புதன், 30 அக்டோபர், 2019

பிரமோத் மகாஜன் பிறந்தநாள் - அக்டோபர் 30

காலம் தனக்கு தேவையான மனிதர்களை தேவையான நேரத்தில்  தேவையான இடத்தில் வைத்து விடுகிறது, அதனால்தான் சிலரை சில இடங்களில் இருந்து, சிலரை உலகத்தில் இருந்தே விலக்கி விடுகிறது. காலத்தினால் வெளியேற்றப்பட்ட, பாஜகவின்இரண்டாம் தலைமுறை அரசியல்வாதியும்,
பாரத அரசியல் வானில் பிரகாசமான விளக்காக திகழ்ந்து இருக்க வேண்டியவருமான  பிரமோத் மகாஜன் அவர்களின் பிறந்தநாள் இன்று.இன்றய தெலுங்கானா மாநிலத்தின் மஹபூப்நகர் பகுதியைச் சார்ந்த வெங்கடேஷ் தேவிதாஸ் மகாஜன் - பிரபாவதி தம்பதியரின் ஐந்து குழந்தைககளில் இரண்டாவது மகனாகப் பிறந்தவர் திரு பிரமோத் மகாஜன். இந்த தம்பதியரே மஹாராஷ்டிரா மாநிலத்தின் பீட் மாவட்டத்தின் அம்பஜ்ஜோகி நகருக்கு குடிபெயர்ந்ததால், ப்ரமோதின் இளமைக்காலம் முதலே அவர் மஹாராஷ்டிரா மாநிலத்தவராகவே வளர்ந்து வந்தார். தனது பள்ளிப்படிப்பை யோகேஸ்வரி வித்யாலயாவில் முடித்த மகாஜன் இயற்பியல் துறையில் இளங்கலை பட்டமும், இதழியல் துறையில் முதுகலை பட்டம் பெற்றவர். படிக்கும் காலத்திலேயே நாடகத்துறையில் சிறந்து விளங்கிய பிரமோத், தன்னோடு நடித்த ரேகாவை காதலித்து மணந்து கொண்டார். நான்காண்டு காலம் ஆசிரியராகப் பணியாற்றிய பிரமோத் பின்னர் முழுநேர அரசியலில் ஈடுபடத் தொடங்கினார்.

மிகக் சிறுவயதில் இருந்தே ராஷ்டிரிய ஸ்வயம்சேவக சங்கத்தில் இருந்த பிரமோத் ஆர் எஸ் எஸ் அமைப்பின் தருண் பாரத் என்ற மராத்தி செய்தித்தாளின் ஆசிரியராகவும் இருந்தார். இந்திரா காந்தி அறிவித்த நெருக்கடிநிலை காலத்தில் கைது செய்யப்பட்டு நாசிக் சிறையில் அடைக்கப்பட்டார். பாரதிய ஜனதா கட்சி உருவான காலத்தில் ஆர் எஸ் எஸ் அமைப்பின் சார்ப்பில் கட்சிப் பணிக்காக அனுப்பப்பட்டவர்களில் பிரமோத்தும் ஒருவர். தனது பணித்திறமையால், பல்வேறு மாற்றுக் கட்சியினரோடு இருந்த தொடர்பால் அவர் பாஜகவின் முன்னணித் தலைவர்களில் ஒருவராக உயர்ந்தார்.

மஹாராஷ்டிர மாநில பாஜகவின் பொதுச் செயலாளர், கட்சியின் தேசிய செயலாளர், கட்சியின் இளைஞர் அணியின் தலைவர் என்று பல்வேறு பொறுப்புகள் அவரைத் தேடி வந்தது. இந்திரா கொலையானதைத் தொடர்ந்து நடைபெற்ற 1984ஆம் ஆண்டு நாடாளுமன்றத் தேர்தலில் அவர் போட்டியிட்டார், ஆனால் வெற்றி வாய்ப்பை நழுவவிட்டார். 1996ஆம் ஆண்டு நடைபெற்ற நாடாளுமன்றத் தேர்தலில் அவர் வெற்றிபெற்று நாடாளுமன்ற உறுப்பினரானார். அவரது சேவைகளை அங்கீகாரம் செய்யும் விதமாக பாஜக அவரை நாடாளுமன்ற மேலவை உறுப்பினராக நான்கு முறை நியமித்தது.

