திங்கள், 4 மே, 2020

இந்தியத் தொலை தொடர்புத் துறையின் நாயகன் - சாம் பிட்ரோடா பிறந்தநாள் - மே 4.


கையில் தொலைபேசிக் கருவியை வைத்துக்கொண்டு, நினைத்த நேரத்தில் வேண்டிய நபர்களோடு பேசிக்கொண்டிருக்கும் இன்றய தலைமுறைக்கு, ஒரு தொலைபேசி இணைப்பை பெற ஆறாண்டுகள் காத்திருந்த காலம் ஒன்று இருந்தது என்று சொன்னால் நம்புவது கடினமாகத்தான் இருக்கும்.

சோசலிச பாதையில் பாரதம் நகன்று கொண்டிருந்த நேரம் ஒன்று இருந்தது. பணக்காரர்களுக்கும் ஏழைகளுக்கும் இடையே உள்ள இடைவெளியைக் குறைப்பது என்பது பணக்காரர்களை ஏழைகளாக மாற்றுவதன் மூலமே முடியும் என்று நமது ஆட்சியாளர்கள் நினைத்துக்கொண்டடிருந்தார்கள். இருசக்கர வாகனமோ, நான்கு சக்கர வாகனமோ, தொலைபேசியோ பணக்காரர்களுக்கானது; எனவே அதன் உற்பத்தியைக் கட்டுப்படுத்தவேண்டும் என்ற சித்தாந்தம் கோலோச்சிக் கொண்டிருந்த நேரம்.

அது வருடம் 1980. அமெரிக்காவில் வசிக்கும் நாற்பது வயதான இளைஞர் ஒருவர் இந்தியா வந்திருந்தார். அவரச வேலையாக உடனடியாக அமெரிக்காவிற்கு ஒரு செய்தியைச் சொல்லவேண்டும் என்று முயற்சி செய்தபோது, அவர் அடைந்த துன்பங்கள் அவரைக் கவலையில் ஆழ்த்தின.

குஜராத்தை சேர்ந்த அவர் பிறந்தது ஒடிஷா மாநிலத்தில். படித்தது குஜராத்தில். இயற்பியலில் முதுகலைப் பட்டம் பெற்றபின் அமெரிக்காவின் சிகாகோ நகரின் இல்லினோசிஸ் பல்கலைக் கழகத்தில் மின் பொறியியல் பட்டம் பெற்றார். அமெரிக்காவில் தொலை தொடர்புத்துறையில் பல்வேறு சாதனைகளுக்கு அவர் சொந்தக்காரர். அந்தத் துறையில் பல்வேறு காப்புரிமைகளைப் பெற்றவர். அவர் பெயர் சத்யன் கங்காரம் பிட்ரோடா, அமெரிக்கர்கள் அழைப்பது சாம் பிட்ரோடா. 

மிகப் பெரும் வருத்தங்களும் ஏமாற்றங்களும் மிகப்பெரும் மாறுதலுக்கு அடித்தளமாக இருக்கும். அதுதான் அங்கும் நடந்தது. இந்தியத் தொலை தொடர்புத்துறையின் அபார வளர்ச்சிக்கு அந்த நிகழ்ச்சியே காரணமானது.
தான் படித்த படிப்பும், தனது திறமையும் தன் நாட்டு மக்களுக்குப் பயன்பெற வேண்டும் என்று நினைத்த பிட்ரோடா, அரசு இயந்திரத்தோடு போராடத் தொடங்கினார். அவர் அளித்த ஆலோசனைகள் எப்படியோ ராஜிவின் பார்வைக்குப் போனது. புதிய சிந்தனைகளும், கனவுகளுமாக இருந்த அந்த இளைஞர் அன்றைய பிரதமர் இந்திராவுடன் பிட்ரோடாவிற்கு ஒரு சந்திப்பை ஏற்பாடு செய்தார். இந்திரா தலைமையில் நடந்த அந்தக் கூட்டத்திற்கு குறிப்பிட்ட மத்திய மந்திரிகளும், ராஜிவும் பங்கேற்றார்கள். அவர்களிடம் இந்தியத் தொலை தொடர்புதுறைக்கான தனது கனவையும், அதை நிறைவேற்றும் செயல்திட்டத்தையும் பிட்ரோடா விவரித்தார். பிரதமர் அதனை ஏற்றுக்கொள்ள, தனது அமெரிக்கக் குடியுரிமையை ரத்து செய்துவிட்டு இந்தியா திரும்பினார்.

காலாவதியான இயந்திரவியல் மின்நிலைமாற்றிகளுக்கு (Mechanical Switches) பதிலாக இந்தியாவிலேயே தயாரான எண்ணியல் மின்நிலைமாற்றிகளுக்கு (Digital Switches) இந்தியத் தொலை தொடர்புத்துறை மாறத் தொடங்கியது. நாடெங்கும் தனியார் நடத்தும் பொது அழைப்பு நிலையங்கள் உருவாகின. கிராமங்கள்தோறும் தொலைபேசி இணைப்புகள் கிடைக்கத் தொடங்கின. தேவைப்படுபவர்கள் அனைவருக்கும் தொலைபேசி உடனே கிடைக்கும் நிலை உருவானது. இந்தியாவின் கணினி மற்றும் மென்பொருள் துறைக்கு உறுதியான அடித்தளம் இடப்பட்டது. இதனிடையில் இந்திரா மரணமடைய, ராஜிவ் பதவி ஏற்றார். சாமுக்கும் ராஜிவ்குமான உறவு வலுவாகத் தொடங்கியது

போபோர்ஸ் பீரங்கி பேர ஊழல் குற்றச்சாட்டு காரணமாக ராஜிவ் தோல்வியடைய, வி.பி.சிங் பிரதமரானார். பெரும் குற்றச்சாட்டுகள் பிட்ரோடா மீது சுமத்தப்பட்டது. அதிர்ச்சியில் உறைந்த அவருக்குக் கடுமையான மாரடைப்பு ஏற்பட்டது. உடைந்த மனதோடு சாம் அமெரிக்கா திரும்பினார். காலம் மாறியது, காட்சிகளும் மாறின. நரசிம்மராவ் தலைமையில் புது அரசு உருவானது. உலகமயமாக்கல், தனியார்மயமாக்கல், தாராளமயமாக்கல் என்ற சித்தாந்தங்கள் முன்னிலைப்படுத்தப்பட்டன. 2004ம் ஆண்டு மன்மோகன்சிங் தேசிய அறிவுத்தள ஆணைக்குழுவிற்குத் தலைவராகப் பதவி ஏற்குபடி பிட்ரோடாவுக்கு அழைப்பு விடுத்தார். அந்தப் பொறுப்பையும் சாம் பிட்ரோடா திறம்பட நிர்வகித்தார்.

பல்வேறு விருதுகளுக்குச் சொந்தக்காரரான சாம் பிட்ரோடாவிற்கு இந்திய அரசு பத்மபூஷன் விருது வழங்கிச் சிறப்பித்தது. இந்தியத் தொலைத்தொடர்புத் துறையை நவீனமாகிய சாமின் பங்களிப்பை இன்று நன்றியோடு நினைவுகூர்வோம்.