செவ்வாய், 17 டிசம்பர், 2019

காங்கிரஸ் வரலாற்றாசிரியர் பட்டாபி சீதாராமையா நினைவுநாள் - டிசம்பர் 17

ஆந்திரப்பிரதேசத்தின் முக்கியமான காங்கிரஸ் பேரியக்கத்தின் முக்கியமான தலைவராகத் திகழ்ந்த பட்டாபி சீதாராமையாவின் நினைவுநாள் இன்று.


ஆந்திரபிரதேசத்தின் கிருஷ்ணா மாவட்டத்தில் வசித்து வந்த ஒரு நியோகி ப்ராஹ்மண குடும்பத்தில் 1880ஆம் ஆண்டு நவம்பர் 24ஆம் நாள் பிறந்தவர் பட்டாபி சீதாராமய்யா. தனது கல்லூரிப் படிப்பை சென்னை கிருஸ்துவக் கல்லூரியில் முடித்த சீதாராமையா பின்னர் மருத்துவத்துறையில் பட்டம் பெற்றார். அதனைத் தொடர்ந்து ஆந்திரப் பகுதியில் உள்ள கிருஷ்ணா மாவட்டத்தின் மசூலிப் பட்டினத்தில் மருத்துவராகப் பணியாற்றத் தொடங்கினார். 1905ஆம் ஆண்டு கர்சான் பிரபு வங்காளத்தை இரண்டாகப் பிளந்தார். அதனைத் தொடர்ந்து பல்வேறு இளைஞர்கள் விடுதலைப் போராட்டத்தில் குதித்தனர். சீதாராமையாவும் தனது மருத்துவ சேவையை விட்டு விட்டு அரசியலில் ஈடுபடத் தொடங்கினார். ஆரம்ப காலகட்டத்தில் லால் - பால் - பால் - எனப்படும் லாலா லஜபதிராய் - பால கங்காதர திலகர் - பிபின் சந்திரபால் ஆகியோரைத் தலைவர்களாக ஏற்றுக் கொண்ட சீதாராமையா பின்னர் காந்தியின் தொண்டராக மாறினார்.

1912ஆம் ஆண்டிலேயே  சென்னை ராஜதானியில் இருந்து பிரிக்கப்பட்டு தெலுங்கு மொழி பேசும் மக்களுக்காகத் தனியான மாநிலம் அமைக்கப்படவேண்டும் என்று பல்வேறு பத்திரிகைகளில் கட்டுரைகள் எழுதினார். அதனைத் தொடர்ந்து லக்நோ நகரில் 1916ஆம் ஆண்டு நடைபெற்ற காங்கிரஸ் மாநாட்டில் ஆந்திராவிற்காக தனியான காங்கிரஸ் கமிட்டி அமைக்கப்படவேண்டும் என்று வாதாடி, அதனை நிறைவேற்றவும் செய்தார். ஆந்திரப் பிரதேச காங்கிரஸ் கமிட்டியின் தலைவராகவும் சீதாராமையா இருந்தார்.

1939ஆம் ஆண்டு திரிபுரியில் நடைபெற்ற காங்கிரஸ் மாநாடு முக்கியமான ஒன்றாகும். காங்கிரஸின் தலைவர் பதவிக்கு நேதாஜி சுபாஷ் சந்திரபோஸ் போட்டியிட்டார். அவரை எதிர்த்து பட்டாபி சீதாராமையா போட்டியில் ஈடுபட்டார். காந்தியின் ஆதரவு சீதாராமையாவிற்கு இருந்தது. ஆனாலும் நேதாஜி அந்தத் தேர்தலில் வெற்றி பெற்றார். பட்டாபியின் தோல்வி என் தோல்வி என்று காந்தி அறிவித்தார்.

மசூலிப்பட்டின கடற்கரையில் தடையை மீறி உப்பு எடுக்கும் போராட்டத்திற்காகவுவம் பின்னர் சாராயக்கடை மறியல் போராட்டத்திலும் அவர் கைது செய்யப்பட்டார். பின்னர் தனிநபர் சத்தியாகிரஹத்தில் ஈடுபட்டும் கைதானார்.

வெள்ளையனே வெளியேறு இயக்கத்தை 1942ஆம் ஆண்டு காந்தி அறிவித்தார். உடனடியாக அனைத்து காங்கிரஸ் தலைவர்களும் கைது செய்யப்பட்டனர். அதில் சீதாராமையாவும் ஒருவர். மூன்றாண்டுகள் அவர் மஹாராஷ்டிர மாநிலத்தில் உள்ள அஹமத்நகர் கோட்டையில் சிறை வைக்கப்பட்டார். சிறை வாழ்வில் அவர் எழுதிய நாள்குறிப்புகள் பின்னர் பூக்களும் கற்களும் என்ற பெயரில் வெளியானது.

1948ஆம் ஆண்டு காங்கிரஸ் கமிட்டியின் தலைவராகவும், அரசியலமைப்பு சபை உறுப்பினராகவும் சீதாராமையா பதவி வகித்தார். மத்தியப் பிரதேசத்தின் ஆளுநராகவும் அவர் பணியாற்றினார்.

இந்திய தேசிய காங்கிரஸ் பேரியக்கத்தின் வரலாற்றை பட்டாபி சீதாராமையா எழுதினார். அதுவே அந்த இயக்கத்தின் அங்கீகரிக்கப்பட்ட வரலாறு. 1935ஆம் ஆண்டு முதல் பகுதியும் 1947ஆம் ஆண்டு இரண்டாம் பகுதியும் என்று இரண்டு தொகுதியாக வெளியான முக்கியமான ஆவணம் இது.

சுதேசி இயக்கத்தில் பெரும் ஈடுபாடு கொண்டிருந்த சீதாராமையா ஆந்திரா இன்சூரன்ஸ் கம்பெனி மற்றும் கிருஷ்ணா மாவட்ட கூட்டுறவு வங்கி ஆகியவற்றையும் உருவாக்கினார். புகழ்பெற்ற ஆந்திரா வங்கி இவரால் உருவாக்கப்பட்டதுதான்.

நாட்டின் முக்கியமான தலைவர்களில் ஒருவரான பட்டாபி சீதாராமையா 1959ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 17ஆம் நாள் காலமானார்.