வெள்ளி, 12 ஜூலை, 2013

பிறந்த நாள் பரிசு

நைனிடால் சிறையில் இருந்து ஜவஹர்லால் நேரு தனது மகள் இந்திரா காந்திக்கு எழுதிய Glimpses of World History என்கிற கடிதங்களின் மொழிபெயர்ப்பு. 


அறையும் ஆடரங்கும் படப் பிள்ளைகள்
தறைவில் கீறிடின், தச்சரும் காய்வரோ?
இறையும் ஞானம் இலாத என் புன் கவி,
முறையின் நூல் உணர்ந்தாரும், முனிவரோ?

                                                              - கம்பன் 

        --------------------------------------------------------------

                                                                                                                                                                                            அக்டோபர் 26, 1930


அன்பே பிரியதர்சினி,  

இது உனது பிறந்தநாள். உன் எல்லாப் பிறந்த நாட்களிலும் நான் உனக்கு வாழ்த்துகளையும் பரிசுகளையும் அளிப்பது வழக்கம். இன்று நைனிடால் சிறையில் இருந்து நான் உனக்கு என்ன பரிசுகளை அளிக்க முடியும். நெடிது உயர்ந்த இந்த சிறையின் மதில் சுவர்கள் கூட தடுக்க முடியாத பரிசு எனது எண்ணங்களும் சிந்தனைகளும் தான். 

கண்ணே, உபதேசம் செய்வதையும், அறிவுரைகள் கூறுவதையும் நான் விரும்புவதே இல்லை என்பதை நீ அறிவாய். எப்போதாவது அறிவுரை கூற நான் ஆரம்பிக்கும் போது, நான் எப்போதோ படித்த உலகின் மிக அறிவாளியான மனிதனின் கதை எனக்கு வந்து விடுகிறது. 

பதின்மூன்று நூற்றாண்டுகளுக்கு முன்னால் சீன தேசத்தில் இருந்து, அறிவையும் ஞானத்தையும் தேடி யுவாங் சுவாங் என்ற பயணி இந்தியாவிற்கு வந்தார். அவரது ஆர்வம், பனி படர்ந்த இமய மலையும், பாலைவங்களையும் தாண்டி பலப் பல சவால்களையும் அபாயங்களையும் கடந்து இந்தியாவிற்கு வர வைத்தது. இன்று பாட்னா என்று அறியப்படும் பாடலிபுத்திர நகரத்தின் அருகே உள்ள நாலந்தா பல்கலைக்கழகத்தில் அவர் கற்றுக்கொண்டும், பிறருக்கு கற்றுக் கொடுத்ததும் வாழ்ந்து வந்தார். 

அவர் இந்தியா முழுதும் பயணம் செய்து, அந்த நாள்களில் இந்த நாட்டில் வசித்து வந்த மக்களையும் அவர்கள் வாழ்க்கை முறைகளையும் கற்றுத் தேர்ந்தார். புத்தரின் போதனைகளில் அவர் அன்று மிகப் பெரிய அறிஞர் என்று கொண்டாடப் பட்டார். அவர் எழுதிய புத்தகத்தில் இந்த மிக அறிவாளியான மனிதனின் கதை இருக்கிறது.

இது தென் இந்தியாவில் இருந்து, இன்றைய பகல்பூர் நகருக்கு அருகில் உள்ள கர்னசுவர்ண என்ற நகருக்கு வந்த ஒருவரைப் பற்றிய கதை. இந்த மனிதர் தனது வயற்றைச் சுற்றி தாமிர தகடுகளையும், தலையில் ஒரு ஒளி விடும் ஒரு விளக்கையும் அணிந்து இருந்தார். இப்படிப் பட்ட ஒரு வினோதமான ஒப்பனையில் அவர் பல இடங்களுக்கு பயணித்து வந்தார். ஏன் இப்படிப் பட்ட உடை என்று கேட்பவர்களுக்கு, அறியாமையில் உழறும் மக்களுக்கு வழி காட்ட தலையில் விளக்கையும், தனது அறிவின் கூர்மையால் தனது வயறு வெடித்து விடாமல் இருக்க வேண்டி தாமிர தகடுகளை அணிவதாக அவர் விளக்கம் அளித்து வந்தார்.  

ஆனால் அப்படி வயறு வெடிக்கும் அளவிற்கு நான் அறிவாளியும் இல்லை, எனது அறிவு எனது வயற்றிலும் இல்லை. எங்கே எனது அறிவு இருந்தாலும் அது முழுமை அடையவில்லை என்பதும், கற்றுக் கொள்ள இன்னும் இந்த உலகில் பல விசயங்கள் உள்ளன என்பதையும் நான் அறிந்து வைத்து உள்ளேன். என் குறைவான அறிவோடு நான் எப்படி பிறருக்கு அறிவுரை சொல்ல்வது ? 

