செவ்வாய், 16 ஜூன், 2020

இந்தியவியல் சிந்தனையாளர் அரவிந்தன் நீலகண்டன் பிறந்தநாள் - ஜூன் 16

புகழ்பெற்ற இந்தியவியல் சிந்தனையாளரும், களப்பணியாளரும், எழுத்தாளருமாகிய அரவிந்தன் நீலகண்டன் அவர்களின் பிறந்தநாள் இன்று.

அரவிந்தன் நீலகண்டன் தமிழகத்தில் ஹிந்து எழுச்சிக்கு அடித்தளமாக விளங்கும் நாகர்கோவில் நகரைச் சார்ந்தவர். இவரது தந்தை நாகர்கோயில் ஹிந்துக் கல்லூரியில் பேராசிரியராகப் பணி புரிந்தவர். இவர் தாயார் அதே கல்லூரியில் பொருளாதாரப் பேராசிரியராக இருந்தவர். பெற்றோர் இருவருமே கல்விப் புலத்தில் இருந்ததால் சிறுவயது முதலே பல்வேறு புத்தகங்களை படித்து அது பற்றி விவாதிக்கும் வாய்ப்பு அரவிந்தனுக்கு கிட்டியது. கூட்டுப்புழு பட்டாம்பூச்சியாக மலர்வது போல, பல்வேறு புத்தகங்களை ஐயம் திரிபுர கற்ற அரவிந்தன் இந்தியவியல் சிந்தனையாளராக மலர்ந்தார்.

வேளாண்மைத் துறை மாணவராகத் தொடங்கிய அரவிந்தன் நீலகண்டன் பொருளாதாரம் மற்றும் உளவியல் துறைகளில் முதுகலைப் பட்டங்களும் பெற்றார். இவரது கட்டுரைகள் திண்ணை இணையத்தளத்தில் வெளியாகத் தொடங்கின. அதன் பின்னர் தினமணி, சொல்வனம், தமிழ் பேப்பர் ஆகிய பத்திரிகைகள் இவரது கட்டுரைகளை வெளியிட்டன. தமிழ் ஹிந்து இணைய இதழின் ஆசிரியர் குழுவில் பங்களித்தார். வலம் பத்திரிகை மற்றும் ஸ்வராஜ்யா போன்ற இதழ்களின் ஆசிரியர் குழுவில் தற்போது பணியாற்றி வருகிறார்.

இந்தியாவைத் துண்டாட நினைக்கும் பல்வேறு சக்திகள் பற்றி ராஜிவ் மல்ஹோத்ராவுடன் இணைந்து, பல்வேறு ஆரய்ச்சிகளுக்குப் பிறகு ‘உடையும் இந்தியா’ என்ற புத்தகத்தை எழுதி உள்ளார்.
‘நம்பக்கூடாத கடவுள்’, ‘ஆழி பெரிது’, ‘ஹிந்துத்துவச் சிறுகதைகள்’, ‘இந்திய அறிதல் முறைகள்' உள்ளிட்ட பல புத்தகங்களை எழுதி உள்ளார். ‘பஞ்சம் படுகொலை பேரழிவு கம்யூனிஸம்’ என்ற புத்தகத்தில் கம்யூனிச சித்தாந்தத்தின் கோர முகத்தைப் பற்றியும், அதனால் உலகத்திற்கு ஏற்பட்ட இன்னல்கள் பற்றியும் விரிவாக ஆய்வுமுறையில் பதிவு செய்துள்ளார். இன்றுவரை இப்புத்தகம் எந்த ஒரு கம்யூனிஸ்ட்டாலும் மறுக்கப்படவில்லை என்பது முக்கியமான செய்தி.

நான்கு பக்க கட்டுரைக்கு எட்டுப் பக்கத்திற்கு ஆதாரங்களை அளித்து எழுதுவது என்பது இவர் பாணி. அதனாலேயே இவர் எழுதும் கட்டுரைகளுக்கோ அல்லது புத்தகங்களுக்கோ, எதிர் முகாமில் இருந்து வசைபாடல்கள் இருக்குமே அன்றி, தர்க்கபூர்வமான எதிர்ப்புகள் என்பது பொதுவாக இருப்பதில்லை.

நண்பரும், ஆசானும், சகோதரனும், ‘ஒரே இந்தியா’ தள நிர்வாகிகளின் ஆதர்ச நாயகனுமான அரவிந்தன் நீலகண்டனுக்கு மனப்பூர்வமான பிறந்தநாள் வாழ்த்துக்களைத் தெரிவிப்பதில் ஒரே இந்தியா தளம் மிகுந்த மகிழ்ச்சி அடைகிறது.


பாரத நாட்டுக்கு இன்னும் ஆயிரம் ஆயிரம் அரவிந்தர்கள் தேவை.