வியாழன், 28 நவம்பர், 2019

மேஜர் சந்தீப் உன்னிகிருஷ்ணன் பலிதான தினம் - நவம்பர் 28

2008ஆம் ஆண்டு நவம்பர் 26ஆம் நாள், பாரத மக்களால் ஒருபோதும் மறக்கவோ மன்னிக்கவோ முடியாத நாள். நேரடியாக மோதத் துணிவில்லாத பாகிஸ்தான் கையளவே உள்ள தீவிரவாதிகளை மும்பைக்கு அனுப்பி, அப்பாவி மக்களைக் கொன்று வெறியாட்டம் போட்ட நாள் அது. இருபத்தி ஆறு வெளிநாட்டவர்கள் உள்ளிட்ட நூற்று எழுபத்தி நான்குபேர் இந்த கோழைத்தனமான தாக்குதலில் மரணமடைந்தார். தீவிரவாதிகளை முறியடிக்கும் பணியில் நாட்டின் வீர மகன்கள் தங்களை ஆகுதி ஆகினார்கள். கடினமான இந்தப்பணியில் மேஜர் சந்தீப் உன்னிகிருஷ்ணன் பலிதானியான தினம் இன்று.


கேரளத்தைச் சார்ந்த திரு உன்னிகிருஷ்ணன் தனது வேலை நிமித்தமாக பெங்களூர் நகருக்கு குடியேறுகிறார். அவர் மனைவி திருமதி தனலக்ஷ்மி. இந்தத் தம்பதியரின் மகனாக 1977ஆம் ஆண்டு மார்ச் 15ஆம் நாள் பிறந்தவர் சந்தீப். பள்ளியில் படிக்கும் காலத்திலேயே ராணுவத்தில்தான் பணியாற்றவேண்டும் என்ற ஆசை சந்தீப்புக்கு துளிர் விடுகிறது. தேசிய பாதுகாப்பு நிலையத்தில் இணைந்து தனது இளங்கலை படிப்பை மேற்கொள்கிறார். படிப்பு முடிந்தபின்பு பாரத ராணுவத்தின் பிஹார் படைப் பிரிவில் பிரிகேடியர் பதவியில் சேர்கிறார். பணியின் நிமித்தமாக ஜம்மு காஷ்மீர் மற்றும் ராஜஸ்தான் போன்ற மாநிலங்களில் தீவிரவாதிகளை ஒடுக்கும் பணியில் தனது திறமையை நிரூபித்துக் காட்டினார் சந்தீப்.

அதனைத் தொடர்ந்து பாரத ராணுவத்தின் சிறப்பு மிக்க தேசிய பாதுகாப்பு அணியில் ( National Security Guards ) தனது சேவையைத் தொடர்கிறார் சந்தீப். சிறிது காலத்திலேயே அந்த அணியின் அதிரடிப் படையில் சேருமாறு சந்தீப்புக்கு அழைப்பு விடுக்கப்படுகிறது. கார்கில் போரில் மிகச் சிறிய அணியைத் தலைமையேற்று முக்கியமான ராணுவ தளங்களை நாட்டுக்காக மீட்டுத் தந்தார்.

2008ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 26ஆம் நாள் ஒரே நேரத்தில் மும்பை நகரின் பல்வேறு இடங்களில் பாகிஸ்தான் தீவிரவாதிகள் தங்கள் தாக்குதலைத் தொடங்கினார்கள். ஓப்ராய் மற்றும் தாஜ் ஹோட்டல்களில் புகுந்த தீவிரவாதிகள் அங்கே தங்கியுள்ள பயணிகளை பயணக்கைதியாக வைத்துக்கொண்டு தாக்குதல் நடத்தத் தொடங்கினார்கள். அங்கே இருந்து தீவிரவாதிகளை உயிரோடு அல்லது பிணமாகவோ அகற்றி, பொதுமக்களைக் காப்பாற்ற வேண்டும் என்ற ஆணை சந்தீப்புக்கு அளிக்கப்படுகிறது. பத்து அதிரடிப்படை வீரர்களோடு டெல்லியில் இருந்து மும்பைக்கு விரைகிறது அதிரடிப்படை.

