ஞாயிறு, 1 செப்டம்பர், 2019

பக்தி வேதாந்த பிரபுபாத ஸ்வாமி - அவதார தினம் செப்டம்பர் 1.

பாரதநாடு உலகுக்கு அளித்த சித்தாந்தங்களில் பக்தியை ப்ரேமையை முன்னிறுத்தும் கௌடிய வைஷ்ணவ சித்தாந்தம் முக்கியமான ஒன்றாகும். சைதன்ய மஹாப்ரபுவால் செழுமை செய்யப்பட்ட இந்த சித்தாந்தத்தை உலகமெங்கும் எடுத்துச் சென்றவர் பக்தி வேதாந்த பிரபுபாத ஸ்வாமிகள். கண்ணனின் திருநாமத்தைப் பாடியும், ஆடியும் பாகவத புராணத்தையும் பகவத்கீதையை படித்தும், அதன்படி வாழ்ந்தும் ஆண்டவனை அடையலாம் என்பதே கௌடிய வைஷ்ணவ சித்தாந்தம். ஹரே கிருஷ்ணா இயக்கம் என்னும் இஸ்கான் மூலம் இந்த சித்தாந்ததை பரப்பியவர் பிரபுபாத ஸ்வாமிகள். 



கொல்கத்தா நகரின் தெற்குப் பகுதியில் கௌர் மோகன் டே - ரஜினி டே தம்பதியரின் மகனாக 1896ஆம் ஆண்டு செப்டம்பர் 1ஆம் நாள் அவதரித்தவர் பிரபுபாத ஸ்வாமிகள். இவரின் பெற்றோர்கள் இவருக்கு இட்ட பெயர் அபய் சரண் என்பதாகும். கண்ணனிடம் சரணந்ததால் பயமற்றவன் என்பது இந்தப் பெயரின் பொருள். இவர் பிறந்தது ஜன்மாஷ்டமிக்கு அடுத்த தினம். அது கண்ணனின் தந்தையான நந்தகோபாலனை சிறப்பிக்கும் நந்தோஸ்தவ தினம். எனவே இவருக்கு நந்துலால் என்ற பெயரும் உண்டு. 

கொல்கத்தா நகரில் உள்ள ஸ்காட்டிஷ் சர்ச் கல்லூரியில் ஆங்கிலம், பொருளாதாரம் மற்றும் தத்துவ துறையில் 1920 ஆம் ஆண்டு தேறிய அபய சரண், விடுதலைப் போராட்டத்தில் காந்தியின் அறைகூவலை ஏற்று தனது பட்டத்தை வாங்காமல் நிராகரித்தார். தனது 22 ஆம் வயதில் அபய சரண் ராதாராணி தேவி என்பவரை திருமணம் செய்துகொண்டார். 

1922 ஆம் ஆண்டில் அபய சரண் தனது குருவைக் கண்டடைந்தார். கௌடிய வைஷ்ணவ ஸம்ப்ரதாயத்தைச் சார்ந்த பக்திசித்தானந்த ஸரஸ்வதி என்பவர் அபய சரணின் ஆன்மீக குருவாக அமர்ந்து சித்தாந்த விளக்கங்களைப் போதித்தார். கௌடிய வைஷ்ணவ சித்தாந்தத்தைப் பரப்ப Back to Godhead என்ற மாதப் பத்திரிகையை அபய சரண் நடத்த ஆரம்பித்தார். 

1947 ஆம் ஆண்டு கௌடிய வைஷ்ணவ அறிஞர்கள் இவரது புலமையைப் பாராட்டி பக்தி வேதாந்த என்ற பட்டத்தினை அளித்தனர். கண்ணன் வளர்ந்த விருந்தாவன் கிராமத்தில் பல ஆண்டுகள் தங்கி பாகவத புராணத்தை மொழிபெயர்த்து அதற்கான விளக்கவுரையை எழுதி வெளியிட்டார்.  1959 ஆம் ஆண்டு பக்தி பிரஜ்ஞான கேசவ் என்பவர் அபய சரணுக்கு முறையாக சன்யாசம் வழங்கினார். அது முதல் அவர் பிரபுபாதா என்று அழைக்கப்பட்டார். 

