திங்கள், 30 செப்டம்பர், 2019

குருஜியின் குரு - ஸ்வாமி அகண்டானந்தா - செப்டம்பர் 30.

ராமகிருஷ்ண பரமஹம்சரின் நேரடிச் சீடரும், ஸ்வாமி விவேகானந்தரின் தோழரும், ராமகிருஷ்ணா மடத்தின் மூன்றாவது தலைவரும், பரம பூஜனிய குருஜி கோல்வால்கரின் ஆன்மீக குருவுமான ஸ்வாமி அகண்டானந்தாவின் பிறந்ததினம் இன்று.ஸ்ரீமதா கங்கோபாத்யாய - வாமசுந்தரிதேவி தம்பதியினரின் மகனாக 1864ஆம் ஆண்டு செப்டம்பர் மாதம் 30ஆம் நாள் பிறந்தவர் சுவாமி அகண்டானந்தா. இவரது இயற்பெயர் கங்காதர் கதக். சிறுவயதில் இருந்தே ஆன்மீக நாட்டமும், இரக்ககுணமும் கொண்டவராக அவர் விளங்கினார். தனது பத்தொன்பதாம் வயதில் கங்காதர்,  தனது நண்பர் ஹரிநாத்துடன் ( பின்னாளில் ஸ்வாமி துரியானந்தா என்ற பெயரில் அறியப்பவர் இவர் ) ராமகிருஷ்ண பரமஹம்சரைமுதன்முதலாக சந்தித்தார். ஆத்ம சாதனைகள் ஒருபுறம் இருந்தாலும் கங்காதர் மக்கள் சேவையில் ஈடுபடவேண்டும் என்று விரும்பிய ராமகிருஷ்ணர் அவரை நரேந்தரநாத் தத்தாவோடு ( ஸ்வாமி விவேகானந்தர் ) அறிமுகம் செய்துவைத்தார். கங்காதருக்கு ராமகிருஷ்ண பரமஹம்சரோடும் விவேகானந்தரோடும் வாழ்நாள் முழுவதுமான உறவு இப்படித்தான் ஆரம்பமானது.

இல்லற வாழ்வில் கங்காதரரை ஈடுபடுத்த எண்ணிய அவர் தந்தை அவருக்கு ஒரு வேலை வாங்கிக் கொடுத்தார். சில மாதங்கள் அந்த வேலையில் இருந்த கங்காதர், அதனை துறந்து முழுநேரமும் ராமகிருஷ்ண பரமஹம்சரின் சேவைக்கே தன்னை அர்பணித்துக் கொண்டார். ராமக்ரிஷ்ணரின் மறைவுக்குப் பின்னர், கங்காதர் இமயமலை சாரலிலும் திபேத் நாட்டிலும் பல்வேறு இடங்களுக்கு பயணித்து, வேதாந்தத்தை கற்றுத் தேர்ந்தார். அவரது பயண அனுபவங்களை அவர் ஸ்ம்ரிதி கதா என்ற புத்தகமாகவும் எழுதினார். கையில் பணமோ மாற்றுத்துணியோ இல்லாமல் அவர் சுற்றிவந்தார்.

1890 ஆம் ஆண்டு அவர் துறவறத்தை மேற்கொண்டார். அவருக்கு அகண்டானந்தா என்ற யோக பட்டம் அளிக்கப்பட்டது. மீண்டும் ஸ்வாமி விவேகானந்தரோடு இமயமலைப் பயணங்களை அவர் தொடங்கினார். ராமகிருஷ்ணரின் நேரடி சீடர்கள் பதினேழு பேர் முதலில் சன்யாசம் பெற்று, நாடெங்கும் அலைந்து திரிந்து சமுதாய சேவையையும் அதே நேரத்தில் வேதாந்த ஞானத்தை மக்களுக்கு புகட்டும் வேலையையும் செய்யத் தொடங்கினார்கள்.

ஸ்வாமி அகண்டானந்தா அவதூத கீதை, பாணினியின் வடமொழி இலக்கண நூலுக்கு பதஞ்சலி எழுதிய விளக்கவுரை, மஹாபாரதம், பஞ்சதஸி, மருத்துவம் பற்றிய சரகர் - சுஸ்ருதர் எழுதிய நூல்கள், சுக்ல யஜுர் வேதம், யோகவாசிஷ்டம் ஆகிய நூல்களைக் கற்றுத் தேர்ந்தார்.

ராமகிருஷ்ணரின் சீடர்களில் சமுதாய சேவையை முன்னெடுத்தவர் என்ற பெருமை ஸ்வாமி அகண்டானந்தாவையே சாரும். 1894ஆம் ஆண்டு ராஜஸ்தானின் கத்ரி சமஸ்தானத்தில் இருந்தபோது வீடு வீடாகச் சென்று பெற்றோர்களிடம் பேசி, அவர்கள் குழந்தைகளை பள்ளியில் படிக்க வைக்குமாறு கூறினார். அவரது உழைப்பின் காரணமாக பள்ளிகளில் மாணவர் வருகை பலமடங்கு உயர்ந்தது. அவரது வழிகாட்டுதலின் பேரில் கத்ரி சமஸ்தானத்தின் மன்னர் அஜித்சிங் பல்வேறு கிராமங்களில் பள்ளிக்கூடங்களை நிறுவினார்.

1897ஆம் ஆண்டு வங்காளத்தில் ஆங்கிலேயர்களால் செயற்கையாக உருவாக்கப்பட்ட பஞ்சத்தை எதிர்கொள்ள ஸ்வாமிஜி தயாரானார். கடுமையான முயற்சிக்குப் பிறகு அவர் உணவுப் பொருள்களை பல்வேறு இடங்களில் இருந்து சேகரித்து, வறுமையின் பிடியில் இருந்த ஏழைகளுக்கு வழங்கினார். பெர்ஹாம்பூர் நகரில் ஒரு ஆதரவற்ற குழைந்தைகள் விடுதி, சர்கஞ்சி பகுதியில் ஒரு ஆஸ்ரமம், பின்னர் அதோடு இணைந்த பள்ளி ஆகியவைகளை அவர் ஆரம்பித்தார். சிறிது காலத்தில் அந்தப் பள்ளியில் தச்சு வேலையும், துணி நெய்யும் படிப்பும் மாணவர்களுக்கு கற்றுக் கொடுக்க ஆரம்பிக்கப்பட்டது.

ராஷ்டிரிய ஸ்வயம்சேவக சங்கத்தின் இரண்டாவது சர்சங்கசாலக் குருஜி கோல்வாக்கர், சுவாமி அகண்டானந்தாவின் சீடர். நீண்ட காலம் குருஜி ஸ்வாமிகளோடு தங்கி, வேதாந்தத்தைப் பயின்றார். ஸ்வாமிஜி குருஜி கோல்வாக்கர் அவர்களுக்கு தீக்ஷை அளித்தார்.

துறவிக்கான இலக்கணத்தோடு வாழ்ந்த ஸ்வாமிஜி 1937ஆம் ஆண்டு பிப்ரவரி மாதம் 7ஆம் நாள் மஹாசமாதி அடைந்தார். ஸ்வாமிஜி காட்டிய வழியில் இன்றும் ராமகிருஷ்ண மடத்தின் பல்வேறு துறவிகள் உலகெங்கிலும் சமுதாயப் பணியை மேற்கொண்டு வருகிறார்கள்.