எந்த நல்ல நிகழ்ச்சி என்றாலும்
இசைக்கப்படும் மங்கள வாத்தியம் நாகஸ்வரம். நல்ல உடல்வலுவும், தேர்ந்த
மூச்சுப்பயிற்சியும் உடையவர்களால் மட்டுமே இந்த வாத்தியத்தைக் கையாளமுடியும்.
அப்படியான சவாலான வாத்தியத்தில் இருந்து அற்புதமான இசையை அளித்த கலைஞர் ஷேக் சின்ன
மௌலானா அவர்களின் பிறந்ததினம் இன்று.
பாரம்பரியமான ஒரு இசைக்குடும்பத்தில் 1924ஆம் ஆண்டு மே மாதம் 12ஆம் நாள் பிறந்தவர்
மௌலானா ஸாஹிப். ஆந்திர மாநிலம் பிரகாசம் மாவட்டத்தில் உள்ள கரவடி என்ற
சிற்றூர்தான் இவரது பூர்வீகம். தொடக்கத்தில் தனது தந்தையிடம் நாகஸ்வரம் பயின்ற
ஷேக் பின்னர் நாச்சியார்கோவிலைச் சார்ந்த ராஜம் - துரைக்கண்ணு சகோதர்களிடம் தனது
பயிற்சியைத் தொடர்ந்தார். பிரபல நாகஸ்வரக் கலைஞர் திருவாடுதுறை ராஜரத்தினம் பிள்ளை
அவர்களை தனது மானசீகக் குருவாகக் கொண்டு தஞ்சாவூர் பாணி என்ற முறையில் விற்பன்னராக
விளங்கினார்.
தமிழ், தெலுங்கு, சமிஸ்க்ரிதம் ஆகிய
மொழிகளைக் கற்றுத் தேர்ந்த ஷேக் ராமாயணம், மஹாபாரதம் போன்ற இதிகாசங்களையும் கற்றிருந்தார். இவரது
சகோதருக்கும் மௌலானா என்பதுதான் பெயர். எனவே இவரை சின்ன மௌலானா என்று மக்கள்
அழைக்கத் தொடங்கினார்கள். ஷேக் என்பது மரியாதைக்குரியவர்களே அழைக்கும் சொல்.
இரண்டும் சேர்ந்து இவர் ஷேக் சின்ன மௌலானா என்று இசை உலகத்தில் அறியப்பட்டார்.
ரெங்கநாத
ஸ்வாமியின்மீது ஆழ்ந்த ஈடுபாடு கொண்டிருந்த ஷேக், ஸ்ரீரங்கத்தில்
வசித்து வந்தார். ஸ்ரீரங்கம் கோவிலிலும் சிருங்கேரி சாரதா பீடத்திலும் இவர் ஆஸ்தான
இசைக்கலைஞராக இருந்தார். ஸ்ரீரங்கத்தில் சாரதா நாகஸ்வர சங்கீத ஆஸ்ரமம் என்ற
அமைப்பை நிறுவி மாணவர்களுக்கு பயிற்சி அளித்தார். திருவையாறு ராஜா
இசைக்கல்லூரியில் பேராசிரியராகவும் பணியாற்றினார்.
25-வது சுதந்திர தின
கொண்டாட்டம், 50-வது சுதந்திர தின கொண்டாட்டம் உட்பட பல்வேறு அரசு நிகழ்ச்சிகளில்
இவர் வாசிப்பு இடம்பெற்றது. இலங்கை, அமெரிக்கா, கனடா, ஹாங்காங், ரஷ்யா, ஜெர்மனி, பிரான்ஸ், பின்லாந்து உள்ளிட்ட பல நாடுகளிலும் இசை நிகழ்ச்சிகளை
நடத்தியுள்ளார்.
மங்கல
வாத்ய விசாரதா, கலைமாமணி, பத்மஸ்ரீ, சங்கீத நாடக அகாதமி விருது, கந்தர்வ கலாநிதி, நாதஸ்வர கலா பிரவீணா, அகில பாரத நாதஸ்வர ஏக சக்ராதிபதி, சங்கீத கலாநிதி, இசைப் பேரறிஞர்
உள்ளிட்ட ஏராளமான விருதுகள், பரிசுகள், பட்டங்களைப் பெற்றுள்ளார்.
இறுதிவரை
நாதஸ்வர இசைக்கு மகத்தான பங்களிப்பை வழங்கி வந்த ஷேக் சின்ன மவுலானா 1999-ம் ஆண்டு ஏப்ரல்
மாதம் 75-வது வயதில்
மறைந்தார்.
கலைஞர்கள்
மறைந்தாலும் அவர்களின் கலையால் ரசிகர்களின் உள்ளத்தில் இன்றும் வாழ்ந்துகொண்டுதான்
இருப்பார்கள்.