ஞாயிறு, 3 நவம்பர், 2019

ஹிந்தி திரையுலக சூப்பர் ஸ்டார் பிரிதிவிராஜ் கபூர் பிறந்தநாள் - நவம்பர் 3.



இசையும் நாடகமும் பாரத நாகரீகத்தில் பிரிக்க முடியாத  ஒரு அங்கம். அதனால்தான் நாடகத்தின் நீட்சியான சினிமாவும் மக்களின் எண்ணத்தோடு ஒட்டியே உள்ளது. பாரத திரையுலக வரலாற்றில் குறிப்பாக ஹிந்தி திரையுலகத்தில் குறிப்பிடத்தக்க ஆளுமையாக விளங்கிய பிரிதிவிராஜ் கபூரின் பிறந்ததினம் இன்று. இன்றய பாகிஸ்தான் பகுதியில் 1906ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 3ஆம் நாள் பிறந்தவர் பிரிதிவிராஜ். அவர் தந்தை அன்றய ஆங்கில காவல்துறையில் அதிகாரியாகப் பணியாற்றியவர்.

சிறுவயதில் இருந்தே நாடகங்களில் ஈடுபாடு கொண்டிருந்த பிரிதிவிராஜ், தான் படித்துக்கொண்டு இருந்த சட்டப் படிப்பை பாதியில் கைவிட்டு சினிமாவில் நடிக்க மும்பைக்கு சென்றார். 1929ஆம் ஆண்டு தயாரான சினிமா கேர்ள் என்ற படத்தில் கதாநாயகனாக நடித்தார். அது ஒரு பேசாத ஊமைப் படம். இந்தியாவில் தயாரான முதல் பேசும் படமான ஆலம் ஆரா என்ற படத்தில் இவர் குணச்சித்திர வேடத்தில் நடித்தார். 1941ஆம் ஆண்டு வெளியான சிக்கந்தர் என்ற படத்தில் அலெக்சாண்டர் வேடத்தில் பிரிதிவிராஜ் நடித்தார். மிகப்பெரும் வெற்றியைப் பெற்ற அந்தப் படம்தான் பிரிதிவிராஜ் கபூரை ஹிந்தி திரைப்பட உலகத்தின் முன்னணி கதாநாயகனாக நிலைநிறுத்தியது.

அன்றய காலத்தில் திரைப்பட நடிகர்கள் நாடகங்களிலும் நடிப்பது வழக்கமாக இருந்தது. பல்வேறு திரைப்படங்களிலும் நாடகங்களிலும்  நடித்துக்கொண்டு இருந்த பிரிதிவிராஜ் பிரிதிவி தியேட்டர்ஸ் என்ற நாடகக்குழுவை தொடங்கினார். நாடு சுதந்திரம் அடையும் காலம் வெகுவிரைவில் இருந்தது, ஆனால் மதத்தின் பெயரால் நாடு பிளவுபடும் என்பதும் உறுதியான காலம் அது. நாட்டை எதிர்நோக்கும் மிகப் பெரும் பிரச்சனையான பிரிவினைதான் பிரிதிவிராஜ் கபூரின் நாடகங்களின் மையக் கருத்தாக இருந்தது. தீவார், பதான், கதர், ஆஹுதி என்று தொடர்ந்து நான்கு நாடகங்கள் நாடு பிளவுபட்டால் அதனால் விளையும் இன்னல்களைப் பற்றி கபூரின் நாடகக்குழு அரங்கேற்றியது. திரைத்துறை நாடகத்தை விழுங்கியது. நாடகங்களுக்கான ஆதரவு குறைய, பிரிதிவிராஜ் புது நாடங்களை மேடையேற்றுவது இல்லாமலானது. ஏறத்தாழ பதினைந்தாண்டு காலத்தில் பிரிதிவி தியேட்டர்ஸ் 2,600 முறை பல்வேறு நாடகங்களை நாட்டின் பல்வேறு நகரங்களில் நடத்தியது.

பிரிதிவிராஜ் கபூரின் மகன்களான ராஜ்கபூர், ஷம்மிகபூர் மற்றும் சஷிகபூர் ஆகியோரும் திரையுலகின் முக்கிய நடிகர்களாக விளங்கினார்கள். ராஜ்கபூர் தயாரித்த ஆவாரா என்ற திரைப்படத்திலும், மகன் ராஜ்கபூர் பேரன் ரன்திர்கபூர்  ஆகியோருடன் இணைந்து கல் ஆஜ் அவுர் கல் எந்த படத்திலும் பிரிதிவிராஜ்கபூர் நடித்துள்ளார். மூன்று தலைமுறைகள் இணைந்து நடித்த மிகச் சில படங்களில் இதுவும் ஓன்று.

முகலாய இளவரன் சலீமுக்கும் நாட்டிய தாரகை அனார்கலிக்கும் இடையே உருவான காதலை பேசிய படமான முகல் இ ஆசம் என்ற படத்தில் பிரிதிவிராஜ் கபூர் முகலாயப் அரசர் அக்பரின் வேடத்தில் நடித்தார். மிகப் பெரும் பொருள்செலவில் உருவான இந்தப் படம், பெரும் வெற்றியைப் பெற்றது. இந்திய திரைப்பட வரலாற்றில் குறிப்பிடத் தக்க படங்களில் ஒன்றாக இந்தப்படம் விளங்குகிறது.

புற்றுநோயால் பாதிக்கப்பட்ட பிரிதிவிராஜ் கபூர் 1972ஆம் ஆண்டு மரணமடைந்தார்.

இவரின் கலையுலக சேவையைப் பாராட்டி அரசு 1969ஆம் ஆண்டு பத்மபூஷன் பட்டத்தை அளித்தது. திரையுலகத்தில் உயரிய விருதான தாதா சாஹேப் பால்கே விருது மரணத்திற்குப் பிறகு இவருக்கு வழங்கப்பட்டது.