ஞாயிறு, 3 மே, 2020

வாத்தியார் சுஜாதா பிறந்தநாள் - மே 3


அது எண்பதுகளின் தொடக்கம். ஆறாம் வகுப்பு அல்லது ஏழாம் வகுப்புப் படித்துக்கொண்டு இருந்த காலம். அம்புலிமாமா, பாலமித்ரா, ரத்னபாலா, காமிஸ் கூடவே கொஞ்சம் ராஜாஜி எழுதிய ராமாயணம்’, ‘மஹாபாரதம்’, தமிழ்வாணன் எழுதிய சங்கர்லால் துப்பறிகிறார்கதைகள், துக்ளக் என்று படித்துக்கொண்டிருந்த காலம். 

அப்போதுதான் தஞ்சையில் இருந்து மாற்றலாகி வந்திருந்த என் பெரியப்பா வீட்டில் வாராவாரம் ஆனந்தவிகடன் இதழில் சுஜாதாவின் பிரிவோம் சந்திப்போம்தொடரின் இரண்டாவது பாகத்தைப் படிக்கும் வாய்ப்பு கிட்டியது. பதின்மவயதைக்கூட எட்டாத சிறுவன் கண்முன்னே அமெரிக்க கல்வியின், அமெரிக்க வாழ்வின் வீச்சு புலனாகத் தொடங்கியது. அங்கே தொடங்கிய உறவு அந்த எழுத்தாளனோடு இன்றும் தொடர்கிறது.

கணையாழியின் கடைசிப் பக்கங்கள்’, ‘மிஸ் தமிழ்த்தாயே நமஸ்காரம்’, ‘மத்யமர் கதைகள்’, ‘நகரம்’, ‘ஒரு லட்சம் புத்தகங்கள்என்று நெஞ்சை உலுக்கும் கதைகள், கணேஷ் வசந்த் என்று துப்பறியும் கதைகள் என்று எழுத்தின் எல்லா சாத்தியக்கூறுகளையும் தொட்டுப் பார்த்த படைப்பாளி சுஜாதா. கைவிரலில் எந்தத் தகவலையும் தேடி எடுக்கும் காலமல்ல அது. இன்றைக்கு முப்பதாண்டுகளுக்கு முன்னால் விகடனில் ஏன் எதற்கு எப்படி' என்ற தலைப்பில் வாசகர்களின் கேள்விகளுக்கு அளித்த பதில்கள், கணினித்துறையில் ஆரம்ப காலகட்டத்தில் சிலிக்கான் சில்லு புரட்சி' என்றும் தலைமைச்செயலகம்என்று மூளையின் செயல்பாடுகளைப் பற்றி, அறிவியலும் ஆன்மீகமும் இணைகோடுகளாக இருக்கும் கடவுள் இருக்கிறாரா' என்றும், பல்வேறு அறிவியல் / விஞ்ஞான புனைகதைகளை எழுதிப் பலரை அறிவியலின் பக்கம் ஈர்த்தார் என்றால் அது மிகையில்லை.

பரம்பரையாக வந்த வைஷ்ணவ தாக்கம், படித்த படிப்பால் அறிவியலும், பொறியியலும், டெல்லி, பெங்களூர் என்று பெருநகரங்களில் வசித்ததால் ஏற்பட்ட பல்வேறு மக்களைப் பற்றிய புரிதல், விமானம் ஓட்டுவது, இசைக்கருவிகளைக் கற்பது, என்று பல சோதனை முயற்சிகளின் அனுபவம், பரந்துபட்ட வாசிப்பு இவையெல்லாம் சுஜாதாவின் எழுத்துக்களில் வெளிப்பட்டது. 1960களில் தொடங்கி நாற்பதாண்டு காலத்திற்கும் மேலாக வெகுஜன வாசிப்பின் முடிசூடா மன்னராக சுஜாதா விளங்கினார்.

ஒரே நேரத்தில் பல்வேறு வார இதழ்களிலும் அவரது தொடர்கதைகள் வெளியாயின. அவரது சலவைக்கணக்கைகூடப் பத்திரிகைகள் பிரசுரிக்கும் என்று பேசும் அளவிற்கு அவர் புகழ்பெற்றிருந்தார்.பல முக்கியமான கவிஞர்களை, எழுத்தாளர்களை, புத்தகங்களை, கோட்பாடுகளை வாசகர்களுக்கு சுஜாதா அறிமுகம் செய்து வைத்துக்கொண்டே இருந்திருக்கிறார். சிறுபத்திரிகைகளும் இலக்கியவாதிகளும் அவரை அங்கீகரிக்காவிட்டாலும், பெருவாரியான வாசகர்கள் அவரைக் கொண்டாடவே செய்தார்கள். இணையத்தில் இயங்கும் பலருக்கு சுஜாதாவின் பாதிப்பு இருக்கிறது என்பது உண்மைதான். பொழுதுபோக்க படிப்பு என்பதிலிருந்து வாசகர்களை அடுத்த படிக்கு மேலேற்றும் ஒரு பணியைத் தன் வாழ்வின் இறுதிவரை செய்துகொண்டே இருந்ததால்தான் அவரை வாத்தியார் என்று மக்கள் கொண்டாடினார்கள்.

வாத்தியாரின் கவிதைகளில் எனக்குப் பிடித்த கவிதையோடு இந்தப் பிறந்தநாளில் அவரை நினைவு கொள்கிறேன்

குழந்தைகள் தினம் 
கோயிலுக்குப் பக்கத்தில் கார் துடைக்கக் காத்திருப்பாய்
கூட்டமுள்ள ஹோட்டல்களில் சாப்ட்டவுடன் ப்ளேட் எடுப்பாய்
பாயின்றிப் படுத்திருப்பாய் பிளாட்பாரத்தில் குளிப்பாய்
பட்டரையில் வெட்டிரும்பால் பகல் இரவாய்த் தட்டிடுவாய்
சாயங்கால சமுத்திரத்தின் அருகில் சுண்டல் விற்பாய்
சந்துகளில் இருட்டில் பெண்களுக்காய் ஆள் பிடிப்பாய்
காஜா அடிப்பாய் கட்டடத்தில் கல்லுடைப்பாய்
கார் அடியில் படுத்திருந்து கறுப்பாய் எழுந்திருப்பாய்
மேஜை துடைப்பாய் மேட்டினியில் இடிபடுவாய்
மெதுவாக என்னிடத்தில் கருப்பிலே சீட்டு விற்பாய்
கூஜா எடுத்துப் போய் குடிதண்ணீர் கொணர்வாய்
கூட்டத்தில் கரைந்து பாக்கெட்டைக் கத்தரிப்பாய்
ராஜாவே உனக்கென்றே நாங்கள் இவ்வருஷம்
ராஜ்ஜியம் முழுவதுமே விழாவெடுக்கப் போகின்றோம்
திரைப்படங்கள் எடுப்போம் தின்பண்டம் தந்திடுவோம்
தீவிரமாய் உன்நிலைமை உயர்த்துவது பற்றி
வரைபடங்கள் வரைந்து வாதாடிப் புகைபிடித்து
வருங்காலக் கனவுகளை வண்ணங்களாய்த் தருவோம்
குறைப்பட்டுக் கொள்ளாதே கொஞ்ச நாள் பொறுத்திரு
கூட்டங்கள் கூட்டி குளிர்சாதன அறைக்குள்
சிறைப்பட்டு சிந்தித்து சீக்கிரமே முடிவெடுப்போம்.
--- ஆனந்த விகடனில் வெளியானது.