எது சரி, எது சரி இல்லை என்பதையும் எது செய்யத் தக்கது எது செய்யத் தகாதது என்பதையும் அறிவுரைகளால் புரிந்து கொள்ள முடியாது. பேசுவதன் மூலமூம், விவாதங்களின் மூலமுமே உண்மையைப் பற்றி, அதுவும் சிறிதளவு புரிந்து கொள்ள முடியும் என்று நான் நம்புகிறேன். 

உன்னுடன் பேசுவதையும் விவாதிப்பதையும் நான் மிக விரும்பிச் செய்து வந்து உள்ளேன். ஆனால் நமது உலகம் மிகப் பெரியது. நமது உலகத்தைத் தாண்டி உள்ள உலகங்கள் இன்னும் புதுமையானது. ஆகவே யுவாங் சுவாங் கூறும் அறிவாளியைப் போல நாம் எல்லாவற்றையும் தெரிந்து கொண்டு விட்டோம் என்றும், இனி தெரிந்து கொள்ள வேண்டியது எதுவும் இல்லை என்று என்ன வேண்டிய அவசியம் இல்லை. 

புதிதாக எதையாவதை தெரிந்து கொள்ளும் ஒரு சந்தோஷமான அனுபவத்தை அனுபவிக்காமல், நாம் முற்றும் தெரிந்த அறிவாளிகள் என்று எண்ணிக் கொள்ள வேண்டிய அவசியம் இல்லை. ஆகவே நான் உனக்கு எதையும் உபதேசிக்கப் போவது இல்லை. அப்படி என்றால் நான் என்ன செய்ய ? ஒரு கடிதம் என்பது ஒரு பேச்சுவார்த்தைக்கு ஒரு போதும் ஈடாக முடியாது. ஏன் என்றால் ஒரு ஒரு பக்கக் கருத்தையே தாங்கி வர முடியும். எனது இந்தக் கடிதம் ஒரு அறிவுரை போல் இருந்தால் அதனை நீ ஒரு கசப்பான மருந்து என எண்ணி அருந்த வேண்டாம். நாம் பேசுவது போலவே, உன்னை யோசிக்க வைக்க நான் தூண்டுவதாகவே எடுத்துக் கொள். 

வரலாற்றின் பக்கங்களில் நாம் நாடுகளின் மிகச் சிறந்த காலகட்டங்களையும், மிகச் சிறந்த ஆண்கள் மற்றும் பெண்களைப் பற்றியும், கற்பனைக்கு எட்டாத நிகழ்சிகளைப் பற்றியும் படிக்கிறோம். பல நேரங்களில் நமது கற்பனை நம்மை அது போன்ற இறந்த காலத்திற்கே நம்மை அழைத்துச் சென்று விடுகிறது. அந்த கதாநாயகர்கள் போலவும் கதாநாயகிகள் போலவும் நாம் நம்மைக் கற்பனை செய்து கொண்டு விடுகிறோம். 

ஜோன் ஆப் ஆர்க் பற்றி முதல் முதலில் நீ படித்த போது அடைந்த பரவசம் உனக்கு நினைவு இருக்கும் என்று நினைக்கறேன். சாதாரண மனிதர்கள் ஒருபோதும் கதாநாயகர்கள் ஆவது இல்லை, அவர்கள் தங்கள் தினப்படி வாழ்க்கையைப் பற்றியும், தங்கள் குழந்தைகள் பற்றியும், குடும்பக்க் கவலைகள் பற்றியும் மட்டுமே நினைத்துக் கொண்டு இருக்கிறார்கள். 

ஆனால் சில நேரங்களில் எல்லா மாந்தர்களும் ஒரு மிகப் பெரிய சவாலால் தூண்டப் பட்டு, சாதாரண மனிதர்கள் கூட நாயகர்கள் ஆகி விடுகிறார்கள். வரலாறு அப்போது மிகவும் விறுவிறுப்பாக மாறி, புதிய அத்தியாயங்கள் எழுதப் பட்டுகின்றன. மிகப் பெரிய தலைவர்கள் தோன்றி சாதாரண மனிதர்களையும் அசாதாரண மனிதர்களாக மாற்றி விடுகிறார்கள். 

1917, நீ பிறந்த வருடம் உலக வரலாற்றில் ஒரு மறக்க முடியாத வருடம். 
தன் நாட்டு மக்கள் மீது அன்பும், கனிவும் பாசமும் கொண்ட ஒரு மனிதன் உலகம் மறக்க முடியாத ஒரு புரட்சியை ஆரம்பித்த வருடம் அது. நீ பிறந்த அதே மாதத்தில் ரசியாவின் வரலாற்றையே மாற்றிய ஒரு புரட்சியை லெனின் ஆரம்பித்தார். 

