே இமயமலை பகுதிகளில் சுத்தித் திரிந்து, ஆச்சாரிய கிருபளானியோடு தொடர்பு ஏற்பட்டு, அவரோடு பர்மா சென்று, பின்னர் காந்தியைக் கண்டு, அவரின் சீடராக மாறி, சபர்மதி ஆசிரமத்தில் தங்கி, பல்வேறு போராட்டங்களில் கலந்து கொண்டு சிறை சென்று என்று அநேகமாக இருபதாம் நூற்றாண்டின் ஆரம்ப காலத்தில் பலரின் வாழ்க்கை போலத்தான் இவரின் வாழ்வும் இருந்தது.

இவரின் கைத்தடியைத்தான் தண்டி யாத்திரியையின் போது காந்தி பயன்படுத்தினார். எனவே தான் காந்தியின் கைத்தடி என்று காலேல்கர் தன்னை அறிமுகம் செய்து கொள்வது உண்டு. காந்தியின் ஆணைக்கேற்ப ஹிந்தி மொழியை பரப்பும் செயலிலும் காலேல்கர் ஈடுபட்டு இருந்தார். சென்னையில் உள்ள தக்ஷிண பாரத ஹிந்தி பிரச்சாரக சபாவின் முதல் பட்டமளிப்பு விழா இவரின் தலைமையில்தான் நடைபெற்றது. 1952 ஆம் ஆண்டு முதல் 1964ஆம் ஆண்டு வரை இவர் பாரத நாட்டின் ராஜ்யசபை உறுப்பினராக இருந்தார். நாட்டின் பிற்படுத்தப்பட்ட ஜாதியினரின் வாழ்க்கை நிலையை ஆராய்ந்து அவர்கள் முன்னேற்றத்திற்காக அரசுக்கு பரிந்துரை செய்ய என்று நிறுவப்பட்ட முதலாம் பிற்படுத்தப்பட்ட மக்கள் நல்வாழ்வுக் குழுவின் தலைவராகவும் காலேல்கர் பணியாற்றினார்.

இதையெல்லாம் விட முக்கியமானது என்பது ஹிந்தி, குஜராத்தி, மராட்டி ஆகிய மொழிகளில் காலேல்கர் எழுதிய நூல்கள்தான். அதிலும் முக்கியமானது ஜீவன் லீலா என்ற தலைப்பில் பாரத நாட்டின் நதிகளை நேரில் பார்த்து அவர் எழுதிய பயணக் கட்டுரைகளின் தொகுப்பு.

இதழ் தொடர்பாகவும் இயக்கவேலைகள் தொடர்பாகவும் இந்தியா முழுக்க  இடைவிடாமல் பயணம் செய்யும் வாய்ப்பு  அவரைத் தேடி வந்தது. இயல்பாகவே பயணங்களில் ஆர்வம் கொண்ட காலேல்கர் அந்த வாய்ப்புகளை நல்ல முறையில் பயன்படுத்திக்கொண்டார். ஆறுகள் மீது தீராத காதல் கொண்டவராக, அவற்றைத் தேடித்தேடிப் பார்க்கும் பழக்கம் அவரிடம் இருந்தது. ஆறுகளை மட்டுமல்ல, அவை பிறக்கும் இடங்கள், தவழ்ந்து ஓடும் இடங்கள், அருவியாய்ப் பொழியும் இடங்கள், அவை தொட்டு இறங்கும் மலைகள், குன்றுகள், இறுதியாக சென்று சங்கமமாகும் கடல்கள் என எல்லா இடங்களையும் தேடிப் பார்ப்பவராக அவர் இருந்தார். ஜீவன் என்பதை வழக்கமான பொருளில் எடுத்துக்கொள்ளாமல் ’தண்ணீர்’ என்னும் பொருளில் எடுத்துக்கொள்கிறார் காலேல்கர். ஜீவன் லீலா என்பது தண்ணீரின் பலவிதமான லீலைகளை அடையாளப்படுத்துகிறது. தண்ணீர் மட்டுமே பாயுமிடங்களைக் குளிர்விக்கின்றது. பாலைவனத்தைச் சோலைவனமாக மாற்றுகிறது. எல்லா உயிர்களும் வாழ்க்கையை வகுத்துக்கொள்ள தண்ணீரே வழிபுரிகிறது. தண்ணீரைப் பார்த்தவுடன் அதன் அருகில் செல்ல விருப்பம் ஏற்படுகிறது. அந்த விருப்பத்தின் விசையாலேயே இமயம் தொடங்கி குமரி வரைக்கும் உள்ள பல முக்கியமான ஆறுகளையும் அருவிகளையும் ஏரிகளையும் தேடிப் பார்த்திருக்கிறார் காலேல்கர்.

