சனி, 20 ஜூலை, 2019

மறக்கடிக்கப்பட்ட மாவீரன் படுகேஸ்வர் தத் - நினைவுநாள் ஜூலை 20.

பாரதநாட்டின் சுதந்திரம் என்பது எதோ ஒரு சில தனிமனிதர்களின் முயற்சியாலோ அல்லது சில குடும்பங்களின் தியாகத்தாலோ மட்டுமே கிடைத்துவிடவில்லை. ஆயிரம் ஆயிரம் தியாகிகளின் குருதியால், அவர்களின் விடாத முயற்சியால், அவர்களின் பலிதியாகத்தால் கிடைத்த விடுதலை இது. தெளிவாக திட்டம் போட்டு அப்படிப்பட்ட தியாகிகள் இந்த மண்ணில் மறக்கடிக்கப் பட்டனர். அதனால்தான் தேசபக்தியை இல்லாத மூன்று தலைமுறைகளை நாம் உருவாக்கி உள்ளோம். அப்படி வரலாற்றின் பக்கங்களில் இருந்து மறக்கடிக்கப்பட்ட ஒரு மாவீரனின் நினைவுநாள் இன்று.எந்த ஒரு பாரதியரும் இல்லாமல் உருவான சைமன் குழுவை நாடு புறக்கணிக்க முடிவு செய்தது. சைமன் குழுவை புறக்கணித்து லாகூர் நகரில் நடந்த அமைதியான ஊர்வலத்தை பஞ்சாப் சிங்கம் லாலா லஜபதி ராய் தலைமையேற்று நடத்தினார். அன்றய ஆங்கில காவல் அதிகாரி ஜேம்ஸ் ஸ்காட் கண்மூடித்தனமாகத் தாக்கினான். குண்டாந்தடிகளின் அடியை உடல்முழுதும் ஏந்திய லாலா லஜபதி ராய் மருத்துவமனையில் மரணமடைந்தார். " என்மீது விழுந்த அடிகள் ஆங்கில ஏகாதிபத்தியத்தின் சவப்பெட்டியை மூடும் ஆணிகள்" என்று அவர் கூறினார்.

தலைவரின் மரணத்திற்கு பழிவாங்க இளைஞர் பட்டாளம் கிளம்பியது. 1928ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 17ஆம் தேதி காவல் அதிகாரி சாண்டர்ஸ் சுட்டுக் கொல்லப்பட்டார். சந்திரசேகர ஆசாத் தலைமையில் இயங்கிய  இந்திய சோசலிச குடியரசு ராணுவத்தைச் ( Hindustan Socialist Republic Army ) சார்ந்த பகத்சிங்கும் அவர் நண்பர்களும் இந்த பழிவாங்குதலை செய்துமுடித்தார்கள்.

காது கேளாத அரசுக்கு கேட்கவேண்டுமானால் நாம் உரக்கத்தான் பேசவேண்டும் என்று முடிவு செய்த இளைஞர் படை நாட்டின் பாராளுமன்றத்தின் உள்ளே வெடிகுண்டை வீச முடிவு செய்தது. அது 1929ஆம் ஆண்டு ஏப்ரல் மாதம் 8ஆம் தேதி.  பாராளுமன்ற கூட்டம் தொடங்க இருந்த நேரத்தில் பார்வையாளர்கள் இடத்தில் இருந்து இரண்டு இளைஞர்கள் எழுந்தனர். தங்கள்வசம் இருந்த வெடிகுண்டுகளை ஆட்களே இல்லாத இடத்தை நோக்கி வீசினார். யாரையும் கொல்ல வேண்டும் என்று நினைக்காததால், அந்த குண்டு பெரும் சத்தத்தையும் புகையையும் மட்டுமே வெளியிட்டது. நாடாளுமன்றத்தில் பெரும் குழப்பம் ஏற்பட்டது. ஆனால் குண்டு வீசிய இளைஞர்கள் அதனை பயன்படுத்திக்கொண்டு தப்பி ஓட முயற்சி செய்யவில்லை. " புரட்சி ஓங்குக, ஏகாதிபத்தியம் ஒழிக" என்றே அவர்கள் கோஷம் எழுப்பிக்கொண்டு இருந்தனர். அந்த இளைஞர்களில் ஒருவர் பகத்சிங். இன்னொருவர் படுகேஸ்வர் தத். பகத்சிங்கை மக்கள் மனதில் இருந்து மறக்கடிக்க முடியாதவர்களால் படுகேஸ்வர் தத் பெயரை மறைக்க முடிந்ததுதான் இந்த தேசத்தின் சோகம்.

