திங்கள், 5 செப்டம்பர், 2011

ஆசிரியர்கள் என்ற சிற்பிகள்

என் ஆசிரியர்கள் எல்லோராலும் நான் நேசிக்கப் பட்டு இருக்கிறேன், அரவணைக்கப் பட்டு இருக்கிறேன், செதுக்கப் பட்டு இருக்கிறேன், மன்னிக்கப் பட்டும் இருக்கிறேன். ஏறத்தாழ பதினேழு ஆண்டு காலம் என்னைப் பண்படுத்திய ஆசிரியர்களில் சிலரைப் பற்றிய நினைவுகள் இது. 

முதல் முதலில் என் நினைவிற்கு வருபவர் பாளை லயோலா கான்வென்ட் தலைமை ஆசிரியை சகோதரி சிறிய புஷ்பம் அவர்கள். பள்ளி பொது நூலகம் அவரது பொறுப்பில் தான் இருக்கும். ஒரு வெள்ளிகிழமை அன்று அவரிடம் சென்று, அவரது அனுமதியோடு நான்கு புத்தகங்கள் எடுத்து வந்தேன். மீண்டும் திங்கள் கிழமை அன்று அவரிடம் எல்லா புத்தகங்களையும் படித்து விட்டேன் என்று திருப்பிக் கொடுத்தேன். அதற்குள் எப்படி எல்லா புத்தகங்களையும் படிக்க முடியும் என்ற சந்தேகத்தில் அவர் என்னிடம் கேள்வி கேட்க, எனது பதிலில் திருப்தியாகி அதன் பின்பு எப்போது எவ்வளவு புத்தகமும் எடுத்துக் கொள்ள அனுமதி தந்தார். 

பொதுவாக கத்தோலிக சகோதரிகள் யார் வீடுகளுக்கும் போவது இல்லை என்ற நிலையில், அதனை மீறி அவர் எங்கள் வீடிற்கே வருவதும் உண்டு. 

நான்காம் வகுப்பு படிக்கும் போது என்னை தத்து எடுத்தவர் திரு தமிழ் கனல் அவர்கள். திறமையான தமிழ் ஆசிரியர். என்னை ஒரு பேச்சாளனாக மாற்றிய பெருமகன். எனது கையை பிடித்து நடை பழக்கி, என்னை ஓடவிட்டுப் பார்த்தவர்.

எனது ஆறாம் வகுப்பு தமிழ் ஆசிரியர் திரு குமாரசாமி அவர்கள், பல போட்டிகளுக்கு என்னை தேர்வு செய்து பல மேடைகளை என்னைப் பார்க்க வைத்து ரசித்தவர்.
   


                 

கணித ஆசிரியர் திரு தையல் பாகம் அவர்கள். எப்போதும் வெள்ளை வேட்டியும், வெள்ளை சட்டையும், வெளுத்த தலையும், முகம் நிறைந்த சிரிப்பும் என இருப்பவர். இவரது பேனா மை மட்டும் நல்ல கருப்பு. எழுத்து எல்லாம் அச்சு அடித்தது போல இருக்கும்.

DSC01923.JPG

                                     ( 150 ஆவது ஆண்டு விழா கொண்டாட்டம் )

எட்டாம் வகுப்பின் பள்ளி இறுதி ஆண்டு தேர்வு. கேள்வித்தாளில் பதில் எழுதி மற்ற மாணவர்களுக்கு மாற்றும் போது மாட்டிக்கொண்டேன். ஆனால் தேர்வு பணியில் இருந்த ஆசிரியர், அதனை தலைமை ஆசிரியரிடம் சொல்லாமல் எனது வகுப்பு ஆசிரியரிடம் மட்டும் தெரிவித்தார். " பல போட்டிகளில் நீ பரிசு வாங்கி வரும்போது மிகவும் மகிச்சியாக இருந்தது, நீ இப்படி செய்வாய் என நான் நினைக்கவே இல்லை " என்று மட்டும் சொல்லி சென்று விட்டார் எங்கள் வகுப்பு ஆசிரியர். செருப்பால் அடித்திருந்தால் கூட ஒன்றும் தோன்றி இருக்காது, அவரது கண்களில் தெரிந்த வருத்தம் அதோடு பொதுவாக தவறு செய்வதை விட்டுவிட்டேன். நன்றி திரு வேணுகோபால் அவர்களே
   
                                   

                                    ( ம தி தா பள்ளி பழைய மாணவர்கள் )


எனது கல்லுரி பேராசிரியர்கள் திரு எஸ் சுப்ரமணியம், திரு கே சுப்ரமணியம், திரு வளன் அரசு ஆகியோரை இங்கே நான் நன்றியோடு நினைவு கூறுகிறேன். 

தனது சொந்த மகன் போல என்னை சீராட்டிய எனது ஹிந்தி ஆசிரியைதிருமதி   லக்ஷ்மி அவர்கள், வீணை ஆசிரியை திருமதி நெல்லை வீணை சரஸ்வதி அவர்கள் இருக்கும் திசை நோக்கி தொழுகிறேன்.

இருபது ஆண்டு என்னை விட பெரியவர்களாக இருந்த போதும், எனக்கு நண்பனாக, ஆசிரியனாக இருக்கும் திரு சுந்தரராஜன், மற்றும் திரு பத்மநாபன் மற்றும் என்னைவிட வயதில் சிறியவனாக இருந்தாலும் அன்பால், பண்பால், நிதானத்தால் என்றும் என்னை வழிகாட்டும் திரு லக்ஷ்மணன் ஆகியோர்.

எல்லா இலக்கிய சிற்பிகளின் உளிகளும் என்னை செதுக்கிப் பார்த்து விட்டன, தெய்வங்கள் ஆக வில்லை என்றாலும் சிலைகளாக கூட மாறாமல், இன்னும் கற்களாகவே இருக்கிறேனே என்ற வருத்தம் எனக்கு உண்டு.

என்னை சமன்செய்த எல்லா ஆசிரியர்களுக்கும் எனது நன்றியும் வணக்கங்களும்