காலேல்கருடைய பயணங்கள் இந்த நாட்டின் கலைக்கோவில்களையும் வரலாற்றுச் சிறப்பு மிக்க இடங்களையும் கடல்களையும் ஆறுகளையும் கண்டு களிக்கும் நோக்கத்தை மட்டும் கொண்டவை அல்ல, கோவிலுக்குச் சென்று இறைவனை வழிபடுவதற்கு நிகரான பக்தியும் நெருக்கமும் கொண்டவை. தாய்நாட்டின் ஒவ்வொரு இடத்தைப்பற்றியும் தனக்குத் தெரிந்திருக்கவேண்டும், அவற்றுடன் நெருக்கமானதொரு உறவை உருவாக்கிக்கொள்ள வேண்டும் என்னும் அடிப்படை விருப்பமே காலேல்கரை உந்திச் செலுத்திய சக்தியாகும். தன் புத்தகத்துக்கான முன்னுரைக்கு காலேல்கர் ‘நின்று கரம்குவித்துத் தொழுதல்’ என்று தலைப்பிட்டிருப்பதைக் கவனிக்கவேண்டும். நீர்நிலைகளை அவர் தெய்வமெனவே கருதுகிறார். ஆறுகளைத் தேடிச் செல்லும் பயணங்கள் அவரைப் பொறுத்த அளவில் தெய்வ தரிசனத்தை நாடிச் செல்லும் ஒரு பக்தனின் பயணங்களுக்கு நிகரானவை என்றே சொல்லவேண்டும்.

புத்தகத்தின் முதல் கட்டுரை பெல்காம் பகுதியில் வைத்தியனாத மலையிலிருந்து உற்பத்தியாகி பெலகுந்தி கிராமத்தை நோக்கி ஓடிவரும் மார்க்கண்டி நதியைப்பற்றியதாகும். அவர் பிறந்து வளர்ந்த இடத்தைச் சுற்றி ஓடும் நதி அது. சிவனின் அருளால் எமனின் பாசக்கயிறிலிருந்து பிழைத்து என்றென்றும் பதினாறு வயதுடையவனாகவே வாழ்ந்த மார்க்கண்டேயனின் பெயரால் அந்த நதி அழைக்கப்படுகிறது. அதைத் தன் குழந்தைப்பருவத் தோழி என்று குறிப்பிடுகிறார். தம் குடும்பத்துக்குச் சொந்தமான வயல்வெளியைத் தொட்டபடி ஓடும் அந்த நதிக்கரையில் மணிக்கணக்கில் நின்று வேடிக்கை பார்த்த அனுபவங்களை அதில் விவரிக்கிறார். இது 1928-ல் எழுதப்பட்டது. எழுபதாவது கட்டுரையான ‘மழைப்பாட்டு’ கார்வார் கடற்கரையில் பெய்யும் மழையனுபத்தை முன்வைத்து எழுதப்பட்டது. போகிற போக்கில் மழைத்தாரைகளை கடலைத் தொட்டு வெட்டும் ஆயுதங்கள் என கவித்துவம் ததும்ப  எழுதிச் செல்வதைப் படிக்கும்போது உருவாகும் மன எழுச்சி மகத்தானது. இது 1952-ல் எழுதப்பட்டது.