1910ஆம் ஆண்டு நவம்பர் 18ஆம் நாள் இன்றய மேற்கு வங்காள மாநிலத்தில் பிறந்த தத், கான்பூர் நகரில் கல்வி கற்றார். அபோது சந்திரசேகர ஆசாத் போன்ற புரட்சியாளர்களின் அறிமுகம் கிடைத்தது. கையெறி குண்டுகள் தயாரிப்பதில் மிகுந்த நிபுணத்துவம் பெற்றிருந்தார்.

பாராளுமன்றத்தில் குண்டு வீசிய வழக்கில் தத்தும் பகத்சிங்க்கும் கைது செய்யப்பட்டனர். சிறையில் இருந்தபோது அரசியல் கைதிகளை முறையாக நடத்தவேண்டும் என்ற உண்ணாவிரதப் போராட்டத்தை தோழர்கள் தொடங்கினார்கள். ஓரளவுக்கான வசதிகளும் சலுகைகளும் அரசியல் கைதிகளுக்கு வழங்க ஆங்கில அரசு ஒத்துக்கொண்டது.

பகத்சிங், ராஜகுரு, சுகதேவ் ஆகியோர் தூக்கிலிடப்பட்டனர். படுகேஸ்வர் தத் நாடு கடத்தப்பட்டு அந்தமான் சிறையில் அடைக்கப்பட்டார். சிறையில் அவரை காசநோய் பற்றியது. விடுதலையான படுகேஸ்வர் தத் காந்தியின் வெள்ளையனே வெளியேறு போராட்டத்தில் கலந்து கொண்டு மீண்டும் சிறையில் அடைக்கப்பட்டார். 1946ஆம் ஆண்டு விடுதலை செய்யப்பட்டார்.

நாடு விடுதலை அடைந்த பின்னர், அரசின் உதவிக்காக விண்ணப்பித்த அந்த வீரனுக்கு எந்த சலுகையும் அளிக்கப்படவில்லை. வறுமையிலும் காசநோயால் வாடிய அந்த வீரன் 1965ஆம் ஆண்டு ஜூலை மாதம் 20ஆம் நாள் டெல்லி எய்ம்ஸ் மருத்துவமனையில் காலமானார்.

பஞ்சாப் மாநிலத்தில் உள்ள பிரோஸ்ப்பூர் நகரின் அருகே உள்ள ஹுசைனிவாலா என்ற கிராமத்தில் பல ஆண்டுகளுக்கு முன்னர் அவரது சகாக்களான பகத்சிங், சுகதேவ், ராஜகுரு ஆகியோரின் உடல்கள் எரிக்கப்பட்ட இடுகாட்டில் அவரது உடலும் தகனம் செய்யப்பட்டது. வீரத்தையும், தேசபக்தியையும் விதைத்த அந்த மாவீரனின் வாழ்க்கை முடிவுக்கு வந்தது.

குறைந்தபட்சம் போற்றப்படாத, பாராட்டப்படாத, சொல்லப்படாத அந்த தியாகிக்கு ஒரு துளி கண்ணீரை நாம் இன்று காணிக்கையாகச் செலுத்துவோம்.

வங்கிகள் தேசியமயமாக்கப்பட்ட தினம் - ஜூலை 19.


