சனி, 14 மார்ச், 2020

கலம் செய் கோவே கலம் செய் கோவே

வாழ்க்கை ஒரு கொண்டாட்டம், இறப்பும் ஒரு கொண்டாட்டம்தான், ஏன்னென்றால் நமது சிந்தனைப் போக்கில் இறப்பு என்பது முற்றுப்புள்ளி அல்ல, அது பிறப்பு இறப்பு என்ற சுழற்சியில் ஒரு கால்புள்ளிதான். அதனால் தான் இன்றும் " இது பெரிய சாவு, எந்தக் குறையும் இல்லாமல் பார்த்துக்கொள்ள வேண்டும்" என்ற பேச்சு இயல்பாக பேசப்படுகிறது.

ஒரே நிகழ்வு, ஒரு சாவு, ஒரே போன்ற துயரம், அதனால் ஒரே போன்ற கோரிக்கை. அதிலும் ஓன்று போலவே தொடங்கும் இரண்டு பாடல்கள், இரண்டும் மரணத்தைப் பற்றிப் பேசுகிறது


தலைவன் இறந்து விடுகிறான். அநேகமாக போரில்தான் அவன் இறந்தது போய் இருக்கவேண்டும். அவனுக்கான இறுதிச் சடங்குகள் தொடங்கப் போகின்றது. அன்றய பழக்கத்தில் அவனை மண்ணில் புதைக்க ஈமத்தாழி செய்யவேண்டும். அதற்காக குயவர்கள் கூடி உள்ளார்கள். அவனை வைக்கும் ஈமத்தாழியை பெரிதாக வனை என்று இரண்டு பேர் சொல்கிறார்கள். ஓன்று இறந்தவனின் மனைவி, மற்றது அவனால்ஆதரிக்கப்பட்ட புலவன்

வண்டிச்சக்கரத்தில் உள்ள பல்லிபோல என் வாழ்க்கை அவனை மட்டுமே சுற்றி வந்துள்ளது. அவனில்லாமல் நான் என்ன செய்யப் போகிறேன், அதனால் என்னையும் உடன் வைத்துப் புதைக்கும் அளவுக்கு பெரியதாக ஒரு தாழியை செய்து கொடு என்று தலைவி கூறும் புறநானூற்றுப் பாடல்  ( 256 )ஓன்று.

கலம் செய் கோவே! கலம் செய் கோவே!
அச்சுடைச் சாகாட்டு ஆரம் பொருந்திய
சிறு வெண் பல்லி போலத் தன்னொடு
சுரம் பல வந்த எமக்கும் அருளி,
வியல் மலர் அகன் பொழில் ஈமத் தாழி
அகலிதாக வனைமோ
நனந்தலை மூதூர்க் கலம் செய் கோவே!

தலைவனின் பெருமையை புலவர் பாடத் தொடங்குகிறார். எப்படிப்பட்ட தலைவன் இவன் தெரியுமா ? நிலப்பரப்பு முழுவதும் பரந்து விரிந்த படையின் தலைவன் இவன், புலவர்கள் பாடும் பொய்யே இல்லாத புகழ் பெற்றவன், புகழில் வானில் கதிர் வீசி ஒளிரும் ஆதித்யனுக்கு சமமானவன், செம்பியன் ( சோழ ) குலத்தில் பிறந்தவன். யானையின் மீது வலம் வரும் நெடுமாவளவன் இவன். இன்று இவன் அமரர் உலகம் சென்றுவிட்டான்,

இருள் கவ்வுவது போல புகையை எழுப்பி நீ இவனுக்கு ஈமத்தாழி செய்யத் தொடங்கி இருக்கிறாயே, இவன் புகழுக்கு ஏற்ற அளவில் தாழி செய்யவேண்டுமென்றால் இந்த நிலம் அளவுக்கு சக்கரம் செய்து, மலையளவு மண்ணை வைத்தல்லவா செய்ய வேண்டும். அதனை பெரிய தாழியை, ஈமத்தாழி செய்யும் கோமகனே ! உன்னால் செய்ய முடியுமா ? முடிந்தால் அத்தனை பெரிய தாழியை செய் என்று கூறும் புறநானூற்றுப் பாடல் (228) மற்றொன்று.


கலம் செய் கோவே! கலம் செய் கோவே!
இருள் திணிந்தன்ன குரூஉத் திரள் பரூஉப் புகை
அகல் இரு விசும்பின் ஊன்றும் சூளை,
நனந் தலை மூதூர்க் கலம் செய் கோவே!

