வியாழன், 10 அக்டோபர், 2019

மால்குடி நகரின் நாயகன் ஆர் கே நாராயணன் - அக்டோபர் 10

ஏற்கனவே உள்ள ஒரு நகரத்தை சுற்றி கதைக்களத்தை உருவாக்கி புதினங்களை உருவாகும் படைப்பாளிகள் உண்டு, கற்பனையில் ஒரு ஊரையே உருவாக்கி, அதில் தான் உருவாக்கும் கதாபாத்திரங்களை நடமாடவிடும் படைப்பாளிகளும் உண்டு. இரண்டாம் வகையில் உலக அளவில் புகழ்பெற்ற எழுத்தாளர் திரு ஆர் கே நாராயணன்.



மால்குடி என்ற  சிறுகிராமம், அதன் ஒரு புறம் சரயு நதி, மறுபுறம் மெம்பி என்ற காடு, நகரின் வெளியில் ஒரு சிறு புகைவண்டி நிலையம், வெவ்வேறு சாலைகள், பல்வேறு சிறிய தொழில்முனைவர்கள், இவர்களுக்கு நடுவே ஸ்வாமிநாதன் என்ற சிறுவன், மணி, ராஜம், சோமு, சங்கர் என்று அவனின் நண்பர்கள், அவர்களைச் சுற்றிய கதை என்று உருவாக்கி படிப்பவர்களின் கண் முன்னே நடமாட்டமிட்டார் ராசிபுரம் கிருஷ்ணஸ்வாமி ஐயர் நாராயணன் சுருக்கமாக ஆர் கே நாராயணன்.

1906ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 10ஆம் நாள் பள்ளி தலைமையாசிரியராகப் பணியாற்றிவந்த திரு கிருஷ்ணஸ்வாமி என்பவரின் மகனாகப் பிறந்தவர் நாராயணன். எட்டு குழந்தைகள் கொண்ட பெரிய குடும்பத்தின் இரண்டாவது மகன் இவர், இவரது சகோதர் புகழ்பெற்ற கோட்டோவிய கலைஞர் திரு ஆர் கே லக்ஷ்மணன். தந்தை தொடர்ச்சியாக வெவ்வேறு ஊர்களில் பணியாற்றும் வேலையில் இருந்ததால் நாராயணனின் கல்வி சென்னையில் நடைபெற்றது. பாட்டியின் அரவணைப்பில் புரசைவாக்கத்தில் உள்ள லூர்தெரன் பள்ளியிலும் பின்னர் சென்னை கிருஸ்துவ கல்லூரி மேல்நிலைப் பள்ளியிலும் நாராயணன் படித்தார். பள்ளிப் பருவத்திலேயே நூலகங்களில் உள்ள பல்வேறு நூல்களை அவர் படித்து முடித்துவிட்டார். அதன் பின்னர் அவர் தந்தை வேலை பார்த்துவந்த மைசூர் நகரில் தனது படிப்பை தொடர்ந்தார்.

வருங்காலத்தில் புகழ்பெற்ற எழுத்தாளராக விளங்கிய நாராயணன் கல்லூரி நுழைவுத் தேர்வில் முதல் முறை வெற்றி பெறவில்லை, இளங்கலை படிப்பை ஓராண்டு கூடுதலாக எடுத்துக் கொண்டு நான்கு வருடங்களில் முடித்தார் என்பது விந்தையான செய்திதான். மிகக் குறிகிய காலம் ஆசிரியாகப் பணியாற்றி, பின்னர் முழுநேரமும் எழுத்தாளாகவே இருப்பது என்ற முடிவை அவர் எடுத்தார். சகோதர்களும் உறவினர்களும் ஆதரித்தால் ஆரம்பகாலத்தில் அவரால் பொருளாதார நெருக்கடி இல்லாமல் வாழமுடிந்தது.

1930ஆம் ஆண்டு ஸ்வாமியும் நண்பர்களும் என்ற புதினத்தை எழுதினார். மால்குடி என்ற கற்பனை ஊரை உருவாக்கி, அதன் பின்புலத்தின் நடைபெறும் கதையாக இதனை அவர் அமைத்தார். பாரதத்தில் பல பதிப்பாளர்களால் நிராகரிக்கப்பட்ட இந்த புதினத்தை இங்கிலாந்து நாட்டைச் சார்ந்த கிரஹாம் க்ரீன் படிக்க நேர்ந்தது. அவரின் முயற்சியினால் இந்தப் புத்தகம் வெளியானது. ஏறத்தாழ ஸ்வாமிநாதன் என்ற கதாபாத்திரம் நாராயணனேதான். அவரது சிறுவயதில் நடந்த நிகழ்ச்சிகளைத்தான் மெருகேற்றி அவர் எழுதி இருந்தார். இதனைத் தொடர்ந்து Bachelor of Arts, The Dark Room என்ற புதினங்களையும் அவர் எழுதினார்.

வருடங்கள் செல்லச் செல்ல மால்குடியும் வளர்ந்தது, அநேகமாக அவரது கதைகளின் களமாக மால்குடியே அமைந்தது. சிறுவர்களின் பள்ளி வாழ்க்கை பற்றி, பள்ளிகளில் உள்ள தண்டனைகள் பற்றி, சுதந்திரப் போராட்டம் பற்றி, சமுதாயத்தில் உள்ள சிக்கல்கள் பற்றி என்று வாழ்க்கையை தொட்டுச் செல்லும் பல்வேறு விஷயங்கள் பற்றி மால்குடியை களமாக வைத்து நாராயணன் பல்வேறு புதினங்களை எழுதினார். பள்ளி மாணவர்கள் ஆங்கிலம் படிக்கத் தொடங்கும் போது தவற விடக் கூடாத புத்தகங்களாக நாராயணனின் புத்தகங்களைச் சொல்லலாம்.

1933ஆம் ஆண்டு கோயம்பத்தூர் நகரில் வசித்துவந்த தனது சகோதரியின் வீட்டிற்கு சென்ற நாராயணன், அங்கே அருகில் வசித்து வந்த ராஜம் என்ற பதினைந்து வயது பெண்ணிடம் தன் மனதைப் பறிகொடுத்தார். பெற்றோர் சம்மதத்துடன் அவர்கள் திருமணம் செய்து கொண்டனர். ஆனால் ராஜம் 1939ஆம் ஆண்டு மரணம் அடைந்துவிட்டார். அதன் பிறகு ஆர் கே நாராயணன் திருமணம் செய்துகொள்ளாமலே வாழ்ந்துவந்தார்.

இவரது படைப்பாற்றலைப் பாராட்டும் விதமாக பாரத அரசு இவருக்கு பத்மபூஷன் மற்றும் பத்மவிபூஷண் பட்டங்களை வழங்கியது. The Financial Expert என்ற புதினம் இவருக்கு சாஹித்ய அகாடமி விருதை பெற்றுக் கொடுத்தது. அரசு இவரை நாடாளுமன்ற மேலவை உறுப்பினராக நியமித்தது. நாட்டின் மேலவையில் பள்ளி மாணவர்கள் பெரும் சுமையை புத்தகம் என்ற பெயரில் சுமக்க வேண்டி உள்ளது என்ற கவலையை நாராயணன் வெளிப்படுத்தினார்.

ஏறத்தாழ அறுபதாண்டுகளுக்கு மேலாக படைப்பிலக்கியத்தில் இயங்கிக்கொண்டு இருந்த திரு நாராயணன் 2001ஆம் ஆண்டு மே மாதம் 13ஆம் நாள் காலமானார்.

மால்குடியும், ஸ்வாமிநாதனும் இருக்கும்வரை நாராயணனும் இருப்பார் என்பதில் ஐயமில்லை.