செவ்வாய், 7 ஜூலை, 2020

கார்கில் நாயகன் கேப்டன் விக்ரம் பத்ரா பலிதான தினம் - ஜூலை 7.


போர்முனையில் வெற்றி பெற்று  மூவர்ணக்கொடியை ஏற்றிவிட்டு வருவேன்,  அல்லது மூவர்ணக்கொடி சுற்றிய உடலாக வருவேன்,  எப்படியானாலும் நான் நிச்சயமாக வருவேன். 

எப்போது திரும்பி வருவீர்கள் என்ற கேள்விக்கு அநேகமாக ராணுவத்தில் பணிபுரியும் எல்லா வீரர்களும் கூறும் பதில் இதுவாகத்தான் இருக்கும். இதைத்தான் கார்கில் போர்முனைக்கு அழைப்பு வந்த நேரத்தில் கேப்டன் விக்ரம் பத்ராவும் சொன்னார். கார்கில் போரின் வெற்றிக்கு முக்கியமான காரணமான அந்த வீரனின் பலிதான நாள் இன்று.

1974 ஆம் ஆண்டு ஹிமாச்சல் பிரதேச மாநிலத்தில் உள்ள பலம்பூர் என்ற நகரில் வசித்துவந்த கிரிதர் லால் பத்ரா - கமல் பத்ரா தம்பதியினரின் மகனாகப் பிறந்தவர் விக்ரம் பத்ரா. பள்ளியிறுதி வரை பலம்பூர் நகரில் படித்த விக்ரம் பல்வேறு விளையாட்டுகளிலும், கராத்தே போன்ற பாதுகாப்பு முறைகளிலும் சிறந்து விளங்கினார்.

சண்டிகர் நகரில் உள்ள DAV கல்லூரியில் இளங்கலை மருத்துவ அறிவியல் பட்டப்படிப்பு படிக்க சேர்ந்த விக்ரம் பத்ரா அங்கே தேசிய மாணவர் படையில் தன்னை இணைத்துக் கொண்டார். 1994ஆம் ஆண்டு நடைபெற்ற குடியரசு தின அணிவகுப்பில் அவர் பங்கேற்றார். கல்லூரியில் படிக்கும் போது ராணுவத்தில் பணியாற்றுவதே தனது இலக்கு என்று முடிவு செய்தார். சண்டிகர் நகரில் உள்ள பஞ்சாப் பல்கலைக்கழகத்தில் ஆங்கில இலக்கியத்தில் முதுகலை படிப்பில் சேர்ந்த விக்ரம் ராணுவத்தில் இணைவதற்கான தேர்வுகளை எழுதத் தொடங்கினார். 1996ஆம் ஆண்டு ராணுவத்திற்கான நுழைவுத் தேர்வில் வெற்றி பெற்று டெஹ்ராடூன் நகரில் உள்ள ராணுவ பயிற்சி முகாமில் சேர்ந்தார்.

ராணுவப் பயிற்சியை வெற்றிகரமாக முடித்த விக்ரம், தரைப்படையைச் சார்ந்த ஜம்மு காஷ்மீர் துப்பாக்கிப் பிரிவில்  லெப்டினண்ட்டாகப்  பணியாற்றத் தொடங்கினார். அப்போது கூடுதல் பயிற்சிக்காக மத்தியப்பிரதேசம், கர்நாடகா ஆகிய மாநிலங்களில் உள்ள பயிற்சி நிலையங்களுக்கு அனுப்பப்பட்டார். தீவிரவாதிகள் அதிகமுள்ள காஷ்மீரின் பாராமுல்லா பகுதிகளில் அவர் பணியாற்றிக்கொண்டு இருந்தார்.
குளிர்காலத்தைப் பயன்படுத்தி இமயத்தின் சிகரங்களை பாகிஸ்தான் ராணுவம் ஆக்கிரமித்துக் கொண்டது. பிடிபட்ட இடங்களை மீட்க இந்திய ராணுவம் களத்தில் இறங்கியது. இருபதாம் நூற்றாண்டின் இறுதி வருடங்களில் இந்தியர்களின் வீரமும் தியாகமும் கார்கில் போரில் உலகமெங்கும் தெரிய வந்தது. விடுமுறையில் இருந்த ராணுவ வீரர்கள் விடுமுறையை ரத்து செய்து உடனடியாக பணிக்கு திரும்ப உத்தரவு பிறப்பிக்கப் பட்டது. அப்படி வந்தவர்களில்  விக்ரம் பத்ராவும் ஒருவர். எப்போது திரும்பி வருவாய் என்று அவரின் நண்பர் கேட்ட கேள்விக்கு அவர் அளித்த பதில்தான் இந்தக் கட்டுரையின் ஆரம்ப வரிகள்.  “போர்முனையில் வெற்றி பெற்று  மூவர்ணக்கொடியை ஏற்றிவிட்டு வருவேன், அல்லது மூவர்ணக்கொடி சுற்றிய உடலாக வருவேன், எப்படியானாலும் நான் நிச்சயமாக வருவேன்."

