வியாழன், 19 மார்ச், 2015

காப்பீடு, காப்பீடு, காப்பீடு

நாள்தோறும் பல மனிதர்கள் இறப்பதைப் பார்த்தபின்னரும், தான் நிரந்தரமாக இருப்போம் என்று மனிதன் எண்ணுவதுதான் உலகின் ஆச்சரியமான விஷயம் 

யக்ஷப்ப்ரச்னம் - மகாபாரதம்


பணத்தை சேமிக்கும் வழியைக் கேட்டால், காப்பீடில் சேர்ந்து செலவழிக்கும் வழியை ஏன் பேச ஆரம்பிக்கிறோம் என்ற கேள்வி வருகிறது அல்லவா ? எப்படி அஸ்திவாரம் இல்லாமல் ஒரு கட்டடம் கட்ட முடியாதோ அது போலவே காப்பீடு இல்லாமல் முதலீட்டைப் பற்றி பேச முடியாது.

நீங்கள் சமீபத்தில் எப்போது ஆயுள் காப்பீடு செய்து கொண்டீர்கள் ? அப்போது அந்த காப்பீடு நிறுவனத்தின் முகவர் என்ன சொல்லி உங்களிடம் கையெழுத்து வாங்கினார் ?

வரியை சேமிக்கலாம் என்றா ? இல்லை உங்கள் குழந்தையின் பெயரில் காப்பீடு செய்யுங்கள், அந்தக் குழந்தை வளர்ந்து சரியான வயதில் படிக்க வைக்க, திருமணம் செய்து கொடுக்க பணம் கிடைக்கும் என்றா ? இல்லை வருடம் ஐந்தாயீரம் வீதம் முதலீடு செய்தால் இருபது வருடங்கள் கழித்து உங்களுக்கு நீங்கள் செலுத்திய ஒரு லட்ச ரூபாய் இரண்டு லட்சமாக கிடைக்கும் என்றா ? வாருங்கள், உங்களுக்காகத்தான் இந்தப் பகுதி.

காப்பீடு என்பது ஒருபோதும் வாங்கப் பட மாட்டாது 
அது எப்போதும் விற்கப்படவே வேண்டும் 

காப்பீடு நிறுவன முகவர்களுக்கு கற்றுக் கொடுக்கப்படும் முதல் பாடமே இதுதான். அதனாலே பல முகவர்கள் வாடிக்கையாளர்கள் தலையில் அமர்ந்து காப்பீடை விற்கிறார்கள். 

இறப்பு என்பது உறுதி, ஆனால் அது நமக்கு வரவே வராது என்பது தான் பொதுவாக மனித மனதின் நம்பிக்கை. அதுவும் நீங்கள் இறந்து போனால் உங்கள் குடும்பத்திற்கு பணம் கிடைக்கும் என்று பேச ஆரம்பித்தால், ஒரு சராசரி இந்தியனால் கோபப்படாமல் இந்தப் பேச்சை கேட்கவே முடியாது. 

உங்களைச் சுற்றிப் பாருங்கள், சராசரி இந்தியனின் ஆயுள் அதிகமாகி இருக்கிறது. ஆனால் முப்பதுகளின் மத்தியில், நாற்பதின் ஆரம்பத்தில், ஐம்பதின் அருகில் நமக்குத் தெரிந்தவர்கள் எத்தனை பேர் மரணம் அடைந்து இருக்கிறார்கள். பல நேரங்களில் வெளி உலகம் தெரியாத மனைவி, படிப்பை முடிக்காத பிள்ளைகள், வயதான பெற்றோர்கள், கட்டி முடிக்கப்படாத வீட்டுக் கடன் இத்தோடு முடிவையாத கனவுகள் என்று அவர்கள் குடும்பம் சந்திக்கும் சவால்களை நினைத்துப் பாருங்கள். அநேகமாக உங்கள் குடும்பத்தின் ஒரே வருமானம் ஈட்டும் உறுப்பினராக நீங்கள் மட்டுமே இருப்பீர்கள்.

கூட்டுக் குடும்பம் என்ற அமைப்பே சிதைந்து போய் இருக்கும் இன்றைய காலகட்டதில் நீங்கள் இல்லை என்றால் உங்கள் குடும்பம் என்ன நிலைமைக்கு ஆளாகும் என்பதை ஒரு நிமிடம் யோசியுங்கள். 

நெருப்பென்றால் வாய் வெந்து விடாது நண்பர்களே, ஆனால் நாம் சற்றே சுதாரிப்பாக இருப்பதில் தவறு இல்லை அல்லவா. காப்பீட்டின் பல் வேறு வடிவங்களை நாம் சற்றே உற்று நோக்குவோம்.