ஞாயிறு, 15 செப்டம்பர், 2019

சமகால சாணக்யன் - சுப்ரமணியம் ஸ்வாமி - செப்டம்பர் 15

புகழ்பெற்ற பொருளாதார நிபுணர், பல்வேறு பல்கலைக் கழகங்களில் பேராசிரியர் பணி, தேர்ந்த ராஜதந்திரி, ஐம்பதாண்டு கால பாரத அரசியலில் தவிர்க்க முடியாத மனிதர், பெரும்பலம் வாய்ந்த அரசியல்வாதிகளை சட்டத்தின் மூலம் செல்லாக் காசாக மாற்றிய சட்ட நிபுணர், உலகம் முழுவதும் பரந்து விரிந்த தொடர்புகளும் செல்வாக்கும் கொண்ட மனிதர்  என்று பல்வேறு ஆளுமைகளின் மொத்த உருவம் திரு சுப்ரமணியம் ஸ்வாமியின் பிறந்தநாள் இன்று.



மதுரையை அடுத்த சோழவந்தான் பகுதியை தனது ஆதாரமாகக் கொண்ட சீதாராம சுப்ரமணியம் - பத்மாவதி தம்பதியரின் மகனாக 1939ஆம் ஆண்டு செப்டம்பர் 15ஆம் தேதி பிறந்தவர் சுப்ரமணியம் சுவாமி.  சீதாராம சுப்ரமணியம் இந்திய புள்ளியியல் துறையில் பணியாற்றிக் கொண்டு இருந்தார். மத்திய புள்ளியியல் நிலையத்தின் இயக்குனராகவும், இந்திய அரசின் புள்ளியியல் ஆலோசகராகவும் அவர் பணியாற்றியதால், ஸ்வாமியின் குடும்பம் டெல்லியில் வசிக்க வேண்டி இருந்தது. டெல்லி ஹிந்து கல்லூரியில் கணித பட்டப் படிப்பையும் அதன் பின்னர் கொல்கத்தா நகரில் உள்ள இந்திய புள்ளியியல் கல்வி நிறுவனத்தில் புள்ளியியல் துறையில் முதுகலைப் பட்டத்தையும் சுவாமி முடித்தார்.

இதனைத் தொடர்ந்து தனது முனைவர் பட்ட ஆராய்ச்சியை அமெரிக்காவில் உள்ள ஹார்வார்ட் பல்கலைக்கழகத்தில் சுவாமி தொடங்கினார். அவரின் வழிகாட்டியாக நோபல் பரிசு பெற்ற பொருளாதார அறிஞர் சைமன் கூஸ்நட்ஸ் அமைந்தார். தனது இருபத்தி ஆறாம் வயதுக்குள் பொருளாதார முனைவர் பட்டத்தையும் அதோடு குறிப்பிடத்தக்க பொருளாதார மேதையாகவும் சுவாமி அடையாளம் காணப்பட்டார். நோபல் பரிசு பெற்ற மேதை பால் சாமுவேல்சன் என்பவரோடு இணைந்து ஸ்வாமி எழுதிய குறியீட்டு எண்கள் பற்றிய ஆராய்ச்சி கட்டுரைகள் ஸ்வாமியை உலகமெங்கும் பிரபலப்படுத்தியது.

ஹார்வார்ட் பல்கலைக்கழகத்தில் உதவிப் பேராசிரியராக தனது பயணத்தை சுவாமி தொடங்கினார். அமர்த்தியா சென்னின் அழைப்பை ஏற்று டெல்லி பொருளாதார நிறுவனத்தில் பணி புரிய சுவாமி பாரதம் திரும்பினார். ஆனால் அன்றய அரசின் சோசலிச பொருளாதார கொள்கைகளை அவர் விமர்சித்த காரணத்தால், அந்தப் பணி அவருக்கு மறுக்கப்பட்டது. அதனால் டெல்லியில் உள்ள இந்திய தொழில்நுட்ப நிறுவனத்தில் பொருளாதார கணித துறையில் பேராசிரியராக நியமிக்கப்பட்டார். ஆனாலும் இரண்டாண்டுகளில் அவர் அந்தப் பதவியில் இருந்து நீக்கப்பட்டார். நீண்ட நெடிய சட்டப் போராட்டத்திற்குப் பிறகு ஸ்வாமி மீண்டும் பணியில் சேர்க்கப்பட்டார். போராட்டத்தில் வெற்றி பெற்ற பிறகு சுவாமி அந்தப் பணியை ராஜினாமா செய்துவிட்டார்.

