திங்கள், 21 அக்டோபர், 2019

சுர்ஜித் சிங் பர்னாலா பிறந்தநாள் - அக்டோபர் 21.

ஒரு முக்கியமான காலகட்டத்தில் பஞ்சாப் மாநிலத்தின் முதல்வராகவும், மத்திய அமைச்சராகவும், தமிழ்நாடு உள்பட பல்வேறு மாநிலங்களின் ஆளுநராகவும் பணியாற்றிய திரு சுர்ஜித்சிங் பர்னாலா அவர்களின் பிறந்தநாள் இன்று.



இன்றய ஹரியானா மாநிலத்தின் பேஜ்புர் கிராமத்தில் வசதியான குடும்பம் ஒன்றில் 1925ஆம் ஆண்டு அக்டோபர் 21ஆம் நாள் பிறந்தவர் சுர்ஜித்சிங் பர்னாலா அவர்கள். இவர் தந்தை நீதிபதியாக பணியாற்றி வந்தார். தந்தையின் அடியொற்றி பர்னாலாவும் 1946ஆம் ஆண்டு லக்னோ பல்கலைக்கழகத்தில் சட்டப் படிப்பில் தேறி வழக்கறிஞராகப் பணியாற்றத் தொடங்கினார். கல்லூரியில் படிக்கும் காலத்தில் வெள்ளையனே வெளியேறு போராட்டத்தில் கலந்து கொண்டார். வழக்கறிஞராகப் பணியாற்றும் போதே அரசியலில் ஈடுபட்ட திரு பர்னாலா, அகாலிதள் கட்சியின் முக்கியமான தலைவர்களில் ஒருவராக வெகு விரைவில் உருவானார்.

முதன்முதலாக 1969ஆம் ஆண்டு பஞ்சாப் மாநிலத்தின் கல்வி அமைச்சராக பர்னாலா நியமிக்கப்பட்டார். 1977ஆம் ஆண்டு மொரார்ஜி தேசாய் தலைமையில் அமைந்த காங்கிரஸ் அல்லாத அமைச்சரவையில் விவசாயத்துறை அமைச்சராக பர்னாலா பணியாற்றினார். அப்போதுதான் கங்கை நதி நீரை பங்களாதேஷ் நாட்டோடு பகிர்ந்து கொள்ளும் ஒப்பந்தம் கையெழுத்தானது.

மொரார்ஜி தேசாய் அரசு கவிழ்ந்த சமயத்தில், அன்றய ஜனாதிபதி நீலம் சஞ்சீவ ரெட்டி பர்னாலா தலைமையில் ஒரு அரசை அமைப்பது பற்றி ஆலோசித்தார் என்று கூறப்படுவது உண்டு.

பஞ்சாப் மாநிலத்தில் தீவிரவாதம் தலைவிரித்து ஆடிய காலகட்டத்தில், தன் பாதுகாவலர்களாலேயே அன்றய பிரதமர் இந்திரா படுகொலை செய்யப்பட்ட பிறகு 1985ஆம் ஆண்டு முதல் 1987ஆம் ஆண்டு வரை பர்னாலா பஞ்சாப் மாநில முதல்வராக இருந்தார். அவரது பதவிக்காலத்திற்கு முன்னும் பின்னும் அந்த மாநிலம் ஜனாதிபதி ஆட்சியின் கீழ் இருந்தது என்பதே அன்றய பஞ்சாப் மாநிலத்தின் சட்டம் ஒழுங்கு நிலைமையை காட்டும் அளவுகோலாகும்.

அதனைத் தொடர்ந்து 1990ஆம் ஆண்டு தமிழகத்தின் ஆளுநராக பர்னாலா நியமிக்கப்பட்டார். விடுதலைப்புலிகளுக்கு ஆதரவாக அன்றய திமுக அரசு செயல்படுகிறது என்ற குற்றச்சாட்டின் அடிப்படையில் கலைக்கப்பட்டது. அதற்கான அறிக்கையை அளிக்க பர்னாலா மறுத்துவிட்டார். பிஹார் மாநில ஆளுநராக அவர் மாற்றப்பட்டார். ஆனால் அதனை ஏற்க மறுத்து பர்னாலா தனது பதவியை ராஜினாமா செய்தார்.

1990ஆம் ஆண்டு முதல் 1993ஆம் ஆண்டு வரை அந்தமான் நிக்கோபார் யூனியன் பிரதேசத்தின் ஆளுநராக பணியாற்றினார். 1998ஆம் ஆண்டு அமைந்த வாஜ்பாய் ஆட்சியில் ரசாயன மற்றும் உரத்துறை அமைச்சராக பர்னாலா நியமிக்கப்பட்டார். 

அதன்பிறகு உத்தரகாண்ட் மாநிலத்தின் முதல் ஆளுநராகவும், அதனைத் தொடர்ந்து ஆந்திர பிரதேசத்தின் ஆளுநராகவும், இரண்டு முறை தமிழகத்தின் ஆளுநராகவும் பர்னாலா பணியாற்றினார்.

தனது நீண்ட அரசியல் வாழ்வில் ஏறத்தாழ மூன்றரை ஆண்டுகளுக்கு மேலாக பர்னாலா சிறையில் இருந்தார். திரு பர்னாலா ஒரு சிறந்த ஓவியரும் கூட, பல்வேறு இயற்கை காட்சிகளை அவர் ஓவியமாகத் தீட்டி உள்ளார்.

நீண்ட அரசியல் வாழ்வுக்கு சொந்தக்காரராக விளங்கிய திரு பர்னாலா தனது 91ஆம் வயதில் 2017ஆம் ஆண்டு ஜனவரி மாதம் 14ஆம் நாள் சண்டிகரில் காலமானார்.