அளியை நீயே; யாங்கு ஆகுவைகொல்?
நிலவரை சூட்டிய நீள் நெடுந் தானைப்
புலவர் புகழ்ந்த பொய்யா நல் இசை,
விரி கதிர் ஞாயிறு விசும்பு இவர்ந்தன்ன
சேண் விளங்கு சிறப்பின், செம்பியர் மருகன்
கொடி நுடங்கு யானை நெடுமா வளவன்
தேவர் உலகம் எய்தினன்ஆதலின்,

 அன்னோற் கவிக்கும் கண் அகன் தாழி
வனைதல் வேட்டனைஆயின், எனையதூஉம்
இரு நிலம் திகிரியா, பெரு மலை

மண்ணா, வனைதல் ஒல்லுமோ, நினக்கே?

புகழுக்கு ஏற்ற அளவில் ஈமத் தாழி என்றால் நமக்கான ஈமத் தாழியின் அளவென்ன இருக்கும் என்று யோசிக்க வேண்டாமா ? 

பகத்சிங்கின் மனைவி - துர்காவதி தேவி - அக்டோபர் 7

லாகூர் புகைவண்டி நிலையத்திற்கு நேர்த்தியாக உடையணிந்த ஒரு கனவான் அவரது மனைவியோடு வந்தார். மனைவியின் கையில் ஒரு சிறு ஆண் குழந்தை. அவர்களோடு அவர்களின் வேலையாளும் கூட வந்தார். மூவருக்குமான பயணச்சீட்டை வாங்கிக்கொண்டு அந்த கணவானும் அவர் குடும்பமும் முதல்வகுப்பு பெட்டியில் ஏறிக்கொண்டனர். அவரது வேலையாள் மூன்றாம் வகுப்பில் பயணம் செய்தார். கான்பூரில் அவர்கள் இறங்கி வேறு ஒரு புகைவண்டியில் லக்னோ சென்றனர். லக்னோ நகரில் அந்த வேலையாள் அந்தக் குடும்பத்தைப் பிரிந்து வாரனாசிக்குச் சென்றுவிட்டார். கனவானும் அவரது குடும்பமும் அங்கிருந்து ஹௌரா நகருக்குச் சென்றனர். சில காலம் கழித்து அந்தப் பெண்மணி மட்டும் தன் மகனோடு லாகூர் திரும்பினார்.

சாதாரணமான நிகழ்ச்சியாகத்தான் தோன்றுகிறது, அப்படித்தானே. ஆனால் பயணம் செய்த அந்த கனவான் பகத்சிங், அவரது வேலையாள் ராஜகுரு. காவல் அதிகாரி சாண்ட்ராஸ் படுகொலையை அடுத்து ஆங்கில அரசு வலைவீசித் தேடிக்கொண்டு இருந்த குற்றவாளிகள் அவர்கள். நாம்  அறிந்த பகத்சிங் திருமணம் ஆகாதவர். அப்படியானால் அந்தப் பெண்மணி யார் ? அவருக்கும் பகத்சிங்குக்கும் என்ன தொடர்பு ?


எட்டும் அறிவினில் மட்டுமல்ல வீரத்திலும், தியாகத்திலும் ஆணுக்குப் பெண் இளைப்பில்லை என்று வாழ்ந்து காட்டிய பாரத நாரிமணிகளின் வரிசையில் ஒளிவீசும் தாரகையாகத் திகழ்பவர் அந்தப் பெண்மணி. அவர் பெயர் துர்காவதி தேவி, விடுதலைப் போராட்ட வீரர்களுக்கு  துர்கா பாபி அதாவது அண்ணி துர்காதேவி. இந்த நாட்டில் மறக்கடிக்கப்பட்ட தியாகிகளில் மிக முக்கியமானவர் துர்காவதி தேவி. மிகப் பெரிய செயல்களைச் செய்து விட்டு, எந்த பலனையும், எந்த அங்கீகாரத்தையும் எதிர்பாராமல் வாழ்ந்து மறைந்த மகோன்னதமான பெண்மணி அவர்.

1907ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 7ஆம் தேதி பிறந்தவர் துர்காதேவி அவர்கள். சிறுவயதிலேயே தனது தாயை இழந்து அதனால் உறவினர்களால் வளர்க்கப்பட்டவர். அன்றய காலசூழ்நிலையில் தனது பதினொன்றாம் வயதில் லாகூர் நகரைச் சார்ந்த பகவதி சரண் வோரா என்பவரைத் திருமணம் செய்து கொண்டார். பகவதி சரண் வோராவும் மிகப் பெரும் தேசபக்தர், சிந்தனையாளர், புரட்சியாளர். நவ்ஜவான் பாரத் சபா மற்றும் ஹிந்துஸ்தான் சோசலிஸ்ட் ரிபப்ளிக் அஸோஸியேஷன் என்ற புரட்சியாளர்கள் குழுவின் செயலாளராக இருந்து, அந்த புரட்சிப் பாதையின் கொள்கை விளக்க பிரகடனத்தை உருவாக்கியவர் திரு வோரா அவர்கள்.