சுப்ரமணியம் ஸ்வாமியை பதவி நீக்கம் செய்து , அவரை தீவிர அரசியலில் ஈடுபட வைத்த பெருமை அன்றய பிரதமர் இந்திரா காந்தியையே சாரும். முதலில் ஜெயப்ரகாஷ் நாராயணனோடு இணைந்து சர்வோதயா இயக்கத்தில் பணியாற்றிக்கொண்டு இருந்த ஸ்வாமி, பின்னர் பொதுவாழ்வில் ஊழலை ஒழிக்க ஜெ பி தொடங்கிய இயக்கத்தின் முக்கிய தலைவராக உருவானார். 1974ஆம் ஆண்டு ஜனசங்கம் அவரை உத்திர பிரதேச மாநிலத்தில் இருந்து ராஜ்யசபைக்கு அனுப்பியது.

அந்தகாலத்தில்தான் இந்திரா நெருக்கடி நிலையை பிரகடனம் செய்தார். அரசியல் தலைவர்கள் கைது செய்யப்பட்டார்கள். மக்களின் அடிப்படை உரிமைகள் மறுக்கப்பட்டன. பல்வேறு தலைவர்கள் தலைமறைவாக சர்வாதிகாரத்தை எதிர்த்து போராட்டத்தை நடத்திக் கொண்டு இருந்தனர். ஸ்வாமியும் தலைமறைவானார். பாராளுமன்றம் நடந்து கொண்டு இருந்த ஒரு நாளில் பாராளுமண்டத்திற்கு ஸ்வாமி நுழைந்தார், உரிமை பிரச்சனை ஒன்றை கிளப்பி விட்டு மீண்டும் மாயமாக மறைந்தார். அப்போது காவல்துறைக்கு அவர் ஒரு தேடப்படும் குற்றவாளி. இந்த தடாலடி செயல் இரும்பு பெண்மணி என்று பெயர் பெற்ற இந்திரா காந்தியையே நிலைகுலைய வைத்தது.

1977 ஆம் ஆண்டு நெருக்கடி நிலைமை விலக்கிக் கொள்ளப்பட்டது. அதனைத் தொடர்ந்து நடந்த தேர்தலில் இந்திரா தோல்வியுற்றார். மும்பை வட கிழக்கு பாராளுமன்ற தொகுதியில் இருந்து ஸ்வாமி மக்களவைக்கு தேர்வானார். 1980 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலிலும் இதே தொகுதியில் இருந்து அவர் தேர்வானார். 1998 ஆம் ஆண்டு நடைபெற்ற தேர்தலில் மதுரை பாராளுமன்ற தொகுதியில் இருந்தும், 1988 ஆம் ஆண்டு முதல் 1994 வரை உத்திரப்பிரதேசத்தில் இருந்து ஜனதா கட்சி சார்பில் ராஜ்யசபைக்கும் அவர் தேர்வானார். சந்திரசேகரின் அமைச்சரவையில் சட்ட மற்றும் வர்த்தக துறைகளின் அமைச்சராகவும் அவர் பணியாற்றினார்.

அப்போது அவர் வடிவமைத்த கொள்கைகளின் அடிப்படையில்தான் அதன் பின்னர் ஆட்சிக்கு வந்த நரசிம்மராவ் அரசு பொருளாதார சீர்திருத்தங்களை முன்னெடுத்தது. நெடுங்காலம் ஜனதா கட்சியை நடத்திக்கொண்டு இருந்த சுப்ரமணியம் சுவாமி 2013 ஆம் ஆண்டு தனது கட்சியை பாரதிய ஜனதா கட்சியோடு இணைத்தார். 2016 ஆம் ஆண்டு பாஜக அவரை ராஜ்யசபா உறுப்பினராக நியமித்தது.

தனது நீண்ட அரசியல் வாழ்வில் பல்வேறு ஊழல்களை, அதிகார துஷ்பிரயோகங்களை ஸ்வாமி வெளிக்கொண்டு வந்துள்ளார்.  ஜெயலலிதா மீதான ஊழல் வழக்குகள், இரண்டாம் தலைமுறை அலைவரிசை ஒதுக்கீடுகளில் நடைபெற்ற முறைகேடுகள், நேஷனல் ஹெரால்ட் பத்திரிகையின் பங்குகளை முறைகேடாக சோனியா காந்தியும் அவர் மகன் ராகுல் காந்தியும் அடைந்தது ஆகியவை ஸ்வாமி முன்னெடுத்த முக்கியமான வழக்குகளாகும்.

பாரத அரசியல் வானில் அவரை மதிக்கலாம், வெறுக்கலாம் ஆனால் புறம்தள்ள முடியாத ஆளுமையாக விளங்கும் திரு சுப்ரமணியம் ஸ்வாமியின் எண்பதாவது பிறந்தநாள் இன்று. தனது வாழ்க்கையையே பலருக்கு படிப்பினையாக அமைத்திருக்கும் திரு ஸ்வாமிக்கு ஒரே இந்தியா தளம் தனது வாழ்த்துகளையும், வணக்கங்களையும் தெரிவித்துக்கொள்கிறது.