செவ்வாய், 29 அக்டோபர், 2019

கலையரசி கமலாதேவி சட்டோபாத்யாய - நினைவு நாள் அக்டோபர் 29



பாரத நாட்டின் வரலாற்றில் ஒரு முக்கியமான விஷயத்தை நாம் மீண்டும் மீண்டும் பார்க்கலாம். சுதந்திரப் போராட்டத்தில் முக்கியமான பங்கு வகித்த பலர், நாடு சுதந்திரம் அடைந்த பிறகு எந்த ஒரு பதவிக்கும் ஆசைப்படாமல், தேசத்தின் புனர்நிர்மாணப் பணிகளில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டது என்பது பல நாடுகளில் நாம் காண முடியாத ஓன்று. அப்படி அரசியலை விட்டு விட்டு வேறு தளங்களில் தங்களை ஈடுபடுத்திக் கொண்டவர்களில் முக்கியமானவர் கமலாதேவி சட்டோபாத்தியாய அவர்கள்.

மங்களூரில் மாவட்ட ஆட்சியாளராகப் பணியாற்றிவந்த ஆனந்தைய தாரேஸ்வர் - கிரிஜாபாய் தம்பதியரின் நான்காவது மகளாக 1903ஆம் ஆண்டு ஏப்ரல் 3ஆம் தேதி பிறந்தவர் கமலாதேவி. கமலாதேவியின் பாட்டி சமிஸ்க்ரித நூல்கள் வழியாக பாரத நாட்டின் வரலாற்றை அறிந்தவராக இருந்தார். அவரின் வழிகாட்டல் கமலாதேவிக்கு தேசத்தின் பாரம்பரியத்தைப் பற்றிய அறிமுகத்தைக் கொடுத்தது. தங்கள் வீட்டிற்கு வழக்கமாக வரும் கோவிந்த ரானடே, கோபால கிருஷ்ண கோகுலே, அன்னி பெசன்ட் அம்மையார் ஆகியோரின் அறிமுகம் கமலாதேவியின் சிந்தனைகளை வடிவமைத்தன

இதற்கிடையில் கடுமையான சோதனைகளை கமலாதேவி சந்திக்க நேர்ந்தது.  அவரது மூத்த சகோதரி சகுணா வெகு இளமையில் உயிர் நீத்தார். கமலாவுக்கு 7 வயதாகும் போது அவரது தந்தையாரும் மறைந்தார். மறைந்த தந்தையார் உயில் எதுவும் எழுதி வைத்து விட்டுச் செல்லவில்லை என்பதால் அந்த நாள் வழக்கப்படி கணவரது சொத்துக்கள் எல்லாம் மனைவியை வந்தடையாமல் கணவரது வழி உறவினர் ஒருவரது மகனைச் சென்றடைந்தது. அப்போது அதுதான் சட்டம். அந்த சொத்துக்களை பெற்றுக்கொண்ட பயனாளி, மாதாமாதம் கமலாதேவி குடும்பத்தினருக்கு வாழ்க்கை நடத்த குறிப்பிட்ட அளவு பணத்தை அளிக்கவேண்டும் என்று நீதிமன்றம் தீர்ப்பளித்தது. ஆனால் கமலாதேவியின் தாயார் கிரிஜாபாய் அந்தத் தீர்ப்பை நிராகரித்தார். தனக்குத் தனது கணவரது சொத்துக்களின் மீது உரிமை இல்லாவிட்டால் அது தனக்கும், தன் குழந்தைகளுக்கும் தேவையில்லை என்று கூறி  தனது தாய் வீட்டில் இருந்து தனக்களிக்கப்பட்ட சீதனத்தைக் கொண்டு மட்டுமே எதிர்கால வாழ்க்கையை நடத்துவது என முடிவு செய்து கொண்டார்.

கமலாதேவிக்கு அவரின் 14ஆம் வயதில் திருமணமானது. ஆனால் இரண்டே வருடத்தில் அவர் கணவர் மரணமடைந்தார்.  இளம் விதவையாக சென்னை ராணி மேரிக் கல்லூரியில் சமூகவியல் கற்க மாணவியாகச் சேர்ந்தார் கமலா. அங்கே கமலாவின் சக வகுப்புத் தோழியாக அமைந்தவர் சுஹாசினி சட்டோபாத்யாய். இவர் கவிக்குயில் சரோஜினி தேவியின் இளைய சகோதரி. இவர்களது நட்பு கிடைத்ததும் கமலாவுக்கு மென்கலைகளில் நாட்டம் மிகுந்தது. அதோடு சுஹாசினி, தன் தோழிக்கு, தனது மூத்த சகோதரரும், மாபெரும் கலை ஆர்வலரும், நாடகக் கலைஞருமான  ஹரிந்தரநாத் சட்டோபாத்யாவை  அறிமுகம் செய்து வைத்தார். இருவரின் கலை ஆர்வமும் ஒன்றாக இருக்க இருவரும் காதலிக்கத் தொடங்கினர். தனது 20ஆவது வயதில்  ஹரிந்திர நாத்தைத் திருமணம் செய்து கொள்வது என கமலாதேவி முடிவெடுத்தார்.