காதல் ஒருவனைக் கைப்பிடித்து அவன் காரியம் யாவிலும் கைகொடுத்து என்று வோராவின் போராட்டத்திற்கு துர்காதேவி உறுதுணையாக இருந்தார். புரட்சியாளர் கர்டார் சிங்கின் பதினோராவது பலிதான தினத்தை லாகூர் நகரில் கொண்டாடியது, லாகூர் சிறையில் அறுபத்திமூன்று நாட்கள் உண்னாவிரதம் இருந்து உயிர் நீத்த ஜதீந்திரநாத் தாஸின் இறுதி ஊர்வலத்தை லாகூர் நகரில் இருந்து கொல்கத்தா நகர் வரை தலைமையேற்று நடத்தியது என்று துர்காதேவி பல்வேறு போராட்ட களங்களில் செயல்பட்டார்.

சைமன் கமிஷனை புறக்கணித்து லாகூர் நகரில் நடைபெற்ற ஊர்வலத்தை தலைமையேற்று நடத்திய லாலா லஜபதி ராயை ஆங்கில காவலர்கள் தாக்கினர். படுகாயமுற்ற லாலா லஜபதி ராய் சிலநாட்களில் உயிர் துறந்தார். தலைவரின் மரணத்திற்கு பதிலடியாக காவல் அதிகாரி சாண்ட்ரஸ் சுட்டுக் கொல்லப்பட்டார். இதனை நிகழ்த்தியது ஹிந்துஸ்தான் சோசலிஸ்ட் ரிபப்ளிக் அஸோஸியேஷன. இதைச் செய்தது பகத்சிங், சுகதேவ், ராஜகுரு ஆகியோர்.

இருபத்தி ஏழு வயதான சீக்கிய இளைஞனை ஆங்கில அரசு தேட ஆரம்பித்தது. லாகூரில் இருந்து தப்பித்து கொல்கொத்தா செல்ல புரட்சியாளர்கள் முடிவு செய்தனர். ஆனால் ஆங்கில அரசிடம் மாட்டாமல் எப்படி தப்பிக்க ? அப்போதுதான் உதவிக்கு துர்காதேவி வந்தார். பகத்சிங்கின் மனைவியாக சென்றது துர்காதேவிதான். அன்றய காலகட்டத்தில் ( ஏன் இன்றும் கூட )  இன்னொரு ஆண்மகனின் மனைவியாக நடிக்க எந்த அளவு தியாக சிந்தனை இருக்கவேண்டும் என்பதை இன்றும் நம்மால் புரிந்துகொள்ள முடியாது. பாதுகாப்பாக புரட்சியாளர்களைத் தப்ப வைத்துவிட்டு அதன் பின்னர் துர்காதேவி மீண்டும் லாகூர் திரும்பினார்.

லாலா லஜபதி ராயின் மரணத்திற்குப் பழிவாங்கிய பிறகு சிறிது காலம் தலைமறைவாக இருந்த புரட்சியாளர்கள் நாடாளுமன்ற மைய மண்டபத்தில் வெடிகுண்டு வீச முடிவு செய்தனர். படுகேஸ்வர்தத்துடன் இந்த சாகசத்தை மேற்கொள்ள பகத்சிங் தேர்ந்தெடுக்கப்பட்டார். காது கேட்காத அரசுக்கு எங்கள் பேச்சு புரிவதில்லை, எனவே சத்தமாக பேசுவோம் என்று புரட்சியார்கள் தீர்மானித்தார்கள். நாடாளுமன்றத்தில் குண்டு வீசி, துண்டுப் பிரசுரங்களை விட்டெறிந்து இன்குலாப் ஜிந்தாபாத் என்று கோஷம் எழுப்பி படுகேஸ்வர் தத்தும் பகத்சிங்கும் கைதானார்கள்.

சர்வ நிச்சயமாக அவர்கள் தூக்கிலிப்படுவார்கள் என்பது புரட்சியாளர்களுக்குத் தெரியும். இதற்கு எதிர்வினையாக வைஸ்ராய் இர்வின் பயணம் செய்யும் ரயில் வண்டியை வெடிகுண்டு வைத்துக் கவிழ்க்க துர்காதேவியின் கணவர் பகவதி சரண் வோரா முயற்சி செய்தார். ஆனால் அதிர்ஷ்டவசமாக இர்வின் உயிர் தப்பினார். இர்வின் உயிர் தப்பியதற்கு ஆண்டவனுக்கு நன்றி தெரிவித்து புரட்சியாளர்களைக் கண்டித்து காந்தி வெடிகுண்டுகளை வழிபடுதல் ( The Cult of Bomb ) என்ற கட்டுரையை எழுதினார்.

