புதன், 11 செப்டம்பர், 2019

சர்சங்கசாலக் மோகன் பகவத்ஜி பிறந்தநாள் - செப்டம்பர் 11.

அந்த கனவின் விதை கருவானது ஏறத்தாழ தொண்ணூறு ஆண்டுகளுக்கு முன்னால். எல்லா வளமும் எல்லா திறமையும் இருந்தும் ஏன் பாரதம் மீண்டும் மீண்டும் அந்நியர் கைகளில் சிக்குகிறது ? இந்த நிலை இன்னும் ஓர் முறை நிகழாமல் இருக்க என்ன செய்யவேண்டும் என்ற சிந்தனையின் விளைவாகப் பிறந்தது ராஷ்டிரிய ஸ்வயம் சேவக சங்கம். பெரும் சிந்தனாவாதிகளும், செயல் வீரர்களும் தங்கள் தனிப்பட்ட சொந்த வாழ்க்கையைத் தியாகம் செய்து நாட்டின் மூலை முடுக்கெல்லாம் பயணம் செய்து தேசிய புனர்நிர்மாண சேவையில் தங்களை ஆட்படுத்திக் கொண்டனர். சிறு விதை இன்று ஆலமரமாக வளர்ந்து நாட்டையும் பெருவாரியான மாநிலங்களையும் தனது ஆளுமைக்குள் கொண்டுவந்துள்ளது. பெரும் வெற்றி இன்னும் மிகப் பெரும் பொறுப்புகளையும் கடமைகளையும் சவால்களையும் முன்வைக்கிறது. அப்படியான காலத்தில் சங்கத்தை வழிநடத்தும் பொறுப்பில் இருக்கும் சர்சங்கசாலக் மோகன் பகவத்ஜி அவர்களின் பிறந்தநாள் இன்று.1950 ஆம் ஆண்டு செப்டம்பர் 11ஆம் நாள் மஹாராஷ்டிரா மாநிலத்தில் உள்ள சந்திராபூர் நகரில் மதுகர் ராவ் பகவத் - மாலினி தேவி தம்பதியரின் மகனாகப் பிறந்தவர் மோகன் பகவத். மதுகர் ராவ் பகவத் சங்கத்தின் ஆரம்பகால பிரச்சாரக்களில் ஒருவர். குஜராத் மாநிலப் பொறுப்பாளராக அவர் பணியாற்றினார். தாயார் மாலினி தேவி ராஷ்டிரிய சேவிகா சமிதியின் உறுப்பினர்.

தனது ஆரம்ப கல்வியை லோகமானிய திலக் வித்யாலயாவில் முடித்த மோகன் பகவத், கால்நடை மருத்துவத்வ பட்டத்தை நாக்பூர் நகரில் உள்ள அரசு கால்நடை மருத்துவ கல்லூரியில் பெற்றவர். முதுகலை படிப்பில் சேர்ந்த பகவத் அதனை பாதியில் நிறுத்தி விட்டு சங்கத்தின் முழுநேர உறுப்பினராக தன்னை இணைத்துக் கொண்டார்.

1975ஆம் ஆண்டு அவர் சங்கத்தில் இணைந்த சிறிது காலத்தில் நாட்டில் நெருக்கடி நிலையை இந்திரா பிரகடனம் செய்தார். சங்கம் தடை செய்யப்பட்டது. மோகன்ஜி தலைமறைவானார். சர்வாதிகாரத்தை எதிர்த்த போராட்டத்தை சங்கம் முன்னெடுத்தது. அதில் மோகன்ஜி பெரும் பங்காற்றினார்.

படிப்படியாக சங்கத்தின் பல்வேறு பொறுப்புகள் மோகன்ஜியைத் தேடி வந்தது. சங்கத்தின் அகில பாரத ஷைரிக் பிரமுக் மற்றும் அகில பாரத பிரச்சாரக் பிரமுக் ஆகிய பொறுப்புகளை மோகன்ஜி திறம்பட நிர்வகித்தார்.

2000ஆம் ஆண்டு அன்றய சர்சங்கசாலக் ராஜேந்திர சிங்ஜி  மற்றும் சர்காரியவாக் சேஷாத்ரிஜி ஆகியோர் தங்கள் உடல்நிலை காரணமாக விலகிக்கொள்ள சுதர்ஷன்ஜி சர்சங்கசாலக்காகவும் மோகன் பகவத்ஜி சர்காரியாவாக்காகவும் பொறுப்பேற்றுக் கொண்டனர். பின்னர் 2009ஆம் ஆண்டு மார்ச் 21ஆம் நாள் மோகன் பகவத்ஜி ராஷ்டிரிய ஸ்வயம்சேவக சங்கத்தின் சர்சங்கசாலக்காக நியமிக்கப்பட்டார்.

மோகன்ஜியின் வழிகாட்டுதலில் பரிவார் அமைப்புகள் புதிய உற்சாகத்தோடு செயல்படத் தொடங்கின. தேசத்தின் புனர்நிர்மாணப் பணிகளில் புது உத்வேகம் ஏற்பட்டது. 2014ஆம் ஆண்டு முப்பது ஆண்டுகளுக்குப் பின்னர் தனிப் பெரும்பான்மை பெற்று பாரதிய ஜனதா கட்சி ஆட்சி அமைத்தது. 2025 ஆம் ஆண்டு தனது நூறாவது ஆண்டைக் கொண்டாட இருக்கும் சங்கத்தை அடுத்த கட்ட சவால்களை எதிர்கொள்ளும் வகையில் இருக்குமாறு மோகன் பகவத்ஜி வழி நடத்திக்கொண்டு உள்ளார்.

மானனீய சர்சங்கசாலக் மோகன் பகவத்ஜி அவர்களுக்கு ஒரே இந்தியா தளம் தனது மனப்பூர்வமான வாழ்த்துகளையும் வணக்கங்களையும் தெரிவித்துக் கொள்கிறது.