பாரத நாட்டில் வங்கிகள் தேசியமயமாக்கப்பட்ட ஐம்பதாவது ஆண்டு இன்று. 1969ஆம் ஆண்டு ஜூலை 19ஆம் நாம் அரசு 14 பெரும் வங்கிகளை தேசியமயமாகியது. அரசாங்கம் ஒரு முன்னெடுப்பைச் செய்கிறது என்றால் அதன்பின் உள்ள சமூக, பொருளாதார காரணிகளை மட்டுமல்லாது அரசியல் பின்புலத்தையும் நாம் தெரிந்துகொள்ள வேண்டும்.நாடு சுதந்திரம் அடைந்த பிறகு பதினேழு ஆண்டுகள் பிரதமராக இருந்த ஜவாஹர்லால் நேரு 1964ஆம் ஆண்டு மரணம் அடைந்தார். அவரை அடுத்து பிரதமரான லால் பகதூர் சாஸ்திரி 1966ஆம் ஆண்டு சந்தேகத்திற்கு இடமான முறையில் தாஷ்கண்ட் நகரில் மரணமடைந்தார். நாடு இரண்டு பெரும் போர்களை சந்தித்து இருந்தது. சீனாவுடனான போரில் தோல்வியும், அதன் பின்னர் பாகிஸ்தானுடனான போரில் வெற்றியும் பெற்றிருந்தது. கம்யூனிச, சோசலிஸ சித்தாந்தங்கள் கவர்ச்சியாக தோன்றிய காலம் அது. ஆனால் அதற்கு நேரெதிராக வலதுசாரி சிந்தனைகளை முன்னிறுத்தும் ஸ்வதந்த்ரா மற்றும் பாரதிய ஜன சங்கம் ஆகிய கட்சிகளும் வலுவோடு இருந்தன. அந்நியர் ஆட்சியில் இருந்து விடுபட்டுவிட்டால் பெருமளவு வறுமைநிலை மாறிவிடும் என்று நினைத்துக்கொண்டு இருந்த மக்கள் ஏமாற்றத்தில் இருந்த காலம்.

சாஸ்திரிக்குப் பிறகு யார் ? சங்கடமான இந்த கேள்விக்கு பதில் அளிக்கும் பொறுப்பு காமராஜரிடம் வந்தது. அவரது தேர்வு இந்திரா பிரியதர்சினி காந்தியாக இருந்தது. மொரார்ஜி தேசாய்க்குப் பதிலாக காங்கிரஸ் இந்திரா காந்தியை தேர்ந்தெடுத்தது. அப்போது இந்திராவிற்கு வயது நாற்பத்தி ஒன்பது மட்டுமே. நேருவின் மகள் என்பதைத் தவிர வேறு எந்த பின்புலமும் இல்லாதவர், அதனால் கட்சியின் மூத்த தலைவர்களுக்கு கட்டுப்பட்டு இருப்பார் என்று மக்கள் நினைக்க, இந்திராவிற்கு வேறு எண்ணங்கள் இருந்தன. வலிமைவாய்ந்த மாநிலத்தலைவர்கள் ஆட்டிவைக்கும் பொம்மையாக அவர் இருக்க விரும்பவில்லை. கவர்ச்சிகரமான கோஷங்கள், அதிரடியான செயல்கள் மூலம் அவர் மக்களுக்கு நெருக்கமாக இருக்க விரும்பினார். மன்னர் மானிய ஒழிப்பு, வங்கிகள் தேசியமயமாக்கல், வலிமையான மாநில தலைவர்களை இல்லாமல் ஆக்கி, அங்கே தனக்கு கட்டுப்பட்ட ஆட்களை நியமித்தல் என்று அவர் திட்டமிடத் தொடங்கினார்.