அதே போல இன்று, இந்தியாவின் சாமானிய மக்களின் நலனைப் பற்றி எண்ணிக் கொண்டு, சாதாரண மக்களை அசாதாரணமான மனிதர்களாக மாற்றும் பணியில் பாபுஜி ஈடுபட்டு இருக்கிறார். தங்கள் சுமைகளில் இருந்து நமது மக்கள் விடுபடவும், மீண்டும் அவர்கள் சுதந்திரமான மனிதர்களாக மாற முடியும் என்ற நம்பிக்கையை அவர் மக்களிடம் விதைத்துக் கொண்டு வருகிறார். 

பாபுஜி இப்போது சிறையில் இருக்கிறார், ஆனால் அவரது செய்தி இந்த நாட்டின் ஆண்கள், பெண்கள் ஏன் குழந்தைகளைக் கூட அவர்கள் கூட்டில் இருந்து வெளியே வரச் செய்து, இந்த நாட்டின் போர் வீரர்களாக அவர்களை மாற்றி உள்ளது. இந்தியாவின் வரலாறு எழுதப்படும் நேரம் இது, அதனை நமது கண்களின் முன்னால் காணவும், அதில் பங்கு பெறவும் என்ற ஒரு நல்ல வாய்ப்பு உனக்கும் எனக்கும் கிடைத்து உள்ளது. 

இந்த மகத்தான பணியில் நாம் என்ன பங்கு வகிக்க முடியும் ? நமக்கு என்ன வாய்ப்புகள் கிடைக்கும் ? நான் அறியேன், ஆனால் நாம் எது செய்தாலும் அது இந்தப் பணியின் புகழினைக் குறைக்காமலும், நமது மக்களின் மதிப்பைக் குறைக்காமலும் இருக்க வேண்டும். நாம் இந்தியாவின் போர் வீரர்களாக நாம் மாற வேண்டும் என்றால் இந்தியாவின் மதிப்பின் காவலர்களாக நாம் மாற வேண்டும். இது ஒரு புனிதமான உறுதிமொழி. நாம் செய்வது சரியா தவறா என்ற சந்தேகம் பல நேரங்களில் நமக்கு வரலாம். 

நாம் செய்வது சரியா என்ற கேள்வி உன் முன் எழும்போது, நான் கூறும் இந்த சிறிய பரிசோதனையை நீ செய்து பார். இது உனக்கு உதவியாக இருக்கக் கூடும். நீ மறைக்க நினைப்பதையோ, அல்லது மறைவாகச் செய்வதையோ ஒரு போதும் செய்யாதே. நீ அஞ்சுவதைத்தான் மறக்க நினைப்பாய். பயம் என்பது உனக்கு தேவை அற்றது, புகழைக் கொடுக்காதது. அஞ்சாதே, அப்போது மற்ற எல்லாம் உன்னைப் பின் தொடர்ந்து வரும். நீ துணிவோடு இருந்தால், நீ கேவலமாக எண்ணக் கூடிய எதனையும் நீ செய்ய மாட்டாய். 

பாபுஜீ தலைமையில் நடக்கும் இந்த சுதந்திரப் போராட்டத்தில் ஒளிப்பதர்க்கோ அல்லது மறைப்பதர்க்கோ எதுவும் இல்லை. நாம் சொல்லுவதையோ அல்லது செய்வதைப் பற்றியோ நமக்கு ஒரு பயமும் இல்லை. பிரகாசமான ஒளியின் கீழ் நாம் நமது செயல்களைச் செய்து கொண்டு இருக்கிறோம். நமது தனிவாழ்விலும் கூட நாம் கதிரவனை நமது நண்பனாக ஏற்றுக் கொண்டு ஒளியின் கீழே நமது செயல்களைச் செய்வோம். தனிமை தேவைதான் ஆனால் மறைத்தல் என்பது தேவை இல்லை. 

இப்படி நீ செய்தால், நீ ஒளியின் மகளாக, எதிலும் அச்சமற்றவளாக வளருவாய். 

மிக நீண்ட ஒரு கடிதத்தை நான் எழுதிவிட்டேன், ஆனாலும் இன்னும் பலவற்றை நான் சொல்ல நினைக்கிறேன். எவ்வளவுதான் ஒரு கடிதத்தில் அடக்க முடியும் 

நான் முன்னமே சொன்னது போல, இந்த சுதந்திரப் போராட்டத்தை பார்க்கும் அதிர்ஷம் பெற்றவள் நீ. வீரமான ஒரு பெண் உனக்கு தாயாக உள்ளாள். உனக்கு ஏதேனும் பிரச்சனையோ அல்லது சந்தேகமோ வரும்போது உன் தாய் உனக்கு ஒரு தோழியாக இருந்து உதவுவாள். 

இந்தியாவின் சேவையில் அச்சமற்ற ஒரு போராளியாக நீ வளரவேண்டும். 

அன்பும் நல்வாழ்த்துகளும்.