1965 ஆம் ஆண்டு தனது குருவின் ஆணைக்கு இணங்கி பக்தி வேதாந்த பிரபுபாத ஸ்வாமிகள் கிருஷ்ணனின் வழியை உலகமெங்கும் பரப்புவதற்காக அமெரிக்காவிற்கு பயணமானார். கையில் பணமோ அல்லது ஆதரிப்பாரோ இல்லாமல் அவர் பாஸ்டன் நகரை வந்தடைந்தார். பூங்காக்களிலும் சிறிய கூட்டங்களிலும் அவர் கீதையின் வழியில் வாழ்வது பற்றி பேசத் தொடங்கினார். சிறிது சிறிதாக மக்கள் இந்திய ஞானத்தின்பால் ஈர்க்கப்பட்டார்கள். இஸ்கான் எனும் International Society for Krishna Consciousness என்ற அமைப்பு 1966 ஆம் ஆண்டு அமெரிக்காவில் தொடங்கப்பட்டது. நியூயார்க், சான் பிரான்சிஸ்கோ ஆகிய நகரங்களில் இஸ்கானின் கோவில்கள் நிறுவப்பட்டன. பின்னர் இங்கிலாந்து நாட்டில் லண்டன் நகரத்திலும் இஸ்கான் இயக்கம் பரவியது. அன்று பிரபலமாக இருந்த பீட்டில்ஸ் இசைக்குழுவைச் சார்ந்தவர்கள் இஸ்கான் இயக்கத்தால் ஈர்க்கப்பட்டார்கள். நாம சங்கீர்த்தனமும், ரத யாத்திரையும் மேற்கத்திய மக்களை ஆத்மா ஆனந்தமயமானது, கடமையை பலனின் மீது பற்றில்லாமல் செய்வதுதான் உன்னதமான வழி என்பதை உணர வைத்தது. 

கிருஷ்ண பக்தியை உலகமெங்கும் பரப்பும் பணியில் பிரபுபாத ஸ்வாமிகள் பல்வேறு நாடுகளுக்குப் பயணம் செய்து பதினான்கு முறை உலகை வலம் வந்தார். அமெரிக்காவின் மேற்கு வெர்ஜினியா மாநிலத்தில் புதிய விருந்தாவன் என்ற பகுதி அமைக்கப்பட்டது. ஏறத்தாழ ஐந்து சதுர கிலோமீட்டர் பரப்பளவில் பல்வேறு கோவில்கள், கல்வி நிலையங்கள், குடியிருப்பு பகுதிகள் என்று கிருஷ்ண பக்தியை இது பரப்பி வருகிறது. 



என்பதற்கும் மேலான புத்தகங்களை பிரபுபாத ஸ்வாமிகள் எழுதி உள்ளார். வேதங்கள், உபநிதடங்கள், பாகவத புராணம் ஆகியவற்றை ஆங்கிலத்தில் மொழிபெயர்த்து அதற்கான விளக்க உரைகளை அவர் எழுதினார். பகவத்கீதை - உண்மை உருவில் என்று அவர் எழுதிய கீதைக்கான உரை முக்கியமான ஒன்றாகும். இதுவரை எண்பது மொழிகளில் இந்த உரை மொழிபெயர்க்கப்பட்டு உள்ளது. 

தனது 81 ஆம் வயதில் 1977 ஆம் ஆண்டு நவம்பர் மாதம் 14 ஆம் நாள் பக்தி வேதாந்த பிரபுபாத ஸ்வாமிகள் கண்ணனின் திருவடியை அடைந்தார். 

எத்தனையோ மகான்கள் இந்த மண்ணில், அவர்கள் அனைவர்க்கும் எங்கள் வணக்கங்கள்.