எந்த தளத்தில், எந்த அறையில் தீவிரவாதிகள் இருக்கிறார்கள் என்பது தெரியாது. எனவே ஒவ்வொரு அறையாக கைப்பற்றவேண்டும். எந்த ஒரு அறையிலும் பயணியாக வந்த பொதுமக்களில் யாராவது இருக்கலாம், தீவிரவாதி இருக்கலாம், அல்லது தீவிரவாதி பொதுமக்களோடு இருக்கலாம், அல்லது அந்த அறையே காலியாக ஆளே இல்லாமல் இருக்கலாம். இப்படி ஒரு தளத்தை கைப்பற்றியபின், அங்கே மீண்டும் தீவிரவாதிகள் வந்து விடாமல் இருக்க அதிரடிப்படையின் வீரர்கள் காவல் இருக்க வேண்டும். குறைந்த படையோடு அடுத்த தளத்தை கைப்பற்றவேண்டும். இப்படி ஒவ்வொரு அறையாக, ஒவ்வொரு தளமாக கைப்பற்றி காக்கவேண்டும். நினைக்கவே சங்கடமான வேலை இது. இதனை பாரதத்தின் அதிரடிப்படை வெற்றிகரமாக செய்து காட்டியது. உலகத்தின் பல்வேறு ராணுவங்கள் இந்த அனுபவத்தை, வெற்றியை தங்கள் பாடத் திட்டத்தில் ஒரு பகுதியாக வைத்துள்ளன என்றால், இந்த வேலையின் முக்கியத்துவத்தை நம்மால் புரிந்து கொள்ள முடியும்.

இந்த கடினமான செயலை பத்து வீரர்களோடு முன்னெடுத்தவர் மேஜர் சந்தீப். மூன்றாவது தளத்தில் ஒரு அறையில் சில பெண் பயணிகளோடு தீவிரவாதி இருக்கலாம் என்று கணித்து, சுனில் யாதவ் என்ற அதிரடிப்படை வீரர் அந்த அறையின் கதவை உடைத்துத் திறந்தார். அப்போது நடந்த துப்பாக்கிச் சண்டையில் சுனில் யாதவ் காயமடைந்தார். தனது சகாவை காப்பாற்றி அந்த இடத்தில இருந்து அப்புறப்படுத்த சந்தீப் உன்னிகிருஷ்ணன் தீவிரவாதிமீதான தாக்குதலைத் தொடர்ந்தார். அந்த சண்டையில் துப்பாக்கி குண்டு பட்டு மேஜர் சந்தீப் உன்னிகிருஷ்ணன் பலிதானியானார்.

மேஜர் சந்தீப் உன்னிகிருஷ்ணனின் உடல் பெங்களூர் நகருக்கு கொண்டு வரப்பட்டது. ஆயிரமாயிரம் மக்கள் அந்த வீரருக்கு தங்கள் அஞ்சலியைத் தெரிவிக்க அவர் வீட்டுக்கு வந்தார்கள். முழு ராணுவ மரியாதையோடு அவருக்கு இறுதிச் சடங்குகள் நடைபெற்றன.

பெங்களூர் நகரின் முக்கியமான சாலைக்கு மேஜர் சந்தீப் உன்னிகிருஷ்ணனின் பெயர் சூட்டப்பட்டு உள்ளது. ராமமூர்த்தி நகர் பகுதியில் அவரது மார்பளவுச் சிலை நிறுவப்பட்டுள்ளது. அமைதிகாலத்தில் அளிக்கப்படும் மிக உயரிய ராணுவ விருதான அசோக சக்ரா விருது அவருக்கு மரணத்திற்குப் பிறகு அளிக்கப்பட்டது.

மாபெரும் வீரர் மானம் காப்போர் சரித்திரம்தனிலே நிலைக்கின்றார் என்ற வரிகளுக்கு ஏற்ப மக்கள் மனதில் மேஜர் சந்தீப் உன்னிகிருஷ்ணன் இன்னும் வாழ்ந்து கொண்டுதான் இருக்கிறார். நாட்டைக் காக்க இன்னும் ஆயிரமாயிரம் உன்னி கிருஷ்ணன்கள் வருவார்கள் என்பதில் எந்த ஐயமும் இல்லை.