இன்றய வடிவிலான வங்கி சேவை என்பது 1770ஆம் ஆண்டு நிறுவப்பட்ட ஹிந்துஸ்த்தான் வங்கி என்ற நிறுவனத்தின் மூலம் பாரத நாட்டில் தொடங்கியது. இதனைத் தொடர்ந்து 1796ஆம் ஆண்டு ஜெனரல் பேங்க் ஆப் இந்தியா தொடங்கப்பட்டது. 1806ஆம் ஆண்டு பேங்க் ஆப் கல்கத்தா என்ற பெயரில் ஆரம்பிக்கப்பட்ட வங்கி பேங்க் ஆப் பெங்கால் என்று பெயர் மாற்றம் செய்யப்பட்டது. இதனைத் தொடர்ந்து 1840ஆம் ஆண்டு பேங்க் ஆப் பாம்பே மற்றும் 1843ஆம் ஆண்டு பேங்க் ஆப் மதராஸ் ஆகிய வங்கிகள் உருவானது. 1921ஆம் ஆண்டு இந்த மூன்று வங்கிகளும் இணைந்து இம்பீரியல் பேங்க் ஆப் இந்தியா என்று ஆனது. நாட்டின் சுதந்திரத்திற்குப் பிறகு 1955ஆம் ஆண்டு இந்த வங்கி ஸ்டேட் பேங்க் ஆப் இந்தியாவாக உருவெடுத்தது. 1959ஆம் ஆண்டு அன்றய சமஸ்தானங்கள் நடத்திவந்த வங்கிகள் ஸ்டேட் பாங்கின் துணை நிறுவனங்களாக அறிவிக்கப்பட்டன. 1935ஆம் ஆண்டுதான் ரிசெர்வ் பேங்க் ஆப் இந்தியா உருவாக்கப்பட்டது.

சுதந்திரப் போராட்டம் கொழுந்து விட்டு எரிந்துகொண்டு இருந்த போது பல்வேறு வங்கிகளை தேசியத்தலைவர்கள் உருவாக்கினார்கள். 1894ஆம் ஆண்டு லாகூர் நகரில் பஞ்சாப் நேஷனல் பேங்க் நிறுவப்பட்டது. கத்தோலிக் சிரியன் பேங்க், கார்பொரேஷன் பேங்க், பேங்க் ஆப் இந்தியா, கனரா பேங்க் இந்தியன் பேங்க், பேங்க் ஆப் பரோடா ஆகியவை இன்றுவரை இயங்கிக் கொண்டு உள்ளன. ஆனால் இதற்கிடையே பல்வேறு வங்கிகள் திவாலானதும் நடந்தது.

பல்வேறு வங்கிகள் வெவ்வேறு தொழில்நிறுவங்களால் நடத்தப்பட்டன. பொதுமக்கள் சேமிக்கும் பணத்தை வங்கி நிர்வாகம் தங்களின் முதலாளிகளாக தொழிலதிபர்களுக்கு கடனாகக் கொடுத்து விடுகின்றன என்ற குற்றச்சாட்டு எழுந்தது. எதனாலோ பெரும்தொழிலதிபர்கள் மீது இந்திராவுக்கு ஒரு ஒவ்வாமை இருந்தது. கடுமையான சோசலிஸ பொருளாதாரத்தை அவர் முன்னெடுத்தார். இருப்பவர்களுக்கும் இல்லாதவர்களுக்குமான இடைவெளியைக் குறைக்க அனைவரையும் ஏழைகளாக மாற்றும் திட்டம்தான் செயலில் இருந்தது.

வங்கி சேவை நாடு முழுவதற்கும் விரிவுபடுத்தப்பட வேண்டும், விவசாயம், சிறுதொழில்கள் போன்ற அரசின் முக்கியமான திட்டங்களுக்கு கூடுதல் கடன் அளிக்கப்படவேண்டும். இதற்க்கு வங்கிகள் தனியார்வசம் இருந்தால் சரிப்படாது, அவை அரசின் கைவசம் இருக்கவேண்டும் என்று இந்திரா நினைத்தார்.

1966இல் இந்திரா பதவியேற்றத்தில் இருந்து 1969 ஜூலை மாதத்திற்குள் என்ன நடந்தது என்பதையும் நாம் இங்கே பார்க்கவேண்டும். அதில் மிக முக்கியமானது 1967ஆம் ஆண்டு நடைபெற்ற மக்களவைக்கான நான்காவது பொது தேர்தல். முதல் மூன்று பொதுத்தேர்தல்களை காங்கிரஸ் கட்சி நேருவை பிரதமர் வேட்பாளராக முன்னிறுத்தி வெற்றி பெற்று இருந்தது. 1962ஆம் ஆண்டு தேர்தலில் அது 361 தொகுதிகளில் வெற்றி பெற்று இருந்தது. ஆனால் 1967ஆம் ஆண்டு தேர்தலில் தனிப்பெரும் கட்சியாக இருந்த காங்கிரஸ் 283 தொகுதிகளில்தான் வெற்றி பெற்று இருந்தது. நாடாளுமன்றத்தில் பாரதிய ஜனசங், இரண்டு கம்யூனிஸ்ட் கட்சிகள், சோசலிஸ்ட் கட்சி மற்றும் பிரஜா சோசலிஸ்ட் கட்சி, ஸ்வதந்திரா கட்சி, திமுக ஆகிய கட்சிகள் கணிசமான எண்ணிக்கையில் வெற்றி பெற்று இருந்தன. அதோடு ஆறு மாநிலங்களில் காங்கிரஸ் ஆட்சியை இழந்து இருந்தது.

கல்வியாளரும்  நாட்டின் மூன்றாவது குடியரசுத்தலைவருமான ஜாகிர் ஹுசைன் எதிர்பாராத விதமாக 1969ஆம் ஆண்டு மே மாதம் 3ஆம் நாள் மரணமடைந்தார். அதனைத் தொடர்ந்து குடியரசு துணைத்தலைவர் வி வி கிரி குடியரசின் தாற்காலிகத் தலைவராக பதவி ஏற்றார். குடியரசுத்தலைவருக்கான தேர்தல் அறிவிக்கப்பட்டது. காங்கிரஸ் கட்சி நீலம் சஞ்சீவ ரெட்டியை கட்சியின் அதிகாரபூர்வ வேட்பாளராக நிறுத்தியது. ரிசெர்வ் வங்கியின் முதல் இந்திய கவர்னர் என்ற பெருமையைப் பெற்ற திரு சி டி தேஷ்முக்கை எதிர்க்கட்சிகள் தங்கள் வேட்பாளராக அறிவித்தன. சுயேச்சை வேட்பாளராக வி வி கிரி களமிறங்களினார். காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற உறுப்பினர்களையும், சட்டமன்ற உறுப்பினர்களையும் தங்கள் மனச்சாட்சியின்படி ஓட்டளிக்குமாறு இந்திரா கேட்டுக்கொண்டார்.

ஜூலை 20ஆம் தேதி கிரி, குடியரசின் தாற்காலிகத் தலைவர் பதவியை ராஜினாமா செய்தார். அதற்கு முன்தினம் ஜூலை 19ஆம் தேதி வங்கிகள் தேசியமாகும் அவசரச் சட்டத்திற்கு ஒப்புதல் அளித்தார். பதினான்கு பெரும் வங்கிகள் தேசியமயமாக்கப்பட்டது. மீண்டும் 1980ஆம் ஆண்டு ஆறு வங்கிகள் தேசியமயமாக்கப்பட்டது. அதில் நியூ பேங்க் ஆப் இந்தியா பஞ்சாப் நேஷனல் பாங்கோடு இணைக்கப்பட்டது.

பல்வேறு காலகட்டத்தில் வெவ்வேறு இடங்களில் இயங்கி வந்த சிறிய தனியார் வங்கிகள் அரசு வங்கிகளோடு இணைக்கப்பட்டன. உதாரணமாக மதுரையைத் தலைமையகமாகக் கொண்டு இயங்கிய பாண்டியன் வாங்கி கனரா பாங்கோடும், தஞ்சாவூரைச் சார்ந்த பேங்க் ஆப் தஞ்சாவூர் இந்தியன் பாங்கோடும், நெல்லையைச் சார்ந்த பேங்க் ஆப் தமிழ்நாடு இந்தியன் ஓவர்சீஸ் வங்கியொடும் இணைக்கப்பட்டன.