இந்த கட்டுரைக்கு பதிலாக வெடிகுண்டுகளின் தத்துவம் ( Philosophy of Bomb ) என்ற கட்டுரையை பகவதி சரண்வோரா எழுதினார். " பாரதத்திற்கு மீது ஆங்கிலேய அரசு இழைக்காத குற்றம் என்பது எதுவுமே இல்லை, திட்டமிட்ட முறையில் ஆங்கில அரசு பாரதத்தை ஓட்டாண்டியாக மாற்றி உள்ளது. ஒரு இனமாகவும் பொது மக்களாகவும் இந்த அநீதியை நாங்கள் மறக்கவோ மன்னிக்கவோ தயாராக இல்லை. சர்வ நிச்சயமாக நாங்கள் பழி தீர்ப்போம். சர்வாதிகாரத்திற்கு எதிராக பழி தீர்ப்பது என்பது மக்களின் கடமை. கோழைகள் பின்வாங்கி சமாதானத்தையும் அமைதியையும் யாசிக்கட்டும். ஆனால் நாங்கள் எங்களுக்கு கருணையே அல்லது மன்னிப்போ தேவை இல்லை, அதை நாங்கள் கேட்கவும் இல்லை. நாங்கள் நடத்துவது போர் - அதற்கு வெற்றி அல்லது வீர மரணம் என்பதுதான் முடிவாக இருக்கும்" என்று அவர் முழங்கினார்.

சிறையில் இருந்த புரட்சியாளர்களை விடுவிக்க சிறை வளாகத்தில் வெடிகுண்டு வீச வோரா முடிவு செய்தார். ஆனால் குண்டு தயாரிக்கும் முயற்சியில் துரதிஷ்டவசமாக அந்த வெடிகுண்டு வெடித்து வோரா மரணமடைந்தார். கணவர் இறந்த துயரத்தில் இருக்கக் கூட துர்காதேவிக்கு நேரம் இருக்கவில்லை. யாருக்கும் தெரியாமல் கணவரின் இறுதிச் சடங்குகளை முடித்துவிட்டு மீண்டும் பகத்சிங்கையும் மற்ற புரட்சியாளர்களையும் காப்பாற்றும் முயற்சியில் அவர் ஈடுபடலானார். கையெழுத்து இயக்கம், வழக்கு நடத்த பணம் வசூலித்தல், காந்தி உள்பட பல்வேறு தலைவர்களை சந்தித்து பேசுதல் என்று பல்வேறு முயற்சிகளில் ஈடுபட்டார்.

1932ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் துர்காதேவி ஆங்கில காவல்துறையால் கைது செய்யப்பட்டார். அவரது செயல்பாடுகள் காவல்துறைக்கு முழுவதும் தெரியாததால் அவருக்கு ஓராண்டு சிறைத்தண்டனைதான் அளிக்கப்பட்டது.

அதன் பின்னர் சென்னைக்கு வந்த துர்காதேவி சிறு குழந்தைகளுக்கு கல்வி கற்பிக்கும் முறையைக் கற்றுக் கொண்டு காஜியாபாத்திலும் பின்னர் லக்னோ நகரிலும் பள்ளி ஒன்றை நடத்தி வந்தார்.

நாடு சுதந்திரம் அடைந்த பிறகு, ஒரு சாதாரண பெண்மணி போல மற்றவர்கள் அறியாமல் வாழ்ந்து தனது 92ஆம் வயதில் 1999ஆம் ஆண்டு அக்டோபர் 15ஆம் தேதி துர்காதேவி பாரதமாதாவின் காலடியில் கலந்தார்.

புகழ்பெறவேண்டும் என்றோ மக்கள் பாராட்ட வேண்டும் என்றோ தியாகிகள் நாட்டுக்காக உழைப்பதில்லை. அது ஸ்வதர்மம் என்று எண்ணியே அவர்கள் உழைக்கிறார்கள். அவர்களைப் போற்றுவதும், அவர்களின் தியாகத்தை நினைவில் கொள்வதும் நம்மையும் அவர்கள் நடந்த பாதையில் நடக்கும் சக்தியைக் கொடுக்கும்.

பாரத நாட்டின் புகழ்பெற்ற தியாகிகள் அனைவருக்கும் எங்கள் வணக்கங்கள்.