1999ஆம் ஆண்டு ஜூலை 19ஆம் நாள் 5140 என்கிற சிகரத்தை மீட்டெடுக்க விக்ரம் பத்ராவிற்கு ஆணை பிறப்பிக்கப்பட்டது. மலை உச்சியில் இருக்கும் எதிரியை மலையின் மீதேறி தாக்கி வெற்றி கொள்வது என்பது சுலபமான வேலை அல்ல. ஆனால் இந்தத் தடைகள் எல்லாம் வீரர்களுக்கு இல்லை. எந்த விதமான உயிரிழப்பும் இல்லாமல் விக்ரம் பத்ரா அந்த சிகரத்தை மீட்டெடுத்தார். " யே தில் மாங்னே மோர்" பெப்சி குளிர்பானத்தின் விளம்பர வரி இது. இன்னும் அதிகமான போர்க்களங்கள், இன்னும் அதிகமான வெற்றிகள், என் மனம் விரும்புவது அதைத்தான் என்று இந்த மகத்தான வெற்றிக்குப் பிறகு விக்ரம் கூறினார். மிக முக்கியமான வெற்றியை ஈட்டித் தந்ததைப் பாராட்டும் விதமாக விக்ரம் பத்ரா இந்திய ராணுவத்தின் கேப்டன் பதவிக்கு உயர்வு செய்யப்பட்டார்.

17,000 அடி உயரமுள்ள அநேகமாக செங்குத்தான 4875 என்னும் மலை சிகரத்தைக் கைப்பற்ற விக்ரமின் அடுத்த முயற்சி தொடங்கியது. 16,000 அடி உயரத்தில் எதிரிகள், முழுவதும் பனி மூடிய மலை. இரண்டு பக்கமும் குண்டுகள் வெடிக்க விக்ரமின் படை முன்னேறியது. குண்டடி பட்ட இந்தியப் படை வீரரை மீட்க முன்வந்த சுபேதார் ரகுநாத் சிங்கை தடுத்து நிறுத்தி உங்களுக்கு திருமணம் ஆகிவிட்டது, மனைவியும் குழந்தைகளும் இருக்கிறார்கள், நான் செல்கிறேன் என்று முன்னேறி நேருக்கு நேரான சண்டையில் எதிரிகளை கொன்று இமயத்தின் உச்சியில் இந்தியை கொடியை விக்ரம் பறக்கவிட்டார். ஆனால் இந்தக் கைகலப்பில் நெஞ்சில் குண்டு பாய்ந்து அந்த வீரர் மரணமடைந்தார்.

எந்தக் களத்திலும் நாடு முதலில், எனது சக பணியாளர்கள் அடுத்தது, கடைசியாகத்தான் எனது பாதுகாப்பு" பதவியேற்கும் நேரத்தில் ராணுவ அதிகாரிகள் எடுக்கும் உறுதிமொழி இது. அந்த உறுதிமொழியை தனது உயிரை கொடுத்து விக்ரம் உண்மையாக்கினார். அவர் கைப்பற்றிய 4875 என்கிற சிகரம் இன்று விக்ரம் பத்ரா சிகரம் என்று அழைக்கப்படுகிறது.
கேப்டன் விக்ரம் பத்ராவின் தியாகத்தைப் போற்றும் வகையில் பாரதத்தின் மிக உயரிய ராணுவ விருதான பரம வீர் சக்ரா விருது அவருக்கு அளிக்கப்பட்டது. டெஹ்ராடூனில் உள்ள ராணுவ பயிற்சி முகாமின் உணவருந்தும் கூடத்திற்கு கேப்டன் விக்ரம் பத்ராவின் பெயர் சூட்டப்பட்டுள்ளது.

வீரமும், துணிச்சலும் அஞ்சா நெஞ்சமும் கொண்ட விக்ரம் தனது மனதை தன்னோடு கல்லூரியில் படித்த டிம்பிள் சீமா என்ற பெண்ணிடம் பறிகொடுத்தார். அந்த காதல் கனிந்து திருமணத்தில் முடியவில்லை, அதற்குள்ளாகவே கார்கில் போர் தொடங்கி அதில் விக்ரம் வீரமரணம் அடைந்து விட்டார். ஆனால் இன்று வரை டிம்பிள் திருமணம் செய்து கொள்ளாமல் விக்ரமின் நினைவோடு வாழ்ந்து வருகிறார்.

இன்று நாம் பாதுகாப்பாக வாழ்கிறோம் என்றால் அதற்கு விக்ரம் போன்ற வீரர்களும், அந்த வீரர்களின் குடும்பத்தினரும்தான் காரணம் என்பதை நினைவில் கொள்வோம்.

எங்கள் மண்ணில் உரிமை கோரி உலகனைத்தும் சூழினும் 
ஒரு துளியும் இடம் கொடோம் ஒரு பிடியும் மண் கொடோம் 
ஒரு குழந்தை உள்ளவரை போர்க்கொடி பறந்திடும்.