இடைப்பட்ட முப்பத்திநான்கு ஆண்டு காலத்தில், தேசம் முழுதும் அலைந்து கங்கை, யமுனை, பிரம்மபுத்திரை, ஜீலம், இரவி, கிருஷ்ணா, தபதி, கோதாவரி, துங்கபத்திரை, காவேரி, நர்மதை, ஷராவதி, ஐராவதி, பினாகினி, லவணவாரி, அகநாசினி, தூத்கங்கா, ராவி, கடப்பிரபா, கூவம், அடையாறு என எண்ணற்ற ஆறுகளையும் நீர்நிலைகளையும் பார்த்து நெஞ்சை நிறைத்துக்கொண்ட அனுபவங்களை வெவ்வேறு தருணங்களில் தனித்தனி கட்டுரைகளாக எழுதினார். அதற்குப் பின்னரே அவை நூல்வடிவம் கண்டன.

எழுபது கட்டுரைகளும் ஒன்றையொன்று விஞ்சும் வகையில் இலக்கியத்தரத்துடன் எழுதப்பட்டுள்ளன. கங்கையைப்பற்றிய கட்டுரையில் அவருடைய வர்ணனைச்சொற்கள் அருவியெனக் கொட்டுகின்றன. கங்கோத்ரிக்கு அருகில் உள்ள பனிமூடிய பிரதேசங்களில் விளையாட்டில் ஈடுபட்ட கங்கையின் வாலைப்பருவம், உத்திரகாசியில் வானளாவியுள்ள தேவதாரு மரங்களால் நிறைந்த காவியமயமான பிரதேசத்தில் இதன் குமரிப்பருவம், தேவப்பிரயாகை குன்றுகளில் குறுகிய பாதைகளில் ஒளிபொருந்திய அலகநந்தா நதியுடன் இணைந்து விளையாடும் விளையாட்டு, கான்பூரையொட்டிப் பாயும்போது அதன் சரித்திரப்புகழ் பெற்ற பிரவாகம், பிரயாகையில் உள்ள பெரிய ஆலமரத்தின் மீது பாய்ந்து அங்கே யமுனையோடு திரிவேணி சங்கமமாவது என ஒவ்வொரு கட்டத்தையும்  கவியுள்ளத்தோடு எழுதுகிறார் காலேல்கர். கங்கையைச் சகுந்தலையென்றும் யமுனையை திரெளபதையென்றும் புராணப்பாத்திரங்களாக மாற்றிக் குறிப்பிட்டு அவர்  எழுதியிருக்கும் பகுதி சுவாரசியமானது. கங்கை, யமுனை ஆகிய நதிகளோடு மட்டும் அக்கட்டுரை நின்றுவிடவில்லை. அயோத்தி நகர் வழியாக வரும் சரயு நதி, ராஜா ரத்திதேவனை நினைவூட்டும் சம்பல் நதி, முதலையோடு கஜேந்திரன் புரிந்த போரை நினைவூட்டும் சோணபத்ர நதி, கண்டகி நதி என அனைத்து சிறுநதிகளைப்பற்றிய குறிப்புகளையும் கொண்டிருக்கிறது.

ஒவ்வொரு கட்டுரையும் வசீகரம் நிறைந்த ஒரு சொல்லோவியம். காலேல்கரின் முயற்சியை ஒருவகையில் சொல்லோவியங்களால் நம் தேசத்தின் வரைபடத்தைத் தீட்டும் முயற்சி என்றே சொல்லலாம். பி.எம்.கிருஷ்ணசாமியின் மொழிபெயர்ப்பில் சாஹித்ய அகாடமி வெளியீட்டில் வந்துள்ள இந்தப் புத்தகத்தைப் படிக்கும்போது கிட்டும் அனுபவம் காஷ்மீரிலிருந்து தனுஷ்கோடி வரைக்கும் பயணம் செய்த அனுபவத்துக்கு நிகரானது.

இலக்கியத்திற்க்காக சாஹித்ய அகாடமி விருதும் பொது சேவைக்காக பத்ம விபூஷண் விருதும் இவருக்கு வழங்கப்பட்டு உள்ளது.