புதன், 8 ஜூலை, 2020

முன்னாள் பிரதமர் சந்திரசேகர் நினைவு தினம் - ஜூலை 8.


பாரதநாட்டின் எட்டாவது பிரதமராக இருந்த திரு சந்திரசேகரின் நினைவுநாள் இன்று.

சந்திரசேகரைப் பற்றி தெரிந்து கொள்வதற்கு முன், எண்பதுகளின் இறுதியில் இருந்த அரசியல் நிலைமை பற்றி நாம் சற்றே நினைவுபடுத்திக் கொள்ள வேண்டும். 1984ஆம் ஆண்டு இறுதியில் அன்றைய பிரதமர் இந்திரா தனது மெய்காப்பாளர்களால் சுட்டுக் கொல்லப்பட்டார். நாடெங்கும் வீசிய அனுதாப அலையினால் ராஜிவ் வரலாறு காணாத வெற்றியைப் பெற்று ஆட்சி அமைத்தார். அவர் ஆட்சிக்காலத்தில் ராணுவத்திற்கு பீரங்கி வாங்கிய வகையில் சில அரசியல்வாதிகளுக்கு போபோர்ஸ் நிறுவனம் லஞ்சம் கொடுத்தது என்று சுவீடன் நாட்டு வானொலியில் செய்தி வெளியானது. சந்தேகத்தின் நிழல் ராஜீவின் மீதும் அவர் குடும்பத்தின் மீதும் படிந்தது. அதனைத் தொடர்ந்து 1989ஆம் ஆண்டு நடந்த நாடாளுமன்ற பொதுத்தேர்தலில் அதிகப்படியான இடங்களைப் பெற்று இருந்தாலும் ஆட்சி அமைக்க போதுமான இடங்கள் காங்கிரஸ் கட்சிக்கு கிடைக்கவில்லை.

ஜனதாதளம் கட்சிக்கு 143 இடங்கள் கிடைத்து இருந்தது. பாரதிய ஜனதா கட்சியும், கம்யூனிஸ்ட் கட்சிகளும் அமைச்சரவையில் சேராமல், வெளியில் இருந்து ஆதரவு அளிக்க முன்வர ஜனதாதள கட்சிக்கு ஆட்சி அமைக்க குடியரசுத்தலைவர் அழைப்பு விடுத்தார். பிரதமராகும் வாய்ப்பு தனக்கு கிடைக்கும் என்று சந்திரசேகர் எதிர்பார்த்துக் கொண்டு இருந்தார். பலர் வி பி சிங்கை பிரதமராக வேண்டும் என்று கூறினர். சமரச ஏற்பாடாக தேவிலால் பெயர் முன்மொழியப்பட்டது. ஆனால் திடீர் என்று தேவிலால் வி பி சிங்கை பிரதமராக அறிவித்தார். தான் ஏமாற்றப்பட்டதாக சந்திரசேகர் நினைக்கத் தொடங்கினார்.

தனது பலத்தைக் காட்ட தேவிலால் டெல்லியில் ஒரு விவசாயிகள் ஊர்வலத்திற்கு அழைப்பு விடுத்தார். அதனை எதிர்கொள்ள வி பி சிங் பல ஆண்டுகளாக நிலுவையில் இருந்த மண்டல் கமிஷன் பரிந்துரைகளை அரசு செயல்படுத்தும் என்று அறிவித்தார். இட ஒதுக்கீட்டை எதிர்த்து நாடெங்கும் கிளர்ச்சி வெடித்தது. இதற்கிடையே அயோத்தி நகரில் ராமர் பிறந்த இடத்தில் ராமர் கோவில் கட்டவேண்டும் என்ற கோரிக்கையை முன்வைத்து பாஜகவின் மூத்த தலைவர் அத்வானி குஜராத் மாநிலத்தின் சோமநாதபுரம் நகரில் இருந்து ரதயாத்திரையைத் தொடங்கினார். அந்த யாத்திரையை பிஹார் மாநிலத்தில் தடை செய்து அத்வானியையும் அன்றய பிஹார் முதல்வர் லாலு பிரசாத் யாதவ் கைது செய்தார். இதனைத் தொடர்ந்து ஜனதாதள அரசுக்கு அழைத்துவந்த ஆதரவை பாஜக விலக்கிக்கொண்டது. வி பி சிங் பதவியில் இருந்து விலகினார்.
ஒரு வருடத்திற்கும் குறைவாகவே வி பி சிங் ஆட்சி செய்ய, இன்னொரு தேர்தலுக்கு நாடு தயாராகவில்லை ஜனதாதள கட்சியின் ஒரு பிரிவு உறுப்பினர்களின் ஆதரவோடு, காங்கிரஸ் கட்சி வெளியில் இருந்து ஆதரவளிக்க சந்திரசேகர் பாரத நாட்டின் எட்டாவது பிரதமராகப் பதவி ஏற்றார்.

உத்தரபிரதேச மாநிலத்தில் உள்ள பாலியா மாவட்டத்தில்  ஒரு எளிய விவசாயக் குடும்பத்தில் 1927ஆம் ஆண்டு ஜூலை 1ஆம் நாள் பிறந்தவர் திரு சந்திரசேகர். அரசியல் அறிவியல் துறையில் தனது முதுகலைப் பட்டத்தை அலகாபாத் பல்கலைக்கழகத்தில் பெற்ற சந்திரசேகர், படிக்கும் காலத்திலேயே அரசியல் ஈடுபாட்டோடு இருந்தார். புகழ்பெற்ற சோசலிஸ்ட் தலைவர்களான  ராம் மனோகர் லோஹியா மற்றும் ஆச்சாரிய நரேந்திர தேவ் ஆகியோரின் தலைமையில் செயல்பட்டார்.