1996ஆம் ஆண்டு முதல்முதலாக வாஜ்பாய்  அமைந்த பாஜக அரசில் பிரமோத் பாதுகாப்பு அமைச்சராக நியமிக்கப்பட்டார். 1998ஆம் ஆண்டு முதலில் பிரதமரின் ஆலோசகராகப் பணியாற்றிய மகாஜன், பின்னர் செய்தித் தொடர்பு, உணவு பதனிடும் துறை, பாராளுமன்ற விவகாரத்துறை, நீர்வளம் மற்றும் தகவல் தொடர்பு ஆகிய துறைகளின் அமைச்சராகவும் இருந்தார். பின்னர் அவர் தொலைத்தொடர்புத்துறை அமைச்சராகப் பணியாற்றினார். பிரமோத் மகாஜன் பாஜகவின் முக்கிய தலைவர்களான வாஜ்பாய் மற்றும் அத்வானியின் நம்பிக்கைக்குரியவராகத் திகழ்ந்தார். வாஜ்பாய் அவரை லக்ஷ்மணன் என்றே அழைப்பது வழக்கம்.

1995ஆம் ஆண்டு பாஜக சிவசேனாவோடு கூட்டணி வைத்து மஹாராஷ்டிர மாநில சட்டமன்றத் தேர்தலை எதிர்கொண்டு பெரும் வெற்றியைப் பெற்றது. கூட்டணி அமையவும், தேர்தல் வெற்றிக்கான வியூகங்களை அமைப்பதிலும் பிரமோத்தின் பங்கு பாராட்டுதலுக்குரியது. 2003ஆம் ஆண்டு நடைபெற்ற ராஜஸ்தான் மாநிலத் தேர்தலின் போது, அந்த மாநிலத்தின் பொறுப்பாளராக பிரமோத் பணியாற்றினார். அங்கும் பாஜக பெரும் வெற்றியைப் பெற்றது. அதனைத் தொடர்ந்து 2004ஆம் ஆண்டு வாஜ்பாய் தலைமையில் "இந்தியா ஒளிர்கிறது" என்ற முழக்கத்தோடு பாஜக நாடாளுமன்றத் தேர்தலை எதிர்கொண்டது. ஆனால் அந்தத் தேர்தலில் பாஜக ஆட்சி அமைக்கும் அளவிற்கு தேவையான வெற்றிகளை ஈட்ட முடியவில்லை. தோல்விக்கான பொறுப்பை மகாஜன் ஏற்றுக்கொண்டார்.

2006ஆம் ஆண்டு ஏப்ரல் 22ஆம் நாள் பிரமோத் மகாஜன் அவர் வீட்டில் அவரது உடன்பிறந்த தம்பியால் சுடப்பட்டார். மிக அருகில் இருந்து வெளியான துப்பாக்கி குண்டுகளால் உள்ளுறுப்புகள் பாதிக்கப்பட்டு மருத்துவமனையில் தொடர் சிகிச்சைகள் பலனளிக்காமல் பிரமோத் மே மாதம் 3ஆம் தேதி காலமானார்.

பிரமோத் மஹாஜனின் சகோதரி கணவர் கோபிநாத் முண்டேயும் பாஜகவின் முன்னணித் தலைவர்களில் ஒருவராக இருந்தவர். ப்ரமோதின் மகள் பூனம் மகாஜன் தற்போது பாஜகவின் இளைஞர் அணி தலைவியாக உள்ளார்.

விதி விளையாடாமல் இருந்திருந்தால், பிரதமர் பதவிக்கே வந்திருக்க வேண்டிய பிரமோத் மகாஜன் பிறந்தநாளில் கட்சிக்கான அவரது சேவையை ஒரே இந்தியா தளம் நன்றியோடு நினைவு கொள்கிறது. 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக