ஞாயிறு, 15 டிசம்பர், 2019

தேர்தல் ஆணையர் T N சேஷன் பிறந்தநாள் - டிசம்பர் 15.

பாரத நாட்டின் வழிகாட்டு ஆவணம் நமது அரசியலமைப்புச் சட்டம். தேர்தல் மூலம் தேர்வான மக்கள் பிரதிநிதிகள் மூலம் உருவாக்கப்படும் சட்டங்கள், அந்த சட்டங்களை செயல்படுத்தும் அரசு அதிகாரிகள், சட்டங்கள் அரசியலமைப்பு சட்டத்தின் வழிகாட்டுதலுக்கு உள்பட்டு இருக்கிறதா என்பதை உறுதி செய்யும் நீதிமன்றங்கள் இவை அரசின் முக்கியமான அங்கங்கள். வரையறுக்கப்பட்ட அதிகாரங்களோடு ஒன்றின் வரைமுறைக்குள் மற்றொன்று தலையிடா வண்ணம் அமைக்கப்பட்டது நமது அரசியலமைப்பு சட்டம்.

ஆனால் காலம் செல்லச் செல்ல, ஆணவமிக்க சிலரால் மற்ற அமைப்பில் உள்ளவர்களை தங்கள் செல்வாக்கின் மூலம் செயலற்றவர்களாக ஆக்கி, தங்களுக்குச் தேவையானவற்றை நிறைவேற்றிக்கொள்ளும் கோலமும் உருவானது. அப்போது சட்டரீதியாக உருவாக்கப்பட்ட தேர்தல் ஆணையத்தின் அதிகாரம் என்ன என்பதை அமுல்படுத்திக் காட்டிய  திருநெல்லை நாராயண ஐயர் சேஷன் என்ற டி என் சேஷனின் பிறந்தநாள் இன்று


பாலக்காடு பகுதியில் தனது ஆரம்பக் கல்வியை முடித்த சேஷன் சென்னை கிருஸ்துவக் கல்லூரியில் இயற்பியலில் இளங்கலை பட்டப்படிப்பை முடித்தார். அதன் பிறகு 1950ஆம் ஆண்டு முதல் 1952ஆம் ஆண்டு வரை அதே கல்லூரியில் ஆசிரியராகப் பணியாற்றினார். 1953ஆம் ஆண்டு இந்திய காவல் பணிக்கான தேர்வில் வெற்றி பெற்றார், ஆனால் அதில் சேரவில்லை. அடுத்த ஆண்டு 1954ஆம் ஆண்டு இந்திய ஆட்சிப் பணிக்கான தேர்வில் வெற்றி பெற்று பணிக்குச் சேர்ந்தார்.

இந்திய ஆட்சிப் பணியில் தமிழகப் பிரிவில் சேர்ந்த சேஷன் கோயம்புத்தூர் மாவட்ட துணை ஆட்சியாளாராகப் பொறுப்பேற்றார். பின்னர் திண்டுக்கல் மாவட்ட உதவி ஆட்சியாளர், தமிழக ஊரக வளர்ச்சித் துறை, போக்குவரத்துத்துறை போன்ற பிரிவுகளில் பணியாற்றினார். மதுரை மாவட்ட ஆட்சியாளராகப் பணியாற்றி, பின்னர் ஹார்வார்ட் பல்கலைக்கழகத்தில் பொது நிர்வாகத்தில் முதுகலைபட்ட படிக்க அமெரிக்கா சென்றார்.

மீண்டும் தாயகம் திரும்பிய சேஷன் அணுசக்திதுறை, விண்வெளித்துறை ஆகியவற்றில் பணியாற்றினார். சுற்றுப்புறச்சூழல் மற்றும் காடுகள் துறை, பாதுகாப்பு ஆகிய துறைகளில் செயலாளராகவும் இருந்தார். அதனைத் தொடர்ந்து ஆட்சிப் பணியியேயே மிக உயரிய பதவியான அமைச்சரவை செயலாளர் ( Cabinet Secretary ) பதவியையும், தேசிய திட்டக்குழுவில் உறுப்பினராகவும் இருந்தார்.

இந்தியாவின் 10-வது இந்தியத் தலைமை தேர்தல் ஆணையராக 1990-ம் ஆண்டு டிசம்பர் 12-ம் தேதி பொறுப்பேற்றார். 1996-ம் ஆண்டு டிசம்பர் 11-ம் தேதி வரை அந்தப் பொறுப்பில் இருந்தார். டி.என்.சேஷன் தலைமைத் தேர்தல் ஆணையராகப் பதவி வகித்த காலத்தில்தான், வாக்காளர் அடையாள அட்டை வழங்கும் நடைமுறை தொடங்கியது. வேட்பாளர்கள் தாங்கள் போட்டியிடும் தொகுதியில் செலவு செய்ய வேண்டிய அதிகபட்ச தொகை குறித்த கட்டுப்பாடும் விதிக்கப்பட்டது. பல்வேறு விமர்சனங்கள் எழுந்தாலும் அதைப்பற்றி கவலைகொள்ளாமல் தேர்தல் சீர்திருத்தப் பணிகளில் மும்முரமாக செயல்பட்டார்.

விதிகளுக்கு உட்பட்டு தேர்தல் ஆணையம் தனது முழு அதிகாரத்தைப் பயன்படுத்தியது இவரது பதவிக்காலத்தில்தான் எனக் கூறலாம். இதன்காரணமாக இந்தியத் தேர்தல் நடைமுறையின் சீர்திருத்தவாதி என அழைக்கப்பட்டார். இவருக்கு 1996-ம் ஆண்டு உயர்ந்த விருதான மகசேசே விருது வழங்கப்பட்டது

அரசங்கப் பதவிக்கு என்ன அதிகாரம் உள்ளது என்பதை சேஷன் ஐயம் திரிபுர நிரூபித்துக் காட்டினார். தேர்தல் பரப்புரை செய்வதில் நேரக் கட்டுப்பாடு, அனுமதிக்கப்பட்ட அளவில் தேர்தலுக்கான பணம் செலவழித்தல், வீட்டு உரிமையாளர் அனுமதி இன்றி சுவரில் விளம்பரம் செய்வதைத் தடுத்தல் என்று சட்டத்தில் சொன்னபடி தேர்தலை நடத்த முடியும் என்று செய்து காட்டியவர் திரு சேஷன் அவர்கள்.

பணியில் இருந்து ஓய்வு பெற்ற பிறகு குடியரசுத் தலைவர் தேர்தலில் சேஷன் போட்டியிட்டார். ஆனால் வெற்றி பெறவில்லை.சிலகாலம் முசோரியில் உள்ள லால் பகதூர் சாஸ்திரி பயிற்சி நிலையத்திலும், சென்னையில் உள்ள கிரேட் லேக்ஸ் மேலாண்மை நிறுவனத்திலும் சிறப்பு அழைப்பாளராக பயிற்றுநராக இருந்தார்.

திரு சேஷன் 2019ஆம் ஆண்டு நவம்பர் 10ஆம் நாள் காலமானார். தேர்தல் கமிஷன் என்ற அமைப்பு ஓன்று உள்ளது என்பதை பொது மக்களுக்கு புரியவைத்த சேஷன் இந்தியாவில் தேர்தல் நடைபெறும்வரை மக்கள் மனதில் குடியிருப்பார் என்பதில் ஐயமில்லை.