பிரஜா சோசலிஸ்ட் கட்சியின் மாவட்ட செயலாளராகவும் பின்னர் அதே கட்சியின் உத்திரப்பிரதேச மாநில பொதுச்செயலாளராகவும் பணியாற்றினார். 1962ஆம் ஆண்டு உத்திரப்பிரதேச மாநிலத்தில் இருந்து ராஜ்யசபைக்கு தேர்ந்தெடுக்கப் பட்டார். 1965ஆம் ஆண்டு இந்திய தேசிய காங்கிரஸ் கட்சியில் இணைந்தார். 1967ஆம் ஆண்டு காங்கிரஸ் கட்சியின் நாடாளுமன்ற குழுவின் செயலாளராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார். அடிப்படையில் பொதுவுடைமைவாதியான சந்திரசேகர் ஏழை மக்களின் முன்னேற்றத்திற்க்காக குரல் கொடுத்தார். சொத்துக்கள் சில தனியார் கைகளில் குவிவதை எதிர்த்த காரணத்தால் பலநேரங்களில் அவர் காங்கிரஸ் கட்சியின் கொள்கைகளையே எதிர்க்க வேண்டி இருந்தது.

சந்திரசேகரும் அவரோடு ஒத்த கருத்துள்ள பெரோஸ் காந்தி, சத்யேந்திர நாராயண் சின்ஹா, மோகன் தாரியா, ராம்தன் ஆகியோர் இளம் துருக்கியர்கள் என்று அழைக்கப் பட்டனர். தனது எண்ணங்களை வெளிப்படுத்த சந்திரசேகர் Young Indian என்ற வாரப் பத்திரிகையை தொடங்கி அதன் ஆசிரியராகவும் பணியாற்றினார். பொதுவாழ்வில் இருந்து விலகி இருந்த ஜெயப்ரகாஷ் நாராயணன் அரசியலில் ஊழல் அதிகமாகி விட்டது, அதனை எதிர்க்க வேண்டும் என்று நாடு தழுவிய போராட்டத்தைத் தொடங்கினார். லட்சியவாதியான சந்திரசேகர் அந்தப் போராட்டத்தை ஆதரித்தார்.. போராட்டத்தை எதிர்கொள்ள இந்திரா நெருக்கடி நிலையைப் பிரகடம் செய்தார். ஆளும் கட்சியில் இருந்தாலும் சந்திரசேகரும் கைது செய்யப்பட்டார்.

நெருக்கடி நிலையைத் தொடர்ந்து உருவான ஜனதா கட்சிக்கு சந்திரசேகர் தலைவராகத் தேர்ந்தெடுக்கப் பட்டார். ஆனால் முழுமையான ஆட்சிக்காலத்தை நிறைவு செய்யாமல் ஜனதா ஆட்சி கவிழ்ந்தது. மீண்டும் 1980ஆம் ஆண்டு இந்திரா பிரதமரானார். இந்திராவின் மறைவை அடுத்து நடந்த பொது தேர்தலில் அநேகமாக எல்லா எதிர்க்கட்சிகளும் தோல்வியைத் தழுவியது. அதன் பின்னர் சந்திரசேகர் தலைமையிலான ஜனதா கட்சி, மற்றைய சோசலிச கட்சிகளோடு இணைத்து ஜனதாதள  உருவானது. 1989ஆம் ஆண்டு நடந்த தேர்தலில் ஜனதா தளம் ஆட்சி அமைத்தது.

சந்திரசேகர் ஆட்சியில் இருந்த போது நாடு கடுமையான பொருளாதார நெருக்கடியில் இருந்தது. நாட்டின் மதிப்பீடு பொருளாதார தர நிறுவங்களால் குறைத்து மதிப்பிடப்பட்டது. இறக்குமதியை சமாளிக்க நாட்டின் தங்கத்தை அடமானம் வைக்கும் கடினமான முடிவை சந்திரசேகர் எடுத்தார். அடுத்த பொதுத்தேர்தலை சந்திக்கலாம் என்று தீர்மானித்த ராஜிவ் ஹரியானா காவல்துறை தன்னை வேவு பார்ப்பதாக கூறி சந்திரசேகர் அரசுக்கு அளித்தது வந்த ஆதரவை விலகிக்கொண்டார். நாடு அடுத்த தேர்தலுக்கு தயாரானது. தேர்தல் பிரச்சாரத்தில் இருந்த ராஜிவ் தமிழ்நாட்டில் மனித வெடிகுண்டால் பலியானார். அந்த தேர்தலில் அதிகப்படியான இடங்களைப் பெற்று காங்கிரஸ் கட்சி ஆட்சி அமைக்க, நரசிம்மராவ் பிரதமரானார்.

1977, 1980, 1989, 1991, 1996, 1998, 1999, 2004 ஆகிய தேர்தல்களில் தொடர்ந்து பாலியா நாடாளுமன்ற தொகுதியில் இருந்து மக்களவைக்கு தேர்வான சந்திரசேகர் 2007 ஆம் ஆண்டு ஜூலை மாதம் 8ஆம் நாள் காலமானார்.

லட்சியத்தில் உறுதியும், கொள்கையில் பிடிப்பும், நேர்மையும் கொண்ட சந்திரசேகர் போன்ற தலைவர்களின் வாழ்க்கை நம் அனைவருக்கும் ஒரு வழிகாட்டியாக இருக்கட்டும்.