அன்றய காலகட்டத்தில் இது ஒரு பெரும் புரட்சி.  திருமணம் முடிந்து ஓரிரு ஆண்டுகளில் தனது ஒரே மகன் ராமா பிறந்ததும் கணவருடன் மேற்கல்விக்காக லண்டன் சென்று விட்டார் கமலா தேவி. அவர் லண்டனில் இருக்கும் போது தான் காந்தியடிகளின் ஒத்துழையாமை இயக்கம் மற்றும் இன்னபிற காந்திய வழிப் போராட்டங்கள் குறித்தெல்லாம் அறிய நேர்ந்தார். அவருக்கு காந்தியின் அஹிம்சா வழிப் போராட்டங்களின் பால் ஈர்ப்பு ஏற்பட்டது இப்படித்தான்.

கமலாதேவியும், ஹரிந்திர நாத்தும் இணைந்து தங்கள் வாழ்வில் தடைகள் பல இருப்பினும் அவற்றை எல்லாம் வெற்றிகரமாகக் கடந்து பல மேடை நாடகங்களை அரங்கேற்றினர். கமலா திரைப்படங்களிலும் நடித்தார். கன்னடத்தில் முதல் மெளனப் படத்தில் நடித்தவர் என்ற பெருமை கமலாதேவிக்கு உண்டு. அது தவிர 1931 ஆம் ஆண்டில் பிரபல கன்னட நாடக ஆசிரியரான சூத்ரகாவின், மிருக்‌ஷ்கடிகா (வசந்தசேனா)  என்ற கன்னடப் படத்திலும் கமலா நடித்தார். 1943 ஆன் ஆண்டில் தான்சேன் என்ற இந்தித் திரைப்படத்திலும், தொடர்ந்து சங்கர் பார்வதி, தன்னா பகத் உள்ளிட்ட திரைப்படங்களிலும் கமலா நடித்திருந்தார்.

ஆனாலும் கமலாதேவியின் திருமண வாழ்வு ஆனந்தமாக இல்லை. அதனால் கமலாதேவி தனது கணவரை விவாகரத்து செய்ய முடிவு செய்தார். இதுவும் அன்று விவாதப் பொருளானது. . ஆனால், அதைப் பற்றியெல்லாம் கவலைப்பட கமலாவுக்கு நேரமில்லை. அவர் அச்சமயத்தில் வெகு தீவிரமாக காந்தியப் போராட்டங்களுக்கு தம்மை ஒப்புக் கொடுத்து விட்டிருந்தார்.

கமலாதேவி இலண்டனில் இருந்தபோது, இந்தியாவில் காந்தி  ஒத்துழையாமை இயக்கத்துக்கு 1923இல் அழைப்புவிடுத்ததை அறிந்து இந்தியா திரும்பி, சேவாதளம் அமைப்பில் இணைந்தார். விரைவில் கமலாதேவி சேவா தளம் மகளிர் பிரிவின் பொறுப்பாளராக ஆனார். சேவாதளத்தின் சார்பில் அனைத்திந்திய அளவில் பெண்களைத் தேர்வு செய்வது, பயிற்சி அளிப்பது உள்ளிட்ட பணிகளில் கமலா ஈடுபட்டார்.

1926, இல் இவர் அனைத்திந்திய மகளிர் மாநாடு (AIWC) அமைப்பின் நிறுவனரான  மார்கரெட் என்பவரைச் சந்தித்தார். அவரின் தாக்கத்தால் சென்னை மாகாண சட்டசபைக்கு போட்டியிட்டார். இவர்தான் இந்தியாவில் சட்டமன்றத்துக்கு போட்டியிட்ட முதல் பெண். ஆயினும் தேர்தலில் இவர் 55 வாக்குகள் வித்தியாசத்தில் தோல்வியுற்றார்.

அதற்கடுத்த ஆண்டில், அனைத்து - இந்திய மகளிர் மாநாடு (AIWC) நிறுவப்பட  அதன் முதல் அமைப்புச் செயலாளராக பொறுப்பேற்றுக் கொண்டார். தொடர்ந்து வந்த ஆண்டுகளில், AIWC யின் கிளைகள் இந்தியா முழுவதும் இயங்கத் துவங்கின, தன்னார்வத் திட்டங்கள் பலவற்றைக் கொண்டு மதிப்பு மிகுந்த தேசிய அமைப்புகளில் ஒன்றாக மாறியது AIWC. கமலாதேவி, இந்தியா மட்டுமின்றி ஐரோப்பிய நாடுகளிலும் விரிவாகச் சுற்றுப்பயணம் மேற்கொண்டு பெண்களுக்கான கல்வி, சமுதாய வளர்ச்சிக்கான திட்டங்கள் முதலியவை குறித்து ஆராய்ந்தார். அதன் பயனாக டெல்லியில் பெண்களுக்கான ஹோம் சயின்ஸ் (Lady Irvin College for Home Science) கல்லூரியை ஆரம்பித்தார்.