வங்கிகள் தேசியமயமாக்கப்பட்டதால் வங்கி சேவைகள் நாடெங்கும் பரவியது. கிராமங்களில் கூட வங்கிகளின் கிளைகள் திறக்கப்பட்டன. அதுவரை வங்கி சேவைகளை உள்வாங்காத மக்களுக்கு சேவைகள் அளிக்கப்பட்டன. விவசாயம், சிறுதொழில் போன்ற அரசின் முன்னுரிமை திட்டங்களுக்கு குறிப்பிட்ட அளவில் கடன் வழங்கவேண்டும் என்ற நிபந்தனையால் பெரும் மாற்றங்கள் உருவானது. வங்கி பணியாளர்களின் எண்ணிக்கை அதிகரித்தது, அதனால் வேலைவாய்ப்பு பெருகியது.

அதே நேரத்தில் வங்கியில் உள்ள மக்களின் பணத்தை அரசியல் லாபத்திற்காக கவர்ச்சிகரமான திட்டங்களுக்கு அள்ளி விடுவதும் நடந்தது. 1980இல் மீண்டும் ஆட்சிக்கு வந்த இந்திராவின் அமைச்சரவையில் இருந்த ஜனார்தன் பூஜாரி  கடன் திருவிழாக்களைத் தொடங்கி வைத்தார். வங்கி கடன்களை வழங்குவதன் மூலம் அரசியல்வாதிகள் தங்கள் வாக்குவங்கியைப் பலப்படுத்திக் கொள்ளும் பழக்கம் உருவானது.

சக்கரம் சுழன்றது. 90களில் உருவான பொருளாதார தாராளமயமாக்கல் தனியார் வங்கிகளுக்கு அனுமதி அளித்தது. குறைவான பணியாளர்கள், தொழில்நுட்ப வசதிகள் மூலம் துரிதமான சேவை, அதிக கட்டணம் என்ற புதிய போக்கு உருவானது.

இன்று பல்வேறு வங்கிகள் அரசின் கட்டுப்பாட்டில் இருந்தாலும், அதன் பங்குகள் பங்குச்சந்தையில் பட்டியல் இடப்பட்டு, பலரும் அந்தப் பங்குகளை வர்த்தகம் செய்யும் நிலையில் உள்ளது.

நல்லதும் கெட்டதும் கலந்ததுதான் வாழ்க்கை, வங்கிகளின் தேசியமயமாக்கலும் அதுபோன்றதுதான். நாம்தான் வரலாற்றில் இருந்து பாடம் படித்து, நல்லவற்றை அதிகரித்து தீமைகளை கூடியவரை குறைத்து செயல்படவேண்டும்.

மைசூரின் கடைசி மஹாராஜா ஜெயசாம்ராஜேந்திர உடையார் - பிறந்தநாள் ஜூலை 18


மைசூர் சமஸ்தானத்தின் இருபத்தி ஐந்தாவது மஹாராஜாவும் ஏறத்தாழ ஐந்தரை நூற்றாண்டுகளுக்கு மேலாக ஆட்சி செய்த பரம்பரையின் கடைசி வாரிசாகவும் இருந்த மஹாராஜா ஜெயசாம்ராஜேந்திர உடையாரின் பிறந்தநாள் இன்று.

மைசூரின் மன்னராக இருந்த நாலாம் கிருஷ்ணராஜ உடையாரின் சகோதரர் இளவரசர் நரசிம்மராஜஉடையார். இளவரசர் நரசிம்மராஜ உடையாரின் மகனாகப் பிறந்தவர் ஜெயசாம்ராஜேந்திர உடையார். தந்தை இறந்ததால் இவர் இளவரசனாக நியமிக்கப்பட்டார். மஹாராஜா கிருஷ்ணராஜ உடையாரின் மறைவுக்குப் பிறகு ஜெயசாம்ராஜேந்திர உடையார் மைசூர் சமஸ்தானத்தின் மன்னராக 1940ஆம் ஆண்டு பட்டம் சூட்டப்பட்டார். 1947ஆம் ஆண்டு பாரத நாடு சுதந்திரம் அடையும் நேரத்தில் மஹாராஜா தனது சமஸ்தானத்தை பாரத நாட்டோடு இணைக்கும் ஒப்பந்தத்தில் கையெழுத்து இட்டார். அதோடு தனி மைசூர் சமஸ்தானம் பாரதத்தோடு இணைந்து கர்நாடக மாநிலமாக உருவானது.

