வியாழன், 18 ஜூன், 2020

சங்கத்தின் முன்னாள் சர்சங்கசாலக் சுதர்ஷன் ஜி பிறந்தநாள் - ஜூன் 18.


ராஷ்டிரிய ஸ்வயம்சேவகசங்கத்தின் ஐந்தாவது சர்சங்கசாலக்காக பணியாற்றிய மானநிய சுதர்ஷன் ஜி அவர்களின் பிறந்தநாள் இன்று.

இன்றய சட்டிஸ்கர் மாநிலத்தின் ராய்ப்பூர் நகரில் 1931ஆம் ஆண்டு பிறந்தவர் சுதர்ஷன்ஜி அவர்கள். ஜபல்பூர் பொறியியல் கல்லூரியில் தொலைதொடர்பு பொறியியலில் பட்டம் பெற்றவர் இவர்.

பல ஸ்வயம்சேவகர்களைப் போலவே சுதர்ஷன்ஜியும் மிகச் சிறிய வயதிலேயே சங்கத்தின் தொடர்புக்குள் வந்து விட்டார். தனது ஒன்பதாம் வயதிலேயே சங்கத்தின் ஷாகாவில் பங்கெடுக்கத் தொடங்கிய சுதர்ஷன்ஜி பட்டப்படிப்பு முடித்தவுடன் தனது 23ஆம் வயதிலேயே முழுநேர ஊழியராக ( பிரச்சாரக் ) சங்கத்தோடு தன்னை இணைத்துக்கொண்டார். 

மத்திய பிரதேசத்தில் தொடங்கிய இவரது சங்கபணி வடகிழக்கு மாநிலங்களில் பரவி பின்னர் இந்தியா முழுவதுமாக விரிவடைந்தது.
படிப்படியாக சங்கத்தின் பல்வேறு பொறுப்புகள் சுதர்ஷன் ஜியைத் தேடி வந்தது. சங்கத்தின் அகில பாரத துணை பொது செயலாளராக அவர் பணியாற்றினார். 2000ஆவது ஆண்டில் சங்கத்தின் அன்றய சர்சங்கசாலக் ஸ்ரீ ராஜேந்திரசிங் ஜி, தனது உடல்நிலையைக் கருத்தில் கொண்டு தலைமைப் பொறுப்பில் இருந்து விலகினார். சங்கத்தின் அடுத்த தலைவராக ஸ்ரீ சுதர்ஷன்ஜி பொறுப்பேற்றுக் கொண்டார். அடுத்த ஒன்பது ஆண்டுகள் அவர் இந்தப் பொறுப்பில் இருந்தார்.

கன்னட மொழி, மராத்தி, ஹிந்தி, ஆங்கிலம், சட்டிஸ்கரி போன்ற 13 மொழிகளில் புலமை பெற்ற சுதர்ஷன்ஜியின் தலைமையில் சங்கம் இன்னும் விரிவாகப் பரவியது. ஆழ்ந்த படிப்பும், இந்தியா முழுவதும் சுற்றி வந்த நேரடி அனுபவமும் இணைந்த சுதர்ஷன் ஜி ஸ்வதேசி பொருளாதாரத்தில் மிகுந்த ஈடுபாடு கொண்டு இருந்தார். பரிவார் அமைப்புகள் அனைத்திலும் இளைய தலைவர்கள் உருவாவதிலும், அவர்களை வார்த்தெடுப்பதிலும் சுதர்ஷன்ஜி மிகுந்த கவனம் செலுத்தினார்.
2009ஆம் ஆண்டு சுதர்ஷன்ஜி தலைமைப் பொறுப்பை மோகன் பகவத்ஜி அவர்களிடம் ஒப்படைத்தார்.

தனது 81ஆம் வயதில் சுதர்ஷன்ஜி ராய்ப்பூர் நகரில் காலமானார். அவரது விருப்பத்தின்படி அவரது கண்கள் தானமாக அளிக்கப்பட்டது. எதோ ஒரு இடத்தில இருந்து வலிமையான பாரத நாட்டை சுதர்ஷன் ஜி பார்த்துக்கொண்டுதான் இருக்கிறார்.