புதன், 16 ஏப்ரல், 2014

என்ன செய்ய வேண்டும் புதிய அரசு ?

இந்திய ஜனநாயக சக்கரம் மறுபடி சுழல ஆரம்பித்து உள்ளது. உலகின் மிகப் பெரிய ஜனநாயக நாட்டின் மக்கள் தங்கள் தலைவிதியை நிர்ணயம் செய்யப் போகிறார்கள். தங்களைத் தாங்களே அறிவாளிகள் என்றும் அறிவுஜீவிகள் என்றும் எண்ணிக் கொண்டு இருக்கும் பெரிய மனிதர்கள் போல் அல்லாது, தங்கள் விருப்பம் என்ன என்பதை மிகத் தெளிவாக மக்கள் சொல்லிக் கொண்டே தான் இருக்கிறார்கள். என்ன மிகப் பெரும் கூச்சலைக் கிளப்பி, அவர்கள் சொல்வததைக் கேட்காமல் அறிவாளிகள் தங்கள் அறிவின் பெருமையை மீண்டும் மீண்டும் வெளிச்சம் போட்டுக் கொண்டே தான் இருக்கிறார்கள்.

தேர்தலின் முடிவு எப்படி இருந்தாலும், யார் ஆட்சிக்கு வந்தாலும் எந்த மாறுதலும் வரப் போவது இல்லை, ஆளுபவர்கள் மாறலாம், ஆனால் அவர்கள் கடைப் பிடிக்கும் கொள்கை மாறப் போவது இல்லை, மக்களுக்கு எந்த முன்னேற்றமும் வரப்போவது இல்லை என்று சொல்லும் புரட்சி வீரர்கள் ஒருபுறம், எங்களைத் தேர்வு செய்யுங்கள் நாட்டில் எங்கும் பாலாறும் தேனாறும் பெருகி ஓடும் என்று கனவை விற்பனை செய்யும் அரசியல்வாதிகள் ஒருபுறம்., இவர்களுக்கு நடுவே ஒரு மிகச் சாதாரண மனிதனாக எனது ஆட்சியாளர்கள் என்ன செய்ய வேண்டும் என நான் விரும்புகிறேன் என்பதனைப் பற்றியே இங்கே பேசப் போகிறேன்.

கல்வி மட்டுமே ஒரு குடும்பத்தை, அதன் மூலமாக சமுதாயத்தை முன்னேற்றம் அடையச் செய்யும் என்று நான் உளமார நம்புகிறேன். அறிவு அற்றம் காக்கும் கருவி. குறைந்த பட்சம் உயர்நிலைக் கல்வி வரை, தரமாக இலவசமாக அனைவருக்கும் கிடைக்கப் பட வேண்டும். ஏற்க்கனவே இப்படித்தானே இருக்கிறது என்று கேள்வி வரலாம், அரசு கல்வி, புத்தககங்கள், பேருந்து வசதி, உணவு எல்லாவற்றையும் இலவசமாகத் தருகிறதே என்றும் வினா வரலாம்.

தருகிறது, ஆனால் ஏன் மக்கள் தனியார் கல்வி நிறுவனங்களை நாடுகிறார்கள் ? ஏன் அரசுப் பள்ளிகளின் மீது மக்களுக்கு நம்பிக்கை இல்லை ? ஏன் அரசு ஆசிரியர்களும், அரசுப் பணியாளர்களும் தங்கள் பிள்ளைகளை தனியார் பள்ளிகளில் சேர்க்கிறார்கள் ?

பஞ்சாயத்து முதல் பாராளுமன்றம் வரை தேர்தலில் போட்டி இட விரும்பும் அனைவரும் தங்கள் பிள்ளைகளை/ பேரக் குழந்தைகளை அரசுப் பள்ளியில் தான் சேர்த்து இருக்க வேண்டும் என்பதைச் சட்டமாக்க வேண்டும். இது அவர்களின் தனி மனித சுதந்திரத்தை மறுப்பது என்று ஆகாது, எந்த மக்களுக்கு சேவை செய்யப் போகிறோம் என்று சொல்கிறார்களோ அவர்களுக்கு அருகில் இருப்பதாகத் தான் ஆகும்.

ஒரு பாராளுமன்ற உறுப்பினரின் மகளோ, ஒரு சட்ட மன்ற உறுப்பினரின் பேரனோ படிக்கும் அரசுப் பள்ளியின் தரம் தானாகவே உயர்ந்து விடும். அங்கே உள்கட்டமைப்பு பலப்படுத்தப் படும், ஆசிரியர்களின் கவனிப்பு கூடும், பொது மக்களின் தேர்வும் அதுவே என மாறும்.

இரண்டாவது மருத்துவ வசதி, இந்தியா முழுவதும் குறைந்த கட்டணத்தில், தரமான அரசு மருத்துவ மனைகள் நிறுவப் பட வேண்டும். அதற்க்கான மருத்துவர்கள், செவிலியர்கள், மருத்துவ உபகரணங்கள் இவை அனைத்தும் அனைவரும் எளிதில் அணுகக் கூடிய நிலை வர வேண்டும்.

உள்கட்டமைப்பு வசதிகள் பலப் படுத்தப் படவேண்டும், நல்ல சாலை, தடையற்ற மின்சாரம், பணம் குடுத்து வாங்க வேண்டிய அளவில் இல்லாத குடிதண்ணீர் இவை தான் ஒரு சாதாரண மனிதன் விரும்புவது.

உணவுப் பொருள்கள் வீணாகிப் போகும் அவலம் நம் நாட்டில் தான் மிக அதிகமாக உள்ளது. இந்த நிலை மாற, தாலுகா அளவில் குளிர்சாதனக் கிட்டங்கிகளும், உணவைப் பதப் படுத்தும் வசதிகளும் செய்து தரப் பட வேண்டும்.

அதிவேக புகைவண்டிகளும், விண்ணை எட்டும் கட்டிடங்களும் ஒரு புறம் இருக்கட்டும், ஆனால் இந்தக் குறைந்த பட்ச தேவைகளை நிறைவு செய்தால் போதும், என் நாட்டு மக்கள் அவர்களைத் தாங்களே கவனித்துக் கொள்வார்கள். வெட்டிப் பேச்சையும், வீர வசனங்களையும் அல்ல, உங்களிடம் இருந்து அவர்கள் செயலைத்தான் எதிர்பார்க்கிறார்கள்.

இதனைச் செய்தால் எங்கள் மக்கள் உங்களைத் தலை மேல் வைத்துக் கொண்டாடுவார்கள், நீங்கள் செய்யவில்லை என்றால், உங்களை மாற்றவும் மக்களுக்குத் தெரியும். மாபெரும் தலைவர்களை அவர்கள் மண்ணோடு மண்ணாக ஆக்கி காட்டி இருக்கிறார்கள்.

பாடம் படிக்கத் தயாரா தலைவர்களே நீங்கள் ?