ஜெயசாம்ராஜேந்திர உடையாரை மைசூர் சமஸ்தானத்தின் ராஜபிரமுக் என்ற பதவியில் பாரத அரசு நியமித்தது. அதன் பின்னர் மதராஸ் மாகாணம் மற்றும் ஹைதராபாத் சமஸ்தானத்தின் ஆளுகைக்குள் இருந்த கன்னட மொழி பேசும் இடங்களை இணைத்து உருவான மைசூர் மாகாணத்தின் ஆளுநராகவும், அதன் பின்னர் அன்றய  மதராஸ் மாநிலத்தின் ஆளுநராகவும் இவர் பணியாற்றினார்.

பொதுவாகவே மைசூர் மன்னர்கள் நாட்டு மக்களின் நலனிலும் முன்னேற்றத்திலும் அக்கறை கொண்டவர்கள். ஜெயசாம்ராஜேந்திர உடையாரும் அவர் காலத்தில் கல்வி அறிவைப் பரப்ப பெரும்பணத்தை ஒதுக்கினார். மருத்துவம், விவசாயம், தொழில்துறை ஆகிய துறைகளிலும் மைசூர் சமஸ்தானம் நாட்டுக்கே முன்னோடியாக திகழ்ந்தது.

அமெரிக்காவைச் சார்ந்த வில்லியம் பவ்லி என்பவரோடு இணைந்து இந்திய தொழிலதிபர் வால்சந்த் ஹிராசந்த் கொடுத்த திட்டத்தை ஏற்று பெங்களூரு நகரில் இந்தியன் ஏரோநாட்டிகல் நிறுவனத்தை மஹாராஜா தொடங்கினார். விமானங்களை உருவாகும் நிறுவனமாகத் தொடங்கப்பட்ட இந்த நிறுவனம் இன்று பாரத நாட்டின் பாதுகாப்புதுறையில் முன்னணியில் உள்ளது.

ஜெயசாம்ராஜேந்திர உடையார் கர்நாடக இசையிலும், மேற்கத்திய இசையிலும் திறமைசாலியாக விளங்கினார். தனது தாயிடம் பியானோ வாசிக்கக் கற்றுக்கொண்ட மஹாராஜா பல்வேறு மேலைநாட்டு இசை விற்பனர்களுக்கு உதவி செய்தார். கர்நாடக இசையிலும் வீணை வாசிப்பதிலும் சிறந்து விளங்கிய மஹாராஜா 94 சாகித்யங்களை இயற்றியுள்ளார். ஸ்ரீ வித்யா என்பது இவர் இயற்றிய சாகித்யங்களில் இவரது முத்திரை சொல்லாகும்.

இந்திய தத்துவத்திலும் ஆழ்ந்த புலமை கொண்ட ஜெயசாம்ராஜேந்திர உடையார் வேதாந்தம் பற்றி, கீதை பற்றி, இந்திய தத்துவவியல் பற்றி பல்வேறு புத்தகங்களை எழுதி உள்ளார். பல்வேறு சமிஸ்க்ரித நூல்களை கன்னட மொழியில் மொழிபெயர்க்கும் அமைப்பை நிறுவி அதன் புரவலாராகவும் இருந்தார்.

பனாரஸ் ஹிந்து பல்கலைக்கழகம், அண்ணாமலை பல்கலைக்கழகம், மைசூர் பல்கலைக்கழகம், ஆஸ்திரேலியா நாட்டின் குயின்ஸ்லாந்து பல்கலைக்கழகம் ஆகிய பல்கலைக்கழகங்கள் மஹாராஜா ஜெயசாம்ராஜேந்திர உடையாருக்கு கவுரவ டாக்டர் பட்டம் வழங்கி மரியாதை செலுத்தி உள்ளன.

வழமையான சாம்ராஜ்யத்தின் மன்னராகத் தொடங்கி, பல்வேறு துறைகளில் பெரும்பங்களிப்பை நல்கிய அரசர் தனது ஐம்பத்தி ஐந்தாவது வயதில் 1974ஆம் ஆண்டு செப்டம்பர் 23ஆம் நாள் காலமானார்.