காந்தியடிகளால் 1930-ஆம் ஆண்டு அறிவிக்கப்பட்ட உப்பு சத்தியாகிரகக் குழு உறுப்பினர்களான ஏழு பேர்களில் கமலாவும் ஒருவர். மும்பை கடற்கரையில் பெண்கள் பிரிவில் உப்பு சத்தியாக்கிரகம் செய்தார். உப்பு சத்தியாகிரகப் போராட்டத்தின்போது சுதேசி உப்பை மும்பை பங்குச் சந்தையில் விற்க முயன்ற போது கமலா கைது செய்யப்பட்டார்.  இதற்கு ஓராண்டு கழித்து 1936 ல் காங்கிரஸ் சோஸலிஸ்ட் கட்சியின் தலைவராகத்  தேர்ந்தெடுக்கப்பட்டு,  ஜெயபிரகாஷ் நாராயணன், ராம் மனோகர் லோகியா, மினுமசானி முதலிய தலைவர்களுடன் இணைந்து இந்திய சுதந்திரத்துக்காகப் பாடுபட்டார்.

இரண்டாம் உலகப்போர் துவங்கிய காலத்தில் கமலாதேவி இங்கிலாந்தில் இருந்தார், அவர் உடனடியாக உலகின் மற்ற நாடுகளுக்கு இந்தியாவின் பிரதிநிதியாகச் சென்று இந்திய விடுதலைக்கான ஆதரவைத் திரட்டுவதில் முனைந்தார்.

இந்தியா சுதந்திரமடையும் போது இந்தியா – பாகிஸ்தான் என இரண்டு நாடுகளான பிரிந்தன. இதனையொட்டி நாட்டில் இந்து –முஸ்லீம் கலவரம் ஏற்பட்டது. இக்கலவரத்தில் பல்லாயிரம்பேர் படுகொலை செய்யப்பட்டனர். ஏராளமானவர்கள் படுகாயமடைந்தனர். பல லட்சம் இந்துக்களும், முஸ்லீம்களும் அகதிகளாக்கப்பட்டனர். இந்நிலையில் கமலா தேவி, பாதிக்கப்பட்ட மக்களுக்காக பரிதாபாத் நகரத்தில் சேவை மையம் அமைத்து 50,000 மக்களுக்கு மருத்துவ உதவியும், உணவு வசதியும், தங்குமிடமும்  செய்து கொடுத்தார்.

அகதிகளாக வந்தவர்களின் வாழ்வாதாரத்தை உறுதி செய்யவேண்டும் அல்லவா. அவர்களின் எதிர்கால வாழ்வுக்கு தேவையான பொருளாதாரத்தை  உருவாக்கும் பொருட்டு
 மறக்கப்பட்டு கைவிடப்பட்ட நிலையில் இருந்த கைவினைத் தொழில்களை சீரமைத்துத் தரும்  பணியினையும் இரண்டாம் கட்டமாக தொடங்கினார். இந்திய கைவினைப் பொருள்கள் மற்றும் கைத்தறித்துறை மரபைக் காக்கவும் சுதந்திரத்திற்கு பிந்தைய காலத்தில் அத்துறைக்கு பெரும் புத்துயிர் அளிக்கவும் கமலாதேவி பொறுப்பெடுத்துக் கொண்டார். நவீன இந்தியாவில் இன்று நாம் காணும் கைத்தறி மற்றும் கைவினைப் பொருள் வளர்ச்சி மற்றும் நவீன முன்னேற்றங்கள் அனைத்துக்கும் அடித்தளமிட்டவர்  கமலா தேவி  என்றால் மிகையில்லை

இவரது பணிகளை அங்கீகரிக்கும் விதமாக  இந்திய அரசு  பத்மபூஷன்  விருதை 1955 ல் அளித்தது. பின்னர் இரண்டாவது மிக உயரிய  விருதான பத்மவிபூஷண்  விருதை 1987 ல் பெற்றார். 1966 ல் ராமன் மகசேசே விருதை பெற்றார். மேலும் சங்கீத நாடக அகாதெமி விருது,  1974 இல் இசை, நடனம், நாடகம் ஆகியவற்றுக்காக இந்திய தேசிய அகாதெமி வழங்கிய வாழ்நாள் சாதனைக்கான விருதையும் பெற்றார்.

யுனெஸ்கோ அமைப்பு கைவினைப்பொருட்களை ஊக்குவிக்கும் இவரது பணிகளுக்காக 1977 ல் சிறப்பு விருது வழங்கியது.  ரவீந்திர நாத் தாஹூரின் சாந்தி நிகேதனும் கூட கமலாதேவியின் சமூக முன்னேற்ற மற்றும் கலைத்துறை சேவைகளுக்காக அதன் மிக உயர்ந்த விருதை கமலாவுக்கு அளித்து அவரைச் சிறப்பு செய்து கெளரவித்தது

வாழ்க்கை முழுவதும் ஓயாமல் இயங்கிக்கொண்டு இருந்த கமலாதேவி சட்டோபாத்யாய 1988ஆம் ஆண்டு அக்டோபர் மாதம் 29ஆம் நாள் காலமானார். 

கருத்துகள் இல்லை